காஞ்சீபுரம் - 0497. மயல்ஓதும் அந்த




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மயல்ஓதும் அந்த (காஞ்சீபுரம்)

முருகா!
பொதுமாதர் மயலில் விழாமல் காத்து அருள்.


தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான


மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
     வசைபேசு கின்ற ...... மொழியாலும்

மறிபோலு கின்ற விழிசேரு மந்தி
     மதிநேரு கின்ற ...... நுதலாலும்

அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச
     நடையாலும் அங்கை ...... வளையாலும்

அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து
     அடியேன்ம யங்கி ...... விடலாமோ

மயிலேறி யன்று நொடிபோதி லண்டம்
     வலமாக வந்த ...... குமரேசா

மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள்
     மலைமாது தந்த ...... முருகேசா

நயவானு யர்ந்த மணிமாட மும்பர்
     நடுவேநி றைந்த ...... மதிசூழ

நறைவீசு கும்ப குடமேவு கம்பை
     நகர்மீத மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மயல் ஓதும் அந்த நிலையாலும், வஞ்ச
     வசை பேசுகின்ற ...... மொழியாலும்,

மறி போலுகின்ற விழிசேரும் அந்தி
     மதி நேருகின்ற ...... நுதலாலும்,

அயிலே நிகர்ந்த விழியாலும், அஞ்ச
     நடையாலும், அங்கை ...... வளையாலும்,

அறிவே அழிந்து, அயர்வு ஆகி நைந்து,
     அடியேன் மயங்கி ...... விடல் ஆமோ?

மயில் ஏறி அன்று நொடி போதில் அண்டம்
     வலமாக வந்த ...... குமர ஈசா!

மறிதாவு செங்கை அரனார் இடம் கொள்
     மலைமாது தந்த ...... முருக ஈசா!

நய வான் உயர்ந்த மணிமாடம் உம்பர்
     நடுவே நிறைந்த ...... மதிசூழ,

நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை
     நகர் மீது அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை

      மயில் ஏறி --- மயிலின் மீது ஏறி,

     அன்று --- அந்நாளில்

     நொடி போதில் --- ஒரு நொடிப் பொழுதில்

     அண்டம் வலமாக வந்த --- உலகைச் சுற்றி வலம் வந்த

     குமர ஈசா --- குமாரக் கடவுளே!

      மறி தாவு செங்கை --- மானை தாவுகின்ற நிலையில் ஏந்தியுள்ள சிவந்த திருக்கரத்தை உடைய

     அரனார் இடம் கொள் --- சிவபெருமானுடைய இடது பாகத்தில் எழுந்தருளி உள்ள

     மலைமாது தந்த முருக ஈசா --- மலைமகளாகிய பார்வதி தேவி தந்தருளிய முருகப் பெருமானே!

      நய வான் உயர்ந்த --- மேம்பாட்டுடன், வானளாவி உயர்ந்துள்ள,

     மணிமாடம் உம்பர் --- அழகிய மாடங்களின் உச்சியிலும்

     நடுவே நிறைந்த மதி சூழ --- நடுவிலும் நிறைந்த ஒளி வீசும் சந்திரன் சூழ்ந்து விளங்க,

      நறைவீசு கும்பம் --- நறுமணம் கமழும் யாக கும்ப கலசங்களும்,

     குடம் மேவு --- நிறைகுடங்களும் பொருந்தி உள்ள,

     கம்பை நகர் மீது அமர்ந்த --- கம்பை ஆற்றங்கரை நகராகிய காஞ்சிபுரத்தின் மீது விருப்புடன் வீற்றிருக்கும்

     பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!

      மயல் ஓதும் அந்த நிலையாலும் --- ஆசை மயக்கத்தைக் கூறுகின்ற அந்த நிலையாலும்,

     வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும் --- வஞ்சகம் கூடிய பழிப்புச் சொற்களைப் பேசுகின்ற பேச்சுக்களாலும்,

      மறி போலுகின்ற விழிசேரும் --- மான் பார்வை கொண்ட கண்களுக்கு அருகிலுள்ள,

     அந்திமதி நேருகின்ற நுதலாலும் --- மாலைப் பிறையை நிகர்க்கின்ற நெற்றியாலும்,

      அயிலே நிகர்ந்த விழியாலும் --- வேலை ஒத்த கண்களாலும்,

     அஞ்ச நடையாலும் --- அன்னத்தை ஒத்த நடையாலும்,

     அங்கை வளையாலும் --- அழகிய கைகளில் உள்ள வளையல்களாலும்,

      அறிவே அழிந்து அயர்வாகி நைந்து --- அடியேனுடைய அறிவு அழிவுபட்டு, சோர்ந்து, மெலிந்து,

     அடியேன் மயங்கி விடல் ஆமோ --- அடியேன் மயக்கம் கொள்ளல் ஆமோ? கூடாது.

பொழிப்புரை

         மயிலின் மீது ஏறி, அந்நாளில் ஒரு நொடிப் பொழுதில் உலகைச் சுற்றி வலம் வந்த குமாரக் கடவுளே!

