அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இறைச்சிப் பற்று
(காஞ்சிபுரம்)
முருகா!
உலகப் பற்றில் ஆழாமல்,
உன் திருவடிப் பற்றில்
ஆழ்ந்து இருக்க அருள்.
தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
இறைச்சிப்பற்
றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட்
டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் ......
சுவர்கோலி
எடுத்துச்செப்
பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக்
கெனக்குச்சற் றுனக்குச்சற் ......
றெனுமாசைச்
சிறைக்கொத்திப்
பிறப்பிற்பட் டுறக்கச்சொப் பனத்துற்றுத்
திகைக்கப்பட் டவத்தைப்பட் ...... டுழலாதுன்
திருப்பத்மத்
திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற்
றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் ......
திரிவேனோ
பிறைச்செக்கர்ப்
புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப்
பிறக்குற்றத் திருப்பக்கச் ...... சிவநாதர்
பெருக்கப்புத்
தடக்கைக்கற் பகத்தொப்பைக் கணத்துக்குப்
பிரசித்தக் கொடிக்குக்டக் ...... கொடியோனே
பறைக்கொட்டிக்
களைச்சுற்றக் குறட்செக்கட் கணத்திற்குப்
பலிக்குப்பச் சுடற்குத்திப் ......
பகிர்வேலா
பணப்பத்திக்
கணத்துத்திப் படுக்கைக்கச் சபத்திச்சைப்
படுக்கச்சிப் பதிச்சொக்கப் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
இறைச்சிப்
பற்று, இரத்தத்து இட்டு இசைக்கு
ஒக்கப் பரப்பப் பட்டு
எலுப்புக் கட்டளைச் சுற்றிச் ......
சுவர் கோலி,
எடுத்துச்
செப்பு எனக் கட்டிப் புதுக்குப் புத்து அகத்தில் புக்கு
எனக்குச் சற்று, உனக்குச் சற்று ...... எனும் ஆசைச்
சிறைக்கு
ஒத்து இப்பிறப்பில் பட்டு, உறக்கச் சொப்பனத்து உற்று,
திகைக்கப்பட்டு அவத்தைப்பட்டு ...... உழலாது, உன்
திருப்
பத்மத் திறத்தைப் பற்றுகைக்குச் சித்திரத்தை, சொல்
திதம் கொற்றப் புகழ்ச் செப்பித் ......
திரிவேனோ?
பிறைச்
செக்கர்ப் புரைக்கு ஒத்துச் சடைப் பச்சைக் கொடிக்கு இச்சைப்
பிறக்கு உற்றத் திருப்பக்கச் ......
சிவநாதர்
பெருக்கு
அப்புத் தடக்கைக் கற்பகத் தொப்பைக் கணத்துக்குப்
பிரசித்த! கொடிக் குக்குடக் ...... கொடியோனே!
பறைக் கொட்டிக் களைச்சு உற்றக் குறள் செக்கண் கணத்திற்குப்
பலிக்குப் பச்சு உடல் குத்திப் ...... பகிர்
வேலா!
பணப்
பத்திக் கணத் துத்திப் படுக்கைக் கச்சபத்து இச்சைப்
படுக் கச்சிப் பதிச் சொக்கப் ......
பெருமாளே.
பதவுரை
பிறைச் செக்கர் புரைக்கு ஒத்து --- பெருமையும்
செந்நிறமும் கொண்ட பிறைக்குத் தலையில் இடம் தந்தது போல,
சடைப் பச்சைக் கொடிக்கு --- பின்னிய
கூந்தலைக் கொண்ட, பச்சை நிறக் கொடி போன்ற பார்வதியம்மைக்கு
இச்சைப் பிறக்கு உற்றத் திருப் பக்கச்
சிவநாதர் --- விருப்பம் பிறப்பதற்குத் தக்க அழகிய இடப் பாகத்தைத் தந்துள்ள
சிவபெருமானுடைய
பெருக்கு அப்பு --- பெருகு நீராம்
கங்கையையும்,
அத் தடக் கைக் கற்பக --- தடக்கை போன்ற நீண்ட
துதிக்கையையும் கொண்ட விநாயகரைப் போல
தொப்பைக் கணத்துக்குப் பிரச்சித்த --- பருத்த
தொப்பையை உடைய பூத கணங்களுக்கும் நன்கு தெரிந்தவரே!
கொடிக் குக்குடக் கொடியோனே ---
கொடியாகக் கோழிக் கொடியைக் கொண்டவரே!
பறைக் கொட்டி --- பறை வாத்தியங்களை
முழக்கி
களைச்சு உற்ற --- களைப்பு அடைந்துள்ள,
குறள் செக்கண் கணத்திற்கு --- சிவந்த கண்களை
உடைய, குறிய பூதகணங்கட்கு
பலிக்கு --- வேண்டிய உணவுக்கு,
பச்சுடல் குத்தி --- அசுரர்களின் பசிய உடலைக்
குத்தி
பகிர் வேலா --- பகிர்ந்தளித்த வேலவரே!
பணம் பத்தி --- படங்களின் வரிசையையும்,
கணத் துத்தி --- நெருங்கிய புள்ளிகளையும்
உடைய ஆதி சேடனை
படுக்கை --- படுக்கையாகக் கொண்ட,
கச்சபத்து இச்சைப் படு --- ஆமை உருவத்தை
எடுத்த, திருமால்
விரும்புகின்ற
கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே ---
காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமையில் சிறந்தவரே!
இறைச்சிப் பற்று இரத்தத்து இட்டு இசைக்கு
ஒக்கப் பரப்பப் பட்டு --- தசையுடன்,
அதைப்
பற்றியுள்ள உதிரத்தைச் சேர்த்து,
அந்த
உதிரம் பொருந்துதற்குத் தக்கவாறு உடலிலே பரப்ப வைத்து,
எலுப்புக் கட்டளைச் சுற்றிச் சுவர் கோலி --- எலும்புச் சட்டத்தைச் சுற்றிலும் தோல் என்ற சுவரை எழுப்பி,
எடுத்துச் செப்பு எனக் கட்டி --- ஒரு
பாத்திரமாக உருவமைத்து,
புதுக்குப் புத்து அகத்தில் புக்கு --- அலங்கரித்த
புதிய வீட்டில் புகுந்து,
எனக்குச் சற்று உனக்குச் சற்று எனும்
ஆசை --- எனக்குக் கொஞ்சம் வேண்டும், உனக்கும்
கொஞ்சம் வேண்டும் என்கின்ற ஆசை எனப்படும்
சிறைக்கு ஒத்து இப் பிறப்பில் பட்டு --- சிறைச்
சாலையில் இருக்கச் சம்மதம் கொண்டு,
இந்தப்
பிறப்புக்களை அடைந்து,
உறக்கம் சொப்பனத்து உற்று --- தூக்கம், கனவு என்னும் அவத்தைகளை அடைந்து,
திகைக்க பட்டு அவத்தைப் பட்டு உழலாது --- மயக்கம்
கொண்டும், வேதனை அனுபவித்தும்
திரியாமல்,
உன் திருப் பத்மத் திறத்தைப்
பற்றுகைக்கு --- உமது தாமரைத் திருவடிகளின் சார்பைச் சார்ந்து உய்யும் பொருட்டு,
சித்திரத்தைச் சொல் திதம் கொற்றப் புகழ்ச்
செப்பித் திரிவேனோ ---அழகை வெளிப்படுத்தும் சொற்களால் உமது நிலைத்த வீரத்
திருப்புகழை அடியேன் சொல்லித் திரிய மாட்டேனோ?
பொழிப்புரை
பெருமையும் செந்நிறமும் கொண்ட
பிறைக்குத் தலையில் இடம் தந்தது போல, பின்னிய
கூந்தலைக் கொண்ட, பச்சை நிறக் கொடி போன்ற பார்வதியம்மைக்கு விருப்பம் பிறப்பதற்குத் தக்க அழகிய இடப் பாகத்தைத்
தந்துள்ள சிவபெருமானுடைய பெருகு நீராம்
கங்கையையும், தடக்கை போன்ற நீண்ட
துதிக்கையையும் கொண்ட விநாயகரைப் போல பருத்த தொப்பையை உடைய பூத கணங்களுக்கும்
நன்கு தெரிந்தவரே!
கொடியாகக் கோழிக் கொடியைக் கொண்டவரே!
பறை வாத்தியங்களை முழக்கிக் களைப்பு
அடைந்துள்ள, சிவந்த கண்களை உடைய, குறிய பூதகணங்கட்கு வேண்டிய உணவுக்கு, அசுரர்களின் பசிய உடலைக் குத்திப்
பகிர்ந்தளித்த வேலவரே!
படங்களின் வரிசையையும், நெருங்கிய புள்ளிகளையும் உடைய ஆதி சேடனை
படுக்கையாகக் கொண்ட, ஆமை உருவத்தை எடுத்த, திருமால் விரும்புகின்ற காஞ்சிபுரத்தில்
வீற்றிருக்கும் அழகிய பெருமையில் சிறந்தவரே!
தசையுடன், அதைப் பற்றியுள்ள உதிரத்தைச் சேர்த்து, அந்த உதிரம் பொருந்துதற்குத் தக்கவாறு
உடலிலே பரப்ப வைத்து, எலும்புச்
சட்டத்தைச் சுற்றிலும் தோல் என்ற சுவரை எழுப்பி, ஒரு
பாத்திரமாக உருவமைத்து, அலங்கரித்த புதிய
வீட்டில் புகுந்து, எனக்குக் கொஞ்சம்
வேண்டும், உனக்கும் கொஞ்சம்
வேண்டும் என்கின்ற ஆசை எனப்படும் சிறைச் சாலையில் இருக்கச் சம்மதம் கொண்டு, இந்தப் பிறப்புக்களை அடைந்து, தூக்கம், கனவு என்னும் அவத்தைகளை அடைந்து, மயக்கம் கொண்டும், வேதனை அனுபவித்தும் திரியாமல், உமது தாமரைத் திருவடிகளின் சார்பைச்
சார்ந்து உய்யும் பொருட்டு, அழகை வெளிப்படுத்தும் சொற்களால் உமது
நிலைத்த வீரத் திருப்புகழை அடியேன் சொல்லித் திரிய மாட்டேனோ?
