காஞ்சீபுரம் - 0468. கடத்தைப் பற்று




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கடத்தைப் பற்று (காஞ்சிபுரம்)

முருகா!
அடியேன் அவமே அழியாமல்
உனது திருப்புகழைச் சொல்ல அருள்


தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான


கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக்
     கயற்கட்பொற் பிணைச்சித்ரத் ...... தனமாதர்

கலைக்குட்பட் டறக்கத்திச் சலித்துக்கட் டளைச்சொற்பொய்த்
     திரைக்குட்பட் டறச்செத்திட் ...... டுயிர்போனால்

எடுத்துக்கொட் டிடக்கட்டைப் படத்தெட்டத் தணற்றட்டக்
     கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற் ...... றவர்போமுன்

இணக்கிப்பத் திமைச்செச்சைப் பதத்தைப்பற் றுகைக்குச்சொற்
     றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித் ...... திரிவேனோ

அடைத்திட்டுப் புடைத்துப்பொற் பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட்
     டலைப்புப்பற் றெனச்சொற்றிட் ...... டறுசூரை

அடித்துச்செற் றிடித்துப்பொட் டெழப்பொர்ப்புப் படக்குத்திட்
     டலைத்துச்சுற் றலைத்தெற்றுக் ...... கடல்மாயப்

புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக்
     கயிற்கொக்கைப் படக்குத்திப் ...... பொருவோனே

புனத்திற்பொற் குறத்திக்குப் புணர்க்கொத்தப் பசப்பெத்திப்
     புணர்க்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கடத்தைப் பற்று எனப்பற்றி, கருத்து உற்றுக் களித்திட்டு,
     கயற்கண் பொற்பு இணைச் சித்ரத் ...... தனமாதர்

கலைக்குள் பட்டு, றக்கத்திச் சலித்துக் கட்டளைச் சொல்,பொய்த்
     திரைக்குள் பட்டு, றச் செத்திட்டு ...... உயிர்போனால்,

எடுத்துக்கொட்டி இடக் கட்டைப் படத் தெட்டத் தணல் தட்டக்
     கொளுத்தி, சுற்று அவர், பற்று அற்று ...... அவர்போம் முன்,

இணக்கிப் பத்திமைச் செச்சைப் பதத்தைப் பற்றுகைக்கு, சொல்
     தமிழ்க் கொற்றப் புகழ் செப்பித் ...... திரிவேனோ?

அடைத்திட்டு, புடைத்து, பொன் பதச் சொர்க்கம் தனை சுற்றிட்டு
     அலைப்புப் பற்று எனச் சொற்றிட்டு ...... அறுசூரை

அடித்து, செற்று, டித்து, பொட்டு எழ, பொர்ப்புப் படக் குத்திட்டு,
     அலைத்துச் சுற்று அலைத் தெற்றுக் ...... கடல்மாய,

புடைத்திட்டு, படிக்குள் செற்று, டப்புக்குக் கதத் துக்கக்
     கயில் கொக்கைப் படக் குத்திப் ...... பொருவோனே!

புனத்தில் பொன் குறத்திக்குப் புணர்க்கு ஒத்தப் பசப்பு எத்திப்
     புணர், கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.


பதவுரை

         அடைத்திட்டு --- தேவர்களைச் சிறையில் அடைத்தும்,

        புடைத்து --- அவர்களை அடித்தும்,

        பொன் பதச் சொர்க்கம் தனைச் சுற்றிட்டு --- அழகிய இருப்பிடமாகிய சுவர்க்கத்தை வளைந்து கொண்டு,

        அலைப்புப் பற்று --- அலைச்சல் அடையுங்கள்

        எனச் சொற்றிட்ட --- என்று சொல்லி அவர்களை அலைத்த

        அறு சூரை --- நீதி அற்ற சூரனை

         அடித்து --- அடித்தும்,

       செற்று இடித்து --- கோபித்து இடித்தும்,

        பொட்டு எழ --- அவன் பொடிபடவும்,

        பொர்ப்புப் படக் குத்திட்டு ---  அவனுக்குத் துணையாயிருந்த ஏழு மலைகளையும் அழிவுறும்படி வேலால் குத்தியும்,

