அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கனி தரும் கொக்கு
(காஞ்சீபுரம்)
முருகா!
உனது அருட் கருணைக்கு
அளவில்லை
தனதனந்
தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ......
தனதான
கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்
பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங்
கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந்
....திலும்வேலும்
கனவிலுஞ்
செப்பத் தப்புமெ னைச்சங்
கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்
களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண்.....சுழல்வேனைப்
புனிதனம்
பைக்குக் கைத்தல ரத்நம்
பழையகங் கைக்குற் றப்புது முத்தம்
புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென்
......றுருகாஎப்
பொழுதும்
வந்திக்கைக் கற்றஎ னைப்பின்
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் ......றுளதோதான்
அனனியம்
பெற்றற் றற்றொரு பற்றுந்
தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்
தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந்
...... தளபாரை
அறவிநுண்
பச்சைப் பொற்கொடி கற்கண்
டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம்
பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின்
......பொலமேருத்
தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன்
றிணைசுமந் தெய்க்கப் பட்டநு சுப்பின்
தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம்
...... பையினூடே
தவமுயன்
றப்பொற் றப்படி கைக்கொண்
டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும்
தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கனிதரும் கொக்குக் கண்செவி வெற்பும்,
பழநியும், தெற்குச் சற்குரு
வெற்பும்,
கதிரையும், சொற்கு உட்பட்ட திருச்செந் ....திலும், வேலும்
கனவிலும்
செப்பத் தப்பும் எனை, சங்-
கட உடம்புக்குத் தக்க அனைத்துங்
களவு கொண்டு இட்டு, கற்பனையின்கண்.....சுழல்வேனை,
புனிதன், அம்பைக்குக் கைத்தல ரத்நம்,
பழைய கங்கைக்கு உற்றப் புதுமுத்தம்,
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர்
வைப்பு,என்று ......உருகா,எப்
பொழுதும்
வந்திக்கைக்கு அற்ற எனை, பின்,
பிழை உடன்பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையை, என் செப்பிச் செப்புவது? ஒப்பு ஒன்று ......உளதோதான்?
அனனியம்
பெற்று, அற்று அற்று ஒரு பற்றும்,
தெளிதரும் சித்தர்க்குத் தெளிசிற் கொந்து
அமலை, தென் கச்சிப் பிச்சி மலர்க் கொந் .....தள
பாரை,
அறவி, நுண் பச்சைப் பொற்கொடி, கற்கண்டு
அமுதினும் தித்திக்கப்படு சொல்கொம்பு,
அகிலஅண்டத்து உற்பத்தி செய் முத்தின்
.....பொலம்
மேரு,
தனிவடம் பொற்புப் பெற்ற முலைக் குன்று
இணை சுமந்து எய்க்கப் பட்ட நுசுப்பின்
தருணி, சங்கு உற்றுத் தத்து திரைக் கம் ...... பையின்
ஊடே
தவ
முயன்று, அப் பொற்ற படி
கைக்கொண்டு,
அறம் இரண்டு எட்டு எட்டு எட்டும் வளர்க்கும்
தலைவி, பங்கர்க்குச் சத்யம் உரைக்கும் ...... பெருமாளே.
பதவுரை
அனனியம் பெற்று --- அன்னியம் இல்லாத
ஒன்றாம் தன்மையைப் பெற்று,
அற்று அற்று ஒரு பற்றும் --- எவ்விதப் பற்றும் நன்றாக அற்றுப் போய்,
தெளி தரும் சித்தர்க்கு --- தெளிந்த
உள்ளம் உடையவர்கள்
