நிலையாமை






19. நிலையாமை

காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்
     காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!
  கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
     கானல்காட் டும்ப்ர வாகம்!

மேயபுய பலவலிமை இளமைஅழகு இவையெலாம்
     வெயில்மஞ்சள்! உயிர்தா னுமே,
  வெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி,
     வீண்பொழுது போக்காமலே

நேயமுட னேதெளிந்து அன்பொடுஉன் பாதத்தில்
     நினைவுவைத்து இருபோ தினும்
  நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு அர்ச்சிக்க
     நிமலனே! அருள்புரி குவாய்

ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே!
     அண்ணல்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     நிமலனே --- தூயவனே!,

     ஆயும் அறிவாளர் பணி பாதனே --- ஆராந்த அறிவினை உடையவர்கள் பணிந்து வணங்கும் திருவடிகளை உடையவனே!

     போதனே --- அறிவு வடிவானவனே!

     அண்ணல் --- தலைவனே!

     எமது அருமை மதவேள் - எமது அரிமதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     காயம் ஒரு புற்புதம் --- இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழியைப் போன்றது,

     வாழ்வு மலை சூழ் தரும் காட்டில் ஆற்றின் பெருக்குஆம் --- இந்த வாழ்க்கையானது மலையைச் சுற்றியுள்ள காட்டிலே ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஆகும்,

     கருணை தரு புதல்வர் கிளை மனை மனைவி இவையெலாம் கானல் காட்டும் பிரவாகம் --- அன்புக்கு உரிய மக்கள், உறவினர், தேடிய வீடு,  மனைவி ஆகிய இவைகளெல்லாம் கானல் நீர் காட்டுகின்ற வெள்ளம்!

     மேய புய பல வலிமை இளமை அழகு இவையெலாம் வெயில் மஞ்சள் --- பொருந்திய தோள் வலிமை, இளமை, அழகு, ஆகிய இவை எல்லாம் காலையிலும் மாலையிலும் காணப்படும்  மஞ்சள் நிறமுள்ள இளவெயில்,

     உயிர் தானுமே வெட்ட வெளியில் வைத்த தீபம் --- இந்த உடலில் தங்கி உள்ள உயிரும் திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கு,

     எனவே கருதி --- என்றே நினைத்து,

     வீண் பொழுது போக்காமல் --- வாழ்நாளை வீணே கழிக்காமல்,

     தெளிந்து --- அறிவுத் தெளிவை அடைந்து,

     உன் பாதத்தில் நேயமுடனே அன்பொடு நினைவு வைத்து --- உன் திருவடிகளில் நட்பு பூண்டு, உள்ளன்புடன் நினைந்து,

     இரு போதினும் நீர் கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு அர்ச்சிக்க அருள் புரிகுவாய் --- காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் நீரையும் பூவையும் கொண்டு அன்புடன் வழிபட அருள் புரிவாய்.

          விளக்கம் --- நீரிலே தோன்றுகின்ற குமிழானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால், எப்போது அது அழியும்,எப்படி அழியும் என்று தெரியாது. அதுபோலவே, இந்த உடம்பானது தொடக்கத்தில் மிகமிக வனப்பாகவே இருக்கும். ஆனால், நாளாக நாளாக, நம்மை அறியாமலே முதுமை வந்துகொண்டே இருக்கும். அது எப்போது அழியும் என்பதும் தெரியாது.  எப்போதும் இருக்கும் என்று கருதியே, அதை அழகு செய்வதும், உண்டி முதலியவற்றால் அதை வலிமை பெறச்ரசெய்வத்மாகவே இருக்கின்றோம். 

     "நீரில் குமிழி, நீர் மேல் எழுத்து" என்பார் பட்டினத்தடிகள். "நீர்க்குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை" என்பார் அருணகிரிநாதர்.

ஐந்துவகை ஆகின்ற பூதபே தத்தினால்
                 ஆகின்ற ஆக்கை, நீர்மேல்
      அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன,நான்
                 அறியாத காலமெல்லாம்
புந்திமகிழ் உறஉண்டு உடுத்து, ன்பம் ஆவதே
                 போந்தநெறி என்று இருந்தேன்,
      பூராய மாகநினது அருள் வந்து உணர்த்த இவை
                 போனவழி தெரியவில்லை..    ---  தாயுமானார்.

     இந்த வாழ்க்கையைக் காட்டாற்றுக்கு உவமைப் படுத்தினார். வாழ்க்கை நிலையானது அல்ல. காட்டாற்றிலே எப்போது வெள்ளம் வரும், எப்போது வடியும் என்று சொல்லமுடியாது. வெள்ளம் வந்ததும் விரைவில் வற்றி விடும்.

     மனைவி, மக்கள், உறவு, செல்வம் இவை எல்லாம் உள்ளது போலத் தோன்றி அழியக் கூடியவையே. வேனில் காலத்தில், நண்பகல் வேளையில், திறந்த வெளியிலே நீர்ப்பெருக்கு உள்ளது போலத் தோன்றும். ஆனால், நெருங்கிச் சென்று பார்த்தால் இருக்காது.  இதனைக் கானல் நீர் என்பர். இது பொய்த்தோற்றமாதலால் பேய்த்தேர் என்றும் சொல்லப்படும்.

     காலையிலும் மாலையிலும் உண்டாகும் இளவெயிலை மஞ்சள் வெயில் என்பது வழக்கம். நிலையாமை கருதி இவ்வாறு சொல்லப்பட்டது.

     திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கானது எப்போது அணையும் என்று சொல்லமுடியாது போ, உடம்பிலே உள்ள உயிரானது எப்போது நீங்கும் என்று நிச்சயித்துக் கூற முடியாது.

     எனவே, வாழ்நாளை வீணாக்காமல், இளமையிலேயே, இறைவனுக்கு ஆட்பட்டு, உள்ளன்போடு, பூவும் நீரும் கொண்டு வழிபட்டு உய்ய வேண்டும்.

புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு, நீர் உண்டு,
அண்ணல் அதுகண்டு அருள் புரியா நிற்கும்,
எண்இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ண அறியாமல் நழுவுகின்றாரே.           ---  திருமந்திரம்.

பூக்கைக் கொண்டு அரன் பொன்அடி போற்றிலார்,
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்,
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,
காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே.            ---  அப்பர்.

     நிலையற்ற உடம்பு, நிலையற்ற வாழ்வு இவற்றைக் கொண்டு, நிலையான பேரின்பத்தைத் தேடிக் கொள்வதே அறிவுடைமை ஆகும்.

No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...