பழமுதிர்சோலை - 0455. வீரமதன் நூல்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வீரமதன் நூல் (பழமுதிர்சோலை)

சோலைமலை முருகா!
பொதுமாதர்க்கு ஏவல் செய்து அழியாமல்,
உனது திருவடியைப் பணிந்து உய்ய அருள்

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான


வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்
     வேல்விழியி னான்ம யங்கி ...... புவிமீதே

வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல்
     வேலைசெய்து மால்மி குந்து ...... விரகாகிப்

பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு
     பாதகனு மாகி நின்று ...... பதையாமல்

பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை
     பாதமலர் நாடி யென்று ...... பணிவேனோ

பூரணம தான திங்கள் சூடுமர னாரி டங்கொள்
     பூவையரு ளால்வ ளர்ந்த ...... முருகோனே

பூவுலகெ லாம டங்க வோரடியி னால ளந்த
     பூவைவடி வானு கந்த ...... மருகோனே

சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து
     தூள்கள்பட நீறு கண்ட ...... வடிவேலா

சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து
     சோலைமலை மேல மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வீர மதன் நூல் விளம்பு போக மடமாதர் தங்கள்
     வேல் விழியினால் மயங்கி, ...... புவிமீதே

வீசு கையினால், இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல்
     வேலைசெய்து, மால் மிகுந்து, ...... விரகு ஆகி,

பார வசமான அங்கண் நீடு பொருள் போன பின்பு,
     பாதகனும் ஆகி நின்று, ...... பதையாமல்,

பாகம் வர, சேர அன்பு, நீப மலர் சூடு தண்டை
     பாதமலர் நாடி என்று ...... பணிவேனோ?

பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள்
     பூவை அருளால் வளர்ந்த ...... முருகோனே!

பூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த
     பூவை வடிவான் உகந்த ...... மருகோனே!

சூரர் கிளையே தடிந்து, பார முடியே அரிந்து,
     தூள்கள் பட, நீறு கண்ட ...... வடிவேலா!

சோலை தனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து
     சோலைமலை மேல் அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை


     பூரணம் அது ஆன திங்கள் சூடும் --- என்றுந் தேயாது வளராது ஒரு தன்மையாயிருக்கும் சந்திரனைச் சூடியுள்ள,

     அரனார் இடம் கொள் --- சிவபெருமானது இடப்பாகத்தில் எழுந்தருளியுள்ள,

     பூவை அருளால் வளர்ந்த --- நாகண வாய்ப் பட்சிபோன்ற பார்வதி தேவியின் திருவருளால் வளர்ந்த,

     முருகோனே --- முருகக் கடவுளே!

     பூ உலகு எலாம் அடங்க --- மண்ணுலக முழுவதும் அடங்குமாறு,

     ஓர் அடியினால் அளந்த --- ஒரு அடியினால் அளந்தருளிய,

     பூவை வடிவான் உகந்த --- காயாம் பூ வண்ணராகிய திருமால் மகிழ்கின்ற,

     மருகோனே --- திருமருகோனே!

     சூரர் கிளையே தடிந்து --- சூரர்களின் கூட்டங்களை அழித்து,

     பார முடியே அரிந்து --- அவர்களது கனத்த முடிகளை அரிந்து, தூள்கள்பட நீறு கண்ட --- அவர்கள் பொடிபட்டுச் சாம்பலாகும்படிச் செய்த,

     வடிவேலா --- கூரிய வேலாயுதரே!

     சோலை தனிலே பறந்து உலாவும் --- சோலைகளில் பறந்து உலாவுகின்ற,

     மயில் ஏறி வந்து --- மயிலில் ஏறிவந்து,

     சோலை மலைமேல் அமர்ந்த ---  சோலைமலைமீது வீற்றிருக்கின்ற,

     பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!

     வீர மதன் நூல் விளம்பு --- வீரம் பொருந்திய மன்மதனுடைய நூல்களில் சொல்லப்பட்ட,

     போக மட மாதர் தங்கள் ---  போகத்தைத் தருகின்ற மடமாதர்களின்,

     வேல் விழியினால் மயங்கி --- வேல் போன்ற கண்ணால் மயக்கத்தை அடைந்து,

      புவி மீதே --- இப்பூமியின் மேல்

     வீசு கையினால் ---- கைகளை வீசி,

     இதங்கள் பேசும் --- இன்பமான வார்த்தைகளைப் பேசும்

     அவர் வாய் இதம் சொல் --- அப்பொதுமாதர்களின் வாயினின்று பிறக்கும் இன்ப மொழிகட்கு இணங்கி,

     வேலை செய்து --- அவர்கள் இட்ட வேலைகளைச் செய்து

     மால் மிகுந்து விரகு ஆகி --- அவர்மேல் ஆசை மிகுந்து ஊக்கம் புண்டு,

     பார வசம் ஆன --- கனத்த தன்மை கொண்டு,

     அங்கண் நீடு பொருள் போன பின்பு --- அங்கு மிகுதியாக இருந்த பொருள் செலவழிந்த பின்னர்,

     பாதகனும் ஆகி நின்று பதையாமல் --- அடியேன் பாதகனாய் நின்று தவிக்காமல்,

     பாகம் வர அன்பு சேர் --- பக்குவ நிலையைத் தரவல்ல அன்பு வந்து என்னிடம் பொருந்த,

     நீப மலர் சூடு --- கடப்ப மலர் சூடியுள்ளதும்,

     தண்டை --- தண்டை அணிந்ததுமான,

     பாத மலர் நாடி --- உமது பாதாரவிந்தத்தை அடியேன் விரும்பி,

     என்று பணிவேனோ --- எந்நாள் பணிவேனோ?


