காஞ்சீபுரம் - 0498. முட்டுப் பட்டு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முட்டுப் பட்டு (காஞ்சீபுரம்)

முருகா!
பிறவித் துயரைத் தீர்த்து அருள்


தத்தத் தத்தத் ...... தனதான
     தத்தத் தத்தத் ...... தனதான


முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
     முற்றச் சுற்றிப் ...... பலநாளும்

தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
     சற்றுப் பற்றக் ...... கருதாதோ

வட்டப் புட்பத் ...... தலமீதே
     வைக்கத் தக்கத் ...... திருபாதா

கட்டத் தற்றத் ...... தருள்வோனே
     கச்சிச் செக்கப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முட்டுப் பட்டு, ...... கதிதோறும்
     முற்றச் சுற்றி, ...... பலநாளும்

தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனை,
     சற்றுப் பற்றக் ...... கருதாதோ?

வட்டப் புட்பத் ...... தலம் மீதே
     வைக்கத் தக்கத் ...... திரு பாதா

கட்டத்து அற்றத்து ...... அருள்வோனே
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.


பதவுரை

         வட்டப் புட்பத் தல மீதே --- வட்டமாகிய இதயகமல பீடத்தின் மேல்

         வைக்கத் தக்கத் திருபாதா --- வைத்துப் பூசிக்கத்தக்க திருவடிகளை உடையவரே!

         கட்டத்து அற்றத்து அருள்வோனே --- துன்பமுறும் சமயத்தில் வந்து அருள் புரிபவரே!

         கச்சிச் சொக்கப் பெருமாளே --- காஞ்சி மாநகரில் எழுந்தருளி இருக்கும் அழகிய பெருமையில் சிறந்தவரே!

         முட்டுப் பட்டுக் கதி தோறும் --- சங்கடப்பட்டு, தேவகதி, மனிதகதி, நரககதி, விலங்குகதி என்ற நால்வகை கதிகளிலும்,

         முற்றச் சுற்றிப் பலநாளும் --- முழுமையும் அலைந்து திரிந்து, பலநாளும்

         தட்டுப் பட்டுச் சுழல்வேனை --- தடுமாறுதலை அடைந்து சுழல்கின்ற அடியேனை

         சற்றுப் பற்றக் கருதாதோ --- தேவரீரூடைய திருவுள்ளத்தில் சிறிதாவது நினைத்து ஆண்டுகொள்ள எண்ணல் ஆகாதோ? (நினைத்தருள்க)


பொழிப்புரை

         வட்டமாகிய இதயகமல பீடத்தின் மேல் வைத்துப் பூஜிக்கத்தக்க திருவடிகளை உடையவரே!

         துன்பமுறும் சமயத்தில் வந்து அருள் புரிபவரே!

         காஞ்சி மாநகரில் எழுந்தருளி இருக்கும் அழகிய பெருமையில் சிறந்தவரே!

         சங்கடப்பட்டு, தேவகதி, மனிதகதி, நரககதி, விலங்குகதி என்ற நால்வகை கதிகளிலும், முழுமையும் அலைந்து திரிந்து, பலநாளும் தடுமாறுதலை அடைந்து சுழல்கின்ற அடியேனை தேவரீரூடைய திருவுள்ளத்தில் சிறிதாவது நினைத்து ஆண்டுகொள்ள எண்ணல் ஆகாதோ? (நினைத்தருள்க)


விரிவுரை

முட்டுப்பட்டுக் கதிதோறும் முற்றச் சுற்றி ---

உயிர்கள் நல்வினை தீவினை காரணமாகப் பிறக்கும் கதிகள் நான்கு எனப்படும். தேவகதி, மனிதகதி, நரககதி, விலங்குகதி என்பன. இந்த நாற்கதிகள் தோறும் பிறந்து இறந்து பன்னெடும் காலமாகச் சுழன்று சுழன்று ஆன்மாக்கள் அலைகின்றன.

அன்றியும் நால்வகைப் பிறப்புக்களான, அண்டசம், சுவேதசம், சராயுசம், உற்பிச்சம் என்பதாகவும் கொள்ளலாம்.

பாரிடை வேர்வையில் பைகளில் முட்டையில்
ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ் சோதி.....    ---  திருவருட்பா.

..........              ..........              மாறிவரும்
ஈர்இரண்டு தோற்றத்து, எழுபிறப்புள், யோனி எண்பான்
ஆரவந்த நான்கு நூறுஆயிரத்துள், -  தீர்வுஅரிய
கன்மத்துக்கு ஈடாய், கறங்கும் சகடமும் போல்
சென்மித்து, உழலத் திரோதித்து,......        --- கந்தர்கலிவெண்பா.