         அலைத்து --- சூரனைக் கலங்கச் செய்து,

       சுற்று அலைத் தெற்றுக் கடல் --- வளைந்துள்ள அலைகள் நெருங்கியுள்ள கடலும்

        மாயப் புடைத்திட்டு --- வற்றி ஒடுங்க அலைத்தும்,

         படிக்குள் செற்று அடப் புக்கு --- பூமியில் கோபத்துடன் புயலாக அழிக்கப் புறப்பட்ட பின்,  

      கதத் துக்க --- கோபமும் துக்கமும் நெஞ்சிலே கொண்டு

      கயில் கொக்கை --- மாமரமாகி நின்ற சூரனை

       படக் குத்திப் பொருவோனே --- கடலில் வேலால் அழிவு படக் குத்திச் சண்டை செய்தவரே!

         புனத்தில் பொன் குறத்திக்கு --- தினைப்புனத்தில் இருந்த அழகிய குறமகளாகிய வள்ளிபிராட்டியை

        புணர்க்கு ஒத்தப் பசப்பு எத்தி --- சேர்வதற்கு வேண்டிய, பசப்பு மொழிகளால் கவர்ச்சி செய்து,

        புணர்க் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே --- அவரை மணந்து கொண்ட, கச்சியம்பதியில் எழுந்தருளி உள்ள அழகிய பெருமையில் சிறந்தவரே!

         கடத்தைப் பற்று எனப் பற்றி --- குடம் போன்ற மார்பகத்தையே பற்று எனப் பற்றி,

       கருத்து உற்றுக் களித்திட்டு --- அதன் மீதே எண்ணத்தை வைத்து மகிழ்ச்சி உற்று,

       கயல் கண் பொற்பு --- மீன் போன்ற கண்ணின் அழகையும்

       இணைச் சித்ரத் தன மாதர் --- இணையாகிய அழகிய மார்பையும் உடைய பொதுமாதர்களின்

         கலைக்குள் பட்டு --- மதனக் கலைக்குள் ஆசைப்பட்டு,

        அறக் கத்திச் சலித்து --- காம சாத்திரங்களை நன்றாகக் கூவி ஓதி, பின்னர் களைத்துப் போய்,

        கட்டளைச் சொல் --- கற்பனைப் பேச்சுகளுக்கும்,

        பொய்த் திரைக்குள் பட்டு --- மறைப்புத் திரைக்கும் உட்பட்டவனாகி,

        அறச் செத்திட்டு உயிர் போனால் --- அழிந்து இறந்து உயிர் போனால்,

         எடுத்துக் கொட்டு இட --- உடலை எடுத்துச் சுடுகாட்டில் போட வேண்டி

        கட்டைப் பட --- கட்டைகளிடையே படும்படி வைத்து,

        தெட்டத் தணல் தட்டக் கொளுத்தி --- விறகுக் முற்றின நெருப்புக் கிட்டும்படி எரித்து,

         சுற்று அவர் --- சுற்றத்தார்கள்

       பற்று அற்று அவர் போமுன் --- பற்று அற்றவர்களாய் சுடுகாட்டிலிருந்து போவதற்கு முன்,

         இணக்கிப் பத்திமை --- மனம் பொருந்தி பக்தியுடன்

        செச்சைப் பதத்தைப் பற்றுகைக்கு --- வெட்சி மலர் கொண்ட உமது திருவடியைப் பற்றி உய்வதற்கு,

       சொல் தமிழ்க் கொற்றப் புகழ்ச் செப்பித் திரிவேனோ --- தமிழ் மொழியைக் கொண்டு உமது வீரத் திருப்புகழைச் சொல்லி அடியேன் திரிய மாட்டேனோ?

