அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கருமமான பிறப்பற
(காஞ்சிபுரம்)
முருகா!
உனது உண்மை வடிவை அடியேன்
கண்டு,
பிறவாத நிலை பெற அருள்
தனன
தானன தத்தன தனதன
தானா தத்தத் ...... தனதான
கரும
மானபி றப்பற வொருகதி
காணா தெய்த்துத் ...... தடுமாறுங்
கலக
காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக் ...... கலைநூலின்
வரும
நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக் ...... கரிதாய
மவுன
பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப் ...... புகல்வாயே
தரும
வீம அருச்சுன நகுலச
காதே வர்க்குப் ...... புகலாகிச்
சமர
பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட் ...... டினிலாளுங்
குரும
கீதல முட்பட வுளமது
கோடா மற்சத் ...... ரியர்மாளக்
குலவு
தேர்கட வச்சுதன் மருககு
மாரா கச்சிப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கருமம்
ஆன பிறப்பு அற, ஒரு கதி
காணாது, எய்த்துத் ...... தடுமாறும்,
கலக
காரண துற்குண சமயிகள்,
நானா வர்க்கக் ...... கலைநூலின்
வரும்
அநேக விகற்ப விபரித
மனோபா வத்துக்கு ...... அரிது ஆய
மவுன
பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப் ...... புகல்வாயே!
தரும
வீம அருச்சுன நகுல
சகாதே வர்க்குப் ...... புகல் ஆகிச்
சமர
பூமியில் விக்ரம வளைகொடு
நாள்ஓர் பத்து எட் ...... டினில் ஆளும்
குரு
மகீதலம் உட்பட, உளம் அது
கோடாமல் சத் ...... ரியர் மாள,
குலவு
தேர்கடவு அச்சுதன் மருக!
குமாரா! கச்சிப் ...... பெருமாளே.
பதவுரை
தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்குப்
புகல் ஆகி --- தருமராஜர், வீமசேனன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற பாண்டவர்கள் ஐவர்க்கும்
காப்பு அளிப்பவனாகி,
சமர பூமியில் விக்ரம வளைகொடு --- போர்க்களத்தில் ஆற்றல் வாய்ந்த சங்கைக் கொண்டு
நாள் ஓர் பத்து எட்டினில் ஆளும் --- ஒரு
பதினெட்டு நாட்களில் போர் நிகழும்
குரு மகீதலம் உட்பட --- இடம் குருக்ஷேத்திரமாக,
உளம் அது கோடாமல் --- தமது
திருவுள்ளத்தில் கொண்டு அரச நெறிமுறையில் மாறுபடாமல் நிற்கவும்,
சத்ரியர் மாள --- கெளரவ அரசர்கள் யாவரும்
இறந்து படவும்,
குலவு தேர்கடவு அச்சுதன் மருக ---
அர்ச்சுனனுடைய சிறந்த தேரைச் செலுத்திய அச்சுதனின் திருமாலின் திருமருகரே!
குமாரா --- குமாரக் கடவுளே!
கச்சிப் பெருமாளே --- காஞ்சிபுரத்தில்
எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!
கருமம் ஆன பிறப்பு அற --- வினைக்கு ஈடாக
வரும் பிறவி தொலைவதற்கு
ஒரு கதி காணாது --- ஒரு வழியும் தெரியாமல்
எய்த்துத் தடுமாறும் --- இளைத்துத்
தடுமாறுபவரும்,
கலக காரண --- சண்டை செய்வதற்கே
காரணமாகிய
துற்குண சமயிகள் --- பொல்லாத குணமுடையவரும்
ஆகிய சமயவாதிகளின்
நானா வர்க்கக் கலைநூலின் --- பலவிதமான
சாத்திர நூல்களில்
வரும் அநேக விகற்ப --- சொல்லப்பட்ட அநேக மாறுபாடுகள் கொண்டதும்,
விபரித --- பொருந்தாததுமான,
மனோ பாவத்துக்கு அரிதாய --- மன உணர்ச்சிக்கு
எட்டாததான,
மவுன பூரித சத்திய வடிவினை --- மெளனநிலை நிறைவு கொண்டதான, உண்மை வடிவத்தை
மாயா மற்குப் புகல்வாயே --- அடியேன்
இறவாத தன்மை அடையுமாறு உபதேசித்து அருள் புரிவீராக.
