அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கறை இலங்கு
(காஞ்சீபுரம்)
முருகா!
ஞானாசாரியன் திருவடி நிலையை அருள்
தனதனந்
தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ......
தனதான
கறையிலங்
குக்ரச் சத்தித ரிக்குஞ்
சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்
கரவடன் கொற்றக் குக்குட வத்தன் ......
தனிவீரக்
கழலிடும்
பத்மக் கட்செவி வெற்பன்
பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்
கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந்
...... தமிழ்பாடிக்
குறையிலன்
புற்றுக் குற்றம றுக்கும்
பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்
குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன்
...... றிலதான
குணமடைந்
தெப்பற் றுக்களு மற்றுங்
குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்
குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங்
...... கிடையாதோ
பிறைகரந்
தைக்கொத் துப்பணி மத்தந்
தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்
பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன்......றையும்வேணிப்
பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ்
சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங் ......
கயவாவி
திறைகொளுஞ்
சித்ரக் குத்துமு லைக்கொம்
பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்
த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின்
...... திருவான
தெரிவையந்
துர்க்கிச் சத்தியெ வர்க்குந்
தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்
சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும்
......பெருமாளே.
பதம் பிரித்தல்
கறை
இலங்கு உக்ரச் சத்தி தரிக்கும்
சரவணன், சித்தத்துக்குள் ஒளிக்கும்
கரவடன், கொற்றக் குக்குட அத்தன், ...... தனிவீரக்
கழல்
இடும் பத்மக் கட்செவி வெற்பன்,
பழநிமன், கச்சிக் கொற்றவன், மற்றும்
கடக வஞ்சிக்குக் கர்த்தன் என, செந் ...... தமிழ்பாடி,
குறை
இல் அன்பு உற்று, குற்றம் அறுக்கும்
பொறைகள் நந்த, அற்பப் புத்தியை விட்டு, என்
குணம் அடங்கக்கெட்டு, குணம் மற்றுஒன்று ...... இலதுஆன
குணம்
அடைந்து, எப் பற்றுக்களும் அற்றும்,
குறியொடும் சுத்தப் பத்தர் இருக்கும்
குருபதம் சித்திக்கைக்கு அருள் சற்றும்
...... கிடையாதோ?
பிறை, கரந்தைக் கொத்து, பணி, மத்தம்,
தலை எலும்பு, அப்பு, கொக்கிறகு, அக்கம்,
பிரமன் அன்று எட்டற்கு அற்ற திருக் கொன்......றையும், வேணிப்
பிறவும்
நின்று ஒக்கத் தொக்கு மணக்கும்
சரணி, அம் பத்மக் கைக்கொடி, முக்கண்
பெறு கரும்பு, அத் தக்கத்து அருள், நல் பங் ...... கய,வாவி
திறை கொளும்
சித்ரக் குத்து முலைக் கொம்பு,
அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும்
த்ரிபுரை, செம் பட்டுக் கட்டு நுசுப்பின் ......திரு
ஆன
தெரிவை, அம் துர்க்கி, சத்தி, எவர்க்குந்
தெரிவரும் சுத்தப் பச்சை நிறப்பெண்
சிறுவ! தொண்டர்க்குச் சித்தி அளிக்கும்
......பெருமாளே.
பதவுரை
பிறை, கரந்தைக் கொத்து, பணி, மத்தம், --- பிறைச்சந்திரன், திருநீற்றுப் பச்சைக் கொத்துகள், பாம்பு, ஊமத்தம் மலர்,
தலை, எலும்பு, அப்பு, கொக்கின் இறகு, அக்கம் --- பிரமசிரங்கள், எலும்புகள், கங்கை நீர், கொக்கின் இறகு, உருத்திராக்க மாலை
பிரமன் அன்று எட்டற்கு அற்ற ---
