பழமுதிர்சோலை - 0454. வார்குழையை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
 
வார்குழையை (பழமுதிர்சோலை)

சோலைமலை முருகா!
பொதுமாதர் உறவை நீக்கி அருள்

தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான


வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி
     மாயநம னுக்கு ...... முறவாகி

மாதவம ழித்து லீலைகள் மிகுத்து
     மாவடுவை யொத்த ...... விழிமாதர்

சீருட னழைத்து வாய்கனிவு வைத்து
     தேனித ழளித்து ...... அநுபோக

சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து
     சீர்மைகெட வைப்ப ...... ருறவாமோ

வாரினை யறுத்து மேருவை மறித்து
     மாகனக மொத்த ...... குடமாகி

வாரவணை வைத்து மாலளித முற்று
     மாலைகளு மொய்த்த ...... தனமாது

தோரணி புயத்தி யோகினி சமர்த்தி
     தோகையுமை பெற்ற ...... புதல்வோனே

சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து
     சோலைமலை யுற்ற ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வார் குழையை எட்டி, வேளினை மருட்டி,
     மாய நமனுக்கும் ...... உறவாகி,

மாதவம் அழித்து, லீலைகள் மிகுத்து,
     மாவடுவை ஒத்த ...... விழிமாதர்,

சீருடன் அழைத்து, வாய் கனிவு வைத்து,
     தேன் இதழ் அளித்து, ...... அநுபோக

சேர்வை தனை உற்று, மோசம் விளைவித்து,
     சீர்மை கெட வைப்பர் ...... உறவு ஆமோ?

வாரினை அறுத்து, மேருவை மறித்து,
     மாகனகம் ஒத்த ...... குடம் ஆகி,

வார அணை வைத்து, மா லளிதம் உற்று,
     மாலைகளும் மொய்த்த ...... தனமாது,

தோர் அணி புயத்தி, யோகினி, சமர்த்தி,
     தோகை உமை பெற்ற ...... புதல்வோனே!

சூர் கிளை மடித்து, வேல் கரம் எடுத்து,
     சோலைமலை உற்ற ...... பெருமாளே.


பதவுரை


     வாரினை அறுத்து --- கச்சுதனைக் கிழித்து,

     மேருவை மறித்து --- மேரு மலையையும் தடுத்துக் கீழ்ப்படுத்தி,

     மா கனகம் ஒத்த குடம் ஆகி --- சிறந்த பொன் போன்ற குடம்போல் விளங்கி,

     வார அணைவித்து --- அன்பாகிய ஆதரவை வைத்து,

     மா லளிதம் உற்று --- மிக்க அழகைக் கொண்டு,

     மாலைகளும் மொய்த்த --- மாலைகள் நெருங்கிய,

     தன மாது --- தனங்கள் விளங்கும் பெண்மணியும்,

     தோர் அணி புயத்தி --- அணிவடம் பூண்ட புயங்களையுடையவரும்,

     யோகினி -- யோகினியும்,

     சமர்த்தி --- சாமார்த்தியம் உடையவளும்,

     தோகை --- மயில் போன்றவளுமாகிய,

     உமை பெற்ற புதல்வோனே --- உமாதேவியார் பெற்ற குமாரரே!

     சூர்கிளை மடித்து --- சூரனையும் அவன் சுற்றத்தாரையும் அழித்து,

     வேல் கரம் எடுத்து --- வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்தி,

     சோலைமலை உற்ற --- சோலைமலையில் வீற்றிருக்கின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     வார் குழையை எட்டி --- நீண்ட காதணியை எட்டியும்,

     வேளினை மருட்டி --- மன்மதனை மருட்சியுறச் செய்தும்,

     மாய நமனுக்கும் உறவு ஆகி --- மாயத்தில் வல்ல யமனுடன் உறவு பூண்டும்,

     மாதவம் அழித்து --- நல்ல தவநிலையை அழித்து,

     லீலைகள் மிகுந்து --- காமவிளையாடல்கள் மிகுந்து,

     மா வடுவை ஒத்த --- மாவடுவுக்கு நிகரான,

     விழி மாதர் - கண்களையுடைய பொதுமாதர்கள்,

     சீருடன் அழைத்து --- மரியாதையுடன் அழைத்து,

     வாய் கனிவு வைத்து --- வாய்ப் பேச்சில் இனிமையை வைத்துப் பேசி,

     தேன் இதழ் அளித்து --- தேன் போன்ற இதழைத் தந்து,

     அநுபோக சேர்வை தனை உற்று --- காமநுகர்ச்சிக் கலவியில் உற வைத்து,

     மோசம் விளைவித்து --- மோசம் விளையுமாறு செய்து,

     சீர்மை கெட வைப்பர் --- நன்மையழியுமாறு செய்வார்கள்;

     உறவு ஆமோ --- அத்தகைய மாதரது உறவு ஆகுமோ? (ஆகாது).

