காஞ்சீபுரம் - 0480. கோவைச் சுத்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கோவைச் சுத்த (காஞ்சீபுரம்)

முருகா!
மாதர் மயல் நீங்கி,
உன்னைப் பாடி உய்ய அருள்


தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான
                 

கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் ...... கொடியார்தங்

கோலக் கச்சுக் கட்டிய முத்தத் ...... தனமேவிப்

பாவத் துக்குத் தக்கவை பற்றித் ...... திரியாதே

பாடப் பத்திச் சித்த மெனக்குத் ...... தரவேணும்

மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் ...... பொரும்வேலா

மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் ...... கினியோனே

சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் ...... பதியோனே

தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கோவைச் சுத்தத் துப்பு அதரத்துக் ...... கொடியார்தம்

கோலக் கச்சுக் கட்டிய முத்தத் ...... தனம் மேவி,

பாவத்துக்குத் தக்கவை பற்றித் ...... திரியாதே,

பாடப் பத்திச் சித்தம் எனக்குத் ...... தரவேணும்,

மாவைக் குத்திக் கைத்து அற எற்றிப் ...... பொரும்வேலா!

மாணிக்கச் சொர்க்கத்து ஒரு தத்தைக்கு ...... இனியோனே!

சேவல் பொன்கைக் கொற்றவ! கச்சிப் ...... பதியோனே!

தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.


பதவுரை

         மாவைக் குத்தி ---  மாமரத்தைக் குத்தி,

         கைத்து ---  வெறுத்து,

         அற எற்றி --- அடியோடு கொன்று

         பொரும் வேலா --- போர் செய்த வேலாயுதரே!

         மாணிக்கச் சொர்க்கத்து --- மாணிக்க மணிகள் நிறைந்த விண்ணுலகத்தில் இருந்த

         ஒரு தத்தைக்கு இனியோனே --- ஒப்பற்ற கிளி போன்ற தெய்வயானை அம்மைக்கு இனியவரே!

         சேவல் பொன் கைக் கொற்றவ --- சேவற் கொடியை அழகிய கையில் கொண்ட வீரமூர்த்தியே!

         கச்சிப் பதியோனே --- காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருப்பவரே!

         தேவச் சொர்க்க --- தேவர்கள் வாழும் சுவர்க்க உலகிற்கு

        சக்கிரவர்த்திப் பெருமாளே --- சக்கரவர்த்தியாகிய பெருமையில் சிறந்தவரே!

         கோவை --- கொவ்வைப் பழம் போலவும்,

       சுத்தத் துப்பு --- சுத்தமான பவளம் போலவும்

      அதரத்துக் கொடியார் தம் --- சிவந்த வாயிதழ்களை உடைய கொடி போன்ற மாதர்களுடைய

         கோலக் கச்சுக் கட்டிய --- அழகிய கச்சு அணிந்துள்ளதும்,

        முத்தத் தனம் மேவி --- முத்து மாலை அணிந்துள்ளதுமான கொங்கையை விரும்பி,

         பாவத்துக்குத் தக்கவை பற்றித் திரியாதே --- பாவ காரியங்களுக்கு ஏற்ற செயல்களைச் செய்து அடியேன் திரியாமல்,

         பாடப் பத்திச் சித்தம் எனக்கு தரவேணும் --- தேவரீரைப் பாடிப் புகழ அன்பு நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

பொழிப்புரை

         மாமரத்தைக் குத்தி, வெறுத்து, அடியோடு கொன்று போர் செய்த வேலாயுதரே!

         மாணிக்கம் மயமான விண்ணுலகத்தில் வாழ்ந்த ஒப்பற்ற கிளி போன்ற தெய்வயானை அம்மைக்கு இனியவரே!

         சேவற் கொடியை அழகிய கையில் பற்றி உள்ள வீரமூர்த்தியே!

         காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருப்பவரே!

         தேவர்கள் வாழும் சுவர்க்க உலகிற்குச் சக்கரவர்த்தியாகிய பெருமையில் சிறந்தவரே!

          கொவ்வைப் பழம் போலவும், சுத்தமான பவளம் போலவும் சிவந்த வாயிதழ்களை உடைய கொடி போன்ற மாதர்களுடைய அழகிய கச்சு அணிந்துள்ளதும், முத்துமாலை அணிந்துள்ளதுமான கொங்கைகளை அடைய விரும்பி, பாவ காரியங்களுக்கு ஏற்ற செயல்களைச் செய்து அடியேன் திரியாமல், தேவரீரைப் பாடிப் புகழும் அன்பு நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.


விரிவுரை

கோவைச் சுத்தத் துப்பு அதரத்துக் கொடியார் ---

மாதர்களின் வாயிதழ் கொவ்வைப்பழம் போலவும், தூய பவளம் போலவும் சிவப்பாக இருக்கும்.

கொடியார் ---  கொடி போன்றவர்கள்.  கொடிய குணம் உள்ளவர்கள் எனினும் அமையும்.

கோலக் கச்சுக் கட்டிய முத்தத் தனம் ---

அழகிய கச்சும் முத்துமாலையும் அணிந்த கொங்கை.  விதம் விதமாக அழகிய இரவிக்கைகளை அணிவார்கள் பொது மாதர்கள்.

பாவத்துக்குத் தக்கவை பற்றித் திரியாதே ---

கொலை புலை மது மாமிசம் முதலிய பாவங்களை அஞ்சாமல் புரிவார்கள்.  மாதர் மயலால் பாவங்கள் பல செய்து உழல்வார்கