யானையைச்
சலந்தனில் இழுத்த அக்கரா
பூனையைக்
கரைதனில் பிடிக்கப் போகுமோ?
தானையும்
தலைவரும் தலம்விட்டு ஏகினால்
சேனையும்
செல்வமும் தியங்கு வார்களே.
இதன்
பொருள் ---
யானையைச் சலந்தனில் இழுத்த அக்கரா --- யானை
ஒன்றினை, தான் வலிமையோடு
இருக்கும் நீர் நிலையில் பற்றி இழுத்த முதலையானது
பூனையைக் கரைதனில் பிடிக்கப் போகுமோ --- தான் இருக்கும் இனத்தை விட்டுத் தரையில்
வந்து ஒரு பூனையைப் பிடிக்க முடியுமோ?
(தனக்கு
வலிமை பொருந்திய நீர் நிலையை விட்டு வெளியே வந்தால், சிறிய பூனையைக் கூட
இழுக்க வலிமை இருக்காது. அதுபோல)
தானையும் தலைவரும் தலம்விட்டு ஏகினால் ---
படைகளும் அவற்றின் தலைவராகிய படைக் கர்த்தர்களும் அவர் இருக்கும் இடத்தை விட்டு, தங்களுக்கு வலிமை குறையும் இடத்திற்குச் சென்றால்,
சேனையும் செல்வமும் தியங்குவார்களே ---
படைகளும் பொருளும் வலி குறைந்து பகைவரிடம் அகப்பட்டு (செய்வது அறியாது)
மயங்குவார்கள்.
கருத்து --- அவரவர் இருப்பிடத்தில்
அவரவருக்குத் தக்க வலிமை இருக்கும். மாற்றார் மேல் செல்லும்போது காலம், வலி, இடம் ஆகியவற்றை ஆராய்ந்து
அறிந்து செல்லுதல் வேண்டும்.
இடன் அறிதல், காலம் அறிதல், வலி அறிதல் என்னும்
அதிகாரங்களில் திருவள்ளுவ நாயனார் இவற்றை விரித்து உரைத்துள்ளார்.
No comments:
Post a Comment