அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முத்து ரத்ன சூத்ரம்
(காஞ்சீபுரம்)
முருகா!
பொதுமாதர் வசப்படாமல்
காத்து அருள்
தத்த
தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த ...... தனதான
முத்து
ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்
முற்செ மத்து மூர்க்கர் ...... வெகுபாவர்
முத்து
திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்
முச்சர் மெத்த சூட்சர் ...... நகையாலே
எத்தர்
குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
இட்ட முற்ற கூட்டர் ...... விலைமாதர்
எக்கர்
துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்
இப்ப டிக்கு மார்க்கம் ...... உழல்வேனோ
தித்தி
மித்தி மீத்த னத்த னத்த மூட்டு
சிற்று டுக்கை சேட்டை ...... தவில்பேரி
திக்கு
மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்
செக்க டற்கு ளாழ்த்து ...... விடும்வேலா
கற்பு
ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்
கத்தர் பித்தர் கூத்தர் ...... குருநாதா
கற்கு
றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்
கச்சி நத்தி நாட்கொள் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முத்து
ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர்,
முன் செமத்து மூர்க்கர், ...... வெகுபாவர்,
முத்து
உதிர்த்த வார்த்தை, ஒத்த பத்ர வாள்கண்
முச்சர், மெத்த சூட்சர், ...... நகையாலே
எத்தர், குத்திர அர்த்தர், துட்ட முட்ட காக்கர்,
இட்டம் உற்ற கூட்டர், ...... விலைமாதர்,
எக்கர், துக்கர், வாழ்க்கை உற்ற, சித்த நோய்ப் புண்,
இப்படிக்கு மார்க்கம் ...... உழல்வேனோ?
தித்தி
மித்தி மீத்த னத்த னத்த மூட்டு,
சிற்று உடுக்கை, சேட்டை ...... தவில்,பேரி,
திக்கு
மக்கள் ஆக்கை, துக்க வெற்பு
மீக்கொள்
செக் கடற்குள் ஆழ்த்து ...... விடும்வேலா!
கல்
புரத்தை வீட்டி, நட்டம் இட்ட நீற்றர்,
கத்தர், பித்தர், கூத்தர், ...... குருநாதா!
கல்
குறிச்சி வாழ்ப் பெண் ஒக்க வெற்றி வேல்கொள்
கச்சி நத்தி நாள்கொள் ...... பெருமாளே.
பதவுரை
தித்தி மித்தி மீத் தனத்த னத்தம் மூட்டு
--- தித்தி மித்தி மீத் தனத்த நத்தம் என்ற ஒலியை எழுப்பும்
சிற்று உடுக்கை --- சின்ன உடுக்கை,
சேட்டை தவில் --- அடிக்கப்படுகின்ற தவில்,
பேரி --- முரசு என்ற வாத்தியங்களின் ஒலியைக்
கேட்டு
திக்கு மக்கள் ஆக்கை --- எட்டுத் திக்குகளில்
இருந்த மக்களின் உடம்பில்
துக்க வெற்பு மீக்கொள் --- துன்பம் மலை போல் வளர்வதைக் கண்டு அதற்குக் காரணமாயிருந்த சூரனை
செம் கடற்குள் ஆழ்த்து விடும் வேலா --- சிவந்த
உதிரக் கடலில் ஆழ்த்திய வேலாயுதரே!
கல் புரத்தை வீட்டி --- கல்லைப் போன்று
உறுதியாக இருந்த திரிபுரங்களை எரித்து,
நட்டம் இட்ட நீற்றர் --- திருநடனம் புரிந்த, திருநீறு அணிந்த சிவபெருமானும்,
கத்தர், பித்தர், கூத்தர் குருநாதா --- தலைவரும், பித்தரும், கூத்தப் பெருமானும் ஆகிய
சிவமூர்த்தியின் குருநாதரே!
கல் குறிச்சி வாழ் --- மலைகளுடன் கூடிய
குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த
பெண் ஒக்க --- வள்ளி பிராட்டியுடன் சேர்ந்து,
வெற்றிவேல் கொள் --- வெற்றியைத் தரும்
வேலாயுதத்தை ஏந்தி,
கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே ---
கச்சியம்பதியை விரும்பி நாள்தோறும் பொலிவுடன் இருக்கும் பெருமையில் சிறந்தவரே!
முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர
மார்க்கர் --- முத்து ரத்தினம் இவைகளால் அலங்கரிக்கப்பட்ட, ஒரு இயந்திரத்தை நிகர்த்த, விசித்திரமான வழியைப் பற்றினவர்களும்,
முன் சென்மத்து மூர்க்கர் --- முன்
பிறவியிலேயே மூர்க்கராகி இருந்தவர்களும்,
வெகு பாவர் --- மிகுந்த பாவத்தைச்
செய்பவர்களும்,
முத்து உதிர்த்த வார்த்தை ஒத்த --- முத்துக்களை
உதிர்த்தது போல பேச்சுக்களைப் பேசுபவர்களும்,
சித்ர மார்க்கர் --- விசித்திரமான வழியைப்
பற்றினவர்களும்,
பத்ரம் வாள்கண் முஞ்சர் --- வாளாயுதம் போன்ற
கூரிய கண்களை உடையவர்களும், அழிந்து போவோர்களும்,
மெத்த சூட்சர் --- மிகுந்த தந்திரங்களை
உடையவர்களும்,
நகையாலே எத்தர் --- சிரிப்பினாலேயே
ஏமாற்றுபவர்களும்,
குத்திர அர்த்தர் --- வஞ்சனைப் பொருளுடன்
பேசுபவர்களும்,
துட்ட முட்ட காக்கர் --- துஷ்டத்தனம்
முழுமையும் உடைய காக்கை போன்றவர்களும்.
இட்டம் உற்ற கூட்டர் --- தங்களுக்கு
விருப்பமான கூட்டத்தில் சேருபவர்களும்,
எக்கர் --- இறுமாப்பு உடையவர்களும்,
துக்கர் விலைமாதர் --- துக்கத்தைத்
தருபவர்களும் ஆகிய விலை மாதர்களின்
வாழ்க்கை உற்ற --- வாழ்க்கையில் ஆசை வைத்த,
சித்த நோய்ப் புண் --- மன நோய் ஆகிய
புண்ணைக் கொண்டு,
இப்படிக்கு மார்க்கம் உழல்வேனோ --- இப்படிப்பட்ட வழியில் அடியேன் உழலல் ஆமோ?
பொழிப்புரை
தித்தி மித்தி மீத் தனத்த நத்தம் என்ற
ஒலியை எழுப்பும் சின்ன உடுக்கை,
அடிக்கப்படுகின்ற
தவில், முரசு என்ற
வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு எட்டுத் திக்குகளில் இருந்த மக்களின் உடம்பில்
துன்பம் மலை போல் வளர்வதைக் கண்டு அதற்குக் காரணமாயிருந்த சூரனை சிவந்த உதிரக்
கடலில் ஆழ்த்திய வேலாயுதரே!
கல்லைப் போன்று உறுதியாக இருந்த
திரிபுரங்களை எரித்து, திருநடனம் புரிந்த, திருநீறு அணிந்த சிவபெருமானும், தலைவரும், பித்தரும், கூத்தப் பெருமானும் ஆகிய
சிவமூர்த்தியின் குருநாதரே!
மலைகளுடன் கூடிய குறிஞ்சி நிலத்தில்
வாழ்ந்த வள்ளி பிராட்டியுடன் சேர்ந்து, வெற்றியைத்
தரும் வேலாயுதத்தை ஏந்தி, கச்சியம்பதியை
விரும்பி நாள்தோறும் பொலிவுடன் இருக்கும் பெருமையில் சிறந்தவரே!
முத்து ரத்தினம் இவைகளால்
அலங்கரிக்கப்பட்ட, ஒரு இயந்திரத்தை
நிகர்த்த, விசித்திரமான வழியைப்
பற்றினவர்களும், முன் பிறவியிலேயே
மூர்க்கராகி இருந்தவர்களும், மிகுந்த பாவத்தைச்
செய்பவர்களும், முத்துக்களை
உதிர்த்தது போல பேச்சுக்களைப் பேசுபவர்களும், வாளாயுதம் போன்ற கூரிய கண்களை
உடையவர்களும், அழிந்து போவோர்களும், மிகுந்த தந்திரங்களை உடையவர்களும், சிரிப்பினாலேயே ஏமாற்றுபவர்களும், வஞ்சனைப் பொருளுடன்
பேசுபவர்களும், துஷ்டத்தனம்
முழுமையும் உடைய காக்கை போன்றவர்களும். தங்களுக்கு
விருப்பமான கூட்டத்தில் சேருபவர்களும், இறுமாப்பு
உடையவர்களும், துக்கத்தைத் தருபவர்களும் ஆகிய விலை மாதர்களின்
வாழ்க்கையில் ஆசை வைத்த, மன நோய் ஆகிய
புண்ணைக் கொண்டு, இப்படிப்பட்ட வழியில்
அடியேன் உழலல் ஆமோ?
விரிவுரை
முத்து
ரத்ன சூத்ரம் ஒத்த ---
முத்துக்களும்
இரத்தினங்களும் இழைத்துச் செய்த இயந்திரப் பாவை போன்றவர்கள் பொதுமாதர்கள்.
சித்ர
மார்க்கர் ---
கண்டு
பிடிக்க முடியாத ஒரு விசித்திரமான வழியைத் தமக்கென அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள்.
முற்
செமத்து மூர்க்கர் ---
சென்மம்
என்ற சொல் செமம் என வந்தது. இதேபோல், பிறிதோரிடத்தும் வருவது காண்க.
செமித்தது
எத்தனை அளவிலை... --- (சினத்திலத்தினை) திருப்புகழ்.
செமம்
என்ற சொல் சமம் என்பதாகக் கொண்டால்,
சமம்
- போர்.