பொழிப்புரை
தருமராஜர், வீமசேனன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற பாண்டவர்கள் ஐவர்க்கும்
காப்பு அளிப்பவனாகி, போர்க்களத்தில்
ஆற்றல் வாய்ந்த சங்கைக் கொண்டு ஒரு பதினெட்டு நாட்களில் போர் நிகழும் இடம்
குருக்ஷேத்திரமாக, தமது
திருவுள்ளத்தில் கொண்டு அரச நெறிமுறையில் மாறுபடாமல் நிற்கவும், கெளரவ அரசர்கள் யாவரும் இறந்து படவும், அர்ச்சுனனுடைய சிறந்த தேரைச் செலுத்திய
அச்சுதனின் திருமாலின் திருமருகரே!
குமாரக் கடவுளே!
காஞ்சிபுரத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில்
சிறந்தவரே!
வினைக்கு ஈடாக வரும் பிறவி தொலைவதற்கு
ஒரு வழியும் தெரியாமல், இளைத்துத்
தடுமாறுபவரும், சண்டை செய்வதற்கே காரணமாகிய பொல்லாத
குணமுடையவருமான சமயவாதிகளின் பலவிதமான சாத்திர நூல்களில் சொல்லப்பட்ட அநேக
மாறுபாடுகள் கொண்டதும், பொருந்தாததுமான, மன உணர்ச்சிக்கு எட்டாததான, மெளனநிலை, நிறைவு கொண்டதான, உண்மை வடிவத்தை அடியேன் இறவாத தன்மை
அடையுமாறு உபதேசித்து அருள் புரிவீராக.
விரிவுரை
கருமமான
பிறப்பு ---
கருமம்
- வினை. இந்த உடம்பு வினையினால் விளைகின்றது.
வினை ஒழிந்தால் உடம்பு வராது. உடம்பு துன்பங்கள் அத்தனைக்கும் உறைவிடம். இது
நான்கு பேர் சுமக்கும் சுமை. பணம்
கொடுத்தால் நான்கு பேர் சிறிது நேரம் சுமப்பார்கள். இத்தகைய கனமான உடம்பை நாம் சுமந்து
அலைகின்றோம். அலைவதுடன் அமையாமல்
நெடுங்காலம் உடம்புடன் வாழவும் விரும்புகின்றோம்.
இது பேதைமை.
இந்த
உடம்பு மலம், மூத்திரம், பித்தம், கோழை, புழுக்கள் முதலியன நிறைந்தது. தூய்மையில்லாதது. நோய்களுக்குத் தங்குமிடம்.
குரம்பை
மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு
அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த
செயிர்மயிர் குருதியொடு இவைபல .. கசுமாலக்குடில்.. --- திருப்புகழ்.
தோலெ
லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான
தூல
பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
சோரு மிந்த நோய கன்று ...... துயராற... ---
திருப்புகழ்.
இந்த
உடம்புடன் கூடி வாழும் வாழ்க்கையை எண்ணி எண்ணி இராமலிங்க அடிகளார் ஏங்கினார். அவர்
உரைக்கும் செந்தமிழ் இன்சுவைப் பாடல் இதோ...
புன்புலால்
உடம்பின் அசுத்தமும், இதனில்
புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்,
என்பொலா
மணியே! எண்ணிநான் எண்ணி
ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்,
வன்புலால்
உண்ணும் மனிதரைக் கண்டு
மயங்கி,உள் நடுங்கி,ஆற் றாமல்
என்பெலாம்
கருக இளைத்தனன், அந்த
இளைப்பையும், ஐய! நீ அறிவாய்.
எம்பெருமான்
நின்விளையாட்டு என்சொல் கேன்நான்
ஏதும் அறியாச் சிறியேன் எனைத்தான், இங்கே
செம்புனலால்
குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தைச்
சிறுவீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து, அந்தோ!
கம்பம்
உறப் பசித்தழலும் கொளுந்த, அந்தக்
கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து
வம்பு
இயற்ற, காமாதி அரட்டர்
எல்லாம்
மடிபிடித்து வருத்த என்றோ வளர்த்தாய்
எந்தாய்.
ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம் என்ற மூன்று வினைகளையும்
திருவருளாலும் குருவருளாலும் தொலைத்து, எடுத்த
பிறப்பைக் கொண்டு, இனிப் பிறவாதவண்ணம்
புரிதல் வேண்டும்.
