காஞ்சீபுரம் - 0466. எனக்குச் சற்று





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எனக்குச்சற்று (காஞ்சிபுரம்)

முருகா!
திருவடியை அருள்


தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத்
      தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான


எனக்குச்சற் றுனக்குச்சற்
     றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்
         பொருட் பொற்றட் டிடிக்கைக்குக் ...... குடில்மாயம்

எனக்கட்டைக் கிடைப்பட்டிட்
     டனற்சுட்டிட் டடக்கைக்குப்
         பிறக்கைக்குத் தலத்திற்புக் ...... கிடியாமுன்

தினைக்குட்சித் திரக்கொச்சைக்
     குறத்தத்தைத் தனத்தைப்பொற்
         பெறச்செச்சைப் புயத்தொப்பித் ...... தணிவோனே

செருக்கிச்சற் றுறுக்கிச்சொற்
     பிரட்டத்துட் டரைத்தப்பித்
         திரட்டப்பிக் கழற்செப்பத் ...... திறல்தாராய்

பனைக்கைக்கொக் கனைத்தட்டுப்
     படக்குத்திப் படச்சற்பப்
         பணத்துட்கக் கடற்றுட்கப் ...... பொரும்வேலா

பரப்பற்றுச் சுருக்கற்றுப்
     பதைப்பற்றுத் திகைப்பற்றுப்
         பலிப்பப்பத் தருக்கொப்பித் ...... தருள்வாழ்வே

கனிக்குத்திக் கனைத்துச்சுற்
     றிடப்பச்சைக் கனப்பட்சிக்
         கிடைப்புக்குக் களிப்புக்குத் ...... திரிவோனே

கலிக்கொப்பிற் சலிப்பற்றுக்
     கதிக்கொத்திட் டெழிற்சத்திக்
         கடற்கச்சிப் பதிச்செக்கப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


எனக்குச் சற்று, னக்குச்சற்று
     எனக் கத்து அத்தவர்க்கு, ச்சைப்
         பொருள் பொன் தட்டு இடு, கைக்குக் ......குடில், மாயம்

எனக் கட்டைக்கு இடைப்பட்டு இட்டு,
     னல் சுட்டிட்டு அடக்கைக்குப்
         பிறக்கைக்கு, தலத்திற்புக்கு ...... இடியாமுன்,

தினைக்குள் சித்திரக் கொச்சைக்
     குறத் தத்தைத் தனத்தை, பொன்
         பெறச் செச்சைப் புயத்து ஒப்பித்து ...... அணிவோனே!

செருக்கிச் சற்று உறுக்கிச் சொல்
     பிரட்ட, துட்டரை தப்பி,
         திரள் தப்பி, கழல் செப்பத் ...... திறல்தாராய்.

பனைக் கைக் கொக்கனைத் தட்டுப்
     படக் குத்தி பட, சற்பப்
         பணத்து உட்கக் கடல்அது உட்கப் ...... பொரும்வேலா!

பரப்பு அற்று, சுருக்கு அற்று,
     பதைப்பு அற்று, திகைப்பு அற்று,
         பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து ...... அருள்வாழ்வே!

கனிக்கு திக்கு அனைத்துச் சுற்-
     றிட, பச்சைக் கனப்பட்சிக்கு
         இடைப் புக்குக் களிப்புக்குத் ...... திரிவோனே!

கலிக்கு ஒப்பில் சலிப்பு அற்று,
     கதிக்கு ஒத்திட்டு, எழிற்சத்திக்
         கடல் கச்சிப் பதிச் சொக்கப் ...... பெருமாளே.


பதவுரை

         பனைக் கைக் கொக்கனை --- பனைமரம் போன்ற தும்பிக்கை உடையவனும், கொக்குப் போன்ற குணத்தை உடையவனுமான தாரகாசுரனை,

        தட்டுப் படக் குத்திப் பட --- தடைபட்டு அழியுமாறு குத்தி அவன் அழிவுறவும்,

         சற்பப் பணத்து உட்க ---  ஆதிசேஷனுடைய படங்கள் அஞ்சவும்,

        கடல் அது உட்க --- கடல் அஞ்சிடவும்  

        பொரும் வேலா --- போர் செய்த வேலாயுதரே!