தெளிசில் --- தெளிந்து உணர்கின்ற அறிவு
உருவான
கொந்து அமலை --- மலம் அற்றவள்,
தென்கச்சி --- அழகிய கச்சிப் பதியிலே
பிச்சி
மலர் கொந்தள பாரை --- பிச்சி மலரை அணிந்துள்ள அளகபாரத்தை
உடையவள்,
அறவி --- அறம் வளர்த்த நாயகி
நுண் பச்சை பொன் பொடி --- நுண்ணிய பச்சை
நிறமுள்ள அழகிய கொடி போன்றவள்,
கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு --- கற்கண்டு, அமுதம் என்ற இரண்டைக்
காட்டிலும் இனிக்கும் சொற்களை உடைய கொம்பு அனையாள்,
அகில அண்டத்து உற்பத்தி செய் --- எல்லா
அண்டங்களையும் தோற்றுவிக்கும்
முத்தின் பொலம் மேரு --- அழகிய முத்தால்
ஆகிய மேருமலை போன்றவள்,
தனிவடம் பொற்பு பெற்ற --- ஒப்பற்ற
மணிமாலையின் அழகு பெற்ற
முலை குன்று இணை சுமந்து --- இரண்டு மலை
மார்புகளைச் சுமந்து
எய்க்கப்பட்ட நுசுப்பின் தருணி --- அதனால்
இளைத்து நிற்கும், இடையை உடைய இளமைப்
பருவத்தினை உடையவள்,
சங்கு உற்று --- சங்குகள் பொருந்தி
தத்து திரை கம்பையின் ஊடே தவம் முயன்று ---
தாண்டிச் செல்லுகின்ற அலைகளை உடைய கம்பை ஆற்றங்கரையில் தவம் செய்து,
அப் பொற்றப் படி கைக்கொண்டு ---
அந்தச் சிறப்புள்ள இரு நாழி நெல் படியைக் கையில் கொண்டு
அறம் இரண்டு எட்டு எட்டு எட்டும்
வளர்க்கும் --- முப்பத்திரண்டு அறங்களையும் வளர்க்கின்ற
தலைவி பங்கர்க்கு --- தலைவியாகிய காமாட்சி
தேவியின் பங்காளராகிய சிவபெருமானுக்கு
சத்யம் உரைக்கும் பெருமாளே --- மெய்ப் பொருளை உபதேசித்த பெருமையில் சிறந்தவரே!
கனி தரும் கொக்கு --- பழங்களைத்
தருகின்ற மாமரங்கள் நிறைந்த
கண் செவி வெற்பும் --- நாக மலையாகிய திருச்செங்கோட்டையும்,
பழனியும் --- பழனி மலையையும்,
தெற்குச் சற்குரு வெற்பும் --- தென்திசையில் விளங்கும்
சற்குரு மலை என்கின்ற சுவாமி மலையையும்,
கதிரையும் --- கதிர்காமத்தையும்,
சொற்கு உட்பட்ட திருச்செந்திலும் ---
புகழுக்கு இருப்பிடமான திருச்செந்தூரையும்,
வேலும் --- வேலாயுதத்தையும்,
கனவிலும் செப்பத் தப்பும் எனை ---
கனவில் கூடச் சொல்லி அறியாத அடியேனை,
சங்கட உடம்புக்கு --- சங்கடம் தரும்
உடலின் சுகத்துக்கு
தக்க அனைத்தும் களவு கொண்டிட்டு --- வேண்டிய
எல்லாப் பொருள்களையும் திருட்டு வழியிலாவது அடைந்து
கற்பனையின்கண் சுழல்வேனை --- கற்பனைகள்
பல செய்து சுழலுகின்ற அடியேனை,
புனிதன் --- புனித மூர்த்தி,
அம்பைக்குக் கைத்தல ரத்னம் --- தேவி பார்வதியின் கையில் விளங்கும்
இரத்தினம்,
பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம் ---
பழைய கங்கா தேவிக்குக் கிடைத்த புதிய முத்து,
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர்
வைப்பு --- பூமியில் அன்றைக்கு என்று ஒன்றும் இல்லாது இளைத்தவர்க்கு சேம நிதியாக
விளங்குபவன்,
என்று உருகா --- என்றெல்லாம் உருகி,
எப்பொழுதும் வந்திக்கைக்கு அற்ற என்னை ---
எல்லாப் பொழுதினிலும் வணங்குதலே இல்லாத அடியேனை,
பின் --- இந்தக் குறைகளை உடையவன் என்று தேவரீர் அறிந்த பின்னும்
பிழையுடன் பட்டு --- என் குற்றங்களைப் பொருட்படுத்தாது பொறுத்துச் சம்மதித்து
பத்தருள் வைக்கும் --- என்னை உமது அடியார்களின்
திருக்கூட்டத்துள் ஒருவனாக வைத்த
பொறையை என் செப்பி செப்புவது ---
தேவரீருடைய கருணையை என்ன என்று சொல்லிப் புகழ்வது?
ஒப்பு ஒன்று உளதோ தான் --- அந்தக் கருணைக்கு
சமானம் ஒன்று உண்டோ? இல்லை.
