அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கொக்குக்கு ஒக்க
(காஞ்சீபுரம்)
முருகா!
தமிழால் உன்னைப் பாடி
வழிபடும் பேற்றினை அருள்
தத்தத்
தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்
தத்தத் தத்தத் தனனத் ...... தனதான
கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
கொத்துற் றுக்குப் பிணியுற் ......
றவனாகிக்
குக்கிக்
கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
கொத்தைச் சொற்கற் றுலகிற் ...... பலபாஷை
திக்கித்
திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
செற்றைச் சட்டைக் குடிலைச் ......
சுமைபேணும்
சிக்கற்
றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
திட்டத் துக்குப் புகலப் ...... பெறுவேனோ
அக்கிட்
டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
டத்ரத் தெற்றிக் கடுகப் ...... பொருசூரன்
அச்சுக்
கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
புக்குப் பட்டுத் துருமத் ...... தடைவாகத்
தக்குத்
திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்
கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் ......
கணமாடிச்
சத்திக்
குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
சத்திக் கச்சிக் குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கொக்குக்கு
ஒக்க, தலையிற் பற்றுச்
சிக்கத்து, அளகக்
கொத்து உற்று, உக்கு, பிணிஉற் ...... றவன்ஆகி,
குக்கி, கக்கி, கடையில் பல் தத்து உற்றுக் கழல,
கொத்தைச் சொல்கற்று, உலகில் ...... பலபாஷை,
திக்கித்
திக்கிக் குளறிச் செப்பி, தப்பி, கெடுபொய்ச்
செற்றைச் சட்டைக் குடிலைச் ......
சுமைபேணும்
சிக்கு
அற்று, உட்குக் கருணைச்
சுத்தச் சித்தித் தமிழை,
திட்டத்துக்குப் புகலப் ...... பெறுவேனோ?
அக்கிட்டு, இக்கிட்டு, அமருக்கு ஒட்டி, கிட்டிட்டு எதிர்இட்டு,
அத்ரத்து எற்றி, கடுகப் ...... பொருசூரன்
அச்சுக்
கெட்டு, படைவிட்டு, அச்சப் பட்டு, கடல்உள்
புக்குப் பட்டு, துருமத்து ...... அடைவு ஆக,
தக்குத்
திக்குத் தறுகண், தொக்குத் தொக்கு உற்றது கண்,
கைக்கொட்டு, இட்டு, இட்ட் உடல்சில் ...... கணம்ஆடிச்
சத்திக்
குத்தி, துடியில் சத்திக்க, கைச் சமர் செய்,
சத்திக் கச்சிக் குமரப் ...... பெருமாளே.
பதவுரை
அக்கிட்டு இக்கிட்டு --- அங்கும்
இங்குமாகச் சுழன்று,
அமருக்கு ஒட்டிக் கிட்டி இட்டு எதிரிட்டு --- போர் செய்யச்
சபதத்துடன் அருகில் வந்து நெருக்கி எதிர்த்து,
அத்ரத்து எற்றிக் கடுகப் பொரு சூரன் ---
அத்திரங்களைச் செலுத்தி விரைந்து போர் புரிந்த சூரபன்மன்
அச்சுக் கெட்டு --- உடம்பு நிலை
குலைந்து,
படை விட்டு --- ஆயுதங்கள் யாவும் இழந்து,
அச்சப் பட்டு --- பயம் அடைந்து,
கடலுள் புக்குப்பட்டு, துருமத்து அடைவாக --- கடலுக்குள்ளே
புகுந்து வேதனைப்பட்டு, மாமர உருவத்தை
அடைந்து நிற்க,
தறுகண் தக்குத் திக்கு --- அஞ்சாமையுடன்
இருந்த வீரம் எல்லாம் தக்குத் திக்கெனத் தடுமாற,
தொக்குத் தொக்கு உற்றது கண் --- கண், பரிச உணர்ச்சி அறியும் தோல் முதலிய
யாவும் துவையலாகி அழிந்த இடத்தும்,
கைக் கொட்டு இட்டு இட்டு உடல் சில்
கணம் ஆடி --- கைகளை மிகவும் கொட்டிக் கொண்டு ஆரவாரம் புரிந்து, உடல் தளர்ச்சி உற்று,
சத்திக் குத்தித் துடியில் சத்திக்கக்
கைச்சமர் செய் --- வேற்படை குத்தியதால்
உடுக்கை போல் கதறி ஒலி செய்யுமாறு ஒழுங்கான போர் செய்தவரே!
