அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கறுக்கப் பற்று (காஞ்சிபுரம்)
முருகா!
பொதுமாதர் மயலை நீக்கி,
உனது மலர்ப்பதம் அருள்
தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கறுக்கப்பற்
றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்
பிறக்கிட்டுப் படக்கற்பித் ......
திளைஞோர்தங்
கழுத்தைச்சிக்
கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட்
டுருக்கிக்கற் பழிக்கப்பொற் ......
பெழுகாதல்
புறப்பட்டுக்
களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற்
பணிக்கட்டிற் புறத்துற்றுப் ...... புணர்மாதர்
பொருத்தத்தைத்
தவிர்த்துச்சற் றிரட்சித்துப் புரப்பப்பொற்
பதத்தைப்பெற் றிருக்கைக்குப் ......
பெருவேனோ
திறற்கொக்கைப்
படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்
கரிக்குப்புத் திரற்குற்றுத் ......
தளைபூணச்
சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத்
திரத்தத்திற் சிரித்துற்றுப் ......
பலபேய்கள்
பறிக்கப்பச்
சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்
பரப்பொய்க்கட் டறப்புக்குப் ...... பொருதோனே
பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப்
படைக்கச்சிப் பதிச்சொக்கப் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கறுக்கப்
பல் துவர்ப்பு இட்டு, சிரித்து, சற்று உறுக்கி, கண்
பிறக்கிட்டு, படக் கற்பித்து ...... இளைஞோர் தம்
கழுத்தைச்
சிக்கெனக் கட்டி, தனச் செப்புப் பட குத்திட்டு,
உருக்கி, கற்பு அழிக்க, பொற்பு ...... எழு காதல்
புறப்பட்டு, களிக்க, கற்புரத்தைப் பிட்டு, அரக்கி, பொன்
பணிக்கட்டில் புறத்து உற்றுப் ......
புணர்மாதர்,
பொருத்தத்தைத்
தவிர்த்து, சற்று இரட்சித்துப்
புரப்ப, பொன்
பதத்தைப் பெற்று இருக்கைக்குப் ...... பெறுவேனோ?
திறல் கொக்கைப்
படக்குத்தி, செருக்கிக் கொக்கரித்து, சக்-
கரிக்கு புத்திரற்கு உற்றுத் ......
தளைபூணச்
சினத்து, பொன் பொருப்பைப் பொட்டு எழுத்தி, திக்கரித்து, புத்து
இரத்தத்தில் சிரித்து உற்று, ...... பலபேய்கள்
பறிக்க, பச்சு இறைச்சிக் கன் கறிக் குப்பை, சிர சிக்குப்
பரப்பு ஒய் கட்டு அறப்புக்குப் ...... பொருதோனே!
பணி, செச்சைத் தொடை, சித்ரப் புயத்து, உக்ரப் படைச் சத்திப்
படை, கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
பதவுரை
திறல் கொக்கைப் படக் குத்தி --- வலிமை
மிகுந்த மாமரத்தை அழியுமாறு குத்தியும்,
செருக்கிக் கொக்கரித்து --- பெருமிதத்துடன்
வீர முழக்கம் செய்து, கர்ச்சித்து
சக்கரிக்குப் புத்திரற்கு --- திருமாலின் புதல்வனாகிய
பிரமனுக்கு,
உற்றுத் தளை பூண சினத்து --- பொருந்தும்படி
விலங்கை பூட்டுமாறு கோபித்தும்,
பொன் பொருப்பை --- பொன் மலையாகிய
கிரவுஞ்சத்தை
பொட்டு எழுத்தித் திக்கரித்து --- தூள்
எழுமாறு பொடி ஆக்கியும், அதை நிந்தித்தும்,
புத்து இரத்தத்தில் சிரித்து உற்று --- புதிய
உதிரத்தில் சிரிப்புடன் அடைந்து,
பல பேய்கள் --- பல பேய்கள்
பச்சு இறைச்சிக் கண் கறிக் குப்பை பறிக்க ---
பச்சை மாமிசங்களில் கடித்துத் தின்னக் கூடிய குவியல்களைக் கவர்ந்து,
சிரச் சிக்குப் பரப்பு ஒய்க் கட்டு அற
--- கிடைக்குமோ என்றிருந்த பேய்களுக்கு
மிகுந்த சந்தேகமும் ஆத்திரமும் அப் பேய்களுக்கு வேகத்தில் அடியோடு நீங்கும்படி,
புக்குப் பொருதோனே --- போர்க்களத்தில்
சென்று போர் புரிந்தவரே!
பணி --- அணிகலமாக
செச்சைத் தொடை --- வெட்சி மாலையை அணிந்த
சித்ரப் புயத்து --- அழகிய தோள்களில்
உக்ரப் படை --- உக்கிரம் பொருந்திய ஆயுதமாகிய
சத்திப் படை --- சக்தி வேற்படையைக் கொண்ட,
கச்சிப்பதிச் சொக்கப் பெருமாளே ---
காஞ்சீபுரத்தில் எழுந்தருளி உள்ள அழகிய பெருமையில் சிறந்தவரே!
