அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இதத்துப் பற்று
(காஞ்சீபுரம்)
முருகா!
உனது திருவடியைத் துதிக்க
அருள்
தனத்தத்தத்
தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத்
தனத்தத்தத் ...... தனதான
இதத்துப்பற்
றிதழ்த்துப்பற்
றிருட்பொக்கக் கருத்திட்டத்
தியக்கத்திற்
றியக்குற்றுச் ...... சுழலாதே
எலுப்புச்சுக்
கிலக்கத்தத்
தடித்தொக்குக் கடத்தைப்பெற்
றெடுத்துப்பற்
றடுத்தற்பத் ...... துழலாதே
சுதத்தத்தச்
சதத்தத்தப்
பதத்தர்க்குற் றவற்றைச்சொற்
றுவக்கிற்பட்
டவத்தைப்பட் ...... டயராதே
துணைச்செப்பத்
தலர்கொத்துற்
பலச்செச்சைத் தொடைப்பத்திக்
கடப்பப்பொற்
கழற்செப்பித் ...... தொழுவேனோ
கொதித்துக்குத்
திரக்கொக்கைச்
சதித்துப்பற் றிகைக்குட்பொற்
குலத்தைக்குத்
திரத்தைக்குத் ...... தியவேலா
குறத்தத்தைக்
கறத்தத்திக்
குமுத்தத்தத் தமொக்கிக்குக்
குலத்துக்குக்
குடக்கொற்றக் ...... கொடியோனே
கதச்சுத்தச்
சுதைச்சித்ரக்
களிற்றுக்கொற் றவற்குக்கற்
பகச்சொர்க்கப்
புரப்பொற்பைப் ...... புரிவோனே
கடுக்கைக்கட்
செவிக்கற்றைச்
சடைப்பக்கக் கொடிக்கற்புக்
கடற்கச்சிப்
பதிச்சொக்கப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இதத்துப்
பற்று இதழ்த் துப்பு அற்று,
இருள் பொக்கக் கருத்து, இட்டத்து
இயக்கத்தில்
தியக்கு உற்றுச் ...... சுழலாதே,
எலுப்புச்
சுக்கிலம் கத்தம்
தடித் தொக்குக் கடத்தைப்பெற்று
எடுத்து, பற்று அடுத்து, அற்பத்து ...... உழலாதே,
சுதத்
தத் தசத் சதத்து அத்தப்
பதத்தர்க்கு உற்றவற்றைச் சொல்
துவக்கில்
பட்டு அவத்தைப் பட்டு ...... அயராதே,
துணைச்
செப்பத்து அலர் கொத்து
உற்பலச் செச்சைத் தொடைப் பத்திக்
கடப்பப் பொன் கழல் செப்பித் ...... தொழுவேனோ?
கொதித்துக்
குத்திரக் கொக்கைச்
சதித்துப் பற்றி கைக்குளு பொன்
குலத்தைக்
குத்திரத்தைக் குத் ...... திய வேலா!
குறத்
தத்தைக்கு அறத்து அத்திக்கு
முத்த அத்தத்து அம் ஒக்குஇக்குக்
குலத்துக்
குக்குடக் கொற்றக் ...... கொடியோனே!
கதச்
சுத்தச் சுதைச் சித்ரக்
களிற்றுக் கொற்றவற்குக் கற்-
பகச் சொர்க்கப் புரப் பொற்பைப் ...... புரிவோனே!
கடுக்கைக்
கட்செவிக் கற்றைச்
சடைப் பக்கக் கொடிக் கற்புக்
கடல்
கச்சிப் பதிச் சொக்கப் ...... பெருமாளே.
பதவுரை
கொதித்துக் குத்திரக் கொக்கை --- கோபம் கொண்டு வஞ்சகம் உள்ள மாமரமாகி நின்ற சூரனை
சதித்துப் பற்றி கைக்குள் --- அழித்து, தன் வசப்படுத்தி
பொற் குலத்தை --- பொன் மயமான குலகிரியாகிய
கிரெளஞ்ச மலையையும்,
குத்திரத்தைக் குத்திய வேலா --- அதன் வஞ்சக
நிலையையும் குத்தி அழித்த வேலாயுதரே!
குறத் தத்தைக்கு --- குறவர் குலத்தில்
வந்த கிளிபோன்ற வள்ளியினுடையவும்,
அறத்து அத்திக்கு --- கற்பியல் அறநெறியில்
நின்ற தேவயானையினுடையவும்
முத்த அத்தத்து அம் ஒக்கு --- முத்துமாலைகள்
அணிந்த தோள்களின் அழகுக்கு ஒப்பாகும்,
இக்குக் குலத்துக்குக் --- கரும்புக்கும்
ஒத்த குலமாகிய மூங்கில் காம்பையுடைய,
குக்குடக் கொற்றக் கொடியோனே --- கோழியின்
வீரக் கொடியை உடையவரே!
கதம் சுத்தச் சுதைச் சித்ரம் --- கோபத்தையும், சுத்தமான வெண்மை நிறத்தையும், அழகையும் கொண்ட
களிற்றுக் கொற்றவற்கு --- ஐராவதம் என்னும்
யானைக்குத் தலைவனான இந்திரனுக்கு,
கற்பகச் சொர்க்கப் புரப் பொற்பைப் புரிவோனே
--- கற்பக மரங்கள் உள்ள சொர்க்கலோகச் சிறப்பை மீட்டுத்தந்து உதவி புரிந்தவரே!
கடுக்கை --- கொன்றை மலரும்,
கண் செவி --- பாம்பும் உள்ள
கற்றைச் சடை --- திரண்ட சடையை உடைய
சிவபெருமானது
பக்கக் கொடி --- பக்கத்தில் அமர்ந்துள்ள கொடி போன்ற
கற்புக் கடல் -- கற்புத் தத்துவத்துடன் கூடிய
கடல் போன்ற ஒலி உடைய
கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே --- கச்சியம்பதியில்
அமர்ந்த அழகிய பெருமையில் சிறந்தவரே!
இதத்துப் பற்று --- இன்பத்துடன்
பற்றுகின்ற
இதழ்த் துப்பு அற்று --- வாயிதழை
நுகர்கின்றதை நீங்கி,
இருள் பொக்கக் கருத்து இட்டத்து இயக்கத்தில்
--- துன்பம் தரும் வஞ்சகமான எண்ணங்களில் விருப்பம் வைத்ததனால்
தியக்கு உற்றுச் சுழலாதே --- மயக்கத்தினால்
சஞ்சலம் அடைந்து அடியேன் சுழற்சி அடையாமல்,
எலுப்பு --- எலும்பு,
சுக்கிலம் --- சுக்கிலம்,
கத்தம் --- மலச்சேறு,
தடி --- தசை,
தொக்கு --- தோல்,
கடத்தைப் பெற்று எடுத்து --- என்ற இவைகளுடன்
கூடிய உடம்பை அடைந்து கொண்டு,
பற்று அடுத்த --- பாசத்தை அடைந்து,
அற்பத்து உழலாதே --- அற்பமான செயல்களில்
உழலாமல்,
சுதத் தத் தத் சதத்து --- சுத்தமான
அந்தச் சத்தத்துக்கும் சுத்தமான
அத்தம் பதத்தர்க்கு --- அர்த்தத்தை
விசாரிக்கும் பத ஆராய்ச்சி செய்வோருக்கும்,
உற்றவற்றைச் சொல் துவக்கில் பட்டு --- உள்ளதை எடுத்துச் சொல்லும் தொடர்பிலே
சிக்குண்டு,
அவத்தைப் பட்டு அயராதே --- அதனால் வேதனை அடைந்து
துவளாமல்,
துணைச் செப்பத்து அலர்க் கொத்து --- செம்மையான
தன்மையுடன் கூடிய பூங்கொத்துக்களும்,
உற்பலம் --- நீலோற்பல மலரும்,
செச்சைத் தொடைப் பத்தி --- வெட்சிப் பூ மாலைகளின் வரிசையும்
கடப்பம் --- கடம்ப மலரும் உடைய
பொற்கழல் செப்பித் தொழுவேனோ --- அழகிய
தேவரீரது திருவடிகளைத் துதி செய்து அடியேன் தொழ மாட்டேனோ?
பொழிப்புரை
கோபம் கொண்டு வஞ்சகம் உள்ள மாமரமாகி
நின்ற சூரனை அழித்து, தன் வசப்படுத்தி, பொன் மயமான குலகிரி கிரெளஞ்ச மலையையும், அதன் வஞ்சக நிலையையும் குத்தி அழித்த
வேலாயுதரே!
