காஞ்சீபுரம் - 0463. அற்றைக்கு இறைதேடி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அற்றைக்கு இரைதேடி (காஞ்சீபுரம்)

முருகா!
உலகப் பற்று விட்டு,
உன்னைப் பற்ற அருள்.


தத்தத் தனதான தத்தத் ...... தனதான
     தத்தத் தனதான தத்தத் ...... தனதானா


அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை
     பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ

வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா
     கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அற்றைக்கு இரைதேடி, அத்தத் ...... திலும் ஆசை
     பற்றித் தவியாத, பற்றைப் ...... பெறுவேனோ?

வெற்றிக் கதிர்வேலா! வெற்பைத் ...... தொளைசீலா!
     கற்று உற்று உணர்போதா! கச்சிப் ...... பெருமாளே.


பதவுரை

         வெற்றிக் கதிர்வேலா --- வெற்றியே விளங்கும் ஒளி மிகுந்த வேலாயுதரே!

         வெற்பைத் தொளை சீலா --- கிரவுஞ்சமலையைத் தொளைத்துத் தொலைத்த தூயவரே!

         கற்று --- ஞான நூல்களைக் கற்று,

        உற்று --- கற்றதன் பயனாகத் தியானம் செய்து

        உணர் போதா --- அடியார்களால்  உணரப்படுகின்ற ஞான சொரூபியே!

         கச்சிப் பெருமாளே --- காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         அற்றைக்கு இரை தேடி --- அன்றாடம் வேண்டிய உணவைத் தேடி,

         அத்தத்திலும் ஆசை பற்றி --- பொருள்கள் மீதும் ஆசைகொண்டு,

         தவியாத பற்றை பெறுவேனோ --- வைத்துக் கொண்டு தவிக்காத ஒரு பற்றுக்கோட்டினை அடியேன் பெறமாட்டேனோ?


பொழிப்புரை


         வெற்றியே விளங்கும் ஒளி மிகுந்த வேலாயுதரே!

         கிரவுஞ்ச மலையைத் தொளைத்துத் தொலைத்த தூயவரே!

         ஞான நூல்களைக் கற்று, கற்றதன் பயனாகத் தியானம் செய்து அடியார்களால் உணரப்படுகின்ற ஞான சொரூபியே!

         காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         அன்றாடம் வேண்டிய உணவைத் தேடி, பொருள்கள் மீதும் ஆசைகொண்டு,  வைத்துக்கொண்டு தவிக்காத ஒரு பற்றுக்கோட்டினை அடியேன் பெறமாட்டேனோ?


விரிவுரை

அற்றைக்கு இரை தேடி ---

மாந்தர் பிறந்த பிறவியின் பயனாகிய பிறவாமையைத் தேடாமல், கேவலம் விலங்குளைப் போல், அன்றாடம் உணவையே தேடி அலைகின்றார்கள்.

இரை - என்பது விலங்கின் உணவு. "கழி பேர் இரையான்" என்கின்றார் திருவள்ளுவர்.  விலங்குளைப் போல் மக்களும் உணவையே தேடுவதனால், அதனை உணவு என்னாது இரை என்றார்.

ஆக்கைக்கே இரைதேடி அலமந்து
காக்கைக்கே இரைஆகிக் கழிவரே..                 ---  அப்பர்.

அத்தத்திலும் ஆசை பற்றித் தவியாத ---

அத்தம் - பொன்.  பொன்னிலும் பொருளிலும் ஆசை வைத்து இரவு பகலாக மாந்தர் உழலுகின்றார்கள். பெறுதற்கரிய இம் மனிதப் பிறவியைப் பெற்றவர், பிறவியின் பயனாகிய பிறவாமையைப் பெற வேண்டும். பிறவாமை அவா அறுத்தலினால் உண்டாகும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.                 ---  திருக்குறள்.

எத்தனை பொன் தேடினாலும், மேலும் மேலும் வேண்டும் என்று மனிதர் பேயாய்த் திரிந்து ஓயாது அலைகின்றார்கள்.  பரிதாபம்.

அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்...        ---  தாயுமானார்.

பொருளை ஈட்டுவதும் துன்பம். ஈட்டிய பொருளை எங்கே வைப்பது எப்படி வைப்பது என்று சேமிப்பதிலும் துன்பம். அப் பொருள் செலவழியும் போதும் மிகுந்த வேதனை அடைவார்கள்.

ஈட்டலும் துன்பம், மற்று ஈட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம், - காத்தல்
குறைபடில் துன்பம், கெடில்துன்பம், துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.                          ---  நாலடியார்.

அம்மம்ம! பொருளாசை மனிதனை விலங்காக்கி விடுகின்றது.  தவிக்கச் செய்கின்றது.

