அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வாய்ந்து அப்பிடை
(காஞ்சீபுரம்)
முருகா!
மாதர் மயக்கில் ஆழ்ந்தாலும்
உனது உபதேச மொழியை மறவேன்
தாந்தத்தன
தானன தானன
தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன ...... தனதானா
வாய்ந்தப்பிடை
நீடுகு லாவிய
நீந்திப்பது மாதியை மீதினி
லூர்ந்துற்பல வோடையில் நீடிய ......
உகள்சேலை
வார்ந்துப்பக
ழீயெதி ராகிமை
கூர்ந்துப்பரி யாவரி சேரவை
சேர்ந்துக்குழை யோடுச லாடிய ......
விழியாலே
சாய்ந்துப்பனை
யூணவ ரானபொ
லாய்ந்துப்பணி னாரிரு தாளினில்
வீழ்ந்திப்படி மீதினி லேசிறி ......
தறிவாலே
சாந்தப்பிய
மாமலை நேர்முலை
சேர்ந்துப்படி வீணினி லேயுயிர்
மாய்ந்திப்படி போகினு மோர்மொழி
...... மறவேனே
சார்ந்தப்பெரு
நீர்வெள மாகவெ
பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ
காந்தப்பெரு நாதனு மாகிய ...... மதராலே
தாந்தக்கிட
தாகிட தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண ......
வெனதாளம்
காந்தப்பத
மாறியு லாவுய
ராந்தற்குரு நாதனு மாகியெ
போந்தப்பெரு மான்முரு காவொரு ......
பெரியோனே
காந்தக்கலு
மூசியு மேயென
ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
காஞ்சிப்பதி மாநகர் மேவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
வாய்ந்து
அப்பு இடை நீடு குலாவிய
நீந்தி, பதும ஆதியை, மீதினில்
ஊர்ந்து உற்பல ஓடையில், நீடிய ...... உகள்சேலை
வார்ந்து, பகழீ எதிரு ஆகி, மை
கூர்ந்துப் பரியா வரி சேர, வை
சேர்ந்து, குழையோடு ஊசல் ஆடிய ...... விழியாலே,
சாய்ந்து, பனை ஊணவர் ஆன பொல்,
ஆய்ந்து, பணினார் இரு தாளினில்
வீழ்ந்து, இப்படி மீதினிலே சிறிது ...... அறிவாலே,
சாந்து
அப்பிய மாமலை நேர்முலை
சேர்ந்துப்படி, வீணினிலே உயிர்
மாய்ந்து, இப்படி போகினும் ஓர் மொழி ...... மறவேனே.
சார்ந்தப்
பெரு நீர்வெளம் ஆகவெ
பாய்ந்த அப்பொழுது, ஆரும் இலாமலெ
காந்தப் பெரு நாதனும் ஆகிய ......
மதராலே,
தாந்தக்கிட
தாகிட தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண ...... எனதாளம்
காந்தப்
பதம் மாறி உலா உயர்,
ஆந்தன் குரு நாதனும் ஆகியெ
போந்தப் பெருமான்! முருகா! ஒரு ...... பெரியோனே!
காந்தக்
கலும் ஊசியுமே என
ஆய்ந்து, தமிழ் ஓதிய சீர்பெறு
காஞ்சிப் பதி மாநகர் மேவிய ......
பெருமாளே.
பதவுரை
சார்ந்தப் பெருநீர் வெள்ளமாகவே பாய்ந்த
அப்பொழுது --- --- பெருகிவந்த நீர் பிரளய
வெள்ளமாகவே பாய்ந்து பரந்துள்ள அக் காலத்தில்,
ஆரும் இல்லாமலெ காந்தப் பெருநாதனும் ஆகிய
மதராலே --- ஓர் உயிரும் இல்லாமல் ஒடுங்கி, ஒளி வீசும் தாம் ஒருவரே பெரிய தலைவராகச்
சிவபெருமான் களிப்பினால்,
தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண என தாளம் --- தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண என்று தாளங்கள் ஒலிக்க,
காந்தப் பதம் மாறி உலாவு உயர் --- அழகிய
திருவடிகளை மாற்றி மாற்றி நடன உலாவை மிகச் செய்யும்
ஆந்தன் --- சர்வ சங்கார மூர்த்தியாகிய
சிவபெருமானுடைய
குரு நாதனும் ஆகியெ போந்தப் பெருமான் ---
குரு நாதனாக வந்த பெருமானே!
முருகா ஒரு பெரியோனே --- ஒப்பற்ற முருகவேளே!
காந்தக் கல்லும் ஊசியுமே என ஆய்ந்துத்
தமிழ் ஓதிய சீர் பெறும் --- காந்தக் கல்லும் ஊசியும் போல ஒன்றுபட்டு, ஆசிரியரும் மாணவருமாக ஒருமித்து தமிழை
ஆராய்ந்து ஓதுகின்ற சிறப்புப் பொருந்திய
காஞ்சிப்பதி மாநகர் மேவிய பெருமாளே --- காஞ்சி
மாநகரில் விரும்பி வாழும் பெருமையில் சிறந்தவரே!
அப்பு இடை வாய்ந்து நீடு குலாவிய பதும
ஆதியை --- நீரில் நிலை நின்று நீண்ட நாள் விளங்கிய தாமரையாகிய முதன்மையான பொருளை,
நீந்து --- தனது அழகால் கடந்து விளங்கும்
உற்பல ஓடையில் மீதினில் ஊர்ந்து நீடிய உகள் ---
நீலோற்பல மலர் உள்ள ஓடையின் மேலே நெடுந்தூரம் ஊர்ந்து போய் நீண்டு உருளுகின்ற
சேலை வார்ந்து --- சேல்
மீனை நேர் ஒத்து,
பகழீ எதிர் ஆகி --- --- அம்புக்குப் போட்டியாக எதிர்த்து,
மை கூர்ந்துப் பரியா --- அஞ்சனம் மிகவும்
பூசப்பட்டு, அந்த மையைத்
தாங்குவதாகி,
வரிசேர --- ரேகைகள் பொருந்த,
வை சேர்ந்து --- கூர்மை கொண்டு,
குழையோடு ஊசல் ஆடிய விழியாலே --- காதில்
உள்ள குழைகளோடு ஊசலாடிய கண்களினால்,
சாய்ந்து --- என் அறிவு தளர்ந்து,
பனை ஊண் அவர் ஆன பொல் --- பழைய பனங் கள்ளை
உண்டவர் போல் மயங்கி,
ஆய்ந்து --- பிறகு சிறிது ஆராய்ந்து,
பணினார் இரு தாளினில் வீழ்ந்து --- இசை பாடும் பொதுமகளிருடைய இரண்டு பாதங்களிலும்
விழுந்து கிடந்து,
இப் படி மீதினிலே சிறிது அறிவாலே --- இந்தப்
பூமியின் மீது அற்ப அறிவு காரணமாக,
சாந்து அப்பிய மாமலை நேர்முலை சேர்ந்துப்படி
--- சந்தனக் குழம்பு பூசப்பட்ட பெரிய மலைக்கு நிகரான தனங்களைச் சேர்ந்துப் படிந்து,
வீணினிலே உயிர் மாய்ந்து இப்படிப் போகினும்
--- வீணாகக் காலத்தைகை கழித்து,
உயிர்
அழிந்து இப்படிக் கெட்டுப் போனாலும்,
ஓர் மொழி மறவேனே --- நீர் குருவாக வந்து
உபதேசித்த ஒப்பற்ற உபதேச மொழியை அடியேன் மறக்க மாட்டேன்.
பொழிப்புரை
பெருகிவந்த நீர் பிரளய வெள்ளமாகவே
பாய்ந்து பரந்துள்ள அக் காலத்தில்,
ஓர்
உயிரும் இல்லாமல் ஒடுங்கி, ஒளி வீசும் தாம் ஒருவரே
பெரிய தலைவராகச் சிவபெருமான் களிப்பினால், தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண என்று தாளங்கள் ஒலிக்க, அழகிய திருவடிகளை மாற்றி மாற்றி நடன
உலாவை மிகச் செய்யும் சர்வ சங்கார மூர்த்தியாகிய சிவபெருமானுடைய குரு நாதனாக வந்த
பெருமானே! ஒப்பற்ற முருகவேளே!
காந்தக் கல்லும் ஊசியும் போல
ஒன்றுபட்டு, ஆசிரியரும் மாணவருமாக
ஒருமித்து தமிழை ஆராய்ந்து ஓதுகின்ற சிறப்புப் பொருந்திய காஞ்சி மாநகரில்
விரும்பி வாழும் பெருமையில் சிறந்தவரே!
நீரில் நிலை நின்று நீண்ட நாள் விளங்கிய
தாமரையாகிய முதன்மையான பொருளை,
தனது
அழகால் கடந்து விளங்கும் நீலோற்பல மலர் உள்ள ஓடையின் மேலே நெடுந்தூரம் ஊர்ந்து
போய் நீண்டு உருளுகின்ற சேல் மீனை நேர் ஒத்து, அம்புக்குப் போட்டியாக எதிர்த்து, அஞ்சனம் மிகவும் பூசப்பட்டு, அந்த மையைத் தாங்குவதாகி, ரேகைகள் பொருந்த, கூர்மை கொண்டு, காதில் உள்ள குழைகளோடு ஊசலாடிய
கண்களினால், என் அறிவு தளர்ந்து, பழைய பனங் கள்ளை உண்டவர் போல் மயங்கி, பிறகு சிறிது ஆராய்ந்து, இசை பாடும் பொதுமகளிருடைய இரண்டு
பாதங்களிலும் விழுந்து கிடந்து, இந்தப் பூமியின் மீது அற்ப அறிவு
காரணமாக, சந்தனக் குழம்பு
பூசப்பட்ட பெரிய மலைக்கு நிகரான தனங்களைச் சேர்ந்துப் படிந்து, வீணாகக் காலத்தைகை கழித்து, உயிர் அழிந்து இப்படிக் கெட்டுப் போனாலும், நீ குருவாக வந்து
உபதேசித்த ஒப்பற்ற உபதேச மொழியை அடியேன் மறக்க மாட்டேன்.
விரிவுரை
வாய்ந்து
அப்பிடை நீடு குலாவிய நீந்திப் பதும ஆதியை ---
மாதர்களின்
கண்ணின் பெருமையை இத் திருப்புகழில் ஆறுவரிகளில் வர்ணிக்கின்றார். கண்களுக்கு
உவமையாகத் தாமரை மலரைக் கூறுவது மரபு. ஆனால் இங்கே தாமரையையும், அழகினால் கண்கள் வென்றது என்கின்றார்.
தண்ணீரில்
நெடு நேரம் பொருந்தியிருந்த முதன்மையான தாமரை மலரைத் தன்னுடைய அழகினால்
வென்றது. மலர்களில் தலையாயது தாமரை.
பூவினுக்கு
அருங்கலம் பொங்கு தாமரை... --- அப்பர்.
மீதினில்
ஊர்ந்து உற்பல ஓடையில் நீடிய உகள் சேலை வார்ந்து ---
உற்பலம்
- நீலோற்பலம். நீலோற்பலம் மலர்கின்ற
நீரோடையின் மீது ஊர்ந்து நெடும் தூரம் பாய வல்ல சேல் மீனை நிகர்த்த கண்கள்.
பகழீ
எதிராகி
---
பகழி
- கணை. கண்கள் கணையையும் போட்டியிட்டு வென்றன.
மை
கூர்ந்துப் பரியா ---
பரித்தல்
- தாங்குதல். அஞ்சன மையை மிகுதியாகத்
தாங்கிய கண்கள்.
வரி
சேர
---
வரி
- ரேகை. கண்களில் செவ்வரி படர்ந்து அழகு
செய்யும்.
வை
சேர்ந்து ---
வை
- கூர்மை. கண்கள் கூர்மையானவை.
குழையோடுசலாடிய
விழியாலே
---
குழையோடு
ஊசல் ஆடிய விழியாலே. காதில் உள்ள தோடுகளுடன் கண்கள் நீண்டு ஊசல் ஆடுகின்றன. செங்கயல் குழைகள் நாடும் என்பார் சேக்கிழார்
பெருமான்.
விழியாலே
சாய்ந்து ---
விலைமகளிரது
கண்ணழகினால் அறிவு தளர்ந்து. விலைமகளிர் கண்வலை வீசி இளைஞராகிய பறவைகளைப்
பிடிப்பர்.
பனை
ஊணவர் ஆன பொல்
---
பனங்கள்
மயக்கம் செய்வது. அக் கள் உண்டார்போல்
அறிவு மயங்குவர் இளைஞர். ஆனால், கள் உண்டாரை மட்டும் மயக்கும். காமம் கண்டாரையும் மயக்கும்.
மாய்ந்து
இப்படி போகினும் ஓர் மொழி மறவேனே ---
பெண்மை
மயலால் மயங்கித் தியங்கி அழியினும்,
இறைவனுடைய
உபதேச மொழியை மறவேன் என்று அடிகளார் தமது உறுதியை இங்கு அறுதியிட்டு
உரைக்கின்றார்.
சார்ந்தப்
பெருநீர் வெளமாகவே பாய்ந்தப் பொழுது ---
ஆயிரம்
சதுர் யுகங்கள் கடந்தபின், நூறு ஆண்டுகள் மழையின்றி வெயில் காயும்.
புல் பூடுகள் இன்றி எல்லாம் மடியும். நூறு ஆண்டுகள் ஒழியாது மழை பொழியும். மண்
நீரில் கரைந்து மறையும். எங்கும் பெரு வெள்ளமாய் விளங்கும். அப்போது ஓருயிரும்
இன்றி எல்லாம் மூலப்பிரகிருதியில் ஒடுங்கும்.
அது சர்வ சங்கார காலம்.
மதராலே ---
மதர்
- களிப்பு. அப்போது சர்வ சங்கார மூர்த்தியாகிய சிவபெருமான் ஒருவரே இருப்பார். அப்போது
பெருமான் கால்மாறி மாறித் திருநடனம் புரிந்து அருளுவார்.
ஒருவர்
இவ்வுலகினில் வாழ்கிலா வண்ணம்
ஒலிபுனல்
வெள்ளமுன் பரப்ப... --- திருஞானசம்பந்தர்.
ஆந்தர் ---
அந்தம்
- முடிவு. அந்தத்தைச் செய்வோன் அந்தமிலாத
இறைவன். "அந்தன்" என்ற சொல்
சந்தத்தை நோக்கி, "ஆந்தன்" என
நீண்டது.
காந்தக்
கலும் ஊசியுமே என ஆய்ந்து ---
காந்தம்
ஊசியை ஈர்க்கும். அதுபோல் நல்லாசிரியன்
மாணவனை ஈர்த்து ஆட்கொள்வான்.
ஈர்த்து
என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே... --- திருவாசகம்.
ஊசியும்
காந்தமும் போல ஆசிரியரும் மாணவரும் ஒன்றுபட்டு இருப்பர்.
இதனால், அருணகிரிப் பெருமான், காஞ்சி மாநகரின் கல்விப் பெருமையை
உணர்த்துகின்றார். அன்றும் இன்றும் என்றும் கல்வியில் சிறந்தது காஞ்சி.
கல்வியைக்
கரைஇலாத காஞ்சிமா நகர்தன் உள்ளால்
எல்லியை
விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே. --- அப்பர்.
கலைதெரி
புலவர்கள் பலர் வாழ்ந்து காஞ்சிமா நகரை அலங்கரித்தார்கள். இன்றும்
அலங்கரிக்கின்றார்கள்.
பரிமேலழகர், சிவப்பிரகாசர், கச்சியப்ப சிவாச்சாரியார், கச்சியப்ப முனிவர், சோணாசல பாரதிகள் முதலிய பலப்பல
புலவர்கள் அவதரித்த திருத்தலம் காஞ்சி.
கச்சியம்பதியில்
இன்றும் பல புலவர் பெருமக்கள் வாழ்கின்றார்கள்.
ஒப்புவமை
இல்லாத உயர்வு உடையது காஞ்சி மாநகர்.
காஞ்சி
மாநரத்தின் பெருமையை, பெரிய புராணத்துள்
திருக்குறிப்புத் தொண்ட நாயனாரது புராணத்தாலும், காஞ்சிப் புராணத்தாலும் அறியலாம்.
அருணகிரி
நாதரது திருப்புகழில் காஞ்சிபுரத் திருப்புகழ் அதிக சந்தச் செறிவு உள்ளது.
கருத்துரை
கச்சி
நகர் மேவும் கருணைத் தெய்வமே, மாதர் மயக்கில்
அழிந்தாலும், உன் உபதேச மொழியை ஒருபோதும்
மறவேன்.
No comments:
Post a Comment