பொழிப்புரை
அன்னியம் இல்லாத ஒன்றாம் தன்மையைப்
பெற்று, எவ்விதப் பற்றும்
நன்றாக அற்றுப் போய், தெளிந்த உள்ளம்
உடையவர்கள் தெளிந்து உணர்கின்ற அறிவு உருவான மலமற்றவள், அழகிய தென் கச்சிப்
பதியிலே பிச்சி மலரை அணிந்துள்ள
அளகபாரத்தை உடையவள், அறம் வளர்த்த நாயகி, நுண்ணிய பச்சை நிறமுள்ள அழகிய கொடி போன்றவள், கற்கண்டு, அமுதம் என்ற இரண்டைக் காட்டிலும்
இனிக்கும் சொற்களை உடைய கொடியனையாள், எல்லா
அண்டங்களையும் தோற்றுவிக்கும் அழகிய முத்தால் ஆகிய மேருமலை போன்றவள், ஒப்பற்ற மணிமாலையின் அழகு பெற்ற இரண்டு
மலை மார்புகளைச் சுமந்து அதனால் இளைத்து நிற்கும், இடையை உடைய இளமைப் பருவத்தினை உடையவள், சங்குகள் பொருந்தித் தாண்டிச்
செல்லுகின்ற அலைகளை உடைய கம்பை ஆற்றங்கரையில், தவம் செய்து, அந்தச் சிறப்புள்ள இரு நாழி நெல்
படியைக் கையில் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளர்க்கின்ற தலைவியாகிய
காமாட்சி தேவியின் பங்காளராகிய சிவபெருமானுக்கு மெய்ப் பொருளை உபதேசித்த
பெருமையில் சிறந்தவரே!
பழங்களைத் தருகின்ற மாமரங்கள் நிறைந்த
பாம்பு மலையாகிய திருச்செங்கோட்டையும், பழனியையும், தெற்கில் உள்ள சுவாமி மலையையும், கதிர்காமத்தையும், புகழுக்கு இருப்பிடமான
திருச்செந்தூரையும், வேலாயுதத்தையும், கனவில் கூடச் சொல்லி அறியாத அடியேனை, சங்கடம் தரும் உடலின் சுகத்துக்கு
வேண்டிய எல்லாப் பொருள்களையும்,
திருட்டு
வழியிலாவது அடைந்து கற்பனைகள் பல செய்து சுழலுகின்ற அடியேனை, புனிதமூர்த்தி, தேவி பார்வதியின் கையில் விளங்கும்
இரத்தினம், பழைய கங்கா தேவிக்குக்
கிடைத்த புதிய முத்து, பூமியில் அன்றைக்கு
என்று ஒன்றும் இல்லாது இளைத்தவர்க்கு சேம நிதியாக விளங்குபவன், என்று கூறி உருகி, எப்பொழுதினிலும் வணங்குதலே இல்லாத அடியேனை, இந்தக் குறைகளை உடையவன் என்று தேவரீர்
அறிந்த பின்னும் என் குற்றங்களைப் பொருட்படுத்தாது பொறுத்துச் சம்மதித்து. என்னை
உமது அடியார்கள் திருக்கூட்டத்துள் ஒருவனாக வைத்த தேவரீரது கருணையை நான் என்ன சொல்லிப் புகழ்வது? உன் கருணைக்கு சமானம்
ஒன்று உண்டோ? இல்லை.
விரிவுரை
கனிதரும்
கொக்குக் கட்செவி வெற்பு ---
கொக்கு
- மாமரம். கட்செவி - பாம்பு. பாம்பு கண்ணையே செவியாக உடையது.
திருச்செங்கோடு
என்ற மலை, பாம்பு படம் எடுத்து
நிற்பது போல் காட்சி தரும். அதனால் அம் மலை, நாககிரி, நாகாசலம், சர்ப்பகிரி என்றெல்லாம் பேர் பெற்றது. கோடு
- மலை.
அருமையான
திருத்தலம். அர்த்தநாரிப் பெருமான் எழுந்தருளி உள்ளார். திருஞானசம்பந்தர் விஷசுரம்
தீரத் திருநீலகண்டத் திருப்பதிகம் பாடியருளியது. இங்கு முருகனும்
அர்த்தநாரீச்சுரரும் வெண்பாஷாணத்தால் ஆகிய திருமேனிகள்.
நாகாசல
வேலவ …. …. --- கந்தர் அநுபூதி.
வேலும்
கனவிலும் செப்பத் தப்பும் எனை ---
முருகனுடைய
திருத்தலங்களையும், வேலாயுதத்தையும்
கனவிலேனும் கருத வேண்டாவோ
கனவிலும்
கருதாத தீவினையேன் என்று அடிகளார் கழிவிரக்கம் கொள்ளுகின்றார்.
சங்கட
உடம்பு ---
இந்த
இடம்பு துன்பத்துக்கு இடமானது. நோய்க்கு
உறைவிடமானது.