குறவர் குலத்தில் வந்த கிளிபோன்ற
வள்ளியினுடையவும், கற்பியல் அறநெறியில்
நின்ற தேவயானையினுடையவும் முத்துமாலைகள் அணிந்த தோள்களின் அழகுக்கு ஒப்பாகும், கரும்புக்கும் ஒத்த குலமாகிய மூங்கில்
காம்பையுடைய, கோழியின் வீரக் கொடியை உடையவரே!
கோபத்தையும், சுத்தமான வெண்மை நிறத்தையும், அழகையும் கொண்ட ஐராவதம் என்னும்
யானைக்குத் தலைவனான இந்திரனுக்கு,
கற்பக
மரங்கள் உள்ள சொர்க்க லோகச் சிறப்பை மீட்டுத்தந்து உதவி புரிந்தவரே!
கொன்றை மலரும், பாம்பும் உள்ள திரண்ட சடையை உடைய
சிவபெருமானது பக்கத்தில் அமர்ந்துள்ள கொடி போன்ற கற்புத் தத்துவத்துடன் கூடிய
கடல் போன்ற ஒலி உடைய கச்சியம்பதியில் அமர்ந்த அழகிய பெருமையில் சிறந்தவரே!
இன்பத்துடன் பற்றுகின்ற வாயிதழை
நுகர்கின்றதை நீங்கி, துன்பம் தரும்
வஞ்சகமான எண்ணங்களில் விருப்பம் வைத்ததனால் மயக்கத்தினால் சஞ்சலம் அடைந்து அடியேன்
சுழற்சி அடையாமல், எலும்பு, சுக்கிலம், மலச்சேறு, தசை, தோல் என்ற இவைகளுடன் கூடிய உடம்பை
அடைந்து கொண்டு, பாசத்தை அடைந்து, அற்பமான செயல்களில் உழலாமல், சுத்தமான அந்தச் சத்தத்துக்கும்
சுத்தமான அர்த்தத்தை விசாரிக்கும் பத ஆராய்ச்சி செய்வோருக்கும், உள்ளதை எடுத்துச் சொல்லும் தொடர்பிலே சிக்குண்டு,
அதனால்
வேதனை அடைந்து துவளாமல், செம்மையான தன்மையுடன்
கூடிய பூங்கொத்துக்களும், நீலோற்பல மலரும், வெட்சிப் பூ மாலைகளின் வரிசையும் கடம்ப
மலரும் உடைய அழகிய தேவரீரது திருவடிகளைத் துதி செய்து அடியேன் தொழ மாட்டேனோ?
விரிவுரை
இத்
திருப்புகழ் கடினமான சந்தத்துடன் கூடியது. பல் தெறிக்கக் கூடிய சந்தத்துடன் கூடிய
இந்தப் பாடலைப் பாடிய அருணகிரிநாத சுவாமிகளின் கவித்திறம் நம்மனோர்க்கு
அச்சத்தையும் அதிசயத்தையும் விளைவிக்கின்றது. ஆ! ஆ! என்ன அற்புதம்?
இதத்துப்பற்
றிதழ்த்துப் பற்று ---
இதத்து
பற்று இதழ் துப்பு அற்று. இதமாகப் பற்றி
மாதரின் வாயிதழிழ் ஊறலை நுகரும் தன்மையினின்று நீங்கி.
இருட்பொக்கக்
கருத்திட்டத் தியக்கத்தில் தியக்குற்று ---
இருள்
பொக்க கருத்து இட்ட தியக்கம். இருண்ட
பொய்யான வஞ்சகக் கருத்துக்குள் சென்று இஷ்டம் வைத்து தியக்கம் உற்று அலைதல்
கூடாது.
கத்தம் ---
மலச்சேறு.
சுதத்
தத்தச் சதத்து
---
சுதம்
- சுத்தம். தத்தச் சதத்து - தத்தத்
சத்தத்து.
அந்த
அந்த சப்தங்கட்கு என்ன பொருள் என்று ஆராய்தல்.
அத்தம்
பதத்தர்க்கு ---
அத்தம்
- அர்த்தம் - பொருள். இன்ன இன்ன பொருள்
என்று ஆராய்ந்து பத நிச்சயம் புரிவோர்.
உற்றவற்றைச்
சொல் துவக்கிற் பட்டு ---
உற்றவற்றை
சொல் துவக்கில் பட்டு. அவர்கட்கு
உள்ளவற்றைக் கூறி அவர்களுடன் வாதிட்டு அவதைதப் படுதல்.