கறுக்கப் பல் துவர்ப்பு இட்டு --- பற்கள்
கறை ஏறும்படி (பாக்கு வெற்றிலையால் சிவப்பு நிறம் ஏறச் செய்தும்,
சிரித்து --- புன்னகை புரிந்தும்,
சற்று உறுக்கி --- கொஞ்சம் அதட்டியும்,
கண் பிறக்கிட்டு --- கண்களைச் சுழற்றியும்
படக் கற்பித்து --- உள்ளத்தில் படுமாறு
காமலீலைகளைக் கற்பித்து,
இளைஞோர் தம் கழுத்தைச் சிக்கெனக் கட்டி
--- இளைஞர்களுடைய கழுத்தை அழுந்தக் கட்டிக் கொண்டு,
தனச்செப்புப் படக் குத்திட்டு --- சிமிழை
ஒத்த கொங்கைகள் படும்படி இறுக அணைத்து,
உருக்கி --- ஆடவரின் உள்ளத்தை உருகச்
செய்து,
கற்பு அழிக்க --- அவரது கல்வி அறிவு
அழியுமாறு,
பொற்பு எழு காதல் புறப்பட்டுக் களிக்க ---
மிகுதியாக எழுகின்ற காம ஆசை தோன்றி, இன்பத்தைக்
கொடுக்க,
கற்புரத்தைப் பிட்டு அரக்கி --- பச்சைக்
கற்பூரத்தைப் பொடி செய்து தேய்த்து,
பொன் பணிக் கட்டில் புறத்து உற்று --- அழகாக
அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மேல் சேர்ந்து,
புணர் மாதர் பொருத்தத்தைத் தவிர்த்து --- மருவுகின்ற
பொதுமாதர்களின் சேர்க்கையை நீக்கி,
சற்று இரட்சித்துப் புரப்ப --- சிறிதேனும் அடியேனைக் காத்தருளி,
பொன் பதத்தைப் பெற்று இருக்கைக்குப்
பெறுவேனோ --- உமது அழகிய திருவடியைப் பெற்றிருக்கும் பேற்றினைப் பெறுவேனோ?
பொழிப்புரை
வலிமை மிகுந்த மாமரத்தை அழியுமாறு
குத்தியும், பெருமிதத்துடன் வீர
முழக்கம் செய்து, கர்ச்சித்து, திருமாலின்
புதல்வனாகிய பிரமனுக்குப் பொருந்தும்படி விலங்கை பூட்டுமாறு கோபித்தும், பொன் மலையாகிய கிரவுஞ்சத்தை தூள்
எழுமாறு பொடி ஆக்கியும், அதை நிந்தித்தும், புதிய உதிரத்தில் சிரிப்புடன் அளைந்து, பல பேய்கள் பச்சை மாமிசங்களில்
கடித்துத் தின்னக் கூடிய குவியல்களைக் கவர்ந்து, கிடைக்குமோ
என்றிருந்த பேய்களுக்கு மிகுந்த சந்தேகமும் ஆத்திரமும் அப் பேய்களுக்கு வேகத்தில்
அடியோடு நீங்கும்படி, போர்க் களத்தில்
சென்று போர் புரிந்தவரே!
அணிகலமாக வெட்சி மாலையை அணிந்த அழகிய
தோள்களில் உக்கிரம் பொருந்திய ஆயுதமாகிய சக்தி வேற் படையைக் கொண்ட, காஞ்சீபுரத்தில் எழுந்தருளி உள்ள அழகிய
பெருமையில் சிறந்தவரே!
பற்கள் கறை ஏறும்படி (பாக்கு
வெற்றிலையால் சிவப்பு நிறம் ஏறச் செய்தும், புன்னகை புரிந்தும், கொஞ்சம் அதட்டியும், கண்களைச் சுழற்றியும் உள்ளத்தில்
படுமாறு காமலீலைகளைக் கற்பித்து,
இளைஞர்களுடைய
கழுத்தை அழுந்தக் கட்டிக் கொண்டு,
சிமிழை
ஒத்த கொங்கைகள் படும்படி இறுக அணைத்து, ஆடவரின்
உள்ளத்தை உருகச் செய்து, அவரது கல்வி அறிவு
அழியுமாறு, மிகுதியாக எழுகின்ற
காம ஆசை தோன்றி, இன்பத்தைக் கொடுக்க, பச்சைக் கற்பூரத்தைப் பொடி செய்து
தேய்த்து, அழகாக
அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மேல் சேர்ந்து மருவுகின்ற பொதுமாதர்களின் சேர்க்கையை
நீக்கி, சிறிதேனும் அடியேனைக் காத்தருளி, உமது அழகிய திருவடியைப் பெற்றிருக்கும்
பேற்றினைப் பெறுவேனோ?
விரிவுரை
முதல்
மூன்று அடிகளில் பொதுமாதர்களின் சாகசங்களைக் கூறி, ஆசை மயக்கத்தை அறுக்க, அடிகளார் முருகனை வேண்டுகின்றார்.
கறுக்கப்
பல் துவர்ப்பு இட்டு ---
பல்லில்
கறை ஏறும்படி, வெற்றிலையையும்
பாக்கையும் இட்டு, பல்லும் வாயும்
சிவக்கச் செய்வர் சிலர்.
ஞானிகள்
இதை வெறுக்கின்றார்கள். அடியில் வரும் பட்டினத்துச் சுவாமிகளின் பாடலைப்
பார்க்கவும்.
கறையற்ற
பல்லும், கரித்துணி ஆடையும், கள்ளம் இன்றி
பொறைஉற்ற
நெஞ்சமும், பொல்லாத ஊணும், புறந்திண்ணையும்,
தரையில்
கிடப்பும், இரந்து உண்ணும் ஓடும், சகம்அறிய
குறைவுஅற்ற
செல்வம் என்றே கோல மாமறை கூப்பிடுமே.
துவர்த்தல்
- சிவத்தல்.
மாதர்
பொருத்தம் தவிர்ந்து ---
பொன்னாசையும், மண்ணாசையும் மனிதப் பிறப்பிலே மட்டும்
பற்றுவன. பெண்ணாசை பிரமா முதல் புழு வரை
எல்லாப் பிறவிகளுக்கும் உண்டு. பிறவிகள்
தோறும் தொடர்ந்து பற்றி வரும் இயல்பு உடையது.
ஆதலின், இம் மாதர் ஆசையை
முருகன் திருவருள் ஒன்றினாலேயே நீக்க வேண்டும்.
அதனால், முருகா இந்தத்
தையலார் மையலைப் போக்கி அருள் என்று அடிகளார் முறையிடுகின்றார்.
சற்று
இரட்சித்துப் புரப்ப ---
இரட்சித்தல், புரத்தல் என்னும் இரு சொற்களும் காத்தல்
என்னும் பொருளையே குறிக்கும். இப்படி வந்த
காரணம் நன்கு காத்தருள் என்று பொருள் பயக்குமாறு என உணர்க.
பொன்
பதத்தைப் பெற்று இருக்கைக்குப் பெறுவேனோ ---
பொன்
- அழகு. முருகனுடைய அழகிய திருவடியைப்
பெற்றால் ஆன்மா பிறவிப் பிணி நீங்கப் பெறுகின்றது.
முருகவேளின்
பதமே எல்லாப் பதங்களிலும் மேலானது. அத்
திருவடி அரியும் அயனும் அளக்க முடியாதது.
அரிப்பிரமர்
அளப்பரிய பதக்கமலம் அருள்வாயே.. --- (குறிப்பரிய) திருப்புகழ்.
திறல்
கொக்கைப் படக் குத்தி ---
திறல்
- வலிமை. கொக்கு - மாமரம்.
சூரபன்மன்
போரின் முடிவில் கடலின் நடுவே மாமரமாக நின்று ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் நிழல்
படுமாறு கிளைகளை அசைத்து உலகங்கட்குத் துன்பம் புரிந்தான். இருப்பு மயமான அம் மாமரத்தை முருகவேள் வேலினால்
அடியுடன் பிளந்து அழித்து அருளினார்.
திக்கரித்து ---
திக்கரித்தல்
- நிந்தித்தல். கிரவுஞ்ச மலையின் மாயச்
செயல்களை முருகப் பெருமான் நிந்தித்தார்.
சக்கரிக்குப்
புத்திரற்கு ---
சங்கு
அரிக்குப் புத்திரர் ஆகிய பிரமன். சங்கைத் திருக்கரத்திலே கொண்ட அரியின் புதல்வன்.
"சங்கு" என்னும் சொல் காதலின் சந்தத்தை நோக்கி, "சக்கு" என வந்தது
பணிச்
செச்சைத் தொடை ---
செச்சை
- வெட்சி மலர். தொடுக்கப்பட்டதனால் தொடை
எனப்பட்டது. முருகனுக்கு உவந்த மலர்களில்
வெட்சியும் ஒன்று.
சித்ரப்
புயத்து உக்ரப்படைச் சத்திப்படை ---
சித்ரம்
- அழகு. உக்ரம் - வேகம். சத்தி - வேல்.
அழகிய
புயத்தில் வேலைத் தாங்கி அருள் புரிகின்றார் முருகர்.
கருத்துரை
கச்சி
மேவும் கந்தவேளே, மாதர் ஆசை தவிர உன்
மலர்ப் பதம் தந்து அருள்.
No comments:
Post a Comment