         பரப்பு அற்று --- பேராசை ஒழிய,

        சுருக்கு அற்று --- உலோபத்தனம் ஒழிய,

        பதைப்பு அற்று --- நடுக்கம் ஒழிய,

        திகைப்பு அற்று --- மயக்கம் ஒழிய,

         பலிப்ப --- இத்தகைய நலன்கள் உண்டாக

        பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே --- அடியார்களுக்கு ஏற்படுத்தித் தந்து அருள் புரியும் செல்வமே!

         கனிக்குத் திக்கு அனைத்துச் சுற்றிட --- சிவபெருமானிடமிருந்து கனி பெறும் பொருட்டு திசைகள் முழுவதையும் வலம் வர,

         பச்சைக் கனப் பட்சிக்கு இடைப்புக்குக் களிப்புக்குத் திரிவோனே --- பச்சை நிறமுள்ள பெருமைவாய்ந்த பறவையாகிய மயிலின் மீது ஏறி அமர்ந்து மகிழ்ச்சியுடன் திரிந்தவரே!

         கலிக்கு ஒப்பில் --- இந்தக் கலியுகத்திலும் நிகரில்லாத, 

        சலிப்பற்றுக் கதிக்கு ஒத்திட்டு --- கொஞ்சமும் சலிக்காது வீட்டு இன்பத்தைத் தர இசைந்தருளி உள்ளவரே!

         எழிற் சத்தி --- அழகிய சக்தியாகிய காமாட்சிதேவி எழுந்தருளியுள்ள,

       கடல் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே --- கடல்போல் எப்போதும் ஒலிக்கும் காஞ்சி மாநகரில் வாழும் அழகிய பெருமையில் சிறந்தவரே!

         எனக்குச் சற்று --- எனக்குக் கொஞ்சம்,

        உனக்குச் சற்று என --- உனக்குக் கொஞ்சம் என்று

       கத்து அத்தவர்க்கு --- கூச்சல் இடுகின்ற பொருள் பெண்டிருக்கு

         இச்சைப் பொருள் --- விருப்பம் உள்ள பொருளை,

        பொன் தட்டு இடு இக்கைக்குக் குடில் --- தங்கத் தட்டில் வைத்துத் தருகின்ற ஆபத்தைக் கொண்ட சிறுமை வாய்ந்த இந்த உடம்பு,

         மாயம் என --- மாயமாய் மறைந்தது என்றும்,

     கட்டைக்கு இடைப்பட்டிட்டு --- விறகுக் கட்டைகளுக்கு இடையிலே கிடத்தப்பட்டு

     அனல் சுட்டிட்டு அடக்கைக்கு ---நெருப்பால் சுடப்பட்டு மறைந்து போவதற்கும்,

         பிறக்கைக்குத் தலத்தில் புக்கு இடியாமுன் --- மீண்டும் உயிர் பிறப்பதற்கும், இந்தப் பூமியில் தோன்றி அழிந்து போவதற்கும் முன்னரே,

         தினைக்குட் சித்திரக் கொச்சைக் குறத் தத்தைத் தனத்தை --- தினைப்புனத்தில், அழகிய குழந்தை போல் திருந்தாத மழலை மொழிகளைப் பேசும் குறமகளாம் வள்ளி தேவியின் கொங்கையை

         பொன் பெறச் செச்சைப் புயத்து ஒப்பித்து அணிவோனே --- அழகு பெற வெட்சி மாலையணிந்த திருப்புயத்தில் ஏற்று அணிகின்றவரே

         செருக்கி --- அகந்தை கொண்டும்,

       சற்று உறுக்கிச் சொல் --- சற்றுக் கோபித்தும் பேசுகின்றவர்களும்,

       பிரட்ட --- நன்னெறியினின்றும் தவறியவர்களும் ஆகிய

       துட்டரைத் தப்பித் திரள் தப்பி ---  துஷ்டர்களிடமிருந்து தப்பி, அந்தக் கூட்டத்தினின்று விலகி,

          கழல் செப்பத் திறல் தாராய் --- உமது திருவடியைப் புகழும் ஆற்றலைத் தந்தருளுவீராக.