விரிவுரை
இறைச்சிப்
பற்றிரத்த …........ சுவர்கோலி ---
இந்த
உடம்பு ஒரு விசித்திரமான படைப்பு. இறைவனால் கட்டப்பட்ட வீடு போன்றது.
தோலால்
சுவர்வைத்து, நால்ஆறு காலில்
சுமத்தி, இரு
காலால்
எழுப்பி, வளைமுதுகு ஓட்டி, கை நாற்றி, நரம்
பால்
ஆர்க்கை இட்டு, தசைகொண்டு மேய்ந்த
அகம்பிரிந்தால்
வேலால்
கிரிதொளைத்தோன் இருதாள், அன்றி வேறுஇல்லையே.
--- கந்தர் அலங்காரம்.
புதுக்குப்
புத்து அகத்திற் புக்கும் ---
இந்த
வீடாகிய உடம்பை விட்டு, இன்னும் ஒரு புதிய
வீடாகிய உடம்பில் புகுந்து இந்த உயிர் உழலுகின்றது.
ஆசைச்
சிறைக்கொத்து ---
ஆசையாகிய
சங்கிலியால் பிணிப்புண்டு உயிர் இந்த உடம்பாகிய சிறையில் கிடந்து துன்புறுகின்றது.
ஏழையின்
இரட்டைவினை ஆயது ஒரு உடல்சிறை
இராமல்
விடுவித்து அருள் நியாயக் காரனும்.. --- திருவேளைக்காரன் வகுப்பு.
உறக்கச்
சொப்பனத்து உற்று ---
தூக்கம்
கனவு முதலிய அவத்தை பட்டு ஆன்மா உழல்கின்றது.
திதக்
கொற்றப் புகழ்ச் செப்பித் திரிவேனோ ---
திதம்
- நிலைபேறு. முருகவேளின் புகழ் என்றும்
நிலைத்தது. வீரம் உடையது. அப் பெருமானுடைய திருவடிப் புகழைச் சதா பாடித்
திரியவேண்டும்.
சிவநாதர்
பெருக்கப்புத் தடக்கைக் கற்பகத் தொப்பை ---
சிவபெருமானுடைய
சிரத்தில் கங்கை இருப்பது போல்,
விநாயகப்
பெருமானுடைய சிரத்திலும் கங்கை உண்டு.
கங்கையும்
பனிவெண் டிங்களும் விரைத்த
கடுக்கையந் தொங்கலும் அரவும்
தங்குபொற்
சடையும் முக்கணுந் தாதை
தாணுஎன்று உணர்த்தமென் மலர்க்கை
அங்குச
பாசம் அணிந்துவெற்பு உயிர்த்த
ஆரணங்கு அன்னைஎன்று உணர்த்தி
வெங்கலி
முழுதும் துமித்தருள் பட்டி
விநாயகன் சேவடி பணிவாம். ---
பேரூர்ப் புராணம்.
தடக்கை ---
விநாயகருடைய
துதிக்கை நீண்டு அருள் புரிவது.
"தடக்கை
ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக்
கருத்துள் இருத்துவாம்". ---
பெரியபுராணம்.
கற்பகத்
தொப்பை ---
விநாயகர்
கற்பகம் போல் கருதியதை வழங்கும் கருணை உடையவர்.
கணத்துக்குப்
பிரசித்த ---
விநாயக
மூர்த்தியின் வயிறுபோல் பருத்த வயிற்றை உடைய பூதகணங்களுக்கு முருகவேள் முன் தோன்றி
அருள் புரிகின்றார்.
முருகப்
பெருமான் சூரனுடன் போருக்குப் புறப்பட்ட போது, அண்டாபரணன் முதலிய பூதகணப்
பெருந்தலைவருடன் கூடிய ஈராயிரம் பூதவெள்ளம் சேனைகள் உடன் போமாறு சிவபெருமான்
அனுப்பி அருளினார்.
கச்சபத்து
இச்சைப் படு கச்சி ---
திருமால்
எடுத்த பத்தவதாரத்தில் ஒன்று கச்சப அவதாரம்.
இத் திருவுருவத்துடன் காஞ்சியில் திருமால் சிவபெருமானை வழிபாடு புரிந்தார்.
கச்சபேசுரம் என்று பெருமை பொருந்திய அத் திருக்கோயில் விளங்குகின்றது.
கருத்துரை
கச்சிக்
கதிர்வேல் பெருமானே, உன் வீரப் புகழைப்
பாடி என்றும் அடியேன் திரிய அருள்.
No comments:
Post a Comment