அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மக்கட்குக் கூற
(காஞ்சீபுரம்)
முருகா!
அப்பாலுக்கும் அப்பால்
ஆன அரிய ஞானப் பொருளை
அடியேனுக்கு உபதேசித்து அருள்.
தத்தத்தத்
தானன தானன
தத்தத்தத் தானன தானன
தத்தத்தத் தானன தானன ...... தனதான
மக்கட்குக்
கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது
மற்றொப்புக் கியாதுமொ வாதது ......
மனதாலே
மட்டிட்டுத்
தேடவொ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது
மத்தப்பொற் போதுப கீரதி ......
மதிசூடும்
முக்கட்பொற்
பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது
முத்திக்குக் காரண மானது ......
பெறலாகா
முட்டர்க்கெட்
டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு
முற்பட்டப் பாலையி லாவது ......
புரிவாயே
செக்கட்சக்
ராயுத மாதுலன்
மெச்சப்புற் போதுப டாவிய
திக்குப்பொற் பூதர மேமுதல் ......
வெகுரூபம்
சிட்டித்துப்
பூதப சாசுகள்
கைக்கொட்டிட் டாடம கோததி
செற்றுக்ரச் சூரனை மார்பக ......
முதுசோரி
கக்கக்கைத்
தாமரை வேல்விடு
செச்சைக்கர்ப் பூரபு யாசல
கச்சுற்றப் பாரப யோதர ......
முலையாள்முன்
கற்புத்தப்
பாதுல கேழையு
மொக்கப்பெற் றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மக்கட்குக்
கூற அரிது ஆனது,
கற்று எட்டத் தான் முடியாதது,
மற்று ஒப்புக்கு யாதும் ஒவாதது, ...... மனதாலே
மட்டு
இட்டுத் தேட ஒணாதது,
தத்வத்தில் கோவை படாதது,
மத்தப் பொன் போது பகீரதி ......
மதிசூடும்
முக்கண் பொற்பாளர் உசாவிய
அர்த்தக்குப் போதகம் ஆனது,
முத்திக்குக் காரணம் ஆனது, ...... பெறல்ஆகா
முட்டர்க்கு
எட்டாதது, நான்மறை
எட்டிற்று எட்டாது எனவே வரு
முற்பட்டு அப்பாலையில் ஆவது ......
புரிவாயே.
செக்கண்
சக்ர ஆயுத மாதுலன்
மெச்சப் புல் போது படாவிய
திக்குப் பொன் பூதரமே முதல் ......
வெகுரூபம்
சிட்டித்து, பூத பசாசுகள்
கைக்கொட்டு இட்டு ஆட, மகா உததி
செற்று, உக்ரச் சூரனை மார் பக, ...... முதுசோரி
கக்கக்
கைத் தாமரை வேல்விடு
செச்சைக் கர்ப்பூர புய அசல!
கச்சு உற்றப் பார பயோதர ......
முலையாள் முன்
கற்புத்
தப்பாது உலகு ஏழையும்
ஒக்கப் பெற்றாள் விளையாடிய
கச்சிக் கச்சாலையில் மேவிய ......
பெருமாளே.
பதவுரை
செக்கண் --- சிவந்த கண்களையும்,
சக்ர ஆயுத --- சக்ராயுதத்தையும் உடைய
மாதுலன் மெச்ச --- தாய்மாமன் ஆகிய திருமால்
மெச்சிப் புகழும்படியாக,
புல் போது படாவிய --- புல்லையும் மலரையும் பெரிதாகப் படரவிட்டு,
திக்குப் பொன் பூதரமே முதல் --- திசைகளில்
உள்ள பொன் மேருமலை முதலாக
வெகு ரூபம் சிட்டித்து --- பலப்பல உருவ
பேதங்களை உண்டாக்கி,
பூதப சாசுகள் கைக் கொட்டு இட்டு ஆட ---
பூதங்களும் பேய்களும் கைகொட்டி ஆரவாரித்து ஆடவும்,
மகா உததி செற்று --- பெருங்கடலை
அடக்கியும்,
உக்ரச் சூரனை மார்பகம் முது சோரி கக்க ---
கடுமையான சூரனுடைய மார்பகத்திலிருந்து மிகுந்த இரத்தம் சொரியுமாறு,
கைத் தாமரை வேல்விடு --- தாமரை மலர் போன்ற திருக்கரத்தினின்று வேலாயுதத்தை விட்டருளிய
செச்சைக் கர்ப்பூர புய அசல ---
செஞ்சந்தனமும் பச்சைக் கற்பூரமும் பூசிய மலை போன்ற திருத்தோள்களை உடையவரே!