பொழிப்புரை

         பனைமரம் போன்ற தும்பிக்கை உடையவனும், கொக்குப் போன்ற குணத்தை உடையவனுமான தாரகாசுரனை, தடைபட்டு அழியுமாறு குத்தி அவன் அழிவுறவும், ஆதிசேஷனுடைய படங்கள் அஞ்சவும், கடல் அஞ்சிடவும் போர் செய்த வேலாயுதரே!

         பேராசை ஒழிய, உலோபத்தனம் ஒழிய, நடுக்கம் ஒழிய, மயக்கம் ஒழிய, இத்தகைய நலன்கள் உண்டாக அடியார்களுக்கு ஏற்படுத்தித் தந்து அருள் புரியும் செல்வமே!

         சிவபெருமானிடமிருந்து கனி பெறும் பொருட்டு திசைகள் முழுவதையும் வலம் வர, பச்சை நிறமுள்ள பெருமை வாய்ந்த பறவையாகிய மயிலின் மீது ஏறி அமர்ந்து மகிழ்ச்சியுடன் திரிந்தவரே!

         இந்தக் கலியுகத்திலும் நிகரில்லாத,  கொஞ்சமும் சலிக்காது வீட்டு இன்பத்தைத் தர இசைந்தருளி உள்ளவரே!

         அழகிய சக்தியாகிய காமாட்சிதேவி எழுந்தருளியுள்ள, கடல்போல் எப்போதும் ஒலிக்கும் காஞ்சி மாநகரில் வாழும் அழகிய பெருமையில் சிறந்தவரே!

         எனக்குக் கொஞ்சம், உனக்குக் கொஞ்சம் என்று கூச்சல் இடுகின்ற பொருள் பெண்டிருக்கு விருப்பம் உள்ள பொருளைத் தங்கத் தட்டில் வைத்துத் தருகின்ற ஆபத்தைக் கொண்ட சிறுமை வாய்ந்த இந்த உடம்பு, மாயமாய் மறைந்து, விறகுக் கட்டைகளுக்கு இடையிலே கிடத்தப்பட்டு நெருப்பால் சுடப்பட்டு மறைந்து போவதற்கும், மீண்டும் உயிர் பிறப்பதற்கும், இந்தப் பூமியில் தோன்றி அழிந்து போவதற்கும் முன்னரே,

         தினைப்புனத்தில், அழகிய குழந்தை போல் திருந்தாத மழலைகொழிகளைப் பேசும் குறமகளாம் வள்ளி தேவியில் கொங்கையை அழகு பெற வெட்சி மாலையணிந்த திருப்புயத்தில் ஏற்று அணிகின்றவரே!

         அகந்தை கொண்டும், சற்றுக் கோபித்தும் பேசுகின்றவர்களும், நன்னெறியினின்றும் தவறியவர்களும் ஆகிய  துஷ்டர்களிடமிருந்து தப்பி, அந்தக் கூட்டத்தினின்று விலகி,  உமது திருவடியைப் புகழும் ஆற்றலைத் தந்தருளுவீராக.


விரிவுரை

எனக்குச்சற்று உனக்குச்சற்றெனக் கத்து அத்தவர் ---

எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தத்தவர்.

அத்தம் - பொருள்.  அத்தத்தவர் - பொருள் பெண்டிர்.  தம்பால் வருகின்ற தனவந்தர்களிடம் எனக்குச் சிறிது பொருள் உனக்குச் சிறிது பொருள் என்று சத்தம் போட்டுப் பொருள் பறிப்பர்.

