6. தந்தையர்கள் ஒன்பதின்மர்
தவம் அது செய்தே பெற்று எடுத்தவன் முதல் பிதா,
தனை வளர்த்தவன்
ஒரு பிதா,
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒரு பிதா,
சார்ந்த சற்குரு
ஒரு பிதா,
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா, நல்ல
ஆபத்து வேளை
தன்னில்
அஞ்சல் என்று உற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா,
அன்புஉள முனோன்
ஒரு பிதா,
கவளம்இடு மனைவியைப் பெற்று உளோன் ஒருபிதா,
கலி தவிர்த்தவன்
ஒரு பிதா,
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம்
கருதுவது
நீதியாகும்,
மவுலிதனில் மதியரவு புனைவிமலர் உதவுசிறு
மதலையென
வருகுருபரா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு
குமரேசனே!
இதன் பொருள் ----
மவுலி தனில் மதி
அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா --- திருச் சடையில்
பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்துள்ள
சிவபெருமான், சூரபதுமனால் தேவர்கள் படும்
துயர் தீர்வதற்காக உதவி அருளிய சிறு குழந்தைவேலனாக வந்து, தந்தைக்கு உபதேசம் செய்து அருளிய மேலான குருதானே!
மயில் ஏறி
விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி
அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு
மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள
குமாரக் கடவுளே!
1. தவம் அது செய்தே பெற்று எடுத்தவன் முதல் பிதா --- இல்லறமாகிய தவத்தினைப் புரிந்து அதன் பயனாகப் பெற்று எடுத்தவன் முதல் தந்தை
ஆவான்,
2. தன்னை
வளர்த்தவன் ஒரு பிதா --- தன்னை வளர்த்தவன் மற்றொரு தந்தை ஆவான்,
3. தயையாக
வித்தையைச் சாற்றினவன் ஒரு பிதா --- பெரும் கருணை செய்து கல்வியைக் கற்பித்தவன் ஒரு தந்தை ஆவான்,
4. சார்ந்த
சற்குரு ஒரு பிதா --- உயிர் மேலான புருஷார்த்தங்களை அடைய அருள் நூல்களை அறிவுறுத்தியவன் ஒரு தந்தை ஆவான்,
5. அவம் அறுத்து
ஆள்கின்ற அரசு ஒரு பிதா --- துன்பம் நேராமல் காத்து அரசினை ஆளுகின்றவன் ஒரு தந்தை ஆவான்,
6. நல்ல ஆபத்து
வேளை தன்னில் அஞ்சல் என்று உற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா --- கொடிய ஆபத்து வந்த காலத்தில் அஞ்சாதே என்று ஆதரவு கூறி, நேர்ந்த வருத்தத்தை நீக்கியவன் ஒரு தந்தை ஆவான்,
7. அன்பு உள
முனோன் ஒரு பிதா --- அன்புடைய அண்ணன் ஒரு தந்தை ஆவான்,
8. கவளம் இடும்
மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா --- அன்போடு
உணவு ஊட்டும் மனைவியைப் பெற்றவன் ஒரு தந்தை ஆவான்,
9. கலி
தவிர்த்தவன் ஒரு பிதா --- வறுமையைப் போக்கி உதவியவன் ஒரு தந்தை ஆவான்,
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதியாகும் --- உலகத்தில் இவர்களை எப்போதும் தந்தையர் என்று உள்ளத்தில் கொண்டாடுவதே அறம் ஆகும்.
பெற்றெடுத்தவன், பெற்றெடுத்தவனைப் போலவே வளர்த்தவன், கல்வி கற்பித்தவன், அருள்நூல்களை ஓதிக் கொடுத்தவன், அரசன், உற்ற இடத்தில் உறுதுணை ஆனவன், தனக்கு முன் பிறந்த அண்ணன், மனைவியின் தந்தை ஆகிய மாமன், வறுமையை நீக்கியவன் ஆகிய ஒன்பது பேர்களும் ஒருவனுக்குத் தந்தை என்றே வைத்து எண்ணத் தக்கவர்கள்.
No comments:
Post a Comment