கச்சு உற்றப் பார பயோதர முலையாள் ---
கச்சணிந்த கனமான பால் ஊறும் திருமுலைகளை உடையவளும்,
முன் கற்புத் தப்பாது உலகு ஏழையும்
ஒக்கப் பெற்றாள் --- முன்னர், கற்புநிலை தவறாமல்
ஏழு உலகங்களையும் ஒருங்கே ஈன்று அளித்தவளுமான காமாட்சி அம்மையார்
விளையாடிய கச்சி --- திருவிளையாடல்கள்
பல புரிந்த காஞ்சிபுரத்தில்
கச்சாலையில் மேவிய பெருமாளே ---
கச்சபேசுரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமையில் மிகுந்தவரே!
மக்கட்குக் கூற அரிதானது --- மக்களுக்கு
அது இத்தன்மையது என எடுத்துக் கூறுதற்கு அரிதானது,
கற்று எட்டத் தான் முடியாதது --- கற்ற
கல்வியாலும் அதனை எட்ட முடியாதது,
மற்று ஒப்புக்கு யாதும் ஒவாதது ---
மற்றபடி அதற்கு ஒப்பாக ஒன்றையும் சொல்ல முடியாதது,
மனதாலே மட்டு இட்டுத் தேட ஒணாதது ---
மனத்தினால் அளவிட்டுத் தேடி அறிய முடியாதது,
தத்வத்தில் கோவை படாதது --- எத்தகைய
அறிவு ஆராய்ச்சியிலும் அதனை வரிசைப்படுத்த முடியாதது,
மத்தப் பொன் போது பகீரதி மதி சூடும் ---
ஊமத்தை மலரையும், பொன் நிறம் உடைய கொன்றை மலரையும், கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும் சடையிலே சூடும்
முக்கண் பொற்பாளர் உசாவிய ---
முக்கண்ணராகிய அழகிய சிவபிரான் சொல்லுக என்று கேட்டு
அர்த்தக்குப் போதகம் ஆனது --- சொல்லப்பட்ட பொருளுக்கு உபதேச காரணமாக இருப்பது,
முத்திக்குக் காரணம் ஆனது --- மோட்சத்துக்குக் காரணமாக விளங்குவது,
பெறல் ஆகா --- பெறுவதற்கு முடியாததாய்,
முட்டர்க்கு எட்டாதது --- மூடர்களுக்கு
எட்டாததாய் இருப்பது,
நான்மறை எட்டிற்று எட்டாது எனவே வரு ---
நான்கு வேதங்களும் எட்டியும், எட்ட முடியாமல்
இருக்கும் பொருள் அது,
முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே ---
முதன்மையான நிலைக்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவோ, அதனை எனக்கு அடியோடு உபதேசித்து
அருளுவீராக.
பொழிப்புரை
சிவந்த கண்களையும், சக்ராயுதத்தையும் உடைய தாய்மாமன் ஆகிய
திருமால் மெச்சிப் புகழும்படியாக,
புல்லையும்
மலரையும் பெரிதாகப் படரவிட்டு, திசைகளில் உள்ள பொன்
மேருமலை முதலாக பலப்பல உருவ பேதங்களை உண்டாக்கி, பூதங்களும் பேய்களும் கைகொட்டி
ஆரவாரித்து ஆடவும், பெருங்கடலை
அடக்கியும், கடுமையான சூரனுடைய
மார்பகத்திலிருந்து மிகுந்த இரத்தம் சொரியுமாறு, தாமரைமலர் போன்ற திருக்கரத்தினின்று
வேலாயுதத்தை விட்டருளிய செஞ்சந்தனமும்
பச்சைக் கற்பூரமும் பூசிய மலை போன்ற திருத்தோள்களை உடையவரே!