பிரமதேவன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த
திரு கொன்றையும் வேணி --- அழகிய கொன்றைமலர்
இவை எல்லாம் அணிந்த சடைமுடியும்
பிறவு நின்று ஒக்க தொக்கு --- மற்றவைகளும்
விளங்கி ஒன்று சேர்ந்து கூடி
மணக்கும் சரணி --- மணம் வீசும் திருவடியை
உடையவரும்,
அம் பத்ம கைக் கொடி --- அழகிய தாமரை போன்ற
திருக்கரத்தை உடைய கொடி போன்றவரும்,
முக்கண் பெறு கரும்பு--- மூன்று கண்களை
உடைய கரும்பு போன்றவரும்,
அத் தக்கது அருள் --- அந்தத் தக்கதான பொருளை
அடியார்க்கு அருள் செய்பவரும்,
நல் பங்கய வாவி திறை கொளும் --- நல்ல
குளத்தில் விளங்கும் தாமரை மலரைக் கப்பம் கட்டச் செய்யும்
சித்ரக் குத்து முலைக் கொம்பு --- அழகிய, திரண்டு குவிந்த மார்பகங்களைக் கொண்ட கொம்பு போன்றவரும்,
அறியும் --- எல்லாவற்றையும்
அறிகின்றவரும்,
அம் தத்தை --- அழகிய கிளி
கைக்கு அகம் மொய்க்கும் த்ரிபுரை --- கையில்
பயின்று இருக்கும் சந்திர கண்டம்,
சூரிய
கண்டம், அக்கினி கண்டம்
என்னும் முப்பிரிவை உடைய சக்கரத்துக்குத் தலைவியும்,
செம்பட்டுக் கட்டு நுசுப்பின் --- சிவந்த
பட்டு ஆடை உடுத்துள்ள இடையை உடைய,
திருவான தெரிவை --- தெய்வத் தன்மை உடைய பெண்மணியாரும்,
அம் துர்க்கி --- அழகிய துர்க்கா
தேவியும்,
சத்தி --- பேராற்றல் மிக்கவரும்,
எவர்க்கும் தெரி அரும் --- எல்லோருக்கும்
தெரிவதற்கு அரிதான
சுத்த பச்சை நிற பெண் சிறுவ --- சுத்தமான
பச்சை நிறம் கொண்ட மாதும் ஆகிய உமாதேவியாரின் திருக்குமாரரே!
தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே
--- அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் பெருமையில் சிறந்தவரே!
கறை இலங்கும் உக்ரச் சத்தி தரிக்கும்
சரவணன் --- இரத்தக் கறை விளங்கும் உக்கிரம் பொருந்திய வேற்படையை ஏந்தும்
சரவணமூர்த்தி,
சித்தத்துக்குள் ஒளிக்கும் கரவடன் ---
மனத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் திருடன்,
கொற்றக் குக்குட அத்தன் --- வீரம்
வாய்ந்த கோழிக் கொடியை ஏந்திய திருக்கையினன்,
தனி வீரக்கழல் இடும் பத்ம --- வீரக்கழலை
அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியை உடையவன்,
கண் செவி வெற்பன் --- ஒப்பற்ற நாககிரி ஆகிய
திருச்செங்கோட்டு மலையினர்,
பழநி மன் --- பழநி மலைக்கு அரசர்,
கச்சிக் கொற்றவன் --- காஞ்சீபுரத்து வீரர்,
மற்றும் கடக வஞ்சிக்கு கர்த்தன் --- பின்னும்
கங்கணம் தரித்த கொடி போன்ற வள்ளிக்குத் தலைவன்
எனச்செம் தமிழ் பாடி --- என்று செந்தமிழ்ப்
பாக்களைப் பாடி,
குறை இல் அன்புற்று --- குறைவு படாத
அன்பு பூண்டு,
குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த --- குற்றங்களை
விலக்கவல்ல பொறுமைக் குணம் சிறந்து மேம்பட,
அற்பப் புத்தியை விட்டு --- அற்பமான புத்தியை
ஒழித்து,
என் குணம் அடங்கக் கெட்டு --- அடியேன்பால்
இப்போது உள்ள தீய குணங்கள் எல்லாம் கெட்டு,
குணம் மற்று ஒன்று
இலதான குணம் அடைந்து --- குணம் வேறு ஒன்று இல்லாததான ஒரே நிலையான நற்குணம் ஒன்றையே
அடைந்து,
எப் பற்றுக்களும் அற்று --- எல்லாவிதமான
பற்றுக்களையும் ஒழித்து,
குறியொடும் சுத்த பத்தர் இருக்கும்
குருபதம் சித்திக்கைக்கு --- இறைவனுடைய அருட்குறி ஒன்றையே கருதும் பரிசுத்தமான
அடியார்கள் இருக்கும் ஞானாசாரிய நிலை அடியேனுக்குக் கை கூடுவதற்கு
அருள் சற்றும் கிடையாதோ --- உமது திருவருள்
சற்றேனும் எனக்குக் கிடைக்காதோ?
