அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கச்சுஇட்டு அணி (காஞ்சிபுரம்)
முருகா!
உன் மீது காதலால் வருந்தும்
அடியாளுக்கு
உனது வெட்சி மலர் மாலையைத்
தந்து அருள்.
தத்தத்
தனதன தத்தத் தனதன
தத்தத் தனதன ...... தனதான
கச்சிட்
டணிமுலை தைச்சிட் டுருவிய
மச்சக் கொடிமதன் ...... மலராலுங்
கச்சைக்
கலைமதி நச்சுக் கடலிடை
அச்சப் படவெழு ...... மதனாலும்
பிச்சுற்
றிவளுள மெய்ச்சுத் தளர்வது
சொச்சத் தரமல ...... இனிதான
பிச்சிப்
புதுமலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடையது ...... தரவேணும்
பச்சைத்
திருவுமை யிச்சித் தருளிய
கச்சிப் பதிதனி ...... லுறைவோனே
பற்றிப்
பணிபவர் குற்றப் பகைகெட
உற்றுப் பொரவல ...... கதிர்வேலா
இச்சித்
தழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய ...... திருமார்பா
எட்டுக்
குலகிரி முட்டப் பொடிபட
வெட்டித் துணிசெய்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கச்சு
இட்ட அணிமுலை தைச்சிட்டு உருவிய
மச்சக் கொடி மதன் ...... மலராலும்,
கச்சைக்
கலைமதி, நச்சுக் கடல்இடை
அச்சப் பட எழும் ...... அதனாலும்,
பிச்சு
உற்று, இவள் உளம் எய்ச்சுத்
தளர்வது
சொச்சத் தரம் அல, ...... இனிதுஆன
பிச்சிப்
புதுமலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடை அது ...... தரவேணும்,
பச்சைத்
திரு உமை இச்சித்து அருளிய
கச்சிப் பதி தனில் ...... உறைவோனே!
பற்றிப்
பணிபவர் குற்றப் பகை கெட
உற்றுப் பொர வல ...... கதிர்வேலா!
இச்சித்த
அழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய ...... திருமார்பா!
எட்டுக்
குலகிரி முட்டப் பொடிபட
வெட்டித் துணிசெய்த ...... பெருமாளே.
பதவுரை
பச்சைத் திரு உமை --- பச்சை நிறமும்
பெருமையும் உடைய பார்வதி அம்மையார்
இச்சித்து அருளிய --- உயிர்களின் மீது கருணை
வைத்து முப்பத்திரண்டு அறங்களையும் செய்தருளிய
கச்சிப் பதி தனில் உறைவோனே --- காஞ்சி
மாநகரத்தில் வாழ்பவரே!
பற்றிப் பணிபவர் --- உம்மையே பற்றித்
தொழுகின்ற அடியார்களின்
குற்றப் பகை கெட --- குற்றங்களும் பகைகளும்
கெட்டு ஒழியுமாறு
உற்றுப் பொர வல கதிர் வேலா --- அணுகி வந்து
போர் புரிய வல்ல ஒளிமிகுந்த வேலாயுதரே!
இச்சித்த --- காதல் வைத்த
அழகிய கொச்சைக் குறமகள் --- அழகிய மழலைமொழி
பேசும் குறமகளாகிய வள்ளிநாயகி
மெச்சித் தழுவிய திருமார்பா --- புகழுரை
கூறித் தழுவிக்கொண்ட அழகிய திருமார்பினரே!
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட --- எட்டுக்
குல மலைகளும் அடியோடு தூளாகும்படி,
வெட்டித் துணி செய்த பெருமாளே --- அவைகளில்
வாழ்ந்த அசுரர்களை வெட்டித் துணிபடுத்திய பெருமையில் மிகுந்தவரே!
கச்சு இட்ட அணி முலை தைச்சிட்டு --- கச்சை
அணிந்த அழகிய மார்பகத்தைத் தைத்துக் ண்டு கொ
உருவிய --- ஊடுருவிச் சென்ற,
மச்சக் கொடி மதன் மலராலும் --- மீன்
கொடியுடைய மன்மதனுடைய மலர்க் கணைகளாலும்,
கச்சைக் கலைமதி --- தழும்புகள் உடைய
கலைகளுடன் கூடிய சந்திரன்,
நச்சுக்கடல் இடை --- ஆலகால நஞ்சு தோன்றிய
கடலினிடையே
அச்சப் பட எழும் அதனாலும் --- பயப்படும்படி
எழுந்துள்ள அந்தச் செய்கையாலும்,
பிச்சு உற்று --- பைத்தியம் பிடித்து,
இவள் உளம் எய்ச்சுத் தளர்வது --- இத் தலைவி
உள்ளம் இளைத்துத் தளர்ச்சி அடைகின்ற தன்மை
சொச்சத் தரம் அல --- கொஞ்சம் அல்ல,
இனிதான பிச்சிப் புது மலர் வைச்சுச் சொருகிய --- இனிமை தரும் புதிய பிச்சி மலர்களை இடையிடையே வைத்துக் கட்டிய
செச்சைத் தொடை அது தரவேணும் --- வெட்சி
மாலையை இவளுக்குத் தந்து அருளுவீராக.
பொழிப்புரை
பச்சை நிறமும் பெருமையும் உடைய பார்வதி
அம்மையார் உயிர்களின் மீது கருணை வைத்து முப்பத்திரண்டு அறங்களையும் செய்தருளிய
காஞ்சி மாநகரத்தில் வாழ்பவரே!
உம்மையே பற்றித் தொழுகின்ற அடியார்களின்
குற்றங்களும் பகைகளும் கெட்டு ஒழியுமாறு அணுகி வந்து போர் புரிய வல்ல ஒளிமிகுந்த
வேலாயுதரே!
காதல் வைத்த அழகிய மழலைமொழி பேசும்
குறமகளாகிய வள்ளிநாயகி புகழுரை கூறித் தழுவிக்கொண்ட அழகிய திருமார்பினரே!
எட்டுக் குல மலைகளும் அடியோடு
தூளாகும்படி, அவைகளில் வாழ்ந்த
அசுரர்களை வெட்டித் துணிபடுத்திய பெருமையில் மிகுந்தவரே!
கச்சை அணிந்த அழகிய மார்பகத்தைத்
தைத்துக் கொண்டு ஊடுருவிச் சென்ற,
மீன் கொடியுடைய மன்மதனுடைய மலர்க் கணைகளாலும், தழும்புகள் உடைய கலைகளுடன் கூடிய
சந்திரன், ஆலகால நஞ்சு தோன்றிய
கடலினிடையே பயப்படும்படி எழுந்துள்ள அந்தச் செய்கையாலும், பைத்தியம் பிடித்து, இத் தலைவி உள்ளம் இளைத்துத் தளர்ச்சி
அடைகின்ற தன்மை கொஞ்சம் அல்ல. இனிமை தரும் புதிய பிச்சி மலர்களை இடையிடையே
வைத்துக் கட்டிய வெட்சி மாலையை இவளுக்குத் தந்து அருளுவீராக.
விரிவுரை
இத்
திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது. ஆன்மாவாகிய தலைவி, முருகவேள் மீது காதல் கொண்டு, அத் தலைவனுடைய
திருமார்பில் அணிந்த மலர் மாலையை வேண்டிக் குறையிரந்து வேண்டுகின்ற அருமை பெருமை
உடைய சிறந்த பாடல்.
கச்சு இட்ட அணிமுலை தைச்சிட்டு உருவிய மச்சக் கொடி மதன்
மலராலும் ---
மன்மதனுக்கு
மீன் கொடி. அவன் மலர்க் கணைகளை ஏவி
காமுகர்க்கு வேட்கைத் தீயை அதிகமாக மூட்டுவான்.
அவன் விடுகின்ற கணை தலைவனை விரும்பிய தலைவியின் தனங்களில் பட்டு ஊடுருவிப் புண்ணாக்கும்.
கச்சைக்
கலை மதி
---
தக்கன்
இட்ட சாபத்தால் சந்திரன் தேய்ந்து வடுப்படுவான்.
அந்தத் தழும்பைய உடைய சந்திரன்.
நச்சுக்
கடலிடை அச்சப்பட எழும் ---
ஆலகால
விடம் தோன்றிய கடலில் அவ்விடம் போய் கொடுமையுடன் தோன்றி, தலைவிக்குப் பெரும் துயரை
உண்டாக்குகின்றான். எனைச் சுடுதியோ கடல்
தோன்றிய திங்களே என்று சீதை வருந்துகின்றாள்.
இரவிஎன
வடவைஎன ஆலாலவிடம் அதுஎன
உருவுகொடு
ககனமிசை மீதுஏகி மதியும் வர.... --- திருப்புகழ்.