சத்திக் கச்சிக் குமர பெருமாளே ---
சக்தியாகிய காமாட்சி தங்கும் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!
பெருமையில் சிறந்தவரே!
கொக்குக்கு ஒக்க --- கொக்கின் நிறம் போல
தலையில் பற்றுச் சிக்கத்து --- தலையில்
பற்றியுள்ள சிகையின்
அளகக் கொத்து உற்று --- மயிர்த் தொகுதி
வெண்மை நிறத்தை அடைந்து,
உக்குப் பிணி உற்றவனாகி --- அடியேன்
மக்கி மெலிந்து, நோயுற்றவனாகி,
குக்கி --- இருமல் உற்று,
கக்கி --- வாந்தி செய்து,
கடையில் பல் தத்து உற்றுக் கழல ---
வாழ்நாளின் இறுதியில் பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டு விழுந்து ஒழிய,
கொத்தைச் சொல் கற்று --- இழிவான சொற்களைக் கற்று,
உலகில் பல பாஷை திக்கித் திக்கிக் குளறிச்
செப்பி --- உலகத்தில் உள்ள பல மொழிகளை தடைபட்டு தடைபட்டு குழறிப் பேசி,
தப்பிக் கெடு --- தவறுதலான வழியில்
சென்று,
பொய்ச் செற்றைச் சட்டைக் குடிலைச் சுமை
பேணும் --- கெட்டுப் போகின்ற பொய்க் கூட்டமாம் சட்டையாகிய இந்தக் குடிசையாகிய
உடம்பைச் சுமந்து விரும்புகின்ற
சிக்கு அற்று --- தடை நீங்கப் பெற்று,
உட்குக் கருணைச் சுத்தச் சித்தித்
தமிழைத் திட்டத்துக்குப் புகலப் பெறுவேனோ --- உள்ளத்தில் கருணைக்குணம் வாய்க்கப்
பெற்று, தூய்மையானதும்
நற்கதியைத் தர வல்லதுமான தமிழ்ப் பாக்களை திட்டவட்டமாகச் சொல்லும் பேற்றினை
அடியேன் பெறுவேனோ?
பொழிப்புரை
அங்கும் இங்குமாகச் சுழன்று, போர் செய்யச்
சபதத்துடன் அருகில் வந்து நெருக்கி எதிர்த்து, அத்திரங்களைச் செலுத்தி விரைந்து போர்
புரிந்த சூரபன்மன் தன் உடம்பு நிலை குலைந்து, ஆயுதங்கள் யாவுபம் இழந்து, பயம் அடைந்து, கடலுக்குள்ளே புகுந்து வேதனைப்பட்டு, மாமர உருவத்தை அடைந்து நிற்க,அஞ்சாமையுடன் இருந்த வீரம் எல்லாம்
தக்குத் திக்கெனத் தடுமாற, கண், பரிச உணர்ச்சி அறியும் தோல் முதலிய
யாவும் துவையலாகி அழிந்த இடத்தும்,
கைகளை
மிகவும் கொட்டிக் கொண்டு ஆரவாரம் புரிந்து, உடல் தளர்ச்சி உற்று, வேற்படை குத்தியதால் உடுக்கை போல் கதறி
ஒலி செய்யுமாறு ஒழுங்கான போர் செய்தவரே!
சக்தியாகிய காமாட்சி தங்கும்
காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!
பெருமையில் சிறந்தவரே!
