அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வாரண முகம்
(பழமுதிர்சோலை)
சோலைமலை முருகா!
பொதுமாதர்க்கு ஏவல் செய்வதை
விட்டு,
உனது திருவடிக்குத் தொண்டுபட்டு
ஈடேற அருள்
தானதன
தந்த தந்த தானதன தந்த தந்த
தானதன தந்த தந்த ...... தனதான
வாரண
முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து
மால்வரை யசைந்த நங்கன் ...... முடிசாய
வாளகிரி
யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்த
மாதவ மறந்து றந்து ...... நிலைபேரப்
பூரண
குடங்க டிந்து சிதகள பம்பு னைந்து
பூசலை விரும்பு கொங்கை ...... மடவார்தம்
போக
சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து
பூசனைசெய் தொண்ட னென்ப ...... தொருநாளே
ஆரண
முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்
ஆகுதி யிடங்கள் பொங்கு ...... நிறைவீதி
ஆயிர
முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
யாரமர வந்த லம்பு ...... துறைசேரத்
தோரண
மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற
சூழ்மணிபொன் மண்ட பங்கள் ...... ரவிபோலச்
சோதியின்
மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்து கந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வாரண
முகம் கிழிந்து வீழவும், அரும்பு அலர்ந்து,
மால் வரை அசைந்து, அநங்கன் ......
முடிசாய,
வாளகிரி
அண்டர் அண்ட கோளம் உற நின்று எழுந்த
மாதவம் அறம் துறந்து, ...... நிலைபேர,
பூரண
குடம் கடிந்து, சித களபம் புனைந்து,
பூசலை விரும்பு கொங்கை ...... மடவார்தம்,
போக
சயனம் தவிர்ந்து, உன் ஆடக பதம் பணிந்து,
பூசனை செய் தொண்டன் என்பது ......ஒருநாளே?
ஆரணம்
முழங்குகின்ற ஆயிர மடம், தவங்கள்,
ஆகுதி இடங்கள், பொங்கு ...... நிறைவீதி,
ஆயிர
முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கு கங்கை
ஆர அமர வந்து அலம்பு ...... துறைசேரத்
தோரணம்
அலங்கு துங்க கோபுரம் நெருங்கு கின்ற
சூழ்மணிபொன் மண்டபங்கள் ...... ரவிபோலச்
சோதியின்
மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்து உகந்த ...... பெருமாளே.
பதவுரை
ஆரணம் முழங்குகின்ற --- வேதங்கள்
முழங்குகின்ற,
ஆயிரம் மடம் --- ஆயிரக் கணக்கான மடங்களும்,
தவங்கள் --- முனிவர்களின் தவங்களும்,
ஆகுதி இடம் கொள் --- ஓமப்புகை யென்ற இவைகள்
நடைபெறும் இடங்களும்,
பொங்கும் நிறை வீதி --- விளங்குகின்ற நிறைந்த
வீதிகளும்,
ஆயிரம் முகங்கள் கொண்ட --- பலகிளையாகப்
பரந்து வருகின்ற,
நூபுரம் இரங்கு கங்கை --- நூபுர கங்கை இரங்கி
வந்து,
ஆர அமர வந்து அலம்பு துறை சேர --- நிரம்பி
ஒழுங்காய் வந்து ததும்பி ஒலிக்கும் நீர்த்துறைகள் பொருந்த,
தோரணம் அலங்கு --- தோரணங்கள் அசையும்,
துங்க கோபுரம் நெருங்குகின்ற --- பரிசுத்தமான கோபுரங்கள் நெருங்கி நின்று,
சூழ் மணி பொன் மண்டபங்கள் --- சூழ்ந்துள்ள
பொன்னும் மணியும் பதித்த மண்டபங்களும்,
ரவி போல --- சூரியன் போல,
சோதியில் மிகுந்த --- ஒளி மிகுந்த,
செம்பொன் மாளிகை விளங்குகின்ற --- அழகிய
மாளிகைகளும் விளங்குகின்ற,
சோலைமலை வந்து உகந்த --- சோலைமலையில் வந்து
மகிழ்ந்து வீற்றிருக்கும்,
பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!
