காஞ்சீபுரம் - 0476. கனக தம்பத்தை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கனக தம்பத்தை (காஞ்சீபுரம்)

முருகா!
புலவர்கள் உன்னைப் புகழாமல்,
பொருளாளர்களைப் புகழ்தல் தகாது.


தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான


கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்
     கடகசங் கத்துப் பொற்புய வெற்பன்
          கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் ...பொடியாகக்

கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்
     குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங்
          கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் .....புவியோர்போய்

குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்
     றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங்
          குமணனென் றொப்பிட் டித்தனை பட்டிங் ...... கிரவான

குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்
     திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங்
          குலவியுங் கத்தப் பட்டக லக்கந் ......     தெளியாதோ

சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண்
     தனிப்பெருங் கற்புச் சக்ரந டத்துந்
          தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ் ......சுடவேவெஞ்

சமரசண் டக்கொற் றத்தவ ரக்கன்
     கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந்
          தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் ......களைவோனும்

தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன்
     சசிதரன் திக்குக் கத்தர கத்யன்
          திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் ...... திரள்வேதஞ்

செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம்
     செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும்
          சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கனக தம்பத்தை, செச்சையை, மெச்சும்
     கடக சங்கத்து, பொன் புய வெற்பன்,
          கடல் உள் வஞ்சித்துப் புக்கது ஒர் கொக்கும் .....பொடிஆக,

கறுவு செஞ்சத்திப் பத்ம கரத்தன்,
     குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும்
          கவிமொழிந்து அத்தைக் கற்று அற உற்றும், .....புவியோர்போய்

குனகியும், கைக்குக் கற்பகம் ஒப்புஎன்று,
     அனகன் என்று, ச்சைப் பட்டது அளிக்கும்
          குமணன் என்று, ப்பிட்டு, த்தனை பட்டு,ங்கு ...... இரவு ஆன

குருடு கொண்டு, த்தம் சத்தம் அனைத்தும்
     திருடியும், சொற்குத் தக்க தொடுத்தும்,
          குலவியும், கத்தப் பட்ட கலக்கம் ......     தெளியாதோ?

சனகன் அன்பு உற்றுப் பெற்ற மடப்பெண்,
     தனிப்பெரும் கற்புச் சக்ரம் நடத்தும்
          தகை இலங்கைச் சுற்றத்தை முழுத்தும் ......சுடவே, வெம்

சமர சண்டக் கொற்றத்த அரக்கன்
     கதிர்விடும் பத்துக் கொத்து முடிக்கும்,
          தனி ஒர் அம்பைத் தொட்டுச் சுரர் விக்னம் ......களைவோனும்,

தினகரன், சொர்க்கத்துக்கு இறை, சுக்ரன்,
     சசிதரன், திக்குக் கத்தர், அகத்யன்,
          திசைமுகன், செப்பப் பட்ட வசிட்டன், ...... திரள்வேதம்,

செகதலம், சுத்தப் பத்தியர், சித்தம்
     செயல்ஒழிந்து அற்றுப் பெற்றவர், மற்றும்
          சிவனும் வந்திக்க, கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


பதவுரை

      சனகன் அன்புற்றுப் பெற்ற மடப் பெண் --- சனக மன்னன் அன்புடன் பெற்ற மடமகளாகிய சீதையின்

