அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கருப்பற்றிப் பருத்து
(காஞ்சிபுரம்)
முருகா!
பிறவி அற, திருவடியை அருள்
தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கருப்பற்றிப்
பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்
கருத்திற்கட் பொருட்பட்டுப் ......
பயில்காலங்
கணக்கிட்டுப்
பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக்
கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் ...... சமனாவி
பெருக்கப்புத்
தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்
பிணத்தைச்சுட் டகத்திற்புக் ......
கனைவோரும்
பிறத்தற்சுற்
றமுற்றுற்றிட் டழைத்துத்தொக் கறக்கத்துப்
பிறப்புப்பற் றறச்செச்சைக் ......
கழல்தாராய்
பொருப்புக்கர்ப்
புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப்
புனக்கொச்சைக் குறத்தத்தைக் ......
கினியோனே
புரத்தைச்சுட்
டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்
புணர்த்தப்பித் தனைக்கற்பித் ......
தருள்வோனே
செருக்கக்குக்
கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச்
சினத்திட்டுச் சிதைத்திட்டுப் ...... பொரும்வீரா
திருத்தத்திற்
புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்
திருக்கச்சிப் பதிச்சொக்கப் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கரு
பற்றி, பருத்து ஒக்க, தரைக்கு உற்றிட்டு, உருப்பெற்றுக்
கருத்தின்கண் பொருள்பட்டுப் ......
பயில்காலம்,
கணக்குஇட்டு, பிணக்கு இட்டு, கதித்து இட்டு, கொதித்திட்டு,
கயிற்று இட்டுப் பிடித்திட்டு, ...... சமன் ஆவி
பெருக்க, புத்தியில் பட்டு, புடை துக்கக் கிளை, பின் பொய்ப்
பிணத்தைச்சுட்டு, அகத்தில் புக்கு, ...... அனைவோரும்
பிறத்தல் சுற்றம் முற்றுஉற்றிட்டு அழைத்து, தொக்கு
அறக் கத்து,
பிறப்புப் பற்று அற, செச்சைக் ...... கழல்தாராய்.
பொருப்பு
கர்ப்புரக் கச்சுத் தனப் பொற்புத் தினைப் பச்சைப்
புனக் கொச்சைக் குறத் தத்தைக்கு ...... இனியோனே!
புரத்தைச்
சுட்டு எரித்து, பற்றலர்க்கு பொன்
பதத் துய்ப்பைப்
புணர்த்த பித்தனை கற்பித்து ...... அருள்வோனே!
செருக்கு
அக் குக்கரைக் குத்தி, செரு புக்கு, பிடித்து எற்றி,
சினத்திட்டு, சிதைத்திட்டுப் ...... பொரும்வீரா!
திருத்தத்தில்
புகல் சுத்தத் தமிழ் செப்புத் த்ரய சித்ர,
திருக் கச்சிப் பதிச் சொக்கப் ......
பெருமாளே.
பதவுரை
பொருப்பு --- மலை போன்றதும்,
கர்ப்புர --- பச்சைக் கர்ப்பூரம் பூசப்
பெற்றதும்,
கச்சுத் தனப் பொற்பு --- ரவிக்கை
அணிந்ததுமான கொங்கையின் அழகைக் கொண்டவரும்,
பச்சைத் தினைப் புன --- பசுமை வாய்ந்த தினைப்புனத்தில் இருந்தவரும்,
கொச்சை --- திருந்தாத மழலை மொழி பேசுபவரும்,
குறத் தத்தைக்கு இனியோனே --- குறக் குலத்தவரும், கிளி
போன்ற வள்ளி நாயகியாருக்கு இனியவரே!
புரத்தைச் சுட்டு எரித்து --- திரி
புரங்களைச் சுட்டு எரித்து,
பற்றலர்க்கு --- திரிபுரங்களில் பற்று
இல்லாமல் சிவ வழிபாட்டில் இருந்த மூவர்க்கு
பொற் பதத் துய்ப்பை புணர்த்து --- மேலான
பதவி நுகர்ச்சியைக் கூட்டி வைத்த
அப் பித்தனை --- அந்தப் பித்தனாம்
சிவபெருமானுக்கு
கற்பித்து அருள்வோனே --- குருபரனாய்
விளங்கிப் பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவரே!
செருக்கு அக் குக்கரை --- அகந்தை கொண்ட அந்த நாய் போன்றவர்களாகிய
அசுரர்களை
குத்தி --- வேலாயுதத்தால் குத்தியும்,
செருப் புக்குப் பிடித்து எற்றி --- போரில்
புகுந்து பிடித்து மோதியும்,
சினத்திட்டு --- அவர்கள் மீது கோபம்
கொண்டும்,
சிதைத்திட்டு --- அழியச் செய்தும்
பொரும் வீரா --- போர் புரிந்த
வீரமூர்த்தியே!
திருத்தத்தில் புகல் --- திருத்தமாகச் சொல்லப்படும்
சுத்தத் தமிழ்ச் செப்புத் த்ரய சித்ர --- தூய
தமிழின் இயல், இசை, நாடகம் என்று மூன்றையும் ஓதும் சிறப்பு
உடையதும்,
திருக் கச்சிப்பதிச் சொக்கப் பெருமாளே
--- தெய்வத் தன்மை பொருந்தியதுமாகிய காஞ்சி மாநகரின் கண் வாழும் அழகிய பெருமையில்
சிறந்தவரே!
கருப் பற்றி --- ஒரு தாயின் கருவில்
சேர்ந்து
பருத்து ஒக்க --- உருவாகப் பருத்து
முதிர்ந்து,
தரைக்கு உற்றிட்டு --- பூமியில் வந்து
சேர்ந்து,
உருப் பெற்று --- பாலப் பருவம் முதலிய
உருவங்களை முறையே அடைந்து,
கருத்தின் கண் பொருள்பட்டு --- எண்ணத்திலே, பொருள் சேர்ப்பதே குறிக்கோளாகக்
கொண்டு
பயில் காலம் --- பயில்கின்ற காலத்திலே,
கணக்கு இட்டு --- ஆயுளின் காலத்தைக்
கணக்குப் பார்த்து, முடிவு காலம் வருவதை
அறிந்து,
பிணக்கிட்டு --- மாறுபாடு கொண்டு,
தித்து இட்டு --- விரைந்து வந்து,
கொதித்திட்டு --- மிகுந்த கோபத்தை அடைந்து,
கயிற்று இட்டுப் பிடித்திட்டு --- பாசக்
கயிற்றை வீசி, என்னுடைய உயிரைப்
பிடித்துக் கொண்டு,
சமன் ஆவி பெருக்க --- இயமன் உயிரைப் பிரித்து
எடுத்துக் கொண்டு போக,
புத்தியில் பட்டு --- உயிர் போய்
விட்டது என்று அறிவில் தெரிந்து கொண்ட,
புடைத் துக்கக் கிளை --- பக்கத்தில் இருந்த, துக்கப்படும் சுற்றத்தினர்,
பின் பொய் பிணத்தைச் சுட்டு --- பின்னர்
நிலையின்றி அழிந்த, பிணத்தைச்
சுட்டெரித்து விட்டு,
அகத்தில் புக்கு --- வீட்டுக்கு வந்து
அனைவோரும் பிறத்தல் சுற்றம் முற்று
உற்றிட்டு அழைத்து --- எல்லோரும் அந்தப்
பிறப்பில் சுற்றத்தாராக உள்ள யாவரையும் வரும்படி அழைத்தும்,
தொக்கு அறக் கத்து --- பரிச உணர்ச்சியறியும்
இந்திரியம் சோர்வு அடைந்து ஓயும்படி அழுது கத்துகின்ற
பிறப்புப் பற்று அற --- இந்தப்
பிறப்பிலே உள்ள ஆசை நீங்கும்படி,
செச்சைக் கழல் தாராய் --- வெட்சி மாலை அணிந்த
உமது திருவடியைத் தந்து அருள்வீராக.
பொழிப்புரை
மலை போன்றதும், பச்சைக் கர்ப்பூரம் பூசப் பெற்றதும், ரவிக்கை அணிந்ததுமான கொங்கையின் அழகைக் கொண்டவரும், பசுமை வாய்ந்த
தினைப்புனத்தில் இருந்தவரும், திருந்தாத மழலை மொழி
பேசுபவரும், குறக் குலத்தவரும் ஆகிய, கிளி போன்ற வள்ளி நாயகியாருக்கு
இனியவரே!