இச்சைப் பொருட் பொற்றட் டிடிக்கைக் குக்குடில் ---

இச்சை பொருள் பொன் தட்டில் இரு இக்கை கு குடில்.  இச்சைபப்பட்ட பொருளைத் தங்கத் தட்டில் வைத்துத் தருகின்ற ஆபத்தை உடைய சிறுமையான உடல்.

இச்சை - ஆபத்து.  கு - சிறுமை.   குடில் - உடம்பு.

மாயம் என ---

இவ்வுடம்பு மாயமாய் மறைந்து போகும் இயல்புடையது.

கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்கு ---

கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு இடக்கைக்கு.  பாலும் தேனும் பருப்பும் சோறும் வேளை தவறாமல் தந்து வளர்த்த இந்த உடம்பு விறகுக் கட்டையில் வைத்துச் சுடப்பட்டு, சாம்பல் ஆகி, தண்ணீரில் கரைந்து மறைந்து ஒழிக்கின்றது.

பிறக்கைக்குத் தலத்தில் புக்கு இடியாமுன் ---

பிறப்பதும் இறப்பதும் ஆகவே உயிர்கள் உழல்கின்றன.  இப் பிறப்பு என்னும் சுழலில் இருந்து உயிர் தப்பித்து இறைவன் பாதமலரைச் சார்தல் வேண்டும்.

சாகைக்கு, மீண்டு பிறக்கைக்கும் அன்றி, தளர்ந்தவர்க்கு ஒன்று
ஈகைக்கு எனை விதித்தாய் இலையே, இலங் காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டுஎன்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலைவளைத்தோன் மருகா, மயில் வாகனனே. 

உதித்துஆங்கு உழல்வதும், சாவதும் தீர்த்து,எனை உன்னில்  ஒன்றாய்
விதித்து, ஆண்டு, அருள்தரும் காலம்உண்டோ? வெற்பு நட்டு, உரக
பதித் தாம்பு வாங்கி நின்று, அம்பரம் பம்பரம் பட்டுஉழல
மதித்தான் திருமருகா, மயில் ஏறிய மாணிக்கமே.           ---  கந்தர் அலங்காரம்.

கொச்சைக் குறத் தத்தை ---

வள்ளிநாயகி கிளிபோல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுபவள்.
கொச்சை - திருந்தாத சொற்கள்.   தத்தை - கிளி.

செருக்கிச் சற்று உறுக்கி சொற்பிரட்டத் துட்டரைத் தப்பி ---

செருக்கு - அகந்தை.  உறுக்குதல் - கோபித்தல்.

துட்டர்கள் ஆணவம் கொண்டும், சீற்றம் கொண்டும் அறநெறியினின்று விலகி இடர்ப்படுவார்கள்.  இத்தகைய தீயருடன் சேராது விலகி உய்தல் வேண்டும்.

கொம்பு உளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம்;
வெம்பு கரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே; -- வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி.                  --- மூதுரை.


பனைக்கைக் கொக்கன் ---

தாரகன் யானை முகம் படைத்தவன்.  அவனுடைய துதிக்கை பனைமரம் போல் பணைத்துத் திரண்டுளது.

கொக்கன் - கொக்கு போன்றவன். இது ஒரு இழிவுச் சொல். கொக்கு சமயம் பார்த்து கருமத்தை முடிக்கும் தன்மை உடையது.

அடக்கம் உடையார் அறிவிலர் என்றுஎண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா -– மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும்அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.                   ---  மூதுரை.

தட்டுப்படக் குத்திப்பட ---

தாரகன் என்ற மாய அரக்கன் தடைபட்டு அழியுமாறு வேலினால் முருகவேள் குத்தி அழித்து அருளினார்.

