காஞ்சீபுரம் - 0469. கமலஅரு அசோகு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கமலஅரு அசோகு (காஞ்சிபுரம்)

முருகா!
பொதுமாதர் மயல் அற, உனது திருவடியை அருள்


தனதன தானாந்தன தனதன தானாந்தன
     தனதன தானாந்தன ...... தனதான
.

கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணை
     கலகமர் வாய்தோய்ந்தம ...... ளியின்மீதே

களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
     கனவிய வாரேந்தின ...... இளநீர்தோய்ந்

தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
     இவளுடன் மால்கூர்ந்திடு ...... மநுபோகம்

இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
     இதவிய பாதாம்புய ...... மருள்வாயே

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
     அதுலன நீலாம்பர ...... மறியாத

அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
     அறமுறு சீகாஞ்சியி ...... லுறைவோனே

விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
     வெடிபடு தேவேந்திர ...... னகர்வாழ

விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
     வினையற வேல்வாங்கிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கமல, ரு அசோகு ஆம்பரம் முடிநடு ஏய் பூங்கணை
     கலக அமர்வாய் தொய்ந்த, ம ...... ளியின் மீதே

களை அற மீதூர்ந்து எழ, மதன விடாய் போம்படி,
     கனவிய வார் ஏந்தின  ...... இளநீர் தோய்ந்து,

எமது உயிர் நீலஅஞ்சன மதர் விழியால் வாங்கிய
     இவளுடன் மால் கூர்ந்திடும் ...... அநுபோகம்,

இனிவிட, வேதாந்த பரமசுக வீடு ஆம் பொருள்
     இதவிய பாத அம்புயம் ...... அருள்வாயே.

அமகர, ஆசாம்பர, அதுகர ஏக ஆம்பர,
     அதுல, ன நீல அம்பரம் ...... அறியாத,

அநகர் அம் நாள அங்கிதர் தமை, உமையாள் சேர்ந்து அருள்
     அறம் உறு சீகாஞ்சியில் ...... உறைவோனே!

விமல கிராத அங்கனை தனகிரி தோய் காங்கெய!
     வெடிபடு தேவேந்திரன் ...... நகர்வாழ,

விரிகடல் தீமூண்டிட, நிசிசரர் வேர் மாண்டிட,
     வினை அற வேல்வாங்கிய ...... பெருமாளே.


பதவுரை

         அமகர --- அ, , ம என்னும் மூன்று அட்சரங்களின் சேர்க்கையான பிரணவாகரமானவரும்,

       ஆசாம்பர --- திகம்பரரும்,

       அதுகர --- அது என்று அஃறிணை நிலையிலும் வைத்துப் போற்றகூடியவரும்,

       ஏக ஆம்பரம் --- ஒற்றை மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவரும்,

       அதுல --- ஒப்பற்ற தன்மை உடையவரும்,

         அன --- அன்ன வடிவம் கொண்ட பிரமதேவரும்,

        நீல அம்பரம் --- நீலக் கடல் போன்ற நிறமுள்ள திருமாலும்,

       அறியாத --- முடியும் அடியும் தேடிக் காண முடியாதவரும்,

        அநகர் --- பாபமில்லாதவரும்,

         அம் நாள அங்கிதர் தமை ---  அழகிய முலைக் காம்பின் தழும்பை உடையவரும் ஆகிய சிவபெருமானை,

          உமையாள் சேர்ந்து அருள் --- உமாதேவியார் தவம் செய்து அடையப்பெற்றதும்,

        அறம் உறு --- அம்பிகை முப்பத்திரண்டு அறங்களையும் உடையதும் ஆகிய

        சீ காஞ்சியில் உறைவோனே --- திருக் கச்சியம்பதியில் வாழ்கின்றவரே!

         விமல --- பரிசுத்தமானவரே!