துணைச்
செப்பத்து அலர்க்கொத்து ---
முருகப்
பெருமான் திருவடியில் உள்ள மலர்களைக் கூறுகின்றார். செப்பத்துணை - செவ்வையான தன்மை உடைய
பூங்கொத்துக்கள்.
உற்பலம் ---
நீலோற்பல
மலர்.
செச்சைத்
தொடைப்பத்தி ---
செச்சை
- வெட்சி மலர். வெட்சி மாலையின் வரிசை.
கடப்பப்
பொற்கழற் செப்பித் தொழுவேனோ ---
கடப்பமலர்
மாலை அணிந்த முருகனுடைய திருவடியை இனிய கனியமுதம் போன்ற மொழிகளால் துதி செய்து
தொழவேண்டும்.
கொதித்துக்
குத்திரக் கொக்கைச் சதித்து ---
இறுதியில்
உறுதி இழந்த சூரபன்மன் கடல் நடுவே மாமரமாக நின்றான். கொக்கு - மாமரம். குத்திரம் - வஞ்சகம். அம்மாவை வேலினால் பிளந்து எம்பிரான் அழித்து
அருளினார்.
பற்றிக்
கைக்குள்
---
அம்
மாமரத்தை அழித்து, மயிலும் சேவலும்
ஆக்கிக் கைக்குள் பற்றித் தன் வசம் செய்து ஆட்கொண்டு அருளினார்.
குறத்
தத்தைக்கு
---
தத்தை
- கிளி. கிளி போல் கொஞ்சும்
மொழியுடையவளும், குறவர் குலத்தில் வளர்ந்தவளும் ஆகிய வள்ளிநாயகி.
அறத்து
அத்தி ---
அத்தி
- யானை. தெய்வயானையம்மை. கற்பு என்ற
அறநெறியில் நின்றவர்.
களவியல்
கற்பியல் என்ற இரு அறங்களில், கற்பியலால் மணந்தவர்
தேவசேனை.
முத்தத்தத்த
மொக்கும்
---
முத்த
அத்தத்து அம் ஒக்கும். முத்தாபரணம் அணிந்த
தோள்களின் அழகுக்கு ஒப்பாகும்.
அத்தம்
- கையை உடைய தோள்.
இக்குக்
குலத்து
---
இக்கு
- கரும்பு. கரும்புக்கு ஒத்த குலமாகிய
மூங்கில். சேவல் கொடி மூங்கில் காம்பின்
நுனியில் அமைந்தது.
கதச்சுத்த
சுதைசித்ரக் களிற்றுக் கொற்றவன் ---
கதம்
- கோபம். சுத்த சுதை - தூய
வெண்ணிறம். சித்ரம் - அழகு. இவைகளை உடைய
ஐராவத யானைக்கு இறைவன் இந்திரன்.
கற்றைச்
சடை ---
கற்றைச்
சடையுடைய சிவபெருமான். இது ஆகுபெயராக
நின்றது.
கடல்
கச்சி ---
கச்சியம்பதி
கடல் போன்ற பரப்பு உடையது. கடலைப் போன்ற
இனிய ஒலிகளை உடையது.
மலிதேரான்
கச்சியும் மாகடலும் தம்முள்
ஒலியும்
பெருமையும் ஒக்கும்; - மலிதேரான்
கச்சி
படுவ கடல்படா; கச்சி
கடல்படுவ
எல்லாம் படும்
(மலிதேரான்
= மிகுந்த தேர்ப்படையை உடையவன்;
கச்சி
= காஞ்சிபுரம்; படுவ = இருப்பவை)
இப்பாடலின்
பொருள் --- மிக்க தேர்ப்படையை உடைய எம் அரசனுடைய காஞ்சி மாநகரும் பெரிய கடலும் தமக்குள்ளே
ஒலியாலும் பெருமையாலும் ஒத்தவை. எனினும் காஞ்சி மாநகரில் உள்ளவை எல்லாம் கடலில் இல்லை; கடலில் இருப்பவை எல்லாம் காஞ்சி மாநகரில்
உள்ளன.
கருத்துரை
கச்சி
உறையும் கந்தவேளே, நின் திருவடியைப்
புகழும் திறத்தை அருள்.
No comments:
Post a Comment