போரில்
முற்பட்டு நிற்பவர் என்றும் பொருள்படும்.
முத்து
உதிர்த்த வார்த்தை ---
முத்துக்கள்
உதிர்வதுபோல் இனிய சொற்களைப் பேசி இளைஞர்களை மயக்குவர்.
ஒத்த
பத்ர வாட்கண்
---
பத்திரம்
- வாள்.
பத்திரம்
எடுத்துத் தான்முன் நினைத்த
அப்பரிசே
செய்தான்.... --- பெரியபுராணம்.
பத்திரம்
ஒத்த ஒளி நிறைந்த கண்களை உடையவர்கள். வாள்
- ஒளி.
முச்சர் ---
முஞ்சர்
- அழிகின்றவர். இச் சொல் சந்தத்தை நோக்கி முச்சர் என வந்தது.
முஞ்சர்
மனைவாசல் தேடித்தேடி உழலாதே... ---
(முந்துதமிழ்) திருப்புகழ்.
மெத்த
சூட்சர்
---
சூட்சுமம்
என்ற சொல், சூட்சர் என வந்தது.
மிகவும் தந்திரமாகப் பேசுபவர்கள்.
எத்தர் ---
எத்துதல்
- ஏமாற்றுதல். ஏமாற்றுவதில் வல்லவர்கள்.
குத்திர
அர்த்தர்
---
குத்திரம்
- வஞ்சகர். வஞ்சனைப் பொருள்களை அமைத்து உரையாடுபவர்கள்.
குத்திரம்
கோள்களவு கல்லாமல்... --- பட்டினத்தார்.
துட்ட
முட்ட காக்கர்
---
முட்ட
– முழுவதும். துஷ்டத்தனம் முழுவதும் கொண்ட
காக்கை போன்றவர். காக்கன் போக்கன் என்பது
பழமொழி.
எக்கர் ---
எக்கர்
- இறுமாப்பு. தமக்கு மிஞ்சியவர் ஒருவரும் இல்லை
என்று இறுமாந்து இருப்பவர்கள்.
எக்கராம்
அமண்கையருக்கு எளியேன் அலேன், திரு
ஆலவாய் அரன் நிற்கவே ... --- திருஞானசம்பந்தர்.
துக்கர்
வாழ்க்கை உற்ற ---
துக்கத்தைத்
தருகின்ற அப் பொதுமாதருடன் வாழ்க்கை கொண்டு அவலமுறுவர் மாக்கள்.
சித்த
நோய்ப்புண் ---
மனநோய்
கொண்டு உள்ளம் புண்ணாவார்கள். உடல் நோயும்
உளநோயும் பெற்றுத் துன்புறுவார்கள்.
இப்படிக்கு
மார்க்கம் உழல்வேனோ ---
இப்படிப்பட்ட
துன்மார்க்கத்தில் அடியேன் தடுமாறலாகாது.
சிற்றுடுக்கை
சேட்டை தவில் பேரி ---
உடுக்கை, தவில், முரசு முதலிய போர்ப் பறைகளை முழக்கி
அசுரர்கள் ஆரவாரம் புரிந்தார்கள்.
திக்கு
மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள் ---
எட்டுத்
திசைகளிலும் வாழ்ந்த மனிதர்கள் அசுரர்களின் ஆரவாரத்தால் துயரம் மலைபோல்
மிகுதியாகக் கொம்டு வருந்தினார்கள்.
செக்
கடற்குள் ஆழ்த்தி விடும் வேலா ---
சூரபன்மனைச்
சிவந்த உதிரக் கடலுள் மூழ்குமாறு வேலை ஏவி, முருகவேள் அவனுடைய தருக்கை அடக்கி
அருளினார்.
கற்புரத்தை
வீட்டி நட்டமிட்ட நீற்றர் ---
கல்லைப்
போல் உறுதியாக இருந்த முப்புரத்தைச் சிவபெருமான் சிரித்து எரித்தபோது, இறைவர் நடனம் புரிந்தார். இந்த ஆடல்கள் கொடுகொட்டி, பாண்டரங்கம் எனப் பெயர் பெறும்.
சிட்டம்
ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டு
மாட்டிச் சுண்ண வெண்ணீறு ஆடுவது அன்றியும் போய்ப்
பட்டம்
ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால்மதியம் சூடி
நட்டம்
ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.. --- திருஞானசம்பந்தர்.
கச்சிநத்தி
நாட்கொள்
---
கச்சி
நத்தி --- காஞ்சிபுரத்தை விரும்பி.
கைச்சினத்தி
என்று பாடம் இருக்குமானால், திருத்துறைப்பூண்டியின்
அருகில் உள்ள கைச்சினம் என்ற திருத்தலத்தைக் குறிக்கும்.
கைச்சினம்
தேவாரப் பாடல் பெற்றது. மதுரை ஆதீனத்தைச்
சேர்ந்தது.
கருத்துரை
காஞ்சி
மாநகர் மேவிய முருகா, மாதர் வசமாகாது
காத்து அருள் செய்.
No comments:
Post a Comment