     தனிப் பெரும் கற்பு --- ஒப்பற்ற பெரிய கற்பு என்னும்

     சக்ரம் நடத்தும் --- ஆக்ஞாசக்கரம் நடைபெற்ற

     தகை  இலங்கை --- பெருமை வாய்ந்த  இலங்கையில் இருந்த

     சுற்றத்தை முழுத்தும் சுடவே --- சுற்றத்தார் யாவரும் சுடுபட்டு அழியும்படி,

      வெம் சமர சண்ட --- வெம்மையான போரில் வேகமும்

     கொற்றத்து அரக்கன் --- வீரமும் வாய்ந்த அரக்கனாகிய இராவணனுடைய

     கதிர் விடும் --- ஒளி வீசுகின்ற

     பத்துக் கொத்து முடிக்கும் --- கொத்தான பத்துத் தலைகளுக்கும்

     தனி ஒர் அம்பைத் தொட்டு --- ஒப்பற்ற ஓர் அம்பைச் செலுத்தி

     சுரர் விக்னம் களைவோனும் --- தேவர்களின் இடர்களைக் களைந்த திருமாலும்,

      தினகரன் --- சூரியனும்,

     சொர்க்கத்துக்கு இறை --- சுவர்க்கத்துக்கு இறைவனாகிய இந்திரனும்,
    
     சுக்ரன் --- சுக்கிரனும்,

     சசிதரன் --- பிறையைச் சூடிய உருத்திரனும்,

     திக்குக் கத்தர் --- எண்திசைத் தலைவர்களும்,

     அகத்தியன் --- அகத்திய முனிவரும்,

     திசைமுகன் --- பிரமதேவனும்,

     செப்பப்பட்ட வசிட்டன் --- புகழ் பெற்ற வசிட்டரும்,

     திரள் வேதம் ---  கூட்டமான வேதங்களும்,

      செகதலம் --- பூலோகத்தினரும்,

     சுத்தப் பத்தியர் --- அகத் தூய்மை, புறத் தூய்மை கொண்ட பத்தர்களும்,

     சித்தம் செயல் ஒழிந்து அற்றுப் பெற்றவர் --- மனமும் செயலும் ஒடுங்கி ஒழியப் பெற்ற சிவஞானிகளும்,

     மற்றும் ---பின்னும்,

     சிவனும் வந்திக்க --- சிவபெருமானும் வணங்கி நிற்க

     கச்சியில் நிற்கும் பெருமாளே --- காஞ்சீபுரத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

      கனக தம்பத்தை --- பொன்னாலாகிய தூண் போன்றவையும்,

     செச்சையை --- வெட்சி மாலை அணிந்தவையும்,

     மெச்சும் கடக சங்கத்து ---  மெச்சும்படியான வீரவளையங்களை அணிந்தவையுமான

     பொன்புய வெற்பன் --- அழகிய மலை போன்ற புயங்களை உடையவன்,

      கடல் உள் --- கடலுக்கு உள்ளே

     வஞ்சித்துப் புக்கது --- வஞ்சனை எண்ணத்துடன் புகுந்து நின்ற

     ஒர் கொக்கும் பொடி ஆக கறுவு --- ஒப்பற்ற மாமரமாகிய சூரன் அழியும்படிகோபித்த,

     செம் சத்தி ---  சிவந்த வேலை ஏந்திய

     பத்ம கரத்தன் --- தாமரை போன்ற திருக்கரத்தினன்,

      குமரன் என்று அர்ச்சித்து --- குமாரன் என்று கூறி அருச்சித்து,

     அப்படி செப்பும் --- அத்தகைய தோத்திரங்ளைச் சொல்லும்

     கவி மொழிந்து --- பாடல்களைப் பாடி,

     அத்தைக் கற்று அற உற்றும் --- அவற்றை நன்றாகப் படித்து அப்பாடல்களில் முற்றும் ஈடுபட்டு இருந்தும்,

      புவியோர் போய் --- உலகோர் அறியாமையால் செல்வந்தரிடம் போய்

     குனகியும் --- கொஞ்சிப் பேசியும்,

     கைக்குக் கற்பகம் ஒப்பு என்று --- "உமது கைக்கு, கேட்டதைத் தரும் கற்பகத் தரு தான் நிகரானது" என்றும்,

     அனகன் என்று --- "நீர் யாதொரு பாவமும் இல்லாதவர்" என்றும்,

     இச்சைப் பட்டது அளிக்கும் குமணன் என்று ஒப்பிட்டு ---  "யாசிப்போர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் குமண வள்ளல்" என்றும் உவமைகள் கூறி,

      இத்தனை பட்டு இங்கு --- இப்படி எல்லாம் இங்கு வேதனைப்பட்டு,

     இரவு ஆன குருடு கொண்டு --- யாசித்தல் என்கின்ற குருட்டுத் தன்மையைக் கொண்டும்,

     அத்தச் சத்தம் அனைத்தும் திருடியும் --- பொருளும் ஓசையும் பிறவற்றையும் பழைய நூல்களிலிருந்து திருடியும்,

     சொற்குத் தக்க தொடுத்தும் --- தங்கள் சொல்லுக்குத் தகுந்தவாறு பாடல்களை அமைத்தும்,

     குலவியும் --- மகிழ்ந்து குலவியும்,

      கத்தப்பட்ட கலக்கம் தெளியாதோ --- கத்திக் கூச்சலிடுகின்ற கலக்க அறிவு தெளிவு அடையாதோ?