பிறப்பு
அற ஒரு கதி காணாது எய்த்துத் தடுமாறும் ---
கதி
- வழி. எண்ணில்லாத காலமாக எண்ணில்லாத
பிறவிகளை எடுத்து எடுத்து உழல்கின்ற ஆன்மாக்கள், அப் பிறவி அறும் நெறி ஒன்றையும் அறியாது
தடுமாறுகின்றன.
பிறப்பு
அறுக்கும் நெறிகள் இன்ன இன்ன என்று மறைஞான சம்பந்தர் கூறுமாறு காண்க.
தன்பெருமை
எண்ணாமை, தற்போத மேயிறத்தல்,
மின்பெருமை யாசகத்தை வேண்டாமை,-தன்பால்
உடலைப் பழித்தல், ஓங்குசிவத்தொன்றல்,
நடலைப் பிறப்பொழியும் நாள். --- சிவபோகசாரம்.
மின்பெருமை யாசகத்தை வேண்டாமை,-தன்பால்
உடலைப் பழித்தல், ஓங்குசிவத்தொன்றல்,
நடலைப் பிறப்பொழியும் நாள். --- சிவபோகசாரம்.
எய்த்தல்
- இளைத்தல். எல்லாப் பிறப்பும் பிறந்து
இளைத்தேன் என்கின்றார் மணிவாசகப் பெருமான்.
கலக
காரண துற்குண சமயிகள் ---
மனம்
அடங்கக் கல்லாது, சமய நூல்களைக் கற்று, ஒருவரை ஒருவர் எதிர்த்துத் தத்தம்
மதங்களே பெரிது என்று தருக்கமும் கலகமும் புரிவர் சமயவாதிகள்.
"சமயவாதிகள் தத்தம்
மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகனார்.
மாறுபடு
தர்க்கம் தொடுக்க அறிவார்,சாண்
வயிற்றின் பொருட்டதாக
மண்டலமும் விண்டலமும்
ஒன்றாகி மனதுழல
மால் ஆகி நிற்க அறிவார்,
வேறுபடு
வேடங்கள் கொள்ள அறிவார், ஒன்றை
மெணமெணென்று அகம் வேறதாம்
வித்தை அறிவார்,எமைப் போலவே சந்தைபோல்
மெய்ந்நூல் விரிக்க அறிவார்,
சீறுபுலி
போல் சீறி, மூச்சைப் பிடித்து, விழி
செக்கச் சிவக்க அறிவார்,
திரம் என்று தந்தம்
மதத்தையே தாமதச்
செய்மைகொடும் உளற அறிவார்,
ஆறுசம
யங்கள் தொறும் வேறுவேறு ஆகி,விளை
யாடும்உனை யாவர் அறிவார்,
அண்டபகி ரண்டமும்
அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. --- தாயுமானார்.
கற்கஇடர்ப்
பட்டுமிகக் கற்றஎல்லாம் கற்றவர்பால்
தற்கமிட்டு
நாய்போச் சள்ளெவோ? --- நற்கருணை
வெள்ளம்
அடங்கும் விரிசடையார்க்கு ஆளாகி
உள்ளம்
அடங்க அல்லவோ.
எத்தனைதான்
கற்றாலும், எத்தனைதான்
கேட்டாலும்,
எத்தனை
சாதித்தாலும் இன்புறா, --- சித்தமே
மெய்யாகத்
தோன்றிவிடும், உலகவாழ்வு அனைத்தும்
பொய்யாகத்
தோன்றாத போது. --- சிவபோக சாரம்.
நானாவர்க்கக்
கலை நூலின் வரும் அநேக விகற்பம் ---
விகற்பம்
- வேறுபாடு. சமய நூல்கள் ஒன்றுடன் ஒன்று
சேராமல் மாறுபட்டுக் கூறும் தகையன. பல
வகையான கொள்கைகளைக் கூறும்.
விபரித
மனோபாவத்துக்கு அரிதாய ---
"விபரித சமய கலைகளும்
அலம் அலம்" என்று பிறிதொரு திருப்புகழில் சுவாமிகள் கூறியபடி, விபரித எண்ணங்களும் ஐயப்பாடுகளும் கொண்ட
மன உணர்ச்சிக்கு எட்டாதது இறைவனுடைய உண்மை நிலை.
மவுன
பூரித சத்திய வடிவினை ---
மனம்
அற்ற நிலை மவுனம். இது ஞானத்தின்
முடிவாகத் திகழ்வது.
"மோனம் என்பது ஞான
வரம்பு”. வாய் திறந்து பேசாது இருப்பது
மவுனம் அன்று.