தக்க
அனைத்தும் களவு கொண்டிட்டு ---
உடம்புக்கு
சுகமான பொருள் என்ன என்ன உளவோ, அத்தனையும்
நேர்வழியில் கிடைக்கவில்லையானாலும்,
களவுப்
பாதையில் அடைந்து இன்புறுதல்.
கற்பனையின்
கண் சுழல்வேனை
---
கிடைத்த
பொருள்களை நுகர்வதோடு அமையாது, கிடைக்காத பொருள்களை
எல்லாம் கற்பனை செய்துகொண்டு கற்பனை உலகில் உலவுவார்கள் மனிதர்கள்.
அம்பைக்குக்
கைத்தல ரத்னம் ---
அம்பிகை
முருகனைக் கையால் அணைத்துக் கொஞ்சி மகிழ்வாள்.
அப் பெருமான் கைக்கு இரத்தின மணிபோல் ஒளிவிட்டு விளங்குவான்.
கையால்
எடுத்து அணைத்துக்
கந்தன்
எனப் பேர் புனைந்து.... --- கந்தர் கலிவெண்பா.
எய்ப்பவர்
வைப்பு
---
இளைத்தவர்க்கு
முருகவேள் சேமநிதியாகத் தண்ணருள் சுரக்கும் தயாநிதி.
"வைத்த
நிதியே" மணியே என்று வருந்தி,
தம்
சித்தம்
நைந்து, சிவனே என்பார் சிந்தையார்,
கொத்துஆர்
சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்து உந்து
முத்தாறு
உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே. --- திருஞானசம்பந்தர்.
"வைத்த
பொருள்" நமக்குஆம் என்று சொல்லி மனத்து அடைத்து,
சித்தம்
ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின்
அல்லால்,
மொய்த்த
கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன்
அருள்பெறல் ஆமோ? அறிவு இலாப் பேதைநெஞ்சே.
---
அப்பர்.
பல்
அடியார் பணிக்குப் பரிவானை,
பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,
செல்
அடியே நெருங்கித் திறம்பாது
சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,
"நல்
அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை"
நான்உறு குறை அறிந்து அருள் புரிவானை.
வல்
அடியார் மனத்து இச்சை உளானை,
வலிவலம் தனில் வந்துகண் டேனே. --- சுந்தரர்.
"காதலர்க்கு
எய்ப்பினில் வைப்பு வாழ்க".... ---
திருவாசகம்.
தனித் துணை
நீ நிற்க, யான் தருக்கித் தலையால்
நடந்த
வினைத் துணை
யேனை விடுதிகண்டாய், வினையேனுடைய
மனத் துணையே, என்தன் வாழ்முதலே, எனக்கு "எய்ப்பில் வைப்பே!"
தினைத்துணை
யேனும் பொறேன், துயர்ஆக்கையின் திண்வலையே.--- திருவாசகம்.
"உற்ற
இடத்தில் உதவநமக்கு
உடையோர் வைத்த வைப்பு" அதனை,
கற்ற
மனத்தில் புகும் கருணைக்
கனியை விடைமேல் காட்டுவிக்கும்,
அற்றம்
அடைந்த நெஞ்சே! நீ
அஞ்சேல், என்மேல் ஆணைகண்டாய்,
செற்றம்
அகற்றித் திறல்அளிக்கும்,
சிவாயநம என்று இடு நீறே. --- திருவருட்பா.
உலக
வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம்
ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே,
கலக
மாயையில் கவிழ்க்கின்றது, எளியேன்
கலுழ்கின்றேன், செயக்கடவது ஒன்று அறியேன்
"இலகும்
அன்பர் தம் எய்ப்பினில் வைப்பே"
இன்ப வெள்ளமே, என்னுடை உயிரே,
திலகமே, திரு ஒற்றி எம் உறவே,
செல்வமே, பரசிவ பரம்பொருளே. --- திருவருட்பா.
பிழை
உடன் பட்டு ---
அடியேன்
செய்த பிழைகளைப் பொறுத்துக் கருணையினால், தண்டிக்காமல்
சம்மதித்து இறைவன் அருள் புரிந்தான். இது
சுவாமிகளின் வரலாற்றைக் குறிப்பது.
நம்மனோர்க்கும் பொருந்தும்.
யான்
செய்யும் துரிசுகளுக்கு உடனாகி... --- சுந்தரர்.
பத்தருள்
வைக்கும் பொறை
---
அருணகிரிநாதரை
ஆண்டவன் அடியார்களின் திருக் கூட்டத்துள் ஒருவராக ஆக்கி அருள் புரிந்தார்.