பற்றைப் பெறுவேனோ ---

எல்லாப் பற்றுக்களும் தொலைய எளிதான ஒரு வழி உளது.  பற்றுக்களை விடுவது அரிது அரிது. மிகவும் அரிது. அப்படி இருக்க, பற்றுக்களை விடுவது எளிது என்றால் அதிசயமாக இருக்கும். ஒரு மேசை மீது பல சிரிய பொருள்கள் இருக்கின்றன. மிகப் பெரிய ஒரு பொருளை எடுத்து மேசை மீது வைத்தால், சிறிய பொருள்கள் தாமே விழுந்து விடும். சிறிய அதிகாரிகள் பலர் கூடியிருக்கின்ற ஒரு இடத்தில் பெரிய அதிகாரி ஒருவர் வந்தால், சிறிய அதிகாரிகள் தாமே விலகிக் கொள்வார்கள். அதுபோல், நம் உள்ளத்தில் உள்ள கோடிக் கணக்கான பற்றுக்கள், இறைவனுடைய பற்று என்ற ஒன்று ஏற்பட்டவுடன் தாமே விலகிவிடும்.

பற்றுக பற்றுஅற்றான் பற்றினை, அப் பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.                                      திருக்குறள்.

பெற்றி பிறர்க்குஅரிய பெம்மான், பெருந்துறையான்,
கொற்றக் குதிரையின்மேல் வந்து அருளி, தன்அடியார்
குற்றங்கள் நீக்கி, குணம் கொண்டு, கோது ஆட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே
பற்றி, இப் பாசத்தைப் பற்று அற, நாம் பற்றுவான்
பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.         ---  திருவாசகம்.

ஒளியைக் கண்டவுடன் இருள் சொல்லிக் கொள்ளாமல் விலகுவதுபோல், கடவுள் பற்றினைக் கண்டவுடன் மற்றப் பற்றுக்கள் தாமே விலகிவிடும்.


வெற்றிக் கதிர்வேலா ---

வேல் - வெல் என்ற பகுதி அடியாக முதனிலை நீண்ட தொழில் பெயர்.  எல்லாவற்றையும் வெல்லுவது வேல். வெற்றியே பெற்று விளங்குவது வேல்.  ஞானமே வேல்.  ஞானம் ஒளியாதலின், கதிர்வேலா என்றார்.

வெற்பைத் தொளை சீலா ---

வெற்பு - கிரவுஞ்ச கிரி.  ஆன்மாக்களின் சஞ்சித வினைகள் மலைபோல் குவிந்து இருக்கின்றன.  அந்த வினை மலையைத் தொலைப்பது ஞானவேல் என்று குறிப்பிடுகின்றார்.

கற்று உற்று உணர் போதா ---

கற்கத்தக்க நூல்கள் ஞான நூல்களே ஆகும்.

"அறிவு நூல் கல்லா மூடர்" என்று பிறிதொரு திருப்புகழில் கூறுகின்றார். ஞான நூல்களைக் கற்று, கற்றதன் பயனாய், இறைவனை நினைப்பற நினைந்து தியானித்தல் வேண்டும். அத் தியான ஞானத்தால் உணரப்படும் பொருள் இறைவன். 

கற்றும் என்பலன்? கற்றிடும் நூன்முறை
சொற்ற சொற்கள் சுக ஆரம்பமோ? நெறி
நிற்றல் வேண்டும், நிருவிகற்பச் சுகம்
பெற்ற பேர் பெற்ற பேசாப் பெருமையே.       --- தாயுமானார்.

கூர்த்தஅறி வால்அறியக் கூடாது, னக் குரவன்
தேர்த்தபடி தானே திரிந்தேன் பராபரமே.       --- தாயுமானார்.

சின்னஞ் சிறியார்கள் செய்தமணல் சோற்றை ஒக்கும்
மன்னும் கலைஞான மார்க்கம் பராபரமே.     --- தாயுமானார்.

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கள் பிறப்பில் பிறிது இல்லை, - அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்.                 --- அறநெறிச்சாரம்.

இறைவன் அறியப்படும் பொருள் அன்று. உணரப்படும் பொருள்.  அறிவது ஆராய்ச்சியால். உணர்வது அனுபவத்தால். போதம் - அநுபவ ஞானம். "சிவஞான போதம்" என்ற சொல்லாலும், "போத நிர்க்குண போதா நமோநம" என்ற திருவாக்கினாலும் உணர்க.

தனுகரண ஆதிகள் தாம் கடந்து அறியும்ஓர்
அனுபவம் ஆகிய அருட்பெருஞ் சோதி.   --- திருவருட்பா.


கருத்துரை

கச்சியம்பதி மேவும் கதிர்வேலா, உலகப் பற்று அற்று, பரம்பொருளைப் பற்ற அருள் செய்.



No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...