கொக்கின் நிறம் போல தலையில்
பற்றியுள்ள சிகையின் மயிர்த் தொகுதி வெண்மை நிறத்தை அடைந்து, அடியேன் மக்கி மெலிந்து, நோயுற்றவனாகி, இருமல் உற்று, வாந்தி செய்து, வாழ்நாளின் இறுதியில் பற்கள் எல்லாம்
ஆட்டம் கண்டு விழுந்து ஒழிய, இழிவான சொற்களைக்
கற்று, உலகத்தில் உள்ள பல மொழிகளை தடைபட்டு தடைபட்டுக் குழறிப் பேசி, தவறுதலான வழியில் சென்று, கெட்டுப் போகின்ற பொய்க் கூட்டமாம்
சட்டையாகிய இந்தக் குடிசையாகிய உடம்பைச் சுமந்து விரும்புகின்ற தடை நீங்கப் பெற்று, உள்ளத்தில் கருணைக் குணம் வாய்க்கப்
பெற்று, தூய்மையானதும்
நற்கதியைத் தர வல்லதுமான தமிழ்ப் பாக்களை திட்டமாகச் சொல்லும் பேற்றினை அடியேன்
பெறுவேனோ?
விரிவுரை
கொக்குக்கு
ஒக்கத் தலையில் பற்றுச் சிக்கத்து அளகக் கொத்து உற்று ---
வேறு
எந்தப் பிராணிகளுக்கும் இல்லாத நரையை மனிதப் பிறவிக்கு மட்டுமே இறைவன்
தந்தான். இயமன் விடுகின்ற "லாயர்
நோட்டீஸ்" நரை என உணர்க. சீக்கிரம் மரணம் வரும். மரணம் வரும் முன் இறைவனுடைய
சரணத்தை அடைய முயலுக என்று அறிவிக்கும் எச்சரிக்கை போன்றது நரை. ஒவ்வொரு மயிரும் நரைக்கும் தோறும், ஒவ்வொரு பொருளில் உள்ள ஆசையை
விடவேண்டும். தலைமயிர் கொக்குப் போல் முழுவதும் வெளுத்தும் ஆசை ஒன்றையும் விடாது
மாந்தர் அவலம் உறுகின்றார்கள்.
பிணி
உற்றவன் ஆகி
---
ஆசை
வயப்பட்டு தீய நெறிப்பட்டு நோய் உற்று வாடுகின்றார்கள்.
குக்கிக்
கக்கி ---
குக்கி
- இருமி. கக்கி - வாந்தி செய்து.
கடையில்
பல் தத்து உற்றுக் கழல் ---
வாழ்நாளின்
இறுதி வர வர பல் ஆபத்தை அடைந்து கழன்று விழ.
கொத்தை
சொல் கற்று
---
கொத்தை
- ஈனம். இழிந்த சொற்களைக் கற்றுப் பேசித்
திரிவது.
பல
பாஷை திக்கித் திக்கிக் குளறி செப்பி ---
ஒரு
மொழியையாவது ஆழமாகவும் நுட்பமாகவும் கற்காமல், பல மொழிகளை ஆடு தழை மேய்வது போல்
அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கற்று,
அவைகளை
தட்டுப்பட்டுத் தட்டுப்பட்டுக் குளறிப் பேசி அலைவர்.
பொய்ச்
செற்றைச் சட்டைக் குடிலைச் சுமை பேணும் ---
பொய்க்
கூட்டமாம் சட்டையாகிய இந்த உடம்பு குடிசை போன்றது. இதில் உள்ள பொருள்கள் யாவும் அசுத்தமானவை..
குரம்பை
மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு
அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த
செயிர்மயிர் குருதியொ டிவைபல ...... கசுமாலக்குடில்.
--- திருப்புகழ்.
சிக்கு
அற்று ---
வினைத்
தொந்தங்களால் வரும் சிக்கல்கள் நீங்கப் பெற்று.
உட்குக்
கருணை ---
உள், கு.
உள்ளத்திலே கருணை நிறையப் பெற்று.