பொழிப்புரை

         தேவர்களைச் சிறையில் அடைத்தும், அவர்களை அடித்தும், அழகிய இருப்பிடமாகிய சுவர்க்கத்தை வளைந்து கொண்டு,  அலைச்சல் அடையுங்கள் என்று சொல்லி அவர்களை அலைத்த நீதியற்ற சூரனை அடித்தும், கோபித்து இடித்தும், அவன் பொடிபடவும்,  அவனுக்குத் துணையாயிருந்த ஏழு மலைகளையும் அழிவுறும்படி வேலால் குத்தியும், சூரனைக் கலங்கச் செய்து, வளைந்துள்ள அலைகள் நெருங்கியுள்ள கடலும் வற்றி ஒடுங்க அலைத்தும், பூமியில் கோபத்துடன் புயலாக அழிக்கப் புறப்பட்ட பின், கோபமும் துக்கமும் நெஞ்சிலே கொண்டு கடலில் மாமரமாகி நின்ற சூரனை வேலால் அழிவு படக் குத்திச் சண்டை செய்தவரே!

         தினைப்புனத்தில் அழகிய குறமகளாகிய வள்ளிபிராட்டியைச் சேர்வதற்கு வேண்டிய, பசப்பு மொழிகளால் கவர்ச்சி செய்து, அவரை மணந்து கொண்ட, கச்சியம்பதியில் எழுந்தருளி உள்ள அழகிய பெருமையில் சிறந்தவரே!

         குடம் போன்ற மார்பகத்தையே பற்று எனப் பற்றி, அதன் மீதே எண்ணத்தை வைத்து மகிழ்ச்சி உற்று, மீன் போன்ற கண்ணின் அழகையும், இணையாகிய அழகிய மார்பையும் உடைய பொதுமாதர்களின் மதனக் கலைக்குள் ஆசைப்பட்டு, காம சாத்திரங்களை நன்றாகக் கூவி ஓதி, பின்னர் களைத்துப் போய், கற்பனைப் பேச்சுகளுக்கும், மறைப்புத் திரைக்கும் உட்பட்டவனாகி, அழிந்து இறந்து உயிர் போனால், உடலை எடுத்துச் சுடுகாட்டில் போட வேண்டி விறகுக் கட்டைகளிடையே படும்படி வைத்து, முற்றின நெருப்புக் கிட்டும்படி எரித்து, சுற்றத்தார்கள் பற்று அற்றவர்களாய் சுடுகாட்டிலிருந்து போவதற்கு முன், மனம் பொருந்தி பக்தியுடன் வெட்சி மலர் கொண்ட உமது திருவடியைப் பற்றி உய்வதற்கு,  தமிழ் மொழியைக் கொண்டு உமது வீரத் திருப்புகழைச் சொல்லி அடியேன் திரிய மாட்டேனோ?

விரிவுரை

கலைக்குட் பட்டு அறக்கத்தி ---

கலை - மதன நூல்.  மாதர் ஆசையால் மதனநூலைக் கற்று, அதையே வாய்விட்டுச் சத்தம் போட்டுப் பேசி மாந்தர் களைக்கின்றனர்.

…..                      …..                      …..             மதன்நூலே
சுருதி எனவே நினைந்து, அறிவிலிகளோடு இணங்கு
தொழிலுடைய யானும்....            ---  (சுருளளக) திருப்புகழ்.


கட்டளைச் சொல் பொய்த்திரைக்கு உட்பட்டு ---

கட்டளை - கற்பனை.  பொய்த்திரை - பொய்யாகிய திரை.

பலப்பல விஷயங்களைக் கற்பனை செய்தும், பொய்யென்ற திரையிட்டு மக்களை மயக்கியும் அலைவர்.

கொளுத்திச் சுற்றவர் பற்று அற்றவர் போமுன் ---

உயிர் போனவுடன் சுற்றத்தார் மயானத்திலே கொண்டு போய் கட்டைகளை அடுக்கி, அதன் மீது வைத்து, எரித்தபின், நீரில் முழுகி, இறந்தவர் மீது உள்ள பற்றை விட்டுச் செல்வார்கள்.