பொழிப்புரை
பிறைச்சந்திரன், திருநீற்றுப் பச்சைக் கொத்துகள், பாம்பு, ஊமத்தம் மலர், பிரமசிரங்கள், எலும்புகள், கங்கை நீர், கொக்கின் இறகு, உருத்திராக்க மாலை, பிரமதேவன் முன்பு எட்டுதற்கு அரிதாக
இருந்த அழகிய கொன்றைமலர் இவை எல்லாம் அணிந்த சடைமுடியும், மற்றவைகளும் விளங்கி ஒன்று சேர்ந்து
கூடி மணம் வீசும் திருவடியை உடையவரும், அழகிய
தாமரை போன்ற திருக்கரத்தை உடைய கொடி போன்றவரும், மூன்று கண்களை உடைய கரும்பு போன்றவரும், அந்தத் தக்கதான பொருளை அடியார்க்கு
அருள் செய்பவரும், நல்ல குளத்தில்
விளங்கும் தாமரை மலரைக் கப்பம் கட்டச் செய்யும் அழகிய, திரண்டு குவிந்த மார்பகங்களைக் கொண்ட கொம்பு போன்றவரும், எல்லாவற்றையும்
அறிகின்றவரும், அழகிய கிளி கையில்
பயின்று இருக்கும் சந்திர கண்டம்,
சூரிய
கண்டம், அக்கினி கண்டம்
என்னும் முப்பிரிவை உடைய சக்கரத்துக்குத் தலைவியும், சிவந்த பட்டு ஆடை உடுத்துள்ள இடையை உடைய, தெய்வத் தன்மை உடைய பெண்மணியாரும், அழகிய துர்க்கா
தேவியும், பேராற்றல் மிக்கவரும், எல்லோருக்கும் தெரிவதற்கு அரிதான
சுத்தமான பச்சை நிறம் கொண்ட மாதும் ஆகிய உமாதேவியாரின் திருக்குமாரரே!
அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும்
பெருமையில் சிறந்தவரே!
இரத்தக் கறை விளங்கும் உக்கிரம் பொருந்திய வேற்படையை ஏந்தும் சரவணமூர்த்தி, மனத்தில் ஒளிந்து கொண்டிருக்கும்
திருடன், வீரம் வாய்ந்த கோழிக் கொடியை ஏந்திய திருக்கையினன், ஒப்பற்ற
வீரக்கழலை அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியை உடையவன், நாககிரி ஆகிய திருச்செங்கோட்டு
மலையினர், பழநி மலைக்கு அரசர், காஞ்சீபுரத்து வீரர், பின்னும் கங்கணம் தரித்த கொடி போன்ற
வள்ளிக்குத் தலைவன் என்று செந்தமிழ்ப் பாக்களைப் பாடி, குறைவு படாத அன்பு பூண்டு, குற்றங்களை விலக்கவல்ல பொறுமைக் குணம்
சிறந்து மேம்பட, அற்பமான புத்தியை
ஒழித்து, அடியேன் பால் இப்போது
உள்ள தீய குணங்கள் எல்லாம் கெட்டு,
குணம்
வேறு ஒன்று இல்லாததான ஒரே நிலையான நற்குணம் ஒன்றையே அடைந்து, எல்லாவிதமான பற்றுக்களையும் ஒழித்து, இறைவனுடைய அருட்குறி ஒன்றையே கருதும்
பரிசுத்தமான அடியார்கள் இருக்கும் ஞானாசாரிய நிலை அடியேனுக்குக் கை கூடுவதற்கு
உமது திருவருள் சற்றேனும் எனக்குக் கிடைக்காதோ?
விரிவுரை
கறை
இலங்கு உக்ரச் சத்தி தரிக்கும் சரவணன் ---
கறை
- உதிரக் கறை. வேலில் பகைவருடைய உதிரக்
கறை படிந்து இருக்கின்றது.
உக்ரம்
- வேகம். சத்தி - ஞானவேல். சரம் - தருப்பை. வனம் - காடு.
தருப்பை
வனம் சூழ்ந்த சரவணப் பொய்கையில் தோன்றியவர்.
சித்தத்துள்
ஒளிக்கும் கரவடன் ---
உள்ளத்துள்
இறைவன் ஒளிந்து இருக்கின்றான்.
ஓராதார்
உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியானே …. --- திருவாசகம்.
வெள்ளம்
எல்லாம் விரிசடைமேல்ஓர் விரிகொன்றை
கொள்ள
வல்லான் குரைகழல் ஏத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ளம்
எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன்ஆடும்
கள்ளம்
வல்லான் காதல்
செய்கோயில் கழுக்குன்றே.
--- திருஞானசம்பந்தர்.
பண்டே
பயில்தொறும் இன்றே பயில்தொறும்
ஒளிக்கும்
சேரனைக் கண்டனம்,
ஆர்மின், ஆர்மின், நாள்மலர்ப் பிணையலில்
தாள்தளை
இடுமின்... --- திருவாசகம்.
கொற்றக்
குக்குட அத்தன் ---
குக்குடக்
கொடி ஏந்திய கரத்தினன். அத்தம் - கை.
கு
- பூமி. குடம் - பேதிப்பது. பூமியை மூக்கினால் பேதிப்பது கோழி. இது நாத தத்துவம்.
