காஞ்சீபுரம் - 0479. கொத்தார் பல்கால்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொத்தார் பல்கால் (காஞ்சிபுரம்)

முருகா!
பிறப்பு என்னும் பேதைமை நீங்கி, 
சிறப்பு என்னும் செம்பொருளைக் காண அருள்


தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தா ...... தனதான


கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
     குப்பா யத்திற் ...... செயல்மாறிக்

கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
     கொட்டா விக்குப் ...... புறவாசித்

தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
     அஆ உஉ...... எனவேகேள்

செற்றே சுட்டே விட்டே றிப்போ
     மப்பே துத்துக் ...... கமறாதோ

நித்தா வித்தா ரத்தோ கைக்கே
     நிற்பாய் கச்சிக் ...... குமரேசா

நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
     நெட்டோ தத்திற் ...... பொருதோனே

முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
     முட்டா திட்டத் ...... தணிவோனே

முற்றா நித்தா அத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கொத்துஆர் பல்கால் அற்று ஏக, பாழ்
     குப்பா யத்தில் ...... செயல்மாறி,

கொக்கு ஆகி, கூனி, கோல் தொட்டே,
     கொட்டாவி குப் ...... புற, வாசித்து,

இத்தா நிற்றார், செத்தார், கெட்டேன்
     அஆ உஊ...... எனவே, கேள்

செற்றே சுட்டே, விட்டு ஏறிப்போம்,
     அப் பேது துக் ...... கம் அறாதோ?

நித்தா! வித்தாரத் தோகைக்கே
     நிற்பாய்! கச்சிக் ...... குமரேசா

நிட்டூரச் சூர் கெட்டு ஓட, போர்
     நெட்டு ஓதத்தில் ...... பொருதோனே!

முத்தாரத் தோளில் கோடல் பூ
     முட்டாது இட்டத்து ...... அணிவோனே

முற்றா! நித்தா! அத்தா! சுத்தா!
     முத்தா! முத்திப் ...... பெருமாளே.


பதவுரை

      நிட்டூரச் சூர் கெட்டு ஓட --- கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலிடையே ஓட,

     போர் நெட்டு ஓதத்தில் போருதோனே --- போரினை பெரிய கடலில் புரிந்தவரே!

      முத்தாரத் தோளில் --- முத்து மாலை அணிந்த திருத்தோள்களில்

     கோடல் பூ முட்டாது இட்டத்து அணிவோனே --- வெண்காந்தள் மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவரே!

      முற்றா --- முதுமையே இல்லாதவரே!

     நித்தா --- என்றும் இளமையாய் இருப்பவரே!

     அத்தா --- எமது தந்தையே!

     சுத்தா --- தூய்மையானவரே!

     முத்தா --- இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவரே!

     முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியைத் தரும் பெருமையில் மிக்கவரே!

      கொத்தார் பல் கால் அற்று ஏக --- வரிசையாக நிறைந்திருந்த பற்கள் வேர் அற்று விழுந்து போக,

     பாழ் குப்பாயத்தின் செயல்மாறி --- பாழ்பட்ட சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி, 

      கொக்கு ஆகி --- தலை மயிர் கொக்கின் நிறம் போல வெளுத்து,

     கூனி --- முதுகு வளைந்து,

     கோல் தொட்டே --- தண்டு ஊன்றி,

      கொட்டாவிக் குப்புற --- கொட்டாவி விட்டு நிமிர்ந்த தலை குனிதலை அடைந்து,

     வாசித்து --- இந்த வகையில் வேறுபாடுகளை அனுபவித்து,

     இத்தா நிற்றார் ---  இதோ இருந்தார்,

     செத்தார் --- இறந்தார்,

     கெட்டேன் ---  ஆ ஆ கெட்டேன் எனக் கூறிக் கதறி,

         அஆ உஊ எனவே கேள் செற்றே சுட்டே விட்டு ஏறிப்போம் --- அ ஆ உ ஊ என்று உறவினர் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, நீரில் மூழ்கி, துக்கத்தினின்றும் வெளியேறி வருகின்ற

         அப் பேதுத் துக்கம் அறாதோ --- அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ?

         நித்தா --- என்றும் உள்ளவரே!

     வித்தாரத் தோகைக்கே நிற்பாய் --- விரிந்த தோகையை உடைய மயில் மீது விளங்கி நிற்பவரே!

     கச்சிக் குமரேசா --- காஞ்சிபுரத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


பொழிப்புரை


      கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலிடையே ஓடும்படியாக, போரினைப் பெரிய கடலில் புரிந்தவரே!

      முத்து மாலை அணிந்த திருத்தோள்களில் வெண்காந்தள் மலரைத் தவறாது விரும்பி அணிபவரே!

      முதுமையே இல்லாதவரே!

     என்றும் (இளமையாய்) உள்ளவரே!

     எமது தந்தையே!

     தூய்மையானவரே!

     இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவரே!

     உயிர்களுக்கு முத்தியைத் தரும் பெருமையில் மிக்கவரே!

     என்றும் உள்ளவரே!

     விரிந்த தோகையை உடைய மயில் மீது விளங்கி நிற்பவரே!

     காஞ்சிபுரத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

         வரிசையாக நிறைந்திருந்த பல் வேர் அற்று விழுந்து போக,பாழ்பட்ட சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி,  தலை மயிர் கொக்கின் நிறம் போல வெளுத்து, முதுகு வளைந்து, தண்டு ஊன்றி, கொட்டாவி விட்டு நிமிர்ந்த தலை குனிதலை அடைந்து, இந்த வகையில் வேறுபாடுகளை அனுபவித்து, இதோ இருந்தார், இறந்தார்,  ஆ ஆ கெட்டேன் எனக் கூறிக் கதறி, அ ஆ உ ஊ என்று உறவினர் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, நீரில் மூழ்கி, துக்கத்தினின்றும் வெளியேறி வருகின்ற அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ?

    
    







No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...