20. திருமகள் இருப்பிடம்
நற்பரி
முகத்திலே, மன்னவர் இடத்திலே,
நாகரிகர் மாமனை யிலே,
நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,
நறைகொண்ட பைந்துள விலே,
கற்புடையர்
வடிவிலே, கடலிலே, கொடியிலே,
கல்யாண வாயில் தனிலே,
கடிநக ரிடத்திலே, நற் செந்நெல்
விளைவிலே,
கதிபெறு விளக்க தனிலே,
பொற்புடைய
சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே
பொய்யாத பேர்பா லிலே,
பூந்தடம் தன்னிலே, பாற்குடத்து இடையிலே
போதகத் தின்சிர சிலே
அற்பெரும்
கோதைமலர் மங்கைவாழ் இடம் என்பர்
அண்ணல்எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அண்ணல் --- தலைவனே!
எமது அருமை மதவேள் --- எமது அரிய மதவேள்
என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர
கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
நல் பரி முகத்தில் --- அழகிய குதிரையின்
முகத்திலும்,
மன்னவர் இடத்தில் --- அரசரின் இடத்திலும்,
நாகரிகர் மாமனையில் --- நாகரிகம் அறிந்தவர்கள்
வாழும் வீட்டிலும்,
நளின மலர் தன்னில் --- தாமரை மலரிலும்,
கூவிளந் தருவில் ---- வில்வ மரத்திலும்,
நறை கொண்ட பைந் துளவில் --- மணமுடைய பசிய
திருத் துழாயிலும்,
கற்புடையர் வடிவில் --- கற்புடைய பெண்களின்
வடிவத்திலும்,
கடலில் --- கடலிலும்,
கொடியில் ---- துகில் கொடியிலும்,
கல்யாண வாயில் தனில் --- திருமண வீட்டின்
வாயிலிலும்,
கடி நகர் இடத்தில் - காவலுடைய நகரத்திலும்,
நல் செந்நெல் விளைவில் --- நல்ல செந்நெல்
விளைவிலும்,
கதிபெறு விளக்கு அதனில் --- ஒளிவீசுகின்ற
விளக்கிலும்,
பொற்பு உடைய சங்கில் --- அழகுள்ள சங்கிலும்,
மிக்கோர்கள் வாக்கில் --- பெரியோர் வாயிலிருந்து
வரும் சொல்லில்,
பொய்யாத பேர் பாலில் --- பொய் சொல்லாதவர் இடத்திலும்,
பூந் தடம் தன்னில் --- மலர்கள் நிறைந்துள்ள குளத்திலும்,
பாற்குடத்திடையில் --- பால் குடத்திலும்,
போதகத்தின் சிரசில் --- யானையின் மத்தகத்திலும்,
அல்பெரும் கோதை மலர்மங்கை வாழ் இடம் என்பர் -
இருண்ட நீண்ட கூந்தலையுடைய திருமகளானவள் வாழுகின்ற இடம் என்பர் பெரியோர்.
விளக்கம் --- நாகரிகம் ---
கண்ணோட்டம். அதாவது நண்பர்
உரிமையால் செய்த குற்றம் குறைகளை மறந்து அருளுதல்.
"பெயக்கண்டும் நஞ்சு
உண்டு அமைவர், நயத்தக்க நாகரிகம்
வேண்டுபவர்' என்னும் திருக்குறள்
கருத்தை அறிக. திருமகள் வாழுகின்ற இடங்கள் என்று பெரியோரால் கருதப்படுபவைகளை இப் பாடலில்
காட்டினார்.
No comments:
Post a Comment