         மானை தாவுகின்ற நிலையில் ஏந்தியுள்ள சிவந்த திருக்கரத்தை உடைய சிவபெருமானுடைய இடது பாகத்தில் எழுந்தருளி உள்ள மலைமகளாகிய பார்வதி தேவி தந்தருளிய முருகப் பெருமானே!

         மேம்பாட்டுடன், வானளாவி உயர்ந்துள்ள, அழகிய மாடங்களின் உச்சியிலும் நடுவிலும் நிறைந்த ஒளி வீசும் சந்திரன் சூழ்ந்து விளங்க,

         நறுமணம் கமழும் யாககும்ப கலசங்களும், நிறைகுடங்களும் பொருந்தி உள்ள, கம்பை ஆற்றங்கரை நகராகிய காஞ்சீபுரத்தின் மீது விருப்புடன் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         ஆசை மயக்கத்தைக் கூறுகின்ற அந்த நிலையாலும், வஞ்சகம் கூடிய பழிப்புச் சொற்களைப் பேசுகின்ற பேச்சுக்களாலும், மான் போலும் பார்வை கொண்ட கண்களுக்கு அருகிலுள்ள, மாலைப் பிறையை நிகர்க்கின்ற நெற்றியாலும், வேலை ஒத்த கண்களாலும், அன்னத்தை ஒத்த நடையாலும், அழகிய கையில் உள்ள வளையல்களாலும், அடியேனுடைய அறிவு அழிவுபட்டு, சோர்ந்து, மெலிந்து, அடியேனாகிய நான் மயக்கம் கொள்ளல் ஆமோ? கூடாது.

விரிவுரை

மயல் ஓதும் அந்த நிலையாலும் ---

ஆசையால் மயக்கம் உண்டாகும். ஆசையை அதிகரிக்கச் செய்து அதனால் மயக்கத்தைச் செய்கின்றபடி பேசுகின்ற பொதுமாதரது நிலையினாலும்.

அன்றி, மயலோது மந்த நிலையாலும் - மயக்கத்தைத் தருகின்ற மந்த கதியுடன் கூடிய நிலையினாலும் என்றும் பொருள் படும்.


வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும் ---

வஞ்சகத்துடன் கூடிய வசைமொழிகளைப் பேசுவர் பொதுமாதர்.  அத்தகைய பேச்சுக்களால் ஆடவர் துன்புறுவர்.


மறிபோலுகின்ற விழி சேரும் ---

மறி - மான்.  பெண்களின் கண்களின் பார்வை மான்போல் மிரண்டு பார்க்கும் இயல்பு உடையது.


அந்திமதி நேருகின்ற நுதலாலும் ---

அந்தி - மாலை.  மாலை நேரத்தில் தோன்றும் பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி.


அயிலே நிகர்த்த விழியாலும் ---

அயில் - கூர்மை.  இது ஆகுபெயராக வேலைக் குறிக்கின்றது.  பெண்களின் கண்கள் வேல் போன்ற கூர்மை உடையது.


அஞ்ச நடையாலும் ---

அஞ்சம் - அன்னம்.  இது அம்சம் என்ற வடசொல்லின் திரிபு.

பெண்களின் நடை அன்னம் நடப்பது போன்ற அழகு உடையது.


அங்கை வளையாலும் ---

அழகிய கரங்களில் ஒளிபெற அணிந்துள்ள வளைகள் ஆடவரது மனத்தை வளைத்துப் பிடித்து மயல் விளைவிக்கும்.


அறிவே அழிந்து ---

 மேற்கூறிய பொதுமாதர்களின் அவயவ எழிலில் மயங்கி மக்கள் அறிவை இழக்கின்றார்கள்.

இராவணன் ஆயிரம் மறைகள் ஓதினவன்.  விச்சரவசுவின் மகன்.  சிவபூசை செய்தவன்.  தவம் பல செய்தவன்.  இத்தனை இருந்தும் மாதர் ஆசையால் அறிவை இழந்தான்.


அயர்வாகி நொந்து அடியேன் மயங்கி விடலாமோ ---

"ஆசையால் அறிவழிந்து, மிகுந்த சோர்வை உற்று மெலிந்து போகலாமோ?  அவ்வாறு மயங்கி வீணில் கெடக் கூடாது.  அடியேனைக் காத்தருள் வேண்டும்" என்று அடிகளார் முறையிடுகின்றார்.


மயிலேறி அன்று நொடி போதில் அண்டம் வலமாக வந்த குமரேசா ---

நாரத முனிவர் ஒரு சமயம் பெருந்தவம் புரிந்தனர். அத்தவத்துக்கு இரங்கிய பிரமதேவர் ஒரு மாதுளங் கனியைத் தந்தனர். அக்கனியை நாரதமுனிவர் சிவபெருமானுடைய திருவடியில் வைத்து வணங்கினார்.