இடுதலைச்
சற்றும் கருதேனை, போதம் இலேனை, அன்பால்
கெடுதல்
இலாத்தொண்டரில் கூட்டியவா, கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச்
சாதித்த வேலோன், பிறவிஅற, இச்சிறை
விடுதலைப்
பட்டது, விட்டது பாசவினை
விலங்கே. --- கந்தர் அலங்காரம்.
அனனியம்
பெற்று ---
அனன்யம்
- அன்னியம் இன்மை. ஆன்மா வேறு இறைவன் வேறு
என்பது இன்றி ஒன்றுபட்டு இருக்கும் நிலை.
இது அத்வைத நிலை.
நீவேறு
எனாதுஇருக்க நான்வேறு எனாதுஇருக்க
நேராக
வாழ்வதற்குஉன் அருள்கூர...--- (நாவேறு)
திருப்புகழ்.
நீயும்
நானுமாய் இறுகும் வகை
பரமசுகம்
அதனை அருள்... --- (அறுகுநுனி) திருப்புகழ்.
அற்று
அற்று ஒரு பற்றும் ---
பற்று
பிறவியைத் தரும். பற்று அற்றால் பிறவி அறும்.
அற்றது
பற்றெனில் உற்றது வீடுஉயிர்
செற்றது
மன்னுறில் அற்றுஇறை பற்றே. --- நம்மாழ்வார்.
பற்று
முற்றும் அற்ற ஞானிகளின் தெளிந்த சித்தத்தில் எம்பிரான் உறைவான்.
கம்பையின்
ஊடே தவம் முயன்ற பொற்கொடி ---
அம்பிகை
கம்பா நதிக் கரையில் மணலால் இலிங்கம் அமைத்து தனி மாமரத்தின் கீழ் வழிபட்டார்.
இறைவன்
கம்பா நதியில் வெள்ளத்தை ஏவி அருளினார்.
வெள்ளத்தைக் கண்டு தேவி தனக்கு இடர் வருமே என்று அஞ்சாது, இறைவன் திருமேனிக்கு இடர் வரக்கூடாதே
என்று இறைவனைத் தழுவிக்கொண்டாள்.
அம்பிகையின் அன்பைக் கண்டு இறைவன் குழைந்து அருளினார். தழுவக் குழைந்ததனால், திருமேனியில் வளைத் தழும்பும் முலைச்
சுவடும் உண்டாயின.
எள்கல்
இன்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத்
துஉள்கி உகந்துஉமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம்
காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட
கள்ளக்
கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. ---
சுந்தரர்.
பூதி
ஆகிய புனிதநீறு ஆடிப்
பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து
காதில்
வெண்குழை கண்டிகை தாழக்
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி
தேவனார் ஆயும் மா தவஞ்செய்
அவ்வ ரம்கொலோ அகிலம்ஈன்று அளித்த
மாது
மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு
வளைத்த ழும்புடன் முலைச்சுவடு
அணிந்தார்.
--- பெரியபுராணம்.
படிகொண்டு
அறம் இரண்டு எட்டு, எட்டு எட்டும்
வளர்க்கும்
---
இரண்டு
எட்டு 16. எட்டு எட்டு – ஆக 32. உமாதேவியார் காஞ்சி
மாநகரில் நாழி என்ற அளவையைக் கையில் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் செய்து
அருளினார். செய்தும் வருகின்றார்.
இச்சைப்படி
தன்பேரறம் எண்நான்கும் வளர்க்கும்
பச்சைக்கொடி
விடையான்ஒரு பாகம் திறைகொண்டாள்
செச்சைத்தொடை
இளையான்நுகர் தீம்பால் மணநாறும்
கச்சைப்பொரு
முலையாள்உறை கச்சிப்பதி கண்டான். --- வில்லிபாரதம்.
எண்அரும்
பெரு வரங்கள்முன் பெற்றுஅங்கு
எம்பி ராட்டிதம் பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின்
மேல்வழி பாடுசெய்து அருளி
மனைஅறம் பெருக்கும் கருணையினால்
நண்ணும்
மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்
புண்ணி
யத்திருக் காமக்கோட் டத்துப்
பொலிய முப்பதோடு இரண்டுஅறம் புரக்கும். --- பெரியபுராணம்.
ஐயன்
அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டம்மெல்லாம்
உய்ய
அறம் செயும் உன்னையும்போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய
பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று
பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ, உன் தன் மெய்யருளே?
--- அபிராமி அந்தாதி.
கருத்துரை
காஞ்சிநகர்
மேவும் கந்தவேளே, உன் கருணைக்கு
நிகரில்லை.
No comments:
Post a Comment