வாரண முகம் கிழிந்து வீழவும் --- யானையை
ஒப்பிடலாம் என்றால் அது முகம் ஒரு காலத்தில் சிவபிரானால் கிழிபட்டு விழுந்தது,
அரும்பு அலர்ந்து --- தாமரை அரும்பை ஒப்பிடலாம் என்றால் அது
மலர்ந்து வாடுகின்றது,
மால் வரை அசைந்து --- பெரிய மலையாகிய கயிலையை
ஒப்பிடலாம் என்றால் அது இராவணனால் அசைவுற்றது,
அநங்கன் முடி சாய --- மன்மதனுடைய மகுடத்தை
ஒப்பிடலாம் என்றால் சிவபெருமான் எரித்தபோது அந்த முடி சாய்ந்து வீழ்ந்தது,
வாளகிரி --- சக்கர வாளகிரி போல,
அண்டர் அண்டகோளம் உற நின்று எழுந்த --- தேவலோகத்தையும்
அண்டர்கோளத்தையும் எட்டும்படி நிமிர்ந்து எழுந்து,
மாதவம் அறம் துறந்து நிலை பேர --- மகாதவசிகளும், தங்கள் தரும நெறியைக் ககைவிட்டு
நிலைகுலையவும்,
பூரண குடம் கடிந்து --- பூரணமாகத் திரண்ட
குடத்தைவிட்டு நிலைகுலையவும்,
சீத களபம் புனைந்து --- குளிர்ந்த
சந்தனக் கலவை தரித்து,
பூசலை விரும்பு --- காமலீலைப் போரை
விரும்புகின்ற,
கொங்கை மடவார் தம் --- தனங்களையுடைய
பெண்களின்,
போக சயனம் தவிர்ந்து --- இன்பத்தை நுகரும்
படுக்கையை விட்டு,
உன் ஆடக பதம் பணிந்து --- உமது பொன் மயமான
திருவடியைப் பணிந்து,
பூசனை செய் தொண்டன் என்பது ஒரு நாளே --- அத் திருவடியைப்
பூசிக்கும் தொண்டன் இவன் என்று கூறும்படியான ஒரு நாள் எனக்கு உண்டாகுமோ?
பொழிப்புரை
வேதங்கள் முழங்குகின்ற ஆயிரக்கணக்கான
மடங்களும், தவம் யாகம் இவை
நடைபெறும் இடங்களும், விளங்குகின்ற
நிறைவுள்ள வீதிகளும், ஆயிரங் கிளைகளாகப்
பிரிந்து வருகின்ற சிலம்பாறு நிரம்பி ஒழுங்காய் வந்து ததும்பி ஒலிக்கும்
நீர்த்துறைகள் பொருந்த, தோரணங்கள் அசையும்
உயர்ந்த கோபுரமும், நெருங்கி நின்று
சூழ்ந்துள்ள பொன் மிகுந்த செம்பொன் மாளிகைகளும் விளங்குகின்ற சோலைமலையில் வந்து
மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமையிற் மிகுந்தவரே!
யானையை ஒப்பிடலாம் என்றால், யானையின் முகம் ஒரு காலத்தில்
சிவபிரானால் கிழிபட்டு விழுந்தது.
தாமரை
அரும்பை ஒப்பிடலாம் என்றால் அது இராவணனால் அசைவுற்றது. மன்மதனுடைய மகுடத்தை ஒப்பிடலாம் என்றால், அது சிவபிரானால் எரிந்து சாய்ந்து
வீழ்ந்தது! சக்கரவாளகிரி, போலத் தேவலோகம்
அண்டகோளம் வரை நிமிர்ந்தெழுந்து,
மகா
தவமுனிவர்களும், தமது தரும நெறியை
விட்டுவிலகி நிலை குலையவும், பூரண கும்பத்தையும்
வென்று, குளிர்ந்த சந்தனக்
கலவையணிந்து, காமலீலைப் போரினை
விரும்பும் தனங்களையுடைய, பெண்களின், இன்பம் நுகரும் படுக்கையைவிட்டு நீங்கி, தேவரீருடைய பொன்மயமான திருவடியை வணங்கி, அத் திருவடியைப் பூசிக்குந் தொண்டன்
இவன் என்னும் ஒரு நாள் எனக்கு உண்டாகுமோ?
விரிவுரை
இத்திருப்புகழில்
முதல் மூன்று அடிகள் மாதரின் தன பாரத்தின் பெருமையை அதியற்புதமாகக் கூறும்
கவித்திறம் மிகவும் சிந்தனைக்குரியது.
வாரணமுகங்
கிழிந்து விழவும் ---
யானையின்
மத்தகத்தை தனத்துக்கு உவமை கூறுவது கவிமரபு.
யானை
மத்தகத்தை உவமை கூறுவதில் ஒரு குற்றம் உளது. அது என்ன? யானையைச் சிவபெருமான உரித்துக்
கிழித்தார். அப்போது யானை அழிந்து வீழ்ந்தது. அதனால் யானையின் முகம் தனத்துக்கு, ஒப்பாகாது.
அரும்பு
அலர்ந்து ---
தாமரையின்
மொட்டு தனத்துக்கு உவமையாகும். அதிலும் ஒரு குற்றம் உளது. அது என்ன?
