இல்லறமும் துறவறமும்




5.  இல்லறமும் துறவறமும்

புல் அறிவுக்கு எட்டாத தண்டலையார்
     வளம் தழைத்த பொன்னி நாட்டில்,
சொல் அற மாதவம் புரியும் சௌபரியும்
     துறவறத்தைத் துறந்து மீண்டான்!
நல் அறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை
     மனைவியுடன் நடத்தி நின்றான்!
இல்லறமே பெரிது ஆகும்! துறவறமும்
     பழிப்பு இன்றேல் எழில தாமே!

         இதன் பொருள் ---

     புல்  அறிவுக்கு  எட்டாத  தண்டலையார் வளம் தழைத்த பொன்னி நாட்டில் --- உயிர்கள் தமது சிற்றறிவு கொண்டு அறியக் கிட்டாத தண்டலையாரின் வளம் மிகுந்த  காவிரி பாயும் சோழ  நாட்டில்,

     சொல் அற மாதவம் புரியும் சௌபரியும் --- பேச்சு இன்றிப்  பெருந்தவம் செய்த சௌபரி என்னும் முனிவனும்,

     துறவறத்தைத் துறந்து மீண்டான் --- தான் மேற்கொண்டு இருந்த துறவறத்தை விட்டுத் திரும்பினான்,

     வள்ளுவர் போல மனைவியுடன் நல்லறம் ஆம் குடிவாழ்க்கை நடத்தி நின்றான் --- திருவள்ளுவ நாயனாரைப் போல இல்லாளுடன் நல்ல அறமாகிய இல்வாழ்க்கையை இனிதே நடத்தினான்.

     (ஆகையால்),

     இல் அறமே பெரிது ஆகும் --- இல்லறமே சிறந்தது ஆகும்,

     துறவு அறமும் பழிப்பு இன்றேல் எழிலது ஆம் ---- துறவறமும் பிறரால் பழிக்கப் படாமல் அமைந்தால் அழகியது ஆகும்.

கருத்து ---
            
      அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
       பிறன்பழிப்ப(து) இல்லாயின் நன்று'

என்னும் திருக்குறளின் கருத்தை இங்கு வைத்து எண்ணுக. ‘இல்லறம் அல்லது நல்லறம் அன்று' என்னும் கொன்றை வேந்தன் வாக்கும் இங்கு நினக்கத் தக்கது.

     "வினை காத்து விருந்தோம்பி நின்றான் மனைவாழ்க்கை நன்று தவத்தின்" என்னும் அறநெறிச்சாரப் பாடல் வரியையும் எண்ணுக.

 

No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...