பிச்சு
உற்று இவள் உளம் எய்ச்சுத் தளர்வது ---
பிச்சு
உற்று - பைத்தியம் கொண்டு. முருகன் மீது
அன்பினால் பித்துக் கொள்வது. அப்
பைத்தியத்தால் உள்ளம் மிகவும் இளைத்துத் தளர்கின்றாள். எய்த்தல் - இளைத்தல்.
சொச்சத்
தரம் அல ---
சொச்சம்
- கொஞ்சம். இப்படித் தளர்கின்றது
கொஞ்சமன்று. பெரிதும் தளர்ந்து விட்டாள்..
இனிதான ---
முருகனுடைய
மலர் மாலை ஞானமயமானது. மிகவும்
இனிமையானது.
பிச்சிப்
புதுமலர் வைச்சுச் சொருகிய ---
மிகுந்த
வாசனை உடைய மலர் பிச்சிப் பூ. அம் மலர்களை இடையிடையே வைத்துத் தொடுத்த மலர் மாலை.
செச்சைத்
தொடை அது தரவேணும் ---
செச்சைத்
தொடை --- வெட்சி மலர் மாலை.
கணவனை
விரும்பும் நங்கைக்கு காதல் தணிக்கும் அமுத சஞ்சீவி போல் திகழ்வது கணவன் அணிந்த
மலர்மாலை.
குளிர்மாலையின்
கண் அணிமாலை தந்து
குறைதீர
வந்து குறுகாயோ... --- (விறல்மாரன்) திருப்புகழ்.
நீலங்கொள்
மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த
வாழ்வைக் கண்டு ...... அதனாலே
மால்கொண்ட
பேதைக்கு உன் ...... மணநாறும்
மார்தங்கு
தாரைத் தந்து ...... அருள்வாயே.. --- திருப்புகழ்.
பச்சைத்
திரு உமை இச்சித்து அருளிய கச்சி ---
மரகத
நிறம் உடைய மலைவளர் காதலி காஞ்சிபுரத்தில் முப்பத்திரண்டு அறங்களையும் ஆன்மாக்கள்
மீது உள்ள பரம கருணையினால் செய்து அருளினாள்.
பற்றிப்
பணிபவர்
---
"பற்றுக
பற்று அற்றான் பற்றினை" என்று திருவள்ளுவர் கூறியாங்கு, ஏனைய பற்றுக்களை அறவே அகற்றி, பற்று அற்ற பரமனையே பற்றிப் பணிவார்கள்
அடியார்கள்.
மற்றுப்
பற்று எனக்கு இன்றி நின்திருப்
பாதமே
மனம் பாவித்தேன்... --- சுந்தரர்.
குற்றப்
பகை கெட ---
இப்படிப்
பரமனைப் பற்றிப் பணிகின்ற அடியார்களின் குற்றங்களும், பகைகளும் கெடுமாரு முருகன் அருள்
புரிகின்றான்.
குற்றமுடைய
பகை எனினும் அமையும். புறப்பகை அகப்பகை
என்ற இரு பகைகளும் கெடுமாறு முருகனுடைய வேல் போர் புரியும்.
துதிக்கும்அடி
யவர்க்குஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்குஓர்துணை
ஆகும்
சொலற்குஅரிய
திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்துஎறிய உருக்கிஎழும்
அறத்தைநிலை
காணும் ---
வேல்வகுப்பு.
இச்சித்து
அழகிய கொச்சைக் குறமகள் ---
முருகனுடைய
திருப்புயங்களைத் தழுவும் பொருட்டுப் பலகாலம் தவம் செய்தவர் வள்ளிப் பிராட்டியார்.
இச்சித்து
மாதவம் புரிந்தவர். மழலை மொழியால்
பேசுபவர்.
மெச்சித்
தழுவிய திருமார்பா ---
புகழ்ந்து
தழுவிய திருமார்பினரே. இத் தலைவியும்
வள்ளி போன்றவல். ஆதலால், காதலால் வருந்தும் இவளுக்கு உன்
மலர்மாலையைத் தந்து அருள வேண்டும் என்பது குறிப்பெச்சம்.
கருத்துரை
காஞ்சி
மாநகர் மேவிய கந்தக் கடவுளே, இத் தலைவிக்கு உன்
வெட்சி மலர் மாலையைத் தந்து அருள்.
No comments:
Post a Comment