திரி புரங்களைச் சுட்டு எரித்து, திரிபுரங்களில் பற்று இல்லாமல் சிவ
வழிபாட்டில் இருந்த மூவர்க்கு மேலான பதவி நுகர்ச்சியை கூட்டி வைத்த பித்தனாம்
சிவபெருமானுக்குக் குருபரனாய் விளங்கிப் பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவரே!
அகந்தை கொண்ட அந்த நாய் போன்றவர்களாகிய அசுரர்களை வேலாயுதத்தால் குத்தியும், போரில் புகுந்து பிடித்து மோதியும், அவர்கள் மீது கோபம் கொண்டும், அழியச் செய்தும் போர் புரிந்த
வீரமூர்த்தியே!
திருத்தமாகச் சொல்லப்படும் தூய தமிழின்
இயல், இசை, நாடகம் என்று மூன்றையும் ஓதும் சிறப்பு
உடையதும், தெய்வத் தன்மை
பொருந்தியதுமாகிய காஞ்சி மாநகரின் கண் வாழும் அழகிய பெருமையில் சிறந்தவரே!
ஒரு தாயின் கருவில் சேர்ந்து உருவாகப்
பருத்து முதிர்ந்து, பூமியில் வந்து
சேர்ந்து, பாலப் பருவம் முதலிய
உருவங்களை முறையே அடைந்து, எண்ணத்திலே, பொருள் சேர்ப்பதே குறிக்கோளாகக்
கொண்டு பயில்கின்ற காலத்திலே, ஆயுளின் காலத்தைக்
கணக்குப் பார்த்து, முடிவு காலம் வருவதை
அறிந்து, மாறுபாடு கொண்டு, விரைந்து வந்து, மிகுந்த கோபத்தை அடைந்து, பாசக் கயிற்றை வீசி, என்னுடைய உயிரைப் பிடித்துக் கொண்டு, இயமன் உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு போக, உயிர் போய் விட்டது என்று அறிவில் தெரிந்து கொண்ட, பக்கத்தில் இருந்த, துக்கப்படும் சுற்றத்தினர், பின்னர் நிலையின்றி அழிந்த, பிணத்தைச் சுட்டெரித்து விட்டு, வீட்டுக்கு வந்து எல்லோரும் அந்தப்
பிறப்பில் சுற்றத்தாராக உள்ள யாவரையும் வரும்படி அழைத்தும், பரிச உணர்ச்சியறியும் இந்திரியம் சோர்வு அடைந்து ஓயும்படி அழுது கத்துகின்ற இந்தப் பிறப்பிலே உள்ள ஆசை நீங்கும்படி, வெட்சி மாலை அணிந்த
உமது திருவடியைத் தந்து அருள்வீராக.
விரிவுரை
கருப்பற்றி
---
உயிர்கள்
புண்ணியப் பயனாக பூதசார உடம்புடன் ஒளி உலகிலும், பாவத்தின் பயனாக பூதமா உடம்புடன் இருள்
உலகிலும், இன்ப துன்பங்களை
நுகர்ந்தவுடன், விண்ணிலிருந்து மழை
வழியாகப் பூதலத்துக்கு வந்து, உண்ணுகின்ற காய்
கனிகளில் கலந்து, ஆடவரிடம் கருவுற்று, அறுபது நாட்களுக்குப் பின் தாய்
உதரத்திலே தேர்ந்து, பூதபரிணாம சரீரத்தை
அடைகின்றன. புண்ணிய பாவக் கலப்பு வினையை இம் மண்ணுலகில் நுகர வருகின்றது.
பருத்தொக்க
---
கரு
வளர்ந்து உருவாகிப் பருத்து, கை, கால், கண், நரம்பு, மயிர் இவைகளுடன் கூடி வளர்கின்றது.
தரைக்
குற்றிட்டு ---
பத்து
மாதங்கள் முற்றிய பின் பூமியில் பிறக்கின்றது.
அப்போது தாயும் சேயும் எண்ணிறந்த வேதனைகளை அடைகின்றார்கள்.
உருப்பெற்று ---
முறையே
பாலப்பருவம், வாலப் பருவம் முதலிய
நிலைகளை அடைகின்றது.
