அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கலகலென (காஞ்சிபுரம்)
முருகா!
பொதுமாதர் உறவு தவிர அருள்
தனதன
தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன ...... தனதான
கலகலெ
னப்பொற் சேந்த நூபுர
பரிபுர மொத்தித் தாந்த னாமென
கரமல ரச்சிற் றாந்தொ மாடிய ...... பொறியார்பைங்
கடிதட
முற்றுக் காந்த ளாமென
இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை
கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு ...... வடமாடச்
சலசல
சச்சச் சேங்கை பூண்வளை
பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய
சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி ......
சுழலாடத்
தரளந
கைப்பித் தாம்ப லாரிதழ்
குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர்
சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய ...... ருறவாமோ
திலதமு
கப்பொற் காந்தி மாதுமை
யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி
சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி
...... சிவகாமி
திரிபுவ
னத்தைக் காண்ட நாடகி
குமரிசு கத்தைப் பூண்ட காரணி
சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை ...... யருள்பாலா
அலகையி
ரத்தத் தோங்கி மூழ்கிட
நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட
அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர
......முடையோனே
அமரர்ம
கட்குப் போந்த மால்கொளும்
விபுதகு றத்திக் காண்ட வாதின
மழகுசி றக்கக் காஞ்சி மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கலகல
எனப் பொன் சேந்த நூபுர
பரிபுரமு ஒத்தித் தாம் தனாம் என
கரமலர் அச்சில் தாம்தொம் ஆடிய ......பொறியார்,பைங்
கடிதடம்
உற்றுக் காந்தள் ஆம்என
இடை பிடிபட்டுச் சேர்ந்த ஆல் இலை
கனதன பொற்பு இட்டு ஓங்கு மார்பொடு
...... வடம்ஆட,
சலசல
சச்சச் சேங்கை பூண்வளை,
பரிமள பச்சைச் சேர்ந்து உலாவிய,
சலச முகத்துச் சார்ந்த வாள்விழி ......
சுழல ஆட,
தரள
நகைப்பித்து, ஆம்பல் ஆர்இதழ்,
குலமுகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர்,
சரசம் உரைத்துச் சேர்ந்த தூவையர்
...... உறவு ஆமோ?
திலத
முகப் பொன் காந்தி மாது உமை,
எனை அருள் வைத்திட்டு ஆண்ட நாயகி,
சிவன் உருவத்தில் சேர்ந்த பார்வதி, ...... சிவகாமி,
திரி
புவனத்தைக் காண்ட நாடகி,
குமரி, சுகத்தைப் பூண்ட
காரணி,
சிவை, சுடர் சத்தி, சாம்பவீ, அமை ...... அருள்பாலா
அலகை
இரத்தத்து ஓங்கி மூழ்கிட,
நரி கழுகு உப்பிச் சீர்ந்து வாயிட,
அசுரர் குலத்தைக் காய்ந்த வேல்கரம்
......உடையோனே
அமரர்
மகட்குப் போந்த மால்கொளும்
விபுத குறத்திக்கு ஆண்டவா! தினம்
அழகு சிறக்கக் காஞ்சி மேவிய ......
பெருமாளே.
பதவுரை
திலத முக பொன் காந்தி மாது உமை --- பொட்டு இட்ட முகத்தில் அழகிய ஒளி வீசும் மாதாகிய உமாதேவியார்,
எனை அருள் வைத்திட்டு ஆண்ட நாயகி --- அடியேன்
மீது திருவருள் வைத்து ஆண்டருளிய நாயகி,
சிவன் உருவத்தில் சேர்ந்த பார்வதி சிவகாமி ---
சிவபெருமானது திருமேனியில் இடது பாகத்தில் சேர்ந்துள்ள பார்வதி, சிவகாமி,
திரிபுவனத்தைக் காண்ட நாடகி --- மூன்று
உலகங்களையும் படைத்த நாடகத்தினள்,
குமரி --- குமரி,
சுகத்தைப் பூண்ட காரணி --- சுகத்தையே
அணிந்துள்ள காரண சக்தி,
சிவை சுடர் சத்தி --- சிவனுடைய தேவி, ஒளி மயமான பராசத்தி,
சாம்பவீ அமை அருள் பாலா --- சாம்பவி ஆகிய உமை
அம்மை அருளிய பாலகரே!
அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட --- பேய்கள்
இரத்தத்தில் நன்றாக முழுகிடவும்,
நரி கழுகு உப்பிச் சீர்ந்து வாய் இட --- நரியும்
கழுகும் வயிறு உப்பிப் பெருக்க, வாயை வைத்து
உண்ணவும்
அசுரர் குலத்தைக் காய்ந்த வேல் கரம் உடையோனே
--- அசுரர்கள் குலத்தைச் சுட்டு அழித்த வேலாயுதத்தைக் திருக்கரத்தில் ஏந்தியவரே!
அமரர் மகட்குப் போந்த மால் கொளும்
விபுத --- தேவர் மகளான தேவயானை அம்மை மீது ஆசை கொண்ட தேவரே
குறத்திக்கு ஆண்டவா --- குறவர் மகளாகிய வள்ளிநாயகியை
ஆண்டவரே!
தினம் அழகு சிறக்கக் காஞ்சி மேவிய பெருமாளே ---
நாள்தோறும் அழகு விளங்கி சிறக்கும் காஞ்சியில் வீற்றிருக்கும் பெருமையில்
மிக்கவரே!
