வேளாளர் இலக்கணம்





5. வேளாளர் இலக்கணம்

நல்லதே வாலயம் பூசனை நடப்பதும்,
          நாள்தோறும் மழைபொழிவதும்,
நாடிய தபோதனர்கள் மாதவம் புரிவதும்,
          நவில்வேத வேதியரெலாம்

சொல்லரிய யாகாதி கருமங்கள் செய்வதும்,
          தொல்புவி செழிக்கும்நலமும்,
சுபசோப னங்களும், கொற்றவர்கள் செங்கோல்
          துலங்குமனு நெறிமுறைமையும்,

வெல்லரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும்
          விற்பனையும், அதிகபுகழும்,
மிக்க அதி காரமும், தொழிலாளர் சீவனமும்,
          வீரரண சூரவலியும்,

வல்லமைகள் சகலமும், வேளாளர் மேழியின்
          வாழ்வினால் விளைவ அன்றோ?
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
          மலைமேவு குமரேசனே!


     இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     நல்ல தேவாலயம் பூசனை நடப்பதும் --- உயிர்களுக்கு நன்மையைத் தரும் திருக்கோயில்களில் நாட்பூசனை நடைபெறுவதும்,

     நாள்தோறும் மழை பொழிவதும் --- காலம் தவறாமல் மழை பொழிவதும்,

     நாடிய தபோதனர்கள் மாதவம் புரிவதும் --- தெய்வத்தை நாடியவர்கள் பெரும் தவம் செய்வதும்,

     வேதம் நவில் வேதியரெலாம் சொல்லரிய யாக ஆதி கருமங்கள் செய்வதும் --- வேதத்தை ஓதுகின்ற மறையவர்கள் எல்லோரும் சொல்ல முடியாத பெருமை மிக்க வேள்வி முதலிய தொழில்களைப் புரிவதும்,

     தொல் புவி செழிக்கும் நலமும் --- தொன்று தொட்டு இருந்து வரும் இந்த உலகம் வளம் கொழித்து இருப்பதும்,

     சுப சோபனங்களும் --- நல்ல மங்கலத் தொழில்களும்,

     கொற்றவர்கள் செங்கோல் துலங்கும் மனுநெறி முறைமையும் --- அரசர்களுடைய நல்ல ஆட்சியானது விளக்கமுறும் மனுநெறி தவறாமையும்,

     வெல்லரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலை விற்பனையும் --- கெடாத நன்மையுடன் வணிகர் பொருளைக் கொள்முதல் செய்து விற்பதும்,

     அதிக புகழும் --- பெரும் புகழும்,

     மிக்க அதிகாரமும் --- பெரிய அதிகாரமும்,

     தொழிலாளர் சீவனமும் --- தொழிலாளர் சீவித்து இருப்பதும்,

     வீர ரண சூர வலியும் --- போர்க்களத்திலே பகைவர் அஞ்சுமாறு போர் புரியும் ஆற்றலும்,

     வல்லமைகள் சகலமும் --- எல்லா விதமான வலிமைகளும்,

     வேளாளர் மேழியின் வாழ்வினால் விளைவது அன்றோ --- வேளாளர்கள் மேற்கொள்ளும் உழவுத் தொழிலால் உண்டாவன அல்லவா?
      
     கருத்து ---

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம், அதனால்
உழந்தும் உழவே தலை.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி, அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

என வரும் திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்குகளை எண்ணுக.

No comments:

பாடல் 4

“காளை வடிவுஒழிந்து, கையறவோடு, ஐயுறவாய் நாளும் அணுகி நலியாமுன், பாளை அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்கு ஆளாய்க் கவிழ்க முகம், கூம்புகஎன் கை.” இதன்...