சுத்தச்
சித்தித் தமிழைத் திட்டத்துக்குப்
புகலப்
பெறுவேனோ
---
தமிழ்
தூய்மையானது. சித்தி - நல்ல கதியைத்
தரவல்லது. இத்தகைய "இனிய தமிழ்
மொழியால், முருகா, உனது புகழை இன்ன இன்ன வகையாகப்
பாடவேண்டும் என்ற வரையறையுடன் அடியேன் பாடும் ஒரு பேற்றினைப் பெறுவேனோ?”
அக்கிட்டு
இக்கிட்டு அமருக்கு ---
அங்கிட்டு
இங்கிட்டு என்ற சொற்கள் சந்தத்தை நோக்கி, அக்கிட்டு
இக்கிட்டு என மருவியது. போரில் சூரன் இங்கும் அங்குமாகச் சுழன்றான்.
ஒட்டிக்
கிட்டிட்டு எதிரிட்டு ---
ஒட்டுதல்
- சபதம் செய்தல்.
"நான் இவனைக் கொல்வேன், இல்லையேல் இவன் கையால் மாள்வேன்"
என்று சபதம் புரிதல். "சிந்துபதியாகிய ஜயத்ரதனை நாளை நான் கொல்லேனாயின், வெந்தழலில் வீழ்வன். இது வேதமொழி"
என்றான் விஜயன்.
அத்ரத்து
எற்றிக் கடுகப் பொரு சூரன் ---
அத்திரம்
- கையில் இருந்து விடுகின்ற ஆயுதம்.
சத்திரம்
- கையிலேயே வைத்துக் கொண்டு போர் புரிவது.
தண்டு வாள் ஈட்டி முதலியன.
சூரபன்மன்
அத்திர சத்திரங்களைக் கொண்டு மிக்க வேகமாகப் போர் செய்தான்.
அச்சுக்
கெட்டு ---
அச்சு
- உடம்பு. சூரபன்மனுடைய உடல் நிலை
குலைந்தது.
படை
விட்டு
---
அவன்
விட்ட கணைகள் யாவும் லோபியிடம் போன யாசகனைப் போல் முருகவேளிடம் சென்று செயலற்று
ஒழிந்தன.
துருமத்து
அடைவாக
---
துருமம்
- மரம். சூரபன்மன் கடலின் நடுவில் மாமரமாக
நின்ற வரலாறு கந்தபுராணத்தில் காண்க.
தக்குத்
திக்குத் தறுகண் ---
தறுகண்
- அஞ்சாமை. அஞ்சாத வீரத் தன்மை. தக்குத் திக்கு என்று தடுமாறினான் சூரன்.
தொக்குத்
தொக்குற்றது கண் ---
தொக்கு
- தோல். இது பரிச உணர்ச்சியை மட்டும்
அறியும் இந்திரியம்.
இந்த
தோல் முதலிய இந்திரியங்கள் யாவும் துவையல் போல் ஆன இடத்தும். கண் - இடம் என்ற பொருளில் வந்தது.
கைக்கொட்டு
இட்டு உடல் சில் கணம் ஆடி ---
சூரபன்மன்
தன் உடல் அறைபட்ட போதும், வீரம் குன்றாமல்
கைகொட்டி, சில நேரம் ஆரவாரம்
செய்து வீரகர்ஜனை செய்து நடித்தான்.
சத்திக்
குத்தி
---
சத்தி
வேலினால் குத்தப்பட்டு.
துடியில்
சத்திக்க
---
துடி
- உடுக்கை. உடுக்கை போல் ஒலி செய்து சூரன்
ஒடுங்கினான்.
கைச்
சமர் செய்
---
கை
- ஒழுக்கம். போரில் இன்ன இன்ன தருமத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தநுர் வேதத்தில்
கூறப்பட்டு இருக்கின்றது. அந்தப் போரின் ஒழுங்கை மேற்கொண்டு முருகவேள் போர்
புரிந்தார்.
கருத்துரை
கச்சிப்
பெருமாளே, செந்தமிழால் பாடும்
பேற்றினை அருள் செய்.
No comments:
Post a Comment