கருத்தின்கண்
பொருட்பட்டு ---
பிறந்த
ஆன்மா, தான் உய்யும்
நெறியையும், இறைவனையும் கருதாது, சதா பொருளைத் தேடிக் குவிப்பதிலேயே
கண்ணும் கருத்துமாக அலைந்து, அப் பொருளையே நினைந்து, குவிந்த பொருளைப் பாதுகாக்கும்
விதத்தையே கருதி நொந்து நொந்து அல்லல் படுகின்றது.
கணக்கிட்டு ---
ஆன்மாவின்
ஆயுளைக் கணக்கிட்டு ஆயுளின் முடிவு நேரத்தில் இயமன் வருகின்றான்.
பிணக்கிட்டுக்
கதித்திட்டுக் கொதித்திட்டு ---
அறநெறி
நில்லாத உயிர்களிடம் மாறுபட்டும்,
விரைவாகவும்
கோபம் மிகுந்தும், காலன் அல்லது
காலதூதன் வருகின்றான்.
கயிற்றிட்டுப்
பிடித்திட்டுச் சமன் ஆவி ---
சமன்
- கூற்றுவன். இன்னார், இனியார், வறியவன், தனவந்தன், கற்றவன், கல்லாதவன், அரசன், ஆண்டி, என்ற உயர்வு தாழ்வுகளை நோக்காமல்
சமமாகப் பார்ப்பதனால் சமன் எனப் பேர் பெற்றான்.
புடைத்
துக்கக் கிளை
---
புடை
- பக்கம். கிளை - சுற்றத்தார்.
அருகில்
உள்ள சுற்றத்தார் செய்வது ஒன்றும் அறியாது துக்கப்படுவார்கள். இயமனிடம் ஒரு கோடி பவுன் கொடுத்து, ஒருநாள் வாழச் செய்ய முடியாது.
நான்முகன்
படைத்த நானா வகையுலகில்
ஆன்ற
சிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்
ஆண்
முதிதோ? பெண் முதிதோ? அன்றி அலி முதிதோ
நாள்
முதிதோ? கோள் முதிதோ?
நல்வினை
முதிதோ? தீவினை முதிதோ?
செல்வஞ்சி
றப்போ? கல்வி சிறப்போ?
அல்லது
உலகின் அறிவு சிறப்போ?
தொல்லை
மாஞாலந் தோற்றமோ? படைப்போ?
எல்லாப்
பிறப்பும் இயற்கையோ? செயற்கையோ?
காலத்தால்
சாவரோ? பொய்ச் சாவு சாவரோ?
நஞ்சுறு
தீவினை துஞ்சுமோ? துஞ்சாதோ?
துஞ்சும்
பது அந்தப் பஞ்சேந்திரியம்
என்செயா
நிற்குமோ? எவ்விடத்து ஏகுமோ?
ஆற்றல்
உடையீர் அருந்தவம் புரிந்தால்
வேற்று
உடம்பாகுமோ? தமது உடம்பாகுமோ?
உண்டியை
உண்குவது உடலோ? உயிரோ?
கண்டுஇன்
புறுவது கண்னணோ கருத்தோ? 15
உலகத்தீரே
உலகத்தீரே !