பெருங்கா ரியம்போல் வருங்கேடு உடம்பால்
     ப்ரியங்கூர வந்து ...... கருவூறிப்
பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார்
     நடந்தார் தளர்ந்து ...... பிணமானார்
அருங்கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள்
     அலங்கார நன்று ...... இதுஎனமூழ்கி
அகன்று, ஆசையும்போய், விழும்பாழ் உடம்பால்
     அலந்தேனை அஞ்சல் ...... எனவேணும்       ---  திருப்புகழ்.

சத்தான புத்தியது கெட்டே கிடக்க, நமன்
  ஓடித் தொடர்ந்து, கயிறு ஆடிக் கொளும்பொழுது,
  பெற்றோர்கள் சுற்றிஅழ, உற்றார்கள் மெத்தஅழ,
  ஊருக்கு அடங்கல் இலர் காலற்கு அடங்க உயிர்
  தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின்
  ஓலைப் பழம் படியினால் இற்று, றந்தது என, எடும்என, ஒடிச்

சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
  ஏகி, சடம்பெரிது வேக, புடம் சமைய
  இட்டே அனற்குள் எரி பட்டார் எனத்தழுவி
  நீரில் படிந்துவிடு பாசத்து அகன்று, உனது
  சற்போதகப் பதுமம் உற்றே தமிழ்க்கவிதை
  பேசிப் பணிந்து உருகு நேசத்தை இன்றுதர ... இனிவரவேணும்.
                                                                        --- (இத்தாரணி) திருப்புகழ்.

இணக்கிப் பத்திமை ---

இணக்கி - எங்கெங்கோ - எந்த எந்த பொருள்களின் மீதிலோ பற்று வைத்து அலையும் இம் மனத்தை, இறைவனுடைய திருவடியில் இணங்கச் செய்து, பத்திமை செய்து உய்தல் வேண்டும்.

பத்திமையும் பரிசும்இலாப் பசுபாசம் அறுத்தருளி,
பித்தன்இவன் என,என்னை ஆக்குவித்து, பேராமே,
சித்தம்எனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லைக் கண்டேனே!    ---  திருவாசகம்.

பதத்தைப் பற்றுகைக்கு ---

பல்லாயிரங்கோடி பற்றுக்களைக் கொண்ட மனம், அப் பற்றுக்களில் இருந்து மீள வேண்டுமாயின், பற்றற்ற பரமனைப் பற்றி நிற்க வேண்டும்.  பரமனைப் பற்றினால் ஏனைய பற்றுக்கள் தாமே விலகிவிடும்.

விளக்கு ஏற்றினால் இருள் தானே விலகிவிடும்.

பற்றுக்கள் அஞ்ஞானத்தால் வருகின்றன. ஞானமே முருகன் திருவடி. "ஞானக் கழலோனே" என்கின்றார் அடிகளார். ஆதலால், திருவடியாகிய ஞானத்தைப் பற்றினால், அஞ்ஞானத்தால் வரும் பற்றுக்களும், நெருப்பில் பட்ட பஞ்சு போல் தாமே தீய்ந்து போய்விடும்.

கொற்றப் புகழ் செப்பித் திரிவேனோ ---

கொற்றம் - வீரம்.   முருகன் வீரமூர்த்தி.  அப் பெருமானுடைய வீரப் புகழை எப்போதும் சொல்லித் திரிதல் வேண்டும்.

பொர்ப்புப் படக் குத்திட்டு ---

பொருப்பு என்ற சொல் பொர்ப்பு என வந்தது.
  
கயில் கொக்கை ---

கயில் - கழுத்து.  கோபமும் வருத்தமும் நெஞ்சில் கொண்ட சூரபன்மன் முடிவில், முடிவில்லாத முருகன் திருமுன் கடலில் மாமரமாய் நின்றான்.  கொக்கு - மாமரம்.

பசப்பு எத்தி ---

பசப்பு - பசப்பு வார்த்தைகளைக் கூறி வள்ளியை எத்திக் கொண்டு போனார் முருகர்.

"ஏத்தி" என்ற சொல் "எத்தி" என வந்தது என்றும் கொள்ளலாம்.

கருத்துரை

கச்சிநகர் மேவும் கந்தவேளே, உனது வீரப் புகழைச் சொல்லும் பெரும் பேற்றினைத் தந்து அருள்.





No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...