கச்சு அணிந்த கனமான பால் ஊறும்
திருமுலைகளை உடையவளும், முன்னர், கற்பு நிலை தவறாமல் ஏழு உலகங்களையும்
ஒருங்கே ஈன்றளித்தவளுமான காமாட்சி அம்மையார் திருவிளையாடல்கள் பல புரிந்த
காஞ்சிபுரத்தில் கச்சபேசுரம் என்னும்
திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமையில் மிகுந்தவரே!
மக்களுக்கு இது இத்தன்மையது என
எடுத்துக் கூறுதற்கு அரிதானது, கற்ற கல்வியாலும்
அதனை எட்ட முடியாதது, மற்றபடி அதற்கு
ஒப்பாக ஒன்றையும் சொல்ல முடியாதது,
மனத்தினால்
அளவிட்டுத் தேடி அறிய முடியாதது,
எத்தகைய
அறிவு ஆராய்ச்சியிலும் அதனை வரிசைப்படுத்த முடியாதது, ஊமத்தை மலரையும், தங்கநிறக் கொன்றை மலரையும், கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும் சடையிலே சூடும் முக்கண்ணராகிய அழகிய சிவபிரான் சொல்லுக
என்று கேட்டு, சொல்லப்பட்ட பொருளுக்கு உபதேச வித்தாக இருப்பது, மோட்சத்துக்குக்
காரணமாக விளங்குவது, பெறுவதற்கு
முடியாததாய், மூடர்களுக்கு
எட்டாததாய் இருப்பது, நான்கு வேதங்களும்
எட்டுவதற்கு முயன்றாலும், எட்ட முடியாமல்
இருக்கும் பொருள் அது, முதன்மையான
நிலைக்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவோ, அதனை
எனக்கு அடியோடு உபதேசித்து அருளுவீராக.
விரிவுரை
மக்கட்குக்
கூற அரிதானது ---
பரம்பொருளின்
தன்மை இது என்று மக்களால் உறுதியுடன் அறுதியிட்டு உரைக்க ஒண்ணாது.
வாசித்துக்
காண ஒணாதது பூசித்துக் கூட ஒணாதது
வாய்விட்டுப் பேச ஒணாதது ...... நெஞ்சினாலே
மாசர்க்குத்
தோண ஒணாதது நேசர்க்குப் பேர ஒணாதது
மாயைக்குச் சூழ ஒணாதது ...... விந்துநாத
ஓசைக்குத்
தூரம் ஆனது மாகத்துக்கு ஈறுஅது ஆனது
லோகத்துக்கு ஆதி ஆனது... --- திருப்புகழ்.
காண
ஒணாதது உருவோடு அருஅது
பேச ஒணாதது உரையே தருவது
காணு நான்மறை முடிவாய் நிறைவது ......
பஞ்சபூதக்
காய
பாசம் அதனிலே உறைவது
மாய மாயுடல் அறியா வகையது
காய மானவர் எதிரே அவரென ......
வந்துபேசிப்
பேண
ஒணாதது வெளியே ஒளியது
மாய னார்அயன் அறியா வகையது
பேத பேதமொடு உலகாய் வளர்வது ......
விந்துநாதப்
பேரு
மாய்கலை அறிவாய் துரியஅ
தீத மானது வினையேன் முடிதவ
பேறு மாய்அருள் நிறைவாய் விளைவது... --- திருப்புகழ்.
கற்று
எட்டத்தான் முடியாதது ---
வெறும்
கலை அறிவால் பரம்பொருளை எட்ட முடியாது. கலை அறிவு - நூல் அறிவு.
கற்ற
அறிவால் இறைவனைக் காண முயல்வது,
ஏணியை
வைத்து இமயத்தின் சிகரத்துக்கு ஏற முயல்வதை ஒக்கும்.
நூல்ஏணி
விண்ஏற நூற்குப் பருத்தி வைத்தால்
போலே
கருவி நல்நூல் போதம் பராபரமே... --- தாயுமானார்.
மற்று
ஒப்புக்கு யாதும் ஒவாதது ---
பரம்பொருள்
தனக்கு ஒன்றும் நிகர் இல்லாதது.
நிகர்
பகர அரியது --- (அகரமுதலென) திருப்புகழ்.
தனக்கு
உவமை இல்லாதான் --- திருக்குறள்.
ஒப்புஉடையன்
அல்லன் ஓர்உவமன் இல்லி.. --- அப்பர்.