விநாயகமூர்த்தியும், முருகமூர்த்தியும் தாய் தந்தையரை வணங்கி அக்கனியைக் கேட்டார்கள். “அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தவர்க்கு இக் கனி தரப்படும்” என்று கூறியருளினார் சிவபெருமான்.

முருகவேள் மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தார். விநாயகப் பெருமான், அகில உலகங்களும் சிவத்துக்குள் அடங்கி நிற்றலால், சிவமூர்த்தியை வலம் வந்தார். “தேவரீருக்கு அன்னியமாக உலகம் இல்லையே” என்று கூறி வணங்கினார். பரமசிவன் விநாயகருக்குப் பழத்தை தந்தருளினார்.

உலகங்களை வலம் வந்த வடிவேற்பெருமான் தனக்குக் கனி தராமையால் வெகுள்வார் போல் வெகுண்டு, சிவகிரியின் மேற்றிசை நோக்கித் தண்டாயுதபாணியாக நின்றார். சிவமூர்த்தியும் உமாதேவியாரும் கணங்கள் புடை சூழச்சென்று முருகவேளை எடுத்து அணைத்து, “கண்மணி! அரும்பு-சரியை; மலர் கிரியை; காய்-யோகம்; பழம்-ஞானம். நீ ஞானபண்டிதன். ஞானமாகிய பழம் நீதான். பழநி நீ” என்றார். அதனால் அப்பதிக்கும் பழநி என நாமம் ஏற்பட்டது.

இந்த வரலாற்றின் உட்பொருள்

(1)   கணேசமூர்த்தி கந்தமூர்த்தி என்ற இருவரும் கனி கேட்டபோது சிவபெருமான் அப்பழத்தைப் பிளந்து பாதி பாதியாகத் தரலாம்.

(2)   மற்றொரு பழத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாம்.   காரைக்கால் அம்மையார் வேண்ட மாங்கனியைத் தந்தவர்     தானே சிவபெருமான்.

(3)   எல்லா உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வரும் ஆற்றல் வல்லமை கணபதிக்கும் உண்டு.

(4)   உலகங்கள் யாவும் சிவத்துக்குள் ஒடுங்கியிருக்கின்றன என்ற உண்மையை ஞானபண்டிதனான முருகவேளும்    அறிவார்.

ஆகவே, இவ்வரலாற்றின் உள்ளுறை தான் யாது? சிவத்துக்கு இரு தன்மைகள் உண்டு. ஒன்று எல்லாவற்றிலும் சிவம் தங்கியிருக்கிறது. மற்றொன்று எல்லாப்பொருள்களும் சிவத்துக்குள் ஒடுங்கி நிற்கின்றன.

இந்த இரு கடவுள் தன்மைகளையும் உலகவர் உணர்ந்து உய்யும் பொருட்டு, விநாயகர் சிவத்துக்குள் எல்லாவற்றையும் பார்த்தார். முருகர் எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப் பார்த்தார்.

இதனையே தாயுமானவர் முதற் பாடலில் கூறுகின்றார்.

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
    ஆனந்த பூர்த்தி ஆகி அருளோடு நிறைந்தது எது?”

இது எங்கும் நிறைந்த தன்மை.

  தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம்
  தங்கும் படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த்
    தழைத்தது எது?”

இது எல்லாம் சிவத்துக்குள் அடங்குந் தன்மை. 

இந்த அரிய தத்துவத்தை இவ் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. இந்த இனிய கருத்தை நன்கு சிந்தித்துத் தெளிக.

ஆகமம் விளைத்து, அகில லோகமும் நொடிப்பு அளவில்
ஆசையொடு சுற்றும் அதிவேகக் காரனும்...          ---  திருவேளைக்காரன் வகுப்பு.  

அன்று என்பது பண்டறி சுட்டு.

மறிதாவு செங்கை அரனார் ---

மறி - மான்.  தாருகவனத்து முனிவர்கள் அபிசார வேள்விசெய்து விட்ட மானை இறைவர் தமது இடக்கரத்தில் ஏந்தியருளினார். மான் சடையை நோக்கித் தாவிக்கொண்டு இறைவருடைய திருக்கரத்தில் இருக்கும். அது அப்பெருமானுடைய சடையில் உள்ள அறுகம்புல்லைப் புசிக்கும் பொருட்டு தாவுவதுபோல் காட்சி தரும்.

தாவித் துள்ளிக் குதித்து ஓடுகின்ற மனமாகிய மானை இறைவன் அடக்கி ஆண்டான் என உணர்க.
   
நறை வீசு கும்ப குடம் மேவு ---

வெள்ளி வேதிகையில் நறுமணம் கமழும் நீரைக் கும்பத்தில் வைத்து, அதில் இறைவனை ஆவாகனம் புரிந்து வணங்குவர்.

குடம் - நிறைகுடம் வைத்து அலங்கரிப்பார்கள்.

கம்பை நகர் ---

கம்பை நதிக்கரையில் விளங்குகின்ற காஞ்சி மாநகர்.

கருத்துரை

கச்சிநகர் மேவும் கந்தவேளே, மாதர் மயல் படாது காத்தருள்.
                                                                       


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...