சற்பப் பணத்துட்கக் கடற்றுட்க ---

துட்குதல் - அஞ்சுதல்.  கடல் துட்க – கடல் அஞ்சுமாறு முருகவேள் வேலை ஏவி அருளினார்.

சற்பப்பணம் – ஆதிசேடனுடைய ஆயிரம் பணாமகுடங்களும் அஞ்சும்படி வேலை ஏவி அருளினார்.

பரப்பு அற்று ---

பேராசையில் அங்கும் இங்கும் பரந்து திரிவது.  இத் தன்மை ஒழிதல் வேண்டும்.

பரப்பு அற்றாருக்கு உரியோனே ---       (கருப்பற்)  திருப்புகழ்.


சுருக்கு அற்று ---

சுருக்குதல் - உலோப குணத்தால் செய்ய வேண்டியதைச் செய்யாமல் சுருக்குதல்.

ஒரு மனிதனிடம் உள்ள எல்லா நல்ல குணங்களையும் உலோபகுணம் என்ற ஒன்று மறைத்து விடும்.  மார்பிலேயும் கழுத்திலேயும் நிரம்ப நவரத்தின அணிகள் பூண்ட ஒருவன் சட்டையிட்டால், அத்தனை அணிகலன்களும் மறைந்துவிடுவது போல, உலோப குணம், பிற எல்லா நற்குணங்களையும் கெடுத்து விடும்.

தாடகை என்ற அரக்கி வளம் பொருந்திய மருதவனத்தை அழித்து விட்டாள்.  அதை விளக்கிச் சொல்ல வந்த விசுவாமித்திரர், இந்த அரிய கருத்தைக் கூறுகின்றார்.  அந்த அழகிய செந்தமிழ்ப் பாடல் இதோ.....

உளப்பரும் புணிப்புறா உலோபம் ஒன்றுமே
அளப்பரும் குணங்களை அழிக்கு மாறுபோல்
கிளப்பரும் கொடுமைய அரக்கி கேடிலா
வளப்பரு மருதவைப் பழித்து மாற்றினாள்.---  கம்பராமாயணம்.

பதைப்பு அற்று ---

ஒன்றைக் கண்ட உடனே, கோழைத்தனத்தால் உள்ளமும் உடம்பும் நடுங்குவது.  இந்த நடுக்கும் ஒழிதல் வேண்டும்.

திகைப்பு அற்று ---

திகைத்தல் - மயங்குதல்.  அறிவிலே மயக்கம் வந்து திகைத்தல் கூடாது.  இது வேறுக்கத்தக்க குணம்.
பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே ---

அன்பு செய்கின் அடியார்கட்கு  தீக்குணங்களை விலக்கி, நற்குணங்களை நல்கி அருள் புரிகின்ற தெய்வம் முருகவேள்.

கனிக்குத் திக்கு அனைத்துச் சுற்றிட ---

மாதுளங்கனி காரணமாக எம்பிரான் முருகன் அகில லோகமும் நொடிப் பொழுதில் மயிலின் மீது ஏறிச் சுற்றி அருளினார்.

ஆகமம் விளைத்த அகில லோகமும் நொடிப்புஅளவில்
ஆசையொடு சுற்றும்அதி வேகக் காரனும்;        ---  திருவேளைக்காரன் வகுப்பு.

கலிக்கொப்பில் சலிப்பற்றுக் கதிக்கொத்திட்டு ---

முருகப் பெருமான் இக் கலியுகத்திலும் சலிக்காமல் ஒப்பற்ற வீடுபேற்றை அடியார்க்கு அருள் புரிகின்றார்.

எழில் சத்திக் கடல் கச்சி ---

அழகிய சத்தியாகிய கௌரி எழுந்தருளி உள்ள தலம் கச்சியம்பதி.  அது கடல்போல சதா ஒலியுடன் கூடியது.

கருத்துரை

கச்சியம்பதி மேவும் கந்தவேளே, உன் பதமலரைப் பாடும் திறத்தைத் தந்து அருள்.

No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...