மனதாலே
மட்டிட்டுத் தேட ஒணாதது ---
வாக்கினால்
தான் கூற முடியாதது. மனத்தினால் நினைக்கத்தான் முடியுமோ என்றால், அதுவும் முடியாதது.
தனு
கரண ஆதிகள் தாம் கடந்து அறியும் ஓர்
அனுபவம்
ஆகிய அருட்பெருஞ் சோதி. ---
திருவருட்பா.
மாற்றம்
மனம் கழிய நின்ற மறையோனே … --- திருவாசகம்.
உருத்திரர்
நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர்
உறுகருடர் காந்தர்வர் இயக்கர் பூதர்
மருத்துவர்
யோகியர் சித்தர் முனிவர் மற்றை
வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
கருத்துஅழிந்து
தனித்தனியே சென்று வேதங்களை
வினவ மற்றவையும் காணோம் என்று
வருத்தம்உற்று
ஆங்குஅவரோடு புலம்ப நின்ற
வஞ்சவெளியே இன்ப மயமாம் தேவே !
என்றும்...
வான்காணா
மறைகாணா மலரோன்காணான்
மால்காணான் உருத்திரனும் மதித்துக்காணான்
நான்காணா
இடத்துஅதனைக் காண்போம்என்று
நல்லோர்கள் நவில்கின்ற நலமேவேட்கை
மான்காணா
உளக்கமலம் அலர்த்தாநின்ற
வான்சுடரே ஆனந்தமயமே ஈன்ற
ஆன்காணா
இளங்கன்றாய் அலமந்துஓங்கும்
அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத்தேவே !
என்று
தெளிவாகத் தெரிவித்து உள்ளார் வள்ளற்பெருமான்.
தத்வத்தில்
கோவை படாதது
---
ஆன்ம
தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5, ஆக இந்த முப்பத்தாறு தத்துவ வரிசைகளில்
ஒன்று என்று கருத முடியாததாய், வேறு எந்த ஆராய்ச்சி
அறிவாலும் அகப் படாததாய் நிற்கும் பொருள்.
மத்தப்
பொற் போது பகீரதி ---
மத்தம்
- ஊமத்தம். இது தலைக்குறை.
மத்தமும்
மதியமும் வைத்திடும் அரன்... --- (கைத்தல)திருப்புகழ்.
பொன்பொதி
மத்தமாலை புனல் சூடி... --- திருஞானசம்பந்தர்.
பகீரதன்
தவம் செய்து கொணர்ந்ததால் கங்கை,
பகீரதி
என்று பேர் பெற்றது.
முக்கண்
பொற்பாளர் உசாவிய அர்த்தக்குப் போதகமானது ---
"அர்த்தத்துக்கு"
என்ற சொல், அத்துச் சாரியை
கெட்டு, "அர்த்தக்கு" என
வந்தது.
சிவபெருமான்
முருகவேளுடன் உரையாடிய பிரணவ ஞான உட்பொருளாக விளங்குவது.
கயிலைமலையின்
கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த காலத்தில் சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த அமரர்கள்
அனைவரும் குகக் கடவுளை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து
பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது
விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி முத்தொழிலும் புரிந்து தாமே
மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கென வெளிப்படுத்தினர்.
பின்னர், ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த
கந்தக் கடவுள் தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப்
புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து
“குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்கவொண்ணாத
மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து அதனை விளக்குவான் உன்னி
எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன்இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும்
உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல்
பூத்த முகத்தினராய் வரைபக எறிந்த வள்ளலை நோக்கி, “அமரர் வணங்குங் குமர நாயக! அறியாமையினாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும்
பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர்.
அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும்
பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை யறிந்த பெரியோர் அது
பற்றிச் சினந்து வைரங்கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக்கண்டு
வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையிலிருத்தி, எல்லார்க்கும் செய்யும் வணக்கமும்
நினக்கே எய்துந் தகையது; அறு சமயத்தார்க்கும்
நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.
எந்தை
கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன்
உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித்
தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.
சிவபெருமான்
“மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்றெறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே!
எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன
அறிந்து, முறையினால்
கழறவல்லேம்” என்றனர். அரனார் கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச்
சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும்
தணிகை வெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறு ஊர்ந்து தணிகை மாமலையைச்
சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசம் எல்லாம்
தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய
ஆரம்பித்தனர். ஞானசத்தி தரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படூஉம்
திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பாற் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு
கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் உஞற்றலானன்றே
அத்தணிகைமலை கணிக வெற்பு எனப் பெயர் பெற்றதென்பர்.
கண்ணுதற்
கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவமியற்றக் கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலமுண்ட அண்ணல் எழுந்து குமரனை வணங்கி
வடதிசை நோக்கி நின்று பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும்
பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து பிரணவோபதேசம் பெற்றனர்.
எதிர்
உறும் குமரனை இருந் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்
கழல் வந்தனை அதனொடும், தாழ்வயின்
சதுர்பட
வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள்
செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
ஞான
வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய்
என, ஓதியது எப்
பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.
முத்திக்குக்
காரணமாவது
---
முத்தி
- பந்தத்தில் இருந்து விடுபடுவது. இந்தச் சொல் வீடு எனத் தமிழில் பயில்கின்றது.
முத்தி
நிலைக்குக் காரணமான நுண் பொருள்.
பெறலாகா
---
எளிதில்
எல்லோராலும் பெற முடியாதது.
முட்டர்க்கு
எட்டாதது
---
முட்டர்
- மூடர்கள். ஞானநூல் பயிற்சி இல்லாத
மூடர்கட்கு எட்டாதது.
அறிவுநூல்
கல்லா மூடர் … --- (இரதசுரத)
திருப்புகழ்.
நான்மறை
எட்டிற்று எட்டாது எனவே வரு ---
நான்கு
வேதங்களும் எட்டியும் எட்ட முடியாததாய் விளங்கும் வியன் பொருள்.
முற்பட்டு
அப்பாலையில் ஆவது புரிவாயே ---
முற்பட்ட
நிலைக்கும் அப்பாலாக விளங்குவது.
இத்தகைய
ஞான இரகசியத்தை உபதேசித்து அருள்க என்று அடிகளார் வேண்டுகின்றார்.
செக்கண்
சக்ராயுத மாதுலன் ---
செக்கண்
- சிவந்த கண். திருமால், புண்டரீகாட்சன், கமலக் கண்ணன். புண்டரீகம் - தாமரை. அட்சம் - கண்.
உமாதேவிக்கு
அண்ணன். ஆதலின், முருகவேளுடைய மாதுலன், மாமன் எனப் புகழப் பெறுகின்றார்.
மெச்ச ---
திருமால்
முருகவேளைப் பலப் பலவாகப் புகழ்கின்றார். மாமன் மெச்சிய மருகன் எம்பெருமான் குமரவேள்.
பச்சைப்
புயல் மெச்சத் தகுபொருள்.. --- (முத்தைத்தரு) திருப்புகழ்.
கச்சிக்
கச்சாலை ---
கச்சாலை
என்பது காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபாலயம் என்ற திருக்கோயில்.
தேவர்கள்
திருப்பாற்கடலைக் கடைந்தபோது, மந்தர கிரியாகிய
மத்து, கடலில் அழுந்தாவண்ணம்
திருமால் ஆமை உருவம் கொண்டு மலையை முதுகில் தாங்கினார்.
பின்னர்
அவர் தருக்குற்று கடலைக் கலக்கி,
உலகங்கட்கு
இடர் விளைவித்தார். சிவபெருமானுடைய ஏவலினால் விநாயகர் அந்த ஆமையை வதைத்து, அதன் ஓட்டை எடுத்துச் சிவபெருமானிடம்
தந்தார். அரனார் அமை ஓட்டினை அணிகலமாக
அணிந்து கொண்டு அருளினார்.
திருமால்
தமது குற்றம் நீங்கும் பொருட்டு வழிபட்ட சிவலிங்கம் கச்சபேசர். இது சிறந்த ஜோதிர்லிங்கம்.
கருத்துரை
கச்சிக்
கச்சபாலயத்தில் எழுந்தருளிய கந்தவேளே, அப்பாலைக்கு
அப்பால் ஆன அரிய ஞானப் பொருளை உபதேசித்து அருள்.
No comments:
Post a Comment