பொழிப்புரை


     கச்சினைக் கிழித்து, மேருமலையையும், இழிவாக்கி, சிறந்த பொன் போன்ற குடம்போல் விளங்கி, அன்பாகிய ஆதரவை வைத்து, மிகுந்த அழகைக்கொண்டு, மாலைகள் நெருங்கிய தனங்களையுடைய பெண்மணியும், அணிவடம் பூண்ட புயங்களை யுடையவளும், மோகினியும், சாமர்த்தியம் நிறைந்தவளும், மயில் போன்றவளும் ஆகிய உமாதேவியார் பெற்ற புதல்வரே!

     சூரபன்மனையும், அவனுடைய சுற்றத்தாரையும் அழித்து வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்தி, சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமிதமுடையவரே!

     நீண்ட காதணியை எட்டியும், மன்மதனை மருளுமாறு செய்தும், மாயத்தில் வல்ல இயமனுடைய உறவு பூண்டும், நல்ல தவத்தை அழித்து, காமலீலைகள் மிகுந்து மாவடுவினை நிகர்த்த கண்களையுடைய பொதுமாதர்கள் மரியாதையுடன் அழைத்து, வாய்ப் பேச்சில் இனிமையை வைத்துப் பேசி, தேன் போன்ற வாயிதழைக் கொடுத்து, காமநுகர்ச்சிச் சேர்க்கையில் வைத்து மோகத்தைச் செய்து, நன்மையை அழிப்பார்கள். இத்தகைய அப்பொது மகளிரின் உறவு ஆகுமோ?ஆகாது.


விரிவுரை


வார் குழையை எட்டி ---

கண்ணுக்கு உரிய சிறந்த இலக்கணங்களுக்குள் ஒன்று நீளமாக இருத்தல். காதுவரை கண்கள் நீண்டிருக்கின்றன என்று இங்கே கூறுகின்றார்.

வேளினை மருட்டி ---

வேள்-விருப்பம். விருப்பத்தைச் செய்கின்றவன் மன்மதன். அம்மதனையே மருளுமாறு செய்கின்றதாம் கண்கள். அத்துணை அழகியவை.

மாய நமனுக்கும் உறவாகி ---

நமன் பல மாயங்களைச் செய்து உயிர்களைக் கொல்லுவான. இவர்களின் கண்களும் பலமாயங்கள் செய்து ஆடவரைக் கொல்லும். அதனால் கொலைத் தொழிலில் இயமனுடன் உறவு ஆகியது.

மாதவம் அழித்து ---

முனிவர்கள்புரியும் தவநிலையை அழிக்கும் ஆற்றல் படைத்தது அக்கண்கள்,

லீலைகள் மிகுந்து ---

பலப்பல காமலீலைகள் புரியவல்லது.


மாவடுவை ஒத்த விழி ---

மாம்பிஞ்சினைப் பிளந்தால் கண்களைப்போல் காட்சிதரும். அதனால் கண்ணுக்கு உவமை மாவடு.   



சேர்வை தனையுற்று ---

உற்று-உறவைத்து. ஆடவரைத் தம்முடன் கூட்டுறவில் வைத்து மோசம் புரிவார்கள்.

வாரினை அறுத்து ---

வார்-கச்சு. அக்காலங்களில் தனங்களை வார்கொண்டு கட்டுவர். பழங்காலத்து சிற்பங்களைப் பார்த்தால் இது விளங்கும்.

மேருவை மறித்து ---

பெரிய மலையாகிய மேருமலையைத் தனக்கு நிகரில்லை என்று தடுத்துக் கீழாகச் செய்யும் அழகியதனம்.


வார அணை வைத்தும் ---

வாரம்-அன்பு.அணை-ஆதரவு. அன்பினால் ஆதரவை வைத்து உலகங்களைக் காக்குந் தன்மையது அம்பிகையின் தனபாரங்கள்.

தோரணி புயத்து ---

தோரை-அணிவடம். தோரை என்ற சொல் தோர் எனக் குறுகிற்று.

யோகினி ---

யோகத்தையுடையவள் யோகினி.

கருத்துரை

பழமுதிர்சோலைப் பரமனே! மாதர் உறவு கூடாது.


No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...