பொழிப்புரை

         சனக மன்னன் அன்புடன் பெற்ற மடமகளாகிய சீதையின் ஒப்பற்ற பெரிய கற்பு என்னும் ஆக்ஞாசக்கரம் நடைபெற்ற பெருமை வாய்ந்த இலங்கையில் இருந்த சுற்றத்தார் யாவரும் சுடுபட்டு அழியும்படி, வெம்மையான போரில் வேகமும்,  வீரமும் வாய்ந்த அரக்கனாகிய இராவணனுடைய ஒளி வீசுகின்ற கொத்தான பத்துத் தலைகளுக்கும் ஒப்பற்ற ஓர் அம்பைச் செலுத்தி தேவர்களின் இடர்களைக் களைந்த திருமாலும், சூரியனும், சுவர்க்கத்துக்கு இறைவனாகிய இந்திரனும், சுக்கிரனும், பிறையைச் சூடிய உருத்திரனும், எண்திசைத் தலைவர்களும்,  அகத்திய முனிவரும், பிரமதேவனும், புகழ் பெற்ற வசிட்டரும், கூட்டமான வேதங்களும், பூலோகத்தினரும், அகத் தூய்மை, புறத் தூய்மை கொண்ட பக்தர்களும், மனமும் செயலும் ஒடுங்கி ஒழியப் பெற்ற சிவஞானிகளும், பின்னும் சிவபெருமானும் வணங்கி நிற்க காஞ்சிபுரத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

         பொன்னாலாகிய தூண் போன்றவையும், வெட்சி மாலை அணிந்தவையும், மெச்சும்படியான வீரவளையங்களை அணிந்தவையுமான அழகிய மலை போன்ற புயங்களை உடையவன்; கடலுக்குள்ளே வஞ்சனை எண்ணத்துடன் புகுந்து நின்ற ஒப்பற்ற மாமரமாகிய சூரன் அழியும்படிக் கோபித்த, சிவந்த வேலை ஏந்திய தாமரை போன்ற திருக்கரத்தினன்; குமாரன் என்று கூறி அருச்சித்து; அத்தகைய தோத்திரங்ளைச் சொல்லும் பாடல்களைப் பாடி, அவற்றை நன்றாகப் படித்து அப்பாடல்களில் முற்றும் ஈடுபட்டு இருந்தும்,

         உலகோர் அறியாமையால் செல்வந்தரிடம் போய் கொஞ்சிப் பேசியும், "உமது கைக்கு, கேட்டதைத் தரும் கற்பகத் தரு தான் நிகரானது" என்றும், "நீர் யாதொரு பாவமும் இல்லாதவர்" என்றும், "யாசிப்போர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் குமண வள்ளலே" என்றும் உவமைகள் கூறி, இப்படி எல்லாம் இங்கு வேதனைப்பட்டு, யாசித்தல் என்கின்ற குருட்டுத் தன்மையைக் கொண்டும், பொருளும் ஓசையும் பிறவற்றையும் பழைய நூல்களிலிருந்து திருடியும், தங்கள் சொல்லுக்குத் தகுந்தவாறு பாடல்களை அமைத்தும், மகிழ்ந்து குலவியும், கத்திக் கூச்சலிடுகின்ற கலக்க அறிவு தெளிவு அடையாதோ?


விரிவுரை

கனக தம்பம் ---

முருகப் பெருமானுடைய தோள் பொன் தூண் போல், அழகாக விளங்குகின்றது.

செச்சை ---

செச்சை - வெட்சி.  முருகனுக்கு விருப்பமான மலர் வெட்சி.

மெச்சும் கடக சங்கத்துப் பொற்புய வெற்பன் ---

கடகம் - தோளுக்கு அணியும் வீர வளையம்.
பன்னிரு தோள்கள் ஆதலால் கடகசங்கம் என்றார்.   சங்கம் - கூட்டம்.

கடலுள் வஞ்சித்துப் புக்கதொர் கொக்கும் பொடியாக ---

சூரபன்மன் இறுதியில் உறுதி குலைந்து அஞ்சி வஞ்சனையாகக் கடலில் மாமரமாக நின்றாந்.  எஃகு மயமான அந்த மாமரம் பொடுபட்டு அழிய வேலினால் முருகவேள் சங்கரித்தார்.

கொக்கு - மாமரம்.

