அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கன க்ரவுஞ்சத்தில்
(காஞ்சீபுரம்)
முருகா!
அருள் நூல்களைக் கற்று,
மருள் நூல்களில் விருப்பம்
ஒழிந்து,
இனிய தமிழ் வாக்கினைப்
பெற அருள்.
தனதனந்
தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ......
தனதான
கனக்ரவுஞ்
சத்திற் சத்தியை விட்டன்
றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங்
கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும்
.....பரையாளுங்
கடவுளன்
புற்றுக் கற்றவர் சுற்றும்
பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்
கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் ......
ஜகதாதை
புனவிளந்
தத்தைக் கிச்சையு ரைக்கும்
புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும்
புதியவன் செச்சைப் புட்பம ணக்கும்
...... பலபாரப்
புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும்
பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும்
பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம்
......பெறுவேனோ
அனல்விடுஞ்
செக்கட் டிக்கய மெட்டும்
பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம்
பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன்
...... திடமாக
அடியொடும்
பற்றிப் பொற்கயி லைக்குன்
றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்
றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண்
...... டவனீடுந்
தனதொரங்
குட்டத் தெட்பல டுக்குஞ்
சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்
தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும்
...... பெரியோனுந்
தலைவியும்
பக்கத் தொக்கவி ருக்குஞ்
சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந்
தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும்
......பெருமாளே.
பதம் பிரித்தல்
கன
க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்ட,
அன்று
அசுரர் தண்டத்தைச் செற்று, அ இதழ்ப் பங்-
கயனை முன் குட்டி, கைத்தளை இட்டு, உம் .....பரை
ஆளும்
கடவுள், அன்பு உற்றுக் கற்றவர் சுற்றும்
பெரிய தும்பிக்கைக் கற்பக முன்தம்
கரதலம் பற்றப் பெற்ற ஒருத்தன், ...... ஜகதாதை,
புன
இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும்
புரவலன், பத்தர்க்குத் துணை நிற்கும்
புதியவன், செச்சைப் புட்பம் மணக்கும் ......
பலபாரப்
புயன்
எனும் சொல் கற்று, பிற கற்கும்
பசை ஒழிந்து, அத்தத்து இக்கு என
நிற்கும்,
பொருள் தொறும் பொத்தப் பட்டது, ஒர் அத்தம் .....பெறுவேனோ?
அனல் விடும்
செம்கண், திக் கயம் எட்டும்
பொர, அரிந்திட்டு, எட்டின் பகுதிக் கொம்பு
அணிதரும் சித்ரத்து ஒற்றை உரத்தன், ...... திடம்ஆக
அடியொடும்
பற்றி, பொன் கயிலைக் குன்று
அது பிடுங்கப் புக்கப் பொழுது, அக்குன்று
அணிபுயம் பத்துப் பத்தும் நெரிப்பு உண்
...... டவன், நீடும்
தனது
ஒர் அங்குட்டத்து எள் பல அடுக்கும்
சரி அலன், கொற்றத்து உக்ர அரக்கன்,
தசமுகன் கைக்குக் கட்கம் அளிக்கும்
......பெரியோனும்,
தலைவியும், பக்கத்து ஒக்க இருக்கும்
சயிலமும், தெற்குச் சற்குரு வெற்பும்,
தணியலும் பெற்று, கச்சியில் நிற்கும் ......பெருமாளே.
பதவுரை
அனல் விடும் செக்கண் --- நெருப்பைக் கக்குகின்ற
சிவந்த கண்களை உடைய
திக் கயம் எட்டும் --- எட்டுத் திக்கு
யானைகளும்
பொர --- போர் செய்ய,
அரிந்திட்டு --- தந்தங்களை அரிந்து
எட்டில் பகுதிக் கொம்பு அணி தரும் --- ஒடிந்து போன எட்டுக் கொம்புகளின் நுனித் துண்டுகளை அணிந்த
சித்ரத்து ஒற்றை உரத்தன் --- அழகிய ஒப்பற்ற
மார்பினனும்,
திடமாக அடியொடும் பற்றி --- உறுதியுடன், அடியோடு பிடித்து,
பொன் கயிலைக் குன்றது பிடுங்கப் புக்க பொழுது --- அழகிய கயிலை மலையைப் பிடுங்கப் புகுந்த போது,
அக் குன்று அணி புயம் பத்துப் பத்து
நெரிப்பு உண்டவன் --- அந்த மலை போன்ற புயங்கள் இருபதும் நெரிப்பு உண்டவனும்,
நீடும் தனது ஒர் அங்குட்டத்து எள் பல்
அடுக்கும் சரி அலன் --- நிலைத்துள்ள சிவனது ஒப்பற்ற பெரு விரலின் எள் நுனி
அளவுக்கும் ஈடாகாதவனும்,
கொற்றத்து உக்ர அரக்கன் --- வீர உக்ரம் கொண்ட அரக்கனும்,
தசமுகன் கைக்கு --- பத்துத் தலைகளை உடையவனும்
ஆகிய இராவணனுடைய கைகளுக்கு
கட்கம் அளிக்கும் பெரியோனும் --- வாள்
ஒன்றைப் பரிசாக அளித்த பெரியவராகிய சிவபெருமானும்,
தலைவியும் --- அவருடைய மனைவியாராகிய
பார்வதிதேவியும்
பக்கத்து ஒக்க இருக்கும் சயிலமும் ---
இருவரும் பக்கத்தில் ஒன்றுபட்டுச் சேர்ந்து இருக்கும் மலையாகிய திருச்செங்கோடும்,
தெற்குச் சற்குரு வெற்பும் --- தென்திசையில்
உள்ள உத்தமத் திருத்தலமாகிய குருமலை என்னும் சுவாமிமலையும்,
தணியலும் --- திருத்தணிகையும்,
பெற்று --- தாம் வீற்றிருக்கும் தலங்களாகப்
பெற்று
கச்சியில் நிற்கும் பெருமாளே --- காஞ்சி
மாநகரில் எழுந்தருளியுள்ள பெருமையில் சிறந்தவரே!
கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு --- பருத்த
கிரவுஞ்ச மலையின் மீது வேலாயுதத்தை விடுத்து,
அன்று அசுரர் தண்டத்தைச் செற்று --- அந்நாளில்
அசுரர்களின் படையை அழித்தும்,
அவ்விதழ்ப் பங்கயனை முன் குட்டி --- அந்த
இதழ்களை உடைய தாமரையில் வாழும் பிரமனை முன்பு தலையில் குட்டி,
கைத்தளை இட்டு --- கை விலங்கு இட்டு,
உம்பரை ஆளும் கடவுள் --- தேவர்களைக் காத்து
ஆண்ட கடவுள்,
அன்புற்றுக் கற்றவர் சுற்றும் --- அன்பு கொண்டு
கற்றறிந்த பெரியோர்கள் வலம் வரும்
பெரிய தும்பிக்கைக் கற்பகம் --- பெரிய துதிக்கையை
உடைய கற்பக விநாயகர்
முன் தம் கரதலம் பற்றப் பெற்ற ஒருத்தன் --- முன்பு
தனது கையால் எடுத்து மகிழப் பெற்ற ஒப்பற்றவர்,
ஜக தாதை --- உலகுக்கு ஒரு தந்தை,
புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும்
புரவலன் --- தினைப் புனத்தில் இருந்த இளமைப் பருவத்துக் கிளி போன்ற வள்ளிக்கு
காதல் மொழிகளைச் சொன்ன காவலர்,
பத்தர்க்குத் துணை நிற்கும் புதியவன் ---
பக்தர்களுக்குத் துணையாக நிற்கும் புதியவர்,
செச்சைப் புட்பம் மணக்கும் பல பாரப்புயன்
--- வெட்சிப் பூ மணம் வீசும் பல கனத்த புயங்களை உடையவர்
எனும் சொல் கற்று --- என்று துதிக்கின்ற சொற்களையே கற்று,
பிற கற்கும் பசை ஒழிந்து --- மற்ற நூல்களைக்
கற்கும் பற்று நீங்கி,
அத்தத்து இக்கு என நிற்கும் --- அர்த்தத்தில்
கரும்பு போல் இனித்து நிற்கும்,
பொருள் தொறும் பொத்தப்பட்டது --- ஒவ்வொரு
பொருள் தோறும் இனிமை பொதியப்படுவதாகிய
ஒர் அத்தம் பெறுவேனோ --- ஒப்பற்ற செல்வ
வாக்கை நான் பெறுவேனோ?
பொழிப்புரை
நெருப்பைக் கக்குகின்ற சிவந்த கண்களை
உடைய எட்டுத் திக்கு யானைகளும் போர் செய்ய, தந்தங்களை அரிந்து ஒடிந்து போன எட்டுக் கொம்புகளின் நுனித் துண்டுகளை அணிந்த அழகிய ஒப்பற்ற மார்பினனும், உறுதியுடன், அடியோடு பிடித்து, அழகிய கயிலை மலையைப் பிடுங்கப் புகுந்த போது, அந்த மலை போன்ற
புயங்கள் இருபதும் நெரிப்பு உண்டவனும், நிலைத்துள்ள சிவனது ஒப்பற்ற பெருவிரலின்
எள் நுனி அளவுக்கும் ஈடாகாதவனும்,
வீர
உக்ரம் கொண்ட அரக்கனும், பத்துத் தலைகளை
உடையவனும் ஆகிய இராவணனுடைய கைகளுக்கு வாள் ஒன்றைப் பரிசாக அளித்த பெரியவராகிய
சிவபெருமானும், அவருடைய மனைவியாராகிய
பார்வதிதேவியும் இருவரும் பக்கத்தில் ஒன்றுபட்டுச் சேர்ந்து இருக்கும் மலையாகிய
திருச்செங்கோடும், தென்திசையில் உள்ள
உத்தமத் திருத்தலமாகிய குருமலை என்னும் சுவாமிமலையும், திருத்தணிகையும், தாம் வீற்றிருக்கும் தலங்களாகப் பெற்று
காஞ்சி மாநகரில் எழுந்தருளியுள்ள பெருமையில் சிறந்தவரே!
பருத்த கிரவுஞ்ச மலையின் மீது
வேலாயுதத்தை விடுத்து, அந்நாளில்
அசுரர்களின் படையை அழித்தும், அந்த இதழ்களை உடைய
தாமரையில் வாழும் பிரமனை முன்பு தலையில் குட்டி, கை விலங்கு இட்டு, தேவர்களைக் காத்து ஆண்ட கடவுள், அன்பு கொண்டு கற்றறிந்த பெரியோர்கள்
வலம் வரும் பெரிய துதிக்கையை உடைய கற்பக விநாயகர் முன்பு தனது கையால் எடுத்து
மகிழப் பெற்ற ஒப்பற்றவர், உலகுக்கு ஒரு தந்தை, தினைப் புனத்தில் இருந்த இளமைப்
பருவத்துக் கிளி போன்ற வள்ளிக்கு காதல் மொழிகளைச் சொன்ன காவலர், பக்தர்களுக்குத் துணையாக நிற்கும்
புதியவர், வெட்சிப் பூ மணம்
வீசும் பல கனத்த புயங்களை உடையவர் என்று துதிக்கின்ற சொற்களையே கற்று, மற்ற நூல்களைக் கற்கும் பற்று நீங்கி, அர்த்தத்தில் கரும்பு போல் இனித்து
நிற்கும், ஒவ்வொரு பொருள் தோறும் இனிமை பொதியப்படுவதாகிய ஒப்பற்ற செல்வ வாக்கை நான் பெறுவேனோ?
விரிவுரை
கன
க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு ---
கனம்
- பருமை. கனம் - பொன்.
பருத்த
கிரவுஞ்ச கிரி. அல்லது பொன் நிறமான கிரவுஞ்ச கிரி. மாயைக்கு உறைவிடமாய் தாரகனுக்குத் துணை செய்த
கிரவுஞ்ச மலைமீது, முருகவேள்
வேலாயுதத்தை ஏவி அருளினார்.
அன்பு
உற்றுக் கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கைக் கற்பகம் ---
அன்புடன்
அறிவு நூல்களை ஓதிய ஞானிகளால் வலம் வந்து வணங்கப்படுகின்றவர் கணபதி. கற்பகம் போல் அடியவர்க்கும் வரம் வழங்குவர். அதனால்
கற்பக விநாயகர்.
கற்றிடும்
அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம்
என, வினை கடிது ஏகும்... ---
(கைத்தல) திருப்புகழ்.
கரதலம்
பற்றப் பெற்ற ஒருத்தன் ---
விநாயகர்
தன் தம்பியாகிய இளங்குமரனை பழம்போல் கையில் எடுத்து மகிழ்வார்.
புதியவன் ---
இறைவன்
பழைமைக்கும் பழைமையானவன். புதுமைக்கும்
புதுமையானவன்.
முன்னைப்
பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப்
புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே.. --- திருவாசகம்.
புயன்
எனும் சொல் கற்று –--
முருகனைத்
துதி செய்யும் இனிய சொற்களையே கற்கவேண்டும்.
அதுதான் கல்வி.
பிற
கற்கும் பசை ஒழிந்து ---
இறைவனைப்
பற்றிப் பேசாத மற்ற நூல்களைக் கற்கவேண்டும் என்ற விருப்பம் அறவே போக வேண்டும்.
அத்தத்து இக்க் என நிற்கும் பொருள்தொறும் பொத்தப்பட்டதொர் அத்தம் பெறுவேனோ ---
சொற்பொருள்
கரும்புபோல் இனிக்கவும், அச் சொல் பொருள்தோறும்
இனிமை பொதிந்த ஒரு செல்வ அமுதவாக்கைப் பெறவேண்டும் என்று அடிகளார் முருகவேளிடம்
வேண்டுகின்றார்.
அனல்விடும்
…. கொம்பணி.... யுரத்தன் ---
இராவணன்
திக்கு விஜயம் புரிந்தபோது, திசையானைகள் எட்டும்
எதிர்த்து அவனுடன் போர் புரிந்தன. எட்டு யானைகளும் வலிய தந்தத்தால் அவன் மார்பில்
குத்தின. அவன் எழுந்து சுழன்றான். யானைகள்
மார்பில் தொங்கிச் சுழன்றன. வாளினால் அந்த யானைகளின் தந்தங்களை அரிந்து அவைகளை
விரட்டினான். ஒடிந்த பாதிக் கொம்புகள்
அவன் மார்பில் அணிகலன்களாகத் திகழ்ந்தன.
அணிபுயம்
பத்துப் பித்து நெரிப்பு உண்டவன் ---
கயிலை
மலையை அந்த மூடன் மதியாது எடுத்தபோது, சிவபெருமான்
கால் பெருவிரலின் நுனி நகத்தால் அவனுடைய தோள்கள் இருபதும் நெரிய அடர்த்து
அருளினார்.
தலைவியும்
பக்கத்து ஒக்க இருக்கும் சயிலம் ---
இறைவனும்
இறைவியும் ஒன்றுபட்டு மாதொருபாகராக எழுந்தருளியுள்ள திருத்தலம் திருச்செங்கோடு.
சற்குரு
வெற்பு
---
குருமலை
- சுவாமி மலை. சிவபெருமானுக்குச்
சற்குருவாக முருகர் பிரணவம் உபதேசித்த திருமலை.
தணியல்
---
வழிபடுவோரின்
வினைகள் தணிவதனால் தணிகை எனப் பேர் பெற்றது.
கருத்துரை
கச்சியில்
நிற்கும் கந்தவேளே, நான் இனிய தமிழ்
வாக்கினைப் பெறுதல் வேண்டும்.
No comments:
Post a Comment