உயிர்கள் பிறவா நிலனும் இல்லை. இறவா நிலனும் இல்லை.  இது பற்றிப் பட்டினத்து சுவாமிகள் கூறுமாறு காண்க..

அருள்பழுத்து அளிந்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு அமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாண,நின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யான்ஒன்று உணர்த்துவான், எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயர் ஆகியுந் தந்தையர் ஆகியும்
வந்து இலாதவர் இல்லை, யான் அவர்
தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும்

வந்து இராததும் இல்லை, முந்து
பிறவா ,இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை, யான் அவை

தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை,
அனைத்தே காலமும் சென்றது, யான்இதன்மேல்இனி
இளைக்குமாறு இலனே, நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம் பயின்றதும் இலனே, தந்திரம்

பயின்றவர்ப் பயின்றதும் இலனே, ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக, என்னையும்
இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின்
கடல்ப டாவகை காத்தல்நின் கடனே .--- பதினோராம் திருமுறை.

எந்தத் திகையினும் மலையினும் உவரியின்
எந்தப் படியினும் முகடினும் உளபல
எந்தச் சடலமும் உயிர்இயை பிறவியின் ...... உழலாதே...    ---  திருப்புகழ்.

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சென்மமோ? 
மூடனாய் அடியேனும் அறிந்து இலேன்,
இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ?
என் செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே!              ---  பட்டினத்தார்.


சுற்றிப் பலநாளும் தட்டுப்பட்டுச் சுழல்வேனை ---

இப்படி ஆன்மா எண்ணில்லாத ஊழி காலமாக பந்தபாசத்தால் கட்டுப்பட்டு பிறவிச் சுழலில் கிடந்து சுழல்கின்றது.

அப்படி ஏழும் ஏழும் வகுத்து வழாது போதினின்
     அக்ரம் வியோம கோளகை ...... மிசைவாழும்
அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி,
     அனைத்துஉரு வாய காயமது ...... அடைவேகொண்டு

இப்படி யோனி வாய்தொறும்உயா விழா,உல
     கில்தடு மாறி யேதிரி ...... தருகாலம்
எத்தனை ஊழி காலம் எனத்தெரி யாது வாழிஇ
     னிப்பிற வாது நீஅருள் ...... புரிவாயே.     ---  திருப்புகழ்.
  
சற்றுப் பற்றக் கருதாதோ ---

முருகா, இவ்வாறு பலப்பலப் பிறப்புக்களை எடுத்துக் களைத்து இளைத்த அடியேன் உய்யவேண்டும் என்று உமது திருவுள்ளத்தில் ஒரு சிறிது நினைக்கலாகாதோ என்று அருணகிரியார் கல்லும் கரையச் சொல்லுகின்றார்.

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒருசற்றும் நினைந்திலையே..     ---  கந்தர் அநுபூதி.
  
வட்டப் புட்பத் தல மீதே வைக்கத் தக்கத் திருபாதா ---

அடியார்கள் இறைவனுடைய திருவடிகளைத் தமது இதய தாமரையாகிய பீடத்தில் நிறுவித் தியானம் புரிவார்கள்.  மந்திர மலர் இட்டு மானத வழிபாடு புரிவார்கள். "மலர்மிசை ஏகினான்" என்று திருவள்ளுவரும் இந்தக் குறிப்பையே கூறுகின்றார்.

கொந்து வார்குரவு அடியினும் அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினும், நெறிபல
கொண்ட வேதநன் முடியினும் மருவிய ...... குருநாதா..      ---  திருப்புகழ்.

கட்டத்து அற்றத்து அருள்வோனே ---

கட்டம் - கஷ்டம் என்ற சொல் கட்டம் என வந்தது. கஷ்டம் - துன்பம்.  அற்றம் - சமயம்.

அடியார்கள் துன்பப்படும் தருணத்தில் முருகன் வந்து அருள் புரிவார்.

நோவ உரையான், எம்மை நோவக் கண்பார்த்திடான்,
சாவ நினையான், தளரவிடான் –  பாஅனைய
சொல்வாய்க் குறத்தி துணைபிரியாப் போரூரன்
நல்வாய்ப் பரைய நெஞ்சே நாடு.                    --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை.


கருத்துரை

காஞ்சி மேவும் கந்தநாதா, பிறவித் துயரத்தைத் தீர்த்து அருள் செய்.


                 

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...