         கிராத அங்கனை --- வேடர் மகளாம் வள்ளிநாயகியின்

       தனகிரி தோய் காங்கெய --- தனங்களாகிய மலைகளைத் தழுவுகின்ற கங்கையின் புதல்வரே!

         வெடிபடு --- நறுமணம் கமழ்கின்ற

        தேவேந்திரன் நகர் வாழ --- தேவர்கள் தலைவனாகிய இந்திரனுடைய அமராவதி நகரம் வாழும் பொருட்டு,

        விரிகடல் தீ மூண்டிட --- விரிந்து பரந்த கடல் நெருப்புப் பற்றி எழ,

        நிசிசரர் வேர்மாண்டிட --- இரவில் உலவுகின்ற அரக்கர்கள் வேரோடு மாள,

       வினைஅற --- தீவினைகள் யாவும் நீங்கும்படியாக

       வேல் வாங்கிய பெருமாளே --- வேலாயுதத்தை விடுத்தருளிய பெருமையில் சிறந்தவரே!

         கமல -- தாமரை மலர்,

        அரு அசோகு --- அருமையான அசோக மலர்,

        ஆம்பர --- மா மலர்,

        முடிநடு ஏய் பூங்கணை ---  முடிவிலும் நடுவிலும் உள்ள நீலோற்பல மலர் ஆகிய மலர்க்கணைகளின் ஆற்றலினால்,

         கலக அமர்வாய் தோய்ந்து --- கலகமாகிய போரில் ஈடுபட்டு,

       அமளியின் மீதே --- படுக்கையின் மேல்,

       களை அற --- சோர்வு நீங்க

       மீது ஊர்ந்து எழ மதனவிடாய் போம்படி --- என் மீது தாக்கி எழுகின்ற அந்த காமதாகம் தீரும்படி,

         கனவிய --- கனத்ததும்,

        வார் ஏந்தின --- கச்சினைத் தாங்கியதும் ஆகிய,

        இளநீர் தோய்ந்து --- இளநீர் போன்ற மார்பகங்களைத் தழுவி,

        எமது உயிர் --- என்னுடைய உயிரை

        நீல அஞ்சன --- கரிய மை தீட்டப்பட்ட,

       மதர் விழியால் --- செழிப்புள்ள கண் கொண்டு

        வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் --- கவர்ந்த இந்தப் பெண்ணின் மீது மயக்கம் மிகுதியாகக் கொண்ட

        அநுபோகம் இனிவிட --- இன்ப நுகர்ச்சியை இனி விட்டு ஒழிப்பதற்கு,

         வேதாந்த --- வேத முடிவான,

        பரமசுக  --- பெரிய சுகத்தைத் தருவதான,

        வீடு ஆம் பொருள் --- முக்திப் பொருளாகிய,

        இதவிய --- இன்பம் தருவதான

        பாத அம்புயம் அருள்வாயே --- பாதத் தாமரைகளைத் தந்து அருளுவீராக.


பொழிப்புரை

         , , ம என்னும் மூன்று அட்சரங்களின் சேர்க்கையான பிரணவாகரமானவரும், திகம்பரரும், அது என்று அஃறிணை நிலையிலும் வைத்துப் போற்றகூடியவரும், ஒற்றை மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவரும், ஒப்பற்ற தன்மை உடையவரும், அன்ன வடிவம் கொண்ட பிரமதேவரும், நீலக் கடல் போன்ற நிறமுள்ள திருமாலும்,முடியும் அடியும் தேடிக் காண முடியாதவரும், பாபமில்லாதவரும்,  அழகிய முலைக் காம்பின் தழும்பை உடையவரும் ஆகிய சிவபெருமானை, உமாதேவியார் தவம் செய்து அடையப்பெற்றதும், அம்பிகை முப்பத்திரண்டு அறங்களையும் உடையதும் ஆகிய திருக் கச்சியம்பதியில் வாழ்கின்றவரே!

         பரிசுத்தமானவரே!