நாக்கடிப்பாக
வாய்ப்பறை அறைந்து
சாற்றக்
கேண்மின் சாற்றக் கேண்மின்,
மனிதர்க்கு
வயது நூறுஅல்லது இல்லை
ஐம்பது
இரவில் அகலும் துயிலினால்,
ஒட்டிய
இளைமையால் ஓரைந்து நீங்கும்,
ஆக்கை
இளமையில் ஐம்மூன்று நீங்கும்,
எழுபது
போக நீக்கி இருப்பன முப்பதே (அவற்றுள்)
இன்புறு
நாளும் சிலவே, அதாஅன்று
துன்புறு
நாளும் சிலவே, ஆதலால்
பெருக்காறு
ஒத்தது செல்வம், பெருக்காற்று
இடிகரை
ஒத்தது இளமை, இடிகரை
வாழ்மரம்
ஒத்தது வாழ்நாள், ஆதலால்,
ஒன்றே
செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்
நன்றே
செய்யவும் வேண்டும், அந்நன்றும்
இன்றே
செய்யவும் வேண்டும், அவ்வின்றும்
இன்னே
செய்யவும் வேண்டும், அவ்வின்னும்
நாளை
நாளை என்பீர் ஆகில்,
நமனுடை
முறைநாள் ஆவதும் அறியீர்,
நம்முடை
முறைநாள் ஆவதும் அறியீர்,
எப்போது
ஆயினும் கூற்றுவன் வருவான்,
அப்போது,
அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும்
போகான், பொருளொடும் போகான்,
சாற்றவும்
போகான், தமரொடும் போகான்,
நல்லார்
என்னான், நல்குவு அறியான்,
தீயார்
என்னான், செல்வர் என்று உன்னான்,
தரியான்
ஒருகணம், தறுகணாளன்,
உயிர்
கொடுபோவான், உடல்கொடுபோகான்,
ஏதுக்கு
அழுவீர், ஏழை மாந்தார்காள்,
உயிரினை
இழந்தோ? உடலினை இழந்தோ?
உயிர்
இழந்து அழுதும் என்று ஓதுவீர் ஆகில்,
உயிரினை
அன்றும் காணீர், இன்றுங்காணீர்,
உடலினை
அன்றும் கண்டீர், இன்றுங்கண்டீர்,
உயிரினை
இழந்த உடலது தன்னைக்
களவு
கொண்ட கள்வனைப் போலக்
காலும்
ஆர்த்துக் கையும் ஆர்த்துக்
கூறை
களைந்து, கோவணம் கொளுவி,
ஈமத்
தீயை எரியெழ மூட்டிப்
பொடிபடச்
சுட்டுப் புனலிடை மூழ்கிப்
போய்த்
தமரோடும் புந்தி நைந்து அழுவது
சலம்
எனப் படுமோ? சதுர் எனப் படுமோ?
பார்ப்பன
மாந்தர்காள், பகர்வது கேண்மின்,
இறந்தவராய்
உமை இவ்விடை இருத்திப்
பாவனை
மந்திரம் பலபட வுரைத்தே
உமக்கு
அவர் புத்திரர் ஊட்டின போது,
அடுபசியால்
குலைந்து, ஆங்கவர் மீண்டு,
கையேந்தி
நிற்பது கண்டதுஆர் புகலீர்,
அருந்திய
உண்டியால் ஆர்பசி கழிந்தது
ஒட்டியர்
மிலேச்சர் ஊணர் சிங்களர்
இட்டிடைச்
சோனகர் யவனர் சீனத்தர்
பற்பலர்
நாட்டிலும் பார்ப்பார் இலையால்,
முற்படைப்பு
அதனில் வேறாகிய முறைமைபோல்
நால்வகைச்
சாதியிந் நாட்டினில் நாட்டி,நீர்
மேல்வகை
கீழ்வகை விளங்குவது ஓழுக்கால்,
பெற்றமும்
எருமையும் பிறப்பினில் வேறே
அவ்விரு
சாதியில் ஆண்பெண் மாறிக்
கலந்து
கருப்பெறல் கண்டதும் உண்டோ,
ஒருவகைச்
சாதியா மக்கட் பிறப்பிலீர்
இருவகையாக
நீர் இயம்பிய குலத்துள்
ஆண்பெண்
மாறி அணைதலும், அணைந்தபின்
கருப்பொறை
உயிர்ப்பதுங் காண்கின்றிலீரோ?