ஒரு
கார் போகும்போது, அதன் ஆரன் ஒலி முன்னே
எச்சரிப்பது போல, முருகவேள் மயிலில்
ஏறிச் செல்லும்போது, சேவலின் இனிய நாதம்
எங்கும் முழங்கும்.
சென்றே
இடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல்
கொண்டு வரவேணும்... ---
(அன்பாகவந்து)
திருப்புகழ்.
தனிவீரக்
கழல் இடு பத்மம் ---
பத்மம்
- தாமரை. உவம ஆகுபெயராகத் திருவடியைக்
குறிக்கின்றது. வீரர்களின் பாதத்தில்
வீரக் கழல் விளங்கும்.
கட்செவி
வெற்பன் ---
கட்செவி
- பாம்பு. பாம்பு கண்ணையே காதாக
உடையது. கட்செவி வெற்பு - பாம்புமலை -
நாககிரி. திருச்செங்கோடு.
கர்த்தன்
எனச் செந்தமிழ் பாடி ---
முருகனுடைய
புகழையும் நாமத்தையும் கூறி செந்தமிழால் கவி பாடித் துதிக்க வேண்டும்.
பொறைகள்
நந்த அற்பப் புத்தியை விட்டு ---
பொறைகள்
நந்த அற்பப் புத்தி என்று பதப்பிரிவு செய்க.
நந்த – வளர்ச்சியடைய.
என்குணம்
அடங்கக் கெட்டு ---
ஆன்மாவின்
கீழான குணங்கள் யாவும் ஒழிய வேண்டும்.
குணம்
மற்று ஒன்று இலதான குணம் அடைந்து ---
வேறு
உலக குணங்கள் இல்லாததான, அருட்குணங்களை அடைதல்
வேண்டும்.
குறியொடும்
சுத்தப் பத்தர் இருக்கும் குருபதம் சித்திக்கைக்கு ---
குறி
- இறைவனுடைய அருட்குறி. அக் குறியைக் குறித்து அறியும் நெறியைக் கொண்ட உத்தம
பத்தர்கள் இருக்கும் பெருமை பொருந்திய ஞானகுருவாக விளங்கும் ஒரு தலைமை அடியேனுக்கு
உண்டாகத் தேவரீரின் திருவருள் சிறிதேனும் கிடைக்க மாட்டாதோ.
போது
சேர்அயன் பொருகடல் கிடந்தோன்
புரந்தர ஆதிகள் நிற்க, மற்று என்னைக்
கோது
மாட்டி, நின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள்க என்றுநின் தொண்டரில் கூட்டாய்
யாது
செய்வது என்று இருந்தனன் மருந்தே,
அடிய னேன் இடர்ப் படுவதும் இனிதோ?
சீத
வார்புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. --- மணிவாசகம்.
குறியைக்
குறியாது குறித்து அறியும்
நெறியைத்
தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு
அற்று, உலகோடு உரை சிந்தையும்
அற்று
அறிவு
அற்று, அறியாமையும் அற்றதுவே. --- கந்தர் அநுபூதி.
கொன்றையும்
வேணி பிறவும் நின்று ஒக்கத் தொக்கு மணக்கும் சரணி ---
சிவபெருமான்
உமாதேவியாரது ஊடலைத் தணிக்கும் பொருட்டு சிரத்தைத் தாழ்த்தி வணங்குகின்றார். அதனால் சிவமூர்த்தியின் திருமுடியில் உள்ள மதி, நதி, கரந்தை, பாம்பு, ஊமத்தம் முதலியன உமாதேவியாருடைய
திருவடியில் பட்டுக் கமழ்கின்றன.
பக்கத்தில்
ஒன்றுபடு பச்சைப் பசும்கவுரி
பத்மப்
பதம் கமழ்தரும்
பாகீரதிச்
சடில யோகீசுரர்... … ---
மயில் விருத்தம்.
திங்கள்
பகவின் மணநாறு சீறடி.... --- அபிராமி அந்தாதி.
அத்
தக்கத்து அருள் ---
தக்கது
என்ற சொல் சந்தத்தை நோக்கி, தக்கத்து என வந்தது.
உமாதேவியார்
தமது அடியவர்க்கு எது தக்கதோ அதை வழங்கி அருளுவர்.
வேண்டத்
தக்கது அறிவோய் நீ.. --- மணிவாசகம்.
தொண்டர்க்குச்
சித்தியளிக்கும் பெருமாளே ---
முருகவேள்
தமது தொண்டர்க்கு வீடுபேற்றை அருள வல்லவர்.
கருத்துரை
கச்சி
மேவும் கௌரி பாலனே, குருபதம் மேவ அருள்
செய்வாய்.
No comments:
Post a Comment