         வேடர் மகளாம் வள்ளிநாயகியின் தனங்களாகிய மலைகளைத் தழுவுகின்ற கங்கையின் புதல்வரே!

         நறுமணம் கமழ்கின்ற தேவர்கள் தலைவனாகிய இந்திரனுடைய அமராவதி நகரம் வாழும் பொருட்டு, விரிந்து பரந்த கடல் நெருப்புப் பற்றி எழ, இரவில் உலவுகின்ற அரக்கர்கள் வேரோடு மாள, தீவினைகள் யாவும் நீங்கும்படியாக வேலாயுதத்தை விடுத்தருளிய பெருமையில் சிறந்தவரே!

         தாமரை மலர், அருமையான அசோக மலர், மாமலர், முடிவிலும் நடுவிலும் உள்ள நீலோற்பல மலர் ஆகிய மலர்க்கணைகளின் ஆற்றலினால், கலகமாகிய போரில் ஈடுபட்டு, படுக்கையின் மேல், சோர்வு நீங்க என் மீது தாக்கி எழுகின்ற அந்த காம தாகம் தீரும்படி, கனத்ததும், கச்சினைத் தாங்கியதும் ஆகிய, இளநீர் போன்ற மார்பகங்களைத் தழுவி, என்னுடைய உயிரை கரிய மை தீட்டப்பட்ட, செழிப்புள்ள கண் கொண்டு கவர்ந்த இந்தப் பெண்ணின் மீது மயக்கம் மிகுதியாகக் கொண்ட இன்ப நுகர்ச்சியை இனி விட்டு ஒழிப்பதற்கு, வேத முடிவான, பெரிய சுகத்தைத் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருளுவீராக.

விரிவுரை

கமலரு சோகாம்பர முடிநடு ஏய் பூங்கணை ---

கமல அரு அசோகு ஆம்பரம்.  மன்மதனுடைய ஐங்கணைகைளைக் குறிக்கின்றார்.

தாமரை - முதல் கணை.  அசோகு - நடுக்கணை.  ஆம்பரம் - மா.  நீலோற்பலம் - கடைக்கணை.

மா, முல்லை என்பவைகள் இடைக்கணைகள்.  இந்த ஐந்து மலர்க்கணைகளால் மன்மதன் உயிர்களுடன் போர் புரிகின்றான்.

முடி நடு ஏய் பூங்கணை.

கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீது ---

கலகமாகிய போரில் ஈடுபட்டு படுக்கையின் மீது சோர்கின்றார்கள் மாந்தர்கள்.
  
களை அற ---

 இத்தைகைய சோர்வு நீங்குமாறு.

மீது ஊர்ந்து எழு மதனவிடாய் போம்படி ---

என்மீது தாக்கி எழுகின்ற அந்தக் காம தாகம் போகும்படி.

கனவிய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து ---

கனவிய – பருத்தது.  வார் - கச்சு அணிந்தது.  இளநீர் போன்ற தனங்களைத் தழுவி.

எமது உயிர் ---

எனது என்ற ஒருமை சந்தம் நோக்கி, எமது எனப் பன்மையாக வந்தது.

நீலாஞ்சன மதர் விழியால் வாங்கிய ---

நீல மை பூசிச் செழிப்பாக உள்ள கண்களால் பெண்கள் இளைஞர்களின் உயிரைக் கவர்வார்கள்.

இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம் ---

இப் பெண்ணாகிய பொதுமகளிடம் மயக்கம் மிகுதியாகக் கொண்டு இன்பம் நுகர்கின்ற கலவி நலம்.

இனி விட ---

இனி இந்த ஆசை நோய் அறவே நீங்கும்படி.


வேதாந்த பரமசுக வீடாம் பொருள் இதவிய பாதாம்புயம் அருள்வாயே ---

இது முருகன் திருவடிப் பெருமையைத் தெரிவிக்கின்றது.  எம்பிரான் இணையடி வேதமுடிவில் விளங்குவது.  பெரிய சுகத்தைத் தருவது. முத்தியின்பத்தை நல்குவது.  இன்பத்தை வழங்குவது.