கலகல எனப் பொன் சேந்த நுபுர --- கலகல
என்று அழகிய சிவந்த பாத கிண்கிணியும்,
பரிபுரம் ஒத்தித் தாம் தனாம் என ---
சிலம்பும் தாள ஒத்துப் போல தாம் தனாம் என்று ஒலிக்க,
கர மலர் அச்சில் --- தாமரை மலர் போன்ற
கைகளைக் கொண்டு
தாம் தோம் ஆடிய பொறியார் --- தாம் தோம் என
ஆடல் பயில்கின்ற தந்திரத்தினர்,
பைம் கடி தடம் உற்று --- செழிப்பு வாய்ந்த
தங்கள் அல்குல் விரிவடைய,
காந்தள் ஆம் என இடை பிடி --- காந்தள் மலரை
ஒத்த ஒரு பிடி அளவே உள்ள மெல்லிய இடையில்
பட்டுச் சேர்ந்த ஆல் இலை --- பட்டாடை பொருந்திய ஆலிலை போன்ற வயிற்றுடனும்,
கனதன பொற்பு இட்டு ஓங்கு மார்பொடு வடம்
ஆட --- அழகு மிக்க கனத்த தனங்கள் தங்கிய மார்பில் முத்துவடம் ஆட,
சலசல சச்சச் சேம் கை பூண்வளை --- சலசல சச்ச
என்று ஒலிக்கும் சிவந்த கைகளில் வளையல்கள் ஒலிக்க,
பரிமள பச்சைச் சேர்ந்து உலாவிய --- நறுமணம் வீசும்
பச்சைப் பொட்டு பொருந்தி விளங்கும்
சலச முகத்துச் சார்ந்த வாள்விழி சுழல் ஆட ---
தாமரை போன்ற முகத்தில் உள்ள வாள் போன்ற கண்கள் சுழன்று அசைய,
தரள நகைப்பித்து --- முத்துப் போன்ற
பற்கள் ஒளி வீச,
ஆம்பல் ஆர் இதழ் --- சிவந்த ஆம்பல் போன்ற
வாயிதழைக் கொண்டவர்கள்,
குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர் --- சிறந்த
மேகம் போன்ற முடித்த கூந்தலை உடையவர்கள்
சரசம் உரைத்துச் சேர்ந்த தூவையர் உறவு ஆமோ ---
சரச மொழிகளைப் பேசி புணர்கின்ற,
புலால்
உண்ணும் விலைமாதர்களுடன் உறவு கொள்வது
நன்மை தருமோ?
பொழிப்புரை
பொட்டு இட்ட முகத்தில் அழகிய ஒளி
வீசும் மாதாகிய உமாதேவியார். அடியேன் மீது
திருவருள் வைத்து ஆண்டருளிய நாயகி.
சிவபெருமானது
திருமேனியில் இடது பாகத்தில் சேர்ந்துள்ள பார்வதி, சிவகாமி. மூன்று உலகங்களையும் படைத்த நாடகத்தினள். குமரி. உயிர்களுக்குச் சுகத்தையே
அருளும் காரண சக்தி, சிவனுடைய தேவி, ஒளி மயமான பராசத்தி. சாம்பவி ஆகிய உமை அம்மை அருளிய பாலகரே!
பேய்கள் இரத்தத்தில் நன்றாக முழுகிடவும், நரியும் கழுகும் வயிறு உப்பிப் பெருக்க, வாயை வைத்து உண்ணவும், அசுரர்கள் குலத்தை அழித்த
வேலாயுதத்தைக் திருக்கரத்தில் ஏந்தியவரே!
தேவர் மகளான தேவயானை அம்மை மீது ஆசை கொண்ட தேவரே!
குறவர் மகளாகிய வள்ளிநாயகியை ஆண்டவரே!
நாள்தோறும் அழகு விளங்கி சிறக்கும் காஞ்சியில்
வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
கலகல என்று அழகிய சிவந்த பாத
கிண்கிணியும், சிலம்பும் தாள
ஒத்துப் போல தாம் தனாம் என்று ஒலிக்க, தாமரை
மலர் போன்ற கைகளைக் கொண்டு தாம் தோம் என ஆடல்
பயில்கின்ற தந்திரத்தினர். செழிப்பு வாய்ந்த
தங்கள் அல்குல் விரிவடைய, காந்தள் மலரை ஒத்த
ஒரு பிடி அளவே உள்ள மெல்லிய இடையில் பட்டாடை பொருந்திய ஆலிலை போன்ற வயிற்றுடனும், அழகு மிக்க கனத்த தனங்கள் தங்கிய மார்பில்
முத்துவடம் ஆட, சலசல சச்ச என்று ஒலிக்கும் சிவந்த
கைகளில் வளையல்கள் ஒலிக்க, நறுமணம் வீசும்
பச்சைப் பொட்டு பொருந்தி விளங்கும் தாமரை போன்ற முகத்தில் உள்ள வாள் போன்ற
கண்கள் சுழன்று அசைய, முத்துப் போன்ற
பற்கள் ஒளி வீச, சிவந்த ஆம்பல் போன்ற
வாயிதழைக் கொண்டவர்கள், சிறந்த மேகம் போன்ற முடித்த கூந்தலை உடையவர்கள், சரச மொழிகளைப் பேசி
புணர்கின்ற, புலால் உண்ணும் விலைமாதர்களுடன் உறவு கொள்வது நன்மை தருமோ?
விரிவுரை
இத்
திருப்புகழின் முற்பகுதியில் பொதுமாதரின் அவயவங்களை வருணித்தார் அடிகளார்.
பிற்பகுதியில், உமையம்மையின் திருநாமங்களைக் கூறி அருளினார்.
கருத்துரை
கச்சிப் பதி முருகா! பொதுமாதர்
உறவு ஆகாது.
No comments:
Post a Comment