எந்நிலத்து
எந்தவித்து இடப்படுகின்றதோ
அந்நிலத்து
அந்தவித்து அங்குரித் திடும்அலால்,
மாறி
வேறாகும் வழக்கம்ஒன்று இலையே,
பூசுரர்ப்
புணர்ந்து புலைச்சியர் ஈன்ற
புத்திரர்
ஆயினோர் பூசுரர் அல்லரோ,
பெற்றமும்
எருமையும் பேதமாய்த் தோன்றல்போல்
மாந்தரிற்
பேதமாம் வடிவுஎவர் கண்டுளார்,
வாழ்நாள்
உறுப்புமெய் வண்ணமோடு அறிவினில்
வேற்றுமையாவதும்
வெளிப்படல்இன்றே,
தென்றிசைப்
புலையன் வடதிசைக்கு ஏகில்
பழது
அறவோதிப் பார்ப்பான் ஆவான்,
வடதிசைப்பார்ப்பான்
தென்திசைக்கு ஏகின்
நடையது
கோணிப் புலையனாவான், (அதுநிற்க)
சேற்றிற்
பிறந்த செங்கழு நீர்போலப்
பிரமற்குக்
கூத்தி வயிற்றில் பிறந்த வசிட்டரும்
வசிட்டர்க்குச்
சண்டாளி வயிற்றில் பிறந்த சத்தியரும்
சத்தியர்க்குப்
புலைச்சி தோள் சேர்ந்து பிறந்த பராசரரும்
பராசரருக்கு
மீன்வாணிச்சி வயிற்றில் பிறந்த வியாசரும்
(ஆகிய இந்நால்வரும்)
வேதங்களோதி
மேன்மைப்பட்டு
மாதவர்
ஆகி வயங்கினர் அன்றோ,
அருந்தவ
மாமுனி யாம்பக வற்கு
(இருந்தவாறு இணை
முலைஏந்திழை மடவார்)
கருவூர்ப்
பெரும்பதிக் கட்பெரும் புலச்சி
ஆதி
வயிற்றினில் அன்றுஅவ தரித்த
கான்முளை
ஆகிய கபிலனும் யானே,
என்னுடன்
பிறந்தவர் எத்தனை பேர்எனில்
ஆண்பான்மூவர்
பெண்பான் நால்வர்,
யாம்வளர்
திறம் சிறிது இயம்புவல் கேண்மின்,
ஊற்றுக்காடு
எனும் ஊர்தனில் தங்கியே
வண்ணார்
அகத்தில் உப்பை வளர்ந்தனள்,
காவிரிப்பூம்பட்டினத்தில்
கள்விலைஞர் சேரியில்
சான்றார்
அகந்தனில் உறுவை வளர்ந்தனள்,
நரப்புக்
கருவியோர் நண்ணிடுஞ் சேரியில்
பாணர்
அகத்தில் ஔவை வளர்ந்தனள்,
குறவர்
கோமான் கோய்தினைப் புனஞ்சூழ்
வண்மலைச்
சாரலில் வள்ளி வளர்ந்தனள்,
தொண்டை
மண்டலத்தில் வண்தமிழ் மயிலைப்
பறையர்
இடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்,
அரும்பார்
சோலைச் சுரும்பார் வஞ்சி
அதிகமான்
இல்லிடை அதிகமான் வளர்ந்தனன்,
பாரூர்
நீர்நாட்டு ஆரூர் தன்னில்
அந்தணர்
வளர்க்க யானும் வளர்ந்தேன், (ஆதலால்)
மாரிதான்
சிலரை வரைந்து பெய்யுமோ,
காற்றுஞ்
சிலரை நீக்கி வீசுமோ
மானிலம்
சுமக்க மாட்டேன் என்னுமோ?
கதிரோன்
சிலரைக் காயேன் என்னுமோ?
வாழ்நான்கு
சாதிக் குணவுநாட்டிலும்
கீழ்நான்கு
சாதிக் குணவுநாட்டிலுமோ?
திருவும்
வறுமையுஞ் செய்தவப் பேறும்
சாவதும்
வேறிலை, தீரரணி யோர்க்கே
குலமும்
ஒன்றே, குடியும் ஒன்றே,
இறப்பும்
ஒன்றே, பிறப்பும் ஒன்றே,
வழிபடு
தெய்வமும் ஒன்றே, ஆதலால்
முன்னோர்
உரைத்த மொழி தவறாமல்
எந்நாள்
ஆயினும் இரப்பவர்க்கு இட்டுப்
புலையும்
கொலையும் களவும் தவிர்ந்து
நிலைபெற,
அறத்தில் நிற்பதை அறிந்து,
ஆணும்பெண்ணும்
அல்லதை உணர்ந்து,
பேணி
உரைப்பது பிழையெனப் படாது
சிறப்புஞ்
சீலமும் அல்லது
பிறப்பு
நலந்தருமோ பேதையீரே. --- கபிலர் அகவல்.
பிணத்தைச்
சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும் ---
நான்
துணை நான் துணை என்று கூறிய உறவினர் அனைவோரும், உயிர் போனபின், உடனே உடம்பைக் கொண்டு போய், இடுகாட்டில் எரித்துவிட்டு, வீட்டுக்குப் போய் விடுவார்கள்.
அழைத்துத்
தொக்கு அறக் கத்து ---
ஏனைய
உறவினர்களை அழைத்து, இறந்தவனைக் குறித்து, இந்த உடம்பு இளைக்க அழுவார்கள்.
தொக்கு
- பரிச உணர்வை அறியும் இந்திரியம்.
பிறப்புப்
பற்று அற
---
இப்படி
அழியும் இந்தப் பிறப்பில் உள்ள பற்றை அகற்ற வேண்டும்.
புரத்தைச்
சுட்டெரித்துப் பற்றலர்க்குப் பொற்பதத் துய்ப்பைப் புணர்த்தப் பித்தன் ---
கமலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன் என்ற மூன்று அசுரத்
தலைவர்கள், பொன் வெள்ள இரும்புக்
கோட்டைகளும், அழியா வரமும் பெற்று, மாலயனாதி வானவர்களை
வருத்தினார்கள். தேவரும் மூவரும் முறையிட, முக்கண் பெருமான், சிறிதே சிரித்து அருளினார். சிவபத்தியை உடைய அம் மூவர் மட்டும்
பிழைத்தார்கள்.
சிவபத்தி
மிகுந்த அம் மூவரில் இருவர், சிவபெமானுடைய
திருக்கோயிலில் வாயில் காவலர் ஆகும் பதம் பெற்றார்கள். ஒருவன் குடமுழா வாசிக்கும் பதத்தைப்
பெற்றான். பற்றலர் - பகைவர்.
இந்தக்
கருத்தை, "பற்றலர்க்குப்
பொற்பதத் துய்ப்பைப் புணர்த்துப் பித்தன்" என்று குறிப்பிடுகின்றார்.
மூவெயில்
செற்ற ஞான்று உய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ
லாளர்என்று ஏவிய பின்னை
ஒருவன் நீகரி காடு அரங் காக
மானை
நோக்கிஓர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் க அருள் செய்த
தேவ
தேவநின் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே. ---
சுந்தரர்.
செருக்குக்
குக்கரை ---
செருக்கு
- அகங்காரம் படைத்த. குக்கர் - நாய் போன்ற
இழிகுணம் படைத்தவர்கள்.
நாய்க்கு
ஒருவன் ரொட்டியை நீட்டினால், நாய் ரொட்டியை
நோக்குமே அன்றி, ரொட்டியைத்
தருகின்றவனை நோக்காது. அதுபோல், இறைவன் தருகின்ற பொருள்களையே நோக்கி, பொருள்களைத் தருகின்ற இறைவனை நோக்காது
நிற்கின்ற மாக்கள் நாய் போன்றவர்கள்.
அதனால் நாய் தாழ்ந்த பிறப்பு.
அடிமையிற்
குடிமை இல்லா
அயல் சதுப்பேதிமாரில்
குடிமையில்
கடைமை பட்ட
குக்கரில் பிறப்பரேலும்
முடியினில்
துளபம் வைத்தாய்
மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை
உகத்தி போலும்
அரங்கமா நகர்உளானே. --- தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
திருத்தத்தில்
புகழ்ச்சுத்தத் தமிழ்ச் செப்புத் த்ரயச் சித்ர ---
காஞ்சிமா
நகரில், திருந்திய தமிழும், தூய தமிழும், முத்தமிழும் சிறப்பாக விளக்கம்
பெறுகின்றன. சிறந்த தமிழ்ப் புலவர்களை
உலகுக்கு ஈந்த பெருமை காஞ்சிபுரத்துக்கு உண்டு.
பரிமேலழகர், கச்சியப்ப சிவாச்சாரியார், சிவப்பிரகாசர், அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோணாசல பாரதியார் முதலிய பல புலவர்கள்
காஞ்சியில் அவதரித்து தமிழை வளம் புரிந்தார்கள்.
கருத்துரை
திருக்
கச்சித் திருமுருகேசா, பிறப்பு அற உனது
திருவடி மலரைத் தந்து அருள்.
No comments:
Post a Comment