தாமரையின்
மொட்டு மலர்ந்து மறுநாள் வாடி விடுகின்றது. தனம் மலராமலும் வாடாமலும் இருப்பதனால்
அத்தாமரையில் மொட்டு இணையாகாது.
மால்வரை
அசைந்து ---
மலைகளைத்
தனங்கட்கு உவமை கூறுவர் புலவர். அதிலும் ஒரு குறையுளது? அது என்ன?
கயிலைமலை
இராவணனால் அசைவுற்றது. இந்திரன் மலைகளின் சிறகுகளை வச்சிரத்தால் அரிந்தபோது மலைகள்
அசைந்தன. தனங்கட்கு அப்படி ஒரு குறையின்மையால் மலைகளும் இத்தனத்துக்கு நிகரில்லை.
அநங்கன்
முடிசாய ---
மன்மதனுடைய
மணிமகுடம் தனத்திற்கு உவமையாகத் திகழும். அதிலும் ஒரு பிழை உளது. அது என்ன?
மன்மதனைச்
சிவபெருமான் நெற்றிக்கண்ணால் எரித்தபோது முடி சாய்ந்து வீழ்ந்தது. இத்தனம் அங்ஙனம்
சாயாமையால் மன்மதனுடைய மகுடமும் நிகராகாது.
என்று
அந்தந்த உவமைகளில் உள்ள குறைகளைக் கூறி விலக்கினார். இவையாவும் கவித்திறமை யாகும்.
வாளகிரி
யண்டரண்ட கோளமுற நின்றெழுந்து ---
சக்ரவாளகிரி
போல் ஓங்கி விண்ணுலகம் அண்டகோளகை வரை தனம் உயர்ந்துள்ளது என்ற இந்த நயம் உயர்வு நவிற்சி.
மாதவ
மறந்துறந்து நிலைபேர ---
மாதவ
முனிவர்கள் இத்தனபாரத்தைக் கண்டவுடன் தமது தவம் குலைந்து, தருமம் தவிர்ந்து தடுமாறுகின்றார்கள்.
துறவினர்
சோரச் சோர நகைத்துப்
பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
துயர் அறவே, பொற் பாதம் எனக்குத் ...... தருவாயே
--- அரிசனவாடை (திருப்புகழ்.)
மாயையைக்
கண்டு காசிபரும், மேனகையைக் கண்டு
விசுவாமித்திரரும் தவங்குலைந்ததே சான்று.
பூரண
குடங்கடிந்து ---
நிறை
குடத்தையும் தனக்கு நிகரில்லையென்று விலக்குகின்ற சிறந்த தனம்.
போக
சயனம் ---
மாதரின்கலவி இன்பத்துடன்
கூடிய பஞ்சணையை விலக்கிவிட வேண்டும். அது நோய்க்கிடமானது. தூய்மையில்லாதது. அணுத்துணை இன்பம்
பயந்து, மலையளவு துன்பம் பயப்பது.
“மடவாரோடும்
பொருந்தணை
மேல் வரும்பயனைப் போக மாற்றி
பொது
நீக்கி, தனைநினைய வல்லார்க்கு
என்றும்
பெருந்துணை” --- அப்பர்.
தவிர்ந்து
உன் ஆடக பதம் பணிந்து ---
தவிர்ந்து
உன் நாடக பதம். உமது நடனம் புரியும் பாதம் என்றும் பொருள் கொள்ளலாம்.
தவிர்ந்து
உன் ஆடக பதம். ஆடகம்-பொன். பொன் மயமான பாதம்.
ஆரண
முழங்குகின்ற ஆயிரமடம் ---
பழமுதிர்
சோலையின் பெருமையை இத்திருப்புகழின் பிற்பகுதி முழுவதும் கூறுகின்றது.
வேதியர்கள்
மடங்களில் இருந்து சதா வேதபாராயணம் புரிகின்றார்கள்.
தவங்கள்
ஆகுதி இடங்கள் ---
தவம்
புரிந்துகொண்டு உலக நலனுக்காக வேள்வி புரிகின்றார்கள்.
ஆயிர
முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கு கங்கை ---
பழமுதிர்
சோலையில் மிகவும் பெருமை பொருந்தியது நூபுர கங்கை. இது சிலம்பாற எனப்படும்.
“சிலம்பாறு பாயுந்
திருமாலிருஞ் சோலையே” ---
பெரியாழ்வார்
“ஆமாநல் ஏறு சிலைப்பச்
சேண் நின்று
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர்சோலை மலைகிழ வோனே” ---
திருமுருகாற்றுப்படை.
கருத்துரை
பழமுதிர்சோலைப்
பரமனே! உனது திருவடியைப் பூசிக்குந் திருத்தொண்டு தந்தருள்வீர்.
No comments:
Post a Comment