இத்தகைய திருவடித் தாமரையை அடியேற்குத் தந்தருள்.

அமகர ---

அ ம.  இனம் பற்றி உ சேர்த்துப் பொருள் செய்யப் பெற்றது.

அகர, உகர, மகரம் என்ற மூன்று அட்சரங்களின் சேர்க்கையாகிய ஒங்கார வடிவினர் சிவபெருமான்.  ஒங்காரப் பொருளாகத் திகழ்பவர்.

ஆசாம்பர ---

திகம்பரர் - திசைகளை ஆடையாக உடையவர்.

அதுகர ---

அது என்று அஃறிணையாலும் சுட்டிப் போற்றப்படுபவர்.  இறைவனை அது என்று வேதம் கூறும்.

ஏகாம்பர ---

ஏக அம்பரம்.  ஒற்றை மாமரம்.  காஞ்சிபுரத்தில் வேதமே மாமரமாக நிற்க, அதன் கீழ் எம்பெருமான் எழுந்தருளி இருப்பான்.

அதுல ---

அதுலம் - ஒப்பில்லாதவர்.  இறைவன் சமானம் இல்லாதவர்.

சமானரகிதம் விபும்          ---    வேதம்.
நிகர்பகர அரியது           ---   திருப்புகழ்.
உவமன் இல்லி               ---   தேவாரம்.

என வரும் வாக்குகளையும் நினைவு கூர்க.

அன நீலாம்பரம் அறியாத ---

அனம் - அன்னமாகிய பிரமனும், நீலக்கடல் போன்ற திருமாலும் முடியும் அடியும் தேடிக் காணப் பெறாதவர் கண்ணுதல் கடவுள்.

அநகர் ---

அகம் - பாவம்.  அநகர் - பாவம் இல்லாதவர்.

அநாளாங்கிதர் ---

அம் நாள அங்கிதர்.

இறைவன் காமாட்சியம்மை பூசித்த போது, கம்பா நதியைப் பெருகச் செய்து அருளினார். அம்பிகை அஞ்சி இலிங்கமூர்த்தியைத் தழுவிக் குழைந்தார்.  அப்போது வளைத்தழும்பும் முலைச்சுவடும் இலிங்கத்தில் பதிந்தன.

தழுவுமையாள் முன்னும் தமிழ்இறையால் பின்னும்
தொழும்இறையால் மேலும் சுவடு --- கெழுமுவ கீழ்
இன்றால் எனும் குறைபோம் என மனம் சேர் வாட்போக்கி
அன்றால் அமர்ந்தாய் அடி.                            --- வாட்போக்கிக் கலம்பகம்.

பூதியாகிய புனித நீர் ஆடி, பொங்கு
         கங்கை தோய் முடிச் சடை புனைந்து,
காதில் வெண் குழை கண்டிகை தாழ,
         கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனார் ஆயுமாதவம் செய் அவ்
         வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு
         வளைத் தழும்புடன் முலைச்சுவடு அணிந்தார்.        ---  பெரியபுராணம்.

அறம் உறு சீ காஞ்சி ---

முப்பத்திரண்டு அறங்களும் உறைகின்ற திருத்தலம் காஞ்சிபுரம்.
திருத்தலங்கள் அனைத்தினும் மேம்பட்டது.  திருத்தலங்களின் மணிமுடியாகத் திகழ்வது.

வெடிபடு தேவேந்திரன் நகர் வாழ ---

வெடி - நறுமணம்.  கற்பக மலர் மணம் கமழ்கின்ற நகர் அமராவதி.  அந்நகர் வாழும்படி முருகன் வேல் வாங்கி அருளினார்.

கருத்துரை

திருக் கச்சியம்பதி வாழ் தேவா, மாதர் மயக்கு அற நின் திருவடியை அருள்.

No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...