ஆனந்த
மோனகுரு வாம்எனவே என்அறிவின்
மோனம்
தனக்கு இசைய முற்றியதால் --- தேன்உந்து
சொல்எல்லாம்
மோனம் தொழிலாதியும் மோனம்
எல்லாம்
நல் மோன வடிவே. --- தாயுமானார்.
இறைவன்
இந்த மோன நிலையில் காணக்கூடியவன். அப்
பரமனைக் காணும் நெறியை ஞானநூல்கள் கூறுகின்றன.
உரைஇறந்தால்,
உன்னும் உணர்வு இறந்தால், மாயைத்
திரைஇறந்தால்
காண்கின்ற தேவை, --- வரைபெறுக
வாசிப்பதும்,
நாவால் வாழ்த்துவதும், நாடகமாய்ப்
பூசிப்பதும்
சுத்தப் பொய். --- சிவபோக சாரம்.
ஆதலால், இறைவனை மனமற்ற நிலையில் கண்டு
காற்றில்லாத இடத்தில் எரியும் கற்பூர தீபம் போல் அசைவற்று இருக்க வேண்டும்.
மாயாமற்குப்
புகல்வாயே
---
அழியாத
நிலை உண்டாக அடியேனுக்கு உன் சத்திய வடிவு தோன்ற உபதேசித்து அருள் என்று அடிகளார்
வேண்டுகின்றார்.
தருமவீம
அருச்சுன நகுல சகாதேவர்க்குப் புகலாகி ---
தருமதேவதையின்
புதல்வர் யுதிட்டிரர்.
யுதிட்டிரர்
--- யுத்தத்தில் புறங்காட்டாதவர். தருமமே
ஒரு சொரூபமாக வாழ்ந்தவர்.
வீமன்
--- பயங்கரமானவன். மானசீகமாக சிவபூசை செய்கின்றவன்.
அருச்சுனன்
--- மனவாக்குக் காயங்களால் மாசில்லாதவன் -
தூயவன்.
நகுலன்
--- பகைவராகிய பாம்புகட்குக் கீரி போன்றவன்.
சகாதேவன்
--- உடன் பிறந்தாரிடம் ஒற்றுமையாக இருப்பவன்.
இந்த
ஐவர்களாகிய பாண்டவர்க்குப் பரந்தாமனாகிய கண்ணபிரான் புகலிடமாக நின்று அருள்
புரிந்தார்.
சமர
பூமியில் விக்ரம வளைகொடு ---
போர்க்களத்தில்
பாஞ்சஜன்யம் என்ற சங்கத்தை ஒலித்து பாண்டவர்க்கு உதவி புரிந்தார் வாசுதேவர். விக்ரமம் - ஆற்றல். வளை - சங்கு.
நாள்
ஓர் பத்து எட்டினில் ---
பதினெட்டு
என்ற எண்ணிக்கையில் வருவன----
புராணங்கள்
18, வித்தைகள் 18, முருகவேளின் கண்கள் 18, பாரதத்தின் பருவங்கள் 18, பாரத சேனைகள் அட்சரோணி 18, ஆடியில் காவேரிப் பெருக்கின் நாள் 18, சித்தர்கள் சபரிமலையில் ஐயப்பனைக் காண
ஏறும் படிகள் 18, கீதையின்
அத்தியாயங்கள் 18, பாரதப் போர் நடந்த
நாட்கள் 18.
பதினெட்டு
நாட்களில் பாரதப் போரை முடித்து,
பகவான்
பூபாரம் தீர்த்து அருளினார்.
குரு
மகீதலம்
---
குருக்ஷேத்திரம்.
இது புனிதமான இடம். அறத்தை நிறுவிய இடம். கீதையை உபதேசித்த புனித பூமி.
கோடாமல்
க்ஷத்ரியர் மாள ---
க்ஷத்திரியர்
--- க்ஷத்திரம் --- பராக்கிரமம். இக்குணம் உள்ளவன் க்ஷத்திரியன்.
தூவைபர
யுகத்தின் முடிவில் அரசர்களிடம் மறம் ஓங்கி, அறம் குன்றியபோது, கிருஷ்ணர் அருச்சுனனுக்குத் தேர் செலுத்தி
அரசகுலத்தை அழித்து அருளினார்.
கோடாமல்
--- அரசநெறி கோணாமல்.
கருத்துரை
கச்சிக்
குமரா, உன் சத்திய வடிவைக்
காணவும் அழியா நிலை பெறவும் உபதேசித்து அருள்.
No comments:
Post a Comment