பொழிப்புரை


     தேயாமலும் வளராமலும் என்றும் ஒன்று போலிருக்கும் சந்திரனைத் தரித்த சிவபெருமானுடைய இடப்பாகத்தைக் கொண்டவரும், நாகணவாய்ப் பறவை போல் விளங்குபவருமாகிய உமாதேவியாரது திருவருளால் வளர்ந்த திருமருகரே!

     இந்த மண்ணுலக முழுவதும் ஒரு அடியால் அளந்தருளிய, காயம்பூ வண்ணராகிய திருமாலின் திருமருகரே!

     சூராதியவுணர்களின் கூட்டங்களை அழித்து, அவர்களின் பருத்த தலைகளை அறுத்து, பொடியாகப் போகுமாறு செய்து கூரிய வேற்படை விரரே!

     சோலைகளில் பறந்து உலாவுகின்ற மயிலின் மீது ஏறி வந்து சோலை மலையில் எழுந்தருளியுள்ள, பெருமிதம் உடையவரே!

     வீரம் பொருந்திய மன்மதனுடைய நூல்களில் சொல்லப்பட்ட, போக இன்பத்தைத் தரவல்ல பொது மாதர்களின் வேல் போன்ற கண்களினால் மயக்கமுற்று, இப்பூமியின்மேல், கைவீசி இதமாகப் பேசும் அவ்விலை மாதர்களின் வாக்கிலிருந்து பிறக்கும்  இனிய மொழிகளுக்கு இணங்கி, அவர் இட்ட வேலைகளைச் செய்து அவர்மீது ஆசை மிகுந்து ஊக்கமாக, என்பால் மிகுந்திருந்த செல்வத்தை அவர்கட்கு ஈந்து, அவை போன பின் பாதகனாகி நின்று அடியேன் தவிக்காமல், பக்குவ நிலை வருவதற்குரிய அன்பு என்பால் வந்து சேர, கடப்பமலரையும் தண்டையையும் அணிந்த உமது திருவடியை நாடி என்று அடியேன் வணங்குவேனோ?


விரிவுரை 

வீரமதனூல் விளம்பு போகம் ---

மன்மதன் கடுந் துறவிகளையும், வீர தீர மன்னர்களையும் தன் மலர்க் கணையால் வெற்றி பெறுகின்றான். ஆதலினால் வீர மதன் என்றார்.

மதனூல்-காமசாத்திரம். அம் மதனாகமத்தில் கூறியுள்ளபடி பலப்பல இன்பங்களைப் பொது மாதர் வருவார்கள்.


வேல்விழியினால் மயங்கி ---

மாதரது கூரிய கண்களால் இளைஞர் மயங்குவார்கள்.

குயில்மொழிநன் மடவியர்கள் விழியால் உருக்குபவர்
தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர்,நகை
கொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் ......
                                              --- (குமரகுரு பரமுருக குகனே) திருப்புகழ்

வேலை செய்து ---

அம்மாதர்கள் இட்ட வேலைகளைத் தெய்வகைங்கரியம் போல் செய்து திரிவார்கள்.

சதிசெய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள்
வசம் ஒழுகி, அவர் அடிமை என, மாதர் இட்டதொழில்
தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்தஅருள் ......  தருவாயே.                                                            --- (குமரகுருபரமுருககுகனே) திருப்புகழ்

நீடு பொருள் போன பின்பு ---

அரிதில் முயன்று பெரியோர்கள் தேடிய பொருள்கள் முழுவதையும் அம்மாதரிடங் கொட்டிக் கொடுத்து வறியவர் ஆவார்கள்.

மதிக்குளறி உளகாசும் அவர்க்கு உதவி, மிடியாகி
   வயிற்றில் எரி மிகமூள”         --- (வரிக்கலையி) திருப்புகழ்

பாகம் வர சேர அன்பு ---

பாகம்-பக்குவம். ஆன்மாவுக்கு இருவினையொப்பு எய்திய பின் மலபரிபாகம் உண்டாகும்; அப்போது சத்திநிபாதம் எய்தும், அப்பக்குவ நிலையில் முறுகியஅன்பு சேரும். அன்பு சேர சிவமாம் பெற்றியால் இன்பம் சேரும்.

உணக்கிலாத தொர்வித்துமேல் விளையாமல்
     என்வினை ஒத்தபின்
கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே”          --- திருவாசகம்

பூரணமான திங்கள் ---

இங்கே குறைமதியை நிறைமதியென்றார். என்றும் ஒரு படியாய் இருக்கின்ற மதி என்று பொருள் கொள்ள வேண்டும்.

பூவுலகெலா மடங்க ஓரடியினாலளந்த ---

இந்த உலகமெல்லாம்திருமால் ஓரடியால் அளந்து அருளினார்.

மூவடி கேட்டன்று மூதண்டகூட முகடுமுட்டச்
   சேவடி நீட்டும் பெருமான்”         --- கந்தரலங்காரம்

பூவை வடிவான ---

பூவை-காயாம் பூ. இது நீலநிறமுடைய அழகிய மலர். திருமாலின் நிறமும் நீலம். காயாம் பூ வண்ணன்.

கருத்துரை

சோலைமலை மேவு முருகா! உனது பாதமலரைப் பணிய அருள்செய்யும்.


No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...