கற்று அற உற்றும் ---

புலவர்கள் முருகனைப் பாடியும், நன்றாக அதில் ஈடுபட்டு இருந்தும், அறியாமையால் நரஸ்துதி செய்து கெடுகின்றார்கள்.

அற – நன்றாக.  உற்றும் - முருகன் பத்தியில் ஈடுபட்டிருந்தும்.

புவியோர் போய் ---

புவியோர் - புவியில் உள்ள புலவர்கள். செல்வம் படைத்தவர்களிடம் போய்.

குனகியும் ---

குனகுதல் - கொஞ்சிப் பேசுதல்.

கைக்குக் கற்பகம் ஒப்பு என்று ---

தனவந்தர்களின் கை, கற்பக மரத்துக்கு நிகர் என்று கூறித் துதி செய்வார்கள்.

அனகன் என்று ---

அகம் - பாவம்.  அனகன் - பாவம் இல்லாதவன். தனவந்தர்களைப் பார்த்து நீர் பாவமே இல்லாத மகா புனிதர் என்று கூறித் துதி செய்வார்கள்.
    
இச்சைப்பட்டது அளிக்கும் குமணன் என்று ---

குமணன் இடை எழு வள்ளல்களில் ஒருவன். சிறந்த கொடையாளி. தன் தம்பிக்குத் தனது அரச பதவியை அளித்துவிட்டுக் காட்டிலே வாழ்ந்தான். பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் அவன்பால் வந்து யாசித்தார். "புலவரே,  என் தலையைக் கொணர்ந்து தருவோனுக்குப் பாதி ராஜ்ஜியம் தருவதாக என் அருமைத் தம்பி பறையறைந்திருக்கின்றான்.  இதோ இந்த வாளைத் தருகின்றேன். இந்த வாளினால் என் தலையை வெட்டிக் கொண்டுபோய் என் தம்பியிடும் கொடுத்து, அவன் தரும் பாதி ராஜ்ஜியத்தைப் பெற்று, புலவர் பெருமானே, உமது வறுமையை நீக்கிக் கொள்ளும்" என்று கூறி வாளைத் தந்தான். எத்துணை விழுமிய கொடை. நினைக்கவும் முடியாது.  உள்ளத்தில் கருணையின் நிறைவு.

         மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
         தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே,
         துன்அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
         இன்மையின் இரப்போர்க் கீஇ யாமையில்
         தொன்மை மாக்களில் தொடர்பறி யலரே,
         தாடாழ் படுமணி இரட்டும் பூநுதல்
         ஆடுஇயல் யானை பாடுநர்க்கு அருகாக்
         கேடுஇல் நல்லிசை வயமான் தோன்றலைப்
         பாடி நின்றனென், ஆகக் கொன்னே
         பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்,என்
         நாடுஇழந்த அதனினும் நனிஇன் னாதுஎன,
         வாள்தந் தனனே தலைஎனக்கு ஈயத்
         தன்னில் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்
         ஆடுமலி உவகையொடு வருவல்
         ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே. ---  புறநானூறு.

இத்தகைய கருணை நிறைந்த கொடையாளியாகிய குமண வள்ளலுக்கு நீர் சமானமானவர் என்று தனவந்தரைப் பார்த்துப் புகழ்ந்து கூறுவர்.

இரவான குருடு கொண்டு ---

இரத்தல் மிகவும் இழிவானது.

'' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று;
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று;  ---  புறநானூறு.

இரத்தலின் கொடுமையைப் பற்றி, திருவள்ளுவ நாயனார் ஒரு அதிகாரத்தையே தந்துள்ளார்.

இரந்தவனே இறந்தவன்.

யாசகமாகிய குருட்டுத் தன்மையைக் கொண்டு தமிழ்ப் புலவர்கள் அங்கும் இங்கும் பொருளுடையோரிடம் போய் அலைகின்றார்கள்.

அத்த சத்தம் அனைத்தும் திருடியும் ---

அத்தம் - பொருள்.  நல்ல சொற்களின் பொருள்.
சத்தம் - சொல்லோசை.

பழைய நூல்களில் இருந்து, அவைகளில் உள்ள சொல், பொருள், நடை, தொடை முதலியவற்றை எடுத்துத் திருடித் தாம் பாடுகின்ற பாடல்களில் நுழைத்துக் கொள்வர்.

கருடன் மிசைவரு கரிய புயலென
     கமல மணியென ...... வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
     கருதி முதுமொழி ...... களைநாடித்

திருடி யொருபடி நெருடி யறிவிலர்
     செவியில் நுழைவன ...... கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
     சிறிது முணர்வகை ...... யறியேனே..          ---  திருப்புகழ்.

கலக்கம் தெளியாதோ ---

கலங்கிய அறிவு தெளியமாட்டாதோ.

சனகன் ---

நிமியின் மரபிலே வந்த அரசர் அனைவருக்கும் சனக மன்னர் என்றே பெயர்.

சனகன் என்றால் தகப்பன் என்று பொருள்.

மகாரோமருடைய புதல்வர் சொர்ணரோமர்.
சொர்ணரோமருடைய புதல்வர் ஹ்ரஸ்வரோமர்.
ஹ்ரஸ்வரோமருடைய புதல்வர்கள், சீரத்வசர், குசத்வசர்.

சீரத்வசர் புத்ரகாமோஷ்டி யாகம் செய்யும் பொருட்டு உழுகின்ற போது பூமியில் கிடைத்த பெண்மணி சீதை.

சீதையின் தந்தையாகிய சனகருடைய பேர் சீரத்வசர்.  இவருடைய தம்பி பேர் குசத்வசர்.

இவர் சாங்காஸ்யம் என்ற நாட்டை ஆண்டவர்.

மடப்பெண் ---

மடம் - கொளுத்தியது விடாமை என்ற குணம். பெரியவர்கள் கூறிய குணங்களை விடாமல் கொண்டிருப்பது.
  
தனி பெருங் கற்புச் சக்ர நடத்தும் ---

சீதையின் கற்பு என்ற ஆக்ஞா சக்கரம் இலங்கையில் நடைபெற்றது.  இலங்கையச் சீதாதேவியின் ஆணையினால் அக்கினி தேவன் எரித்தான். அநுமானை எரிக்காது அவருக்குச் சந்தனம் போல் குளிர்ந்து இருந்தான்.

தனியொர் அம்பை விட்டு ---

இராமர் ஒரே பாணம் தான் விடுவார்.

சசிதரன் ---

சந்திரனைத் தரித்த உருத்திரன். சிவபெருமான் வேறு.  உருத்திரன் வேறு.  உருத்திரர் மூவரில் ஒருவர்.  சிவம் மூவருக்கும் அப்பாற்பட்டவர்.  சுதுர்த்த சப்தத்தால் உபநிடதம் அவரைப் போற்றுகின்றது.

மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்...   ---  திருவாசகம்.

தேவர்க ளோடிசை வந்துமண் ணோடுறும்
பூவொடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.        ---  திருமந்திரம்.

தேவர்கோ அறியாத தேவ தேவன்,
செழும்பொழில்கள் பயந்துகாத்து அழிக்கும் மற்றை
மூவர்கோனாய் நின்ற முதல்வன், மூர்த்தி,
மூதாதை, மாது ஆளும் பாகத்து எந்தை,
யாவர்கோன் என்னையும் உவந்து ஆண்டு கொண்டான்,
யாம் ஆர்க்கும் குடி அல்லோம், யாதும் அஞ்சோம்,
மேவினோம் அவன் அடியார் அடியாரோடும்,
மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே. ---  திருவாசகம்.

சுத்தப் பத்தியர் ---

அகமும் புறமும் தூய்மையான பக்தகோடிகள்.

சித்தம் செயலொழிந்து அற்றுப் பெற்றவர் ---

மனமும் செயலும் அடங்கிப் பாசகரணம் பசுகரணம் போய், பதிகரணம் பெற்ற சிவஞானிகள்.

சிவனும் வந்திக்க ---

முருகப் பெருமானை, திருமால், சூரியன், இந்திரன், சுக்கிரன், உருத்திரன், திசா பாலகர்கள், அகத்தியர், பிரமன், வசிட்டர், வேதம், உலகத்தவர், பக்தர்கள், ஞானிகள் இத்தனை பேரும் வணங்குகின்றார்கள்.  இவ்வளவு பேர்களும் வணங்குவதன்றி, சிவபெருமானும் வணங்குகின்றார்.  சிறப்பும்மை கொடுத்துக் கூறுகின்றார்.

கருத்துரை

கச்சியில் நிற்கும் கந்தக் கடவுளே, புலவர்கள் பொருளாளரைப் பாடித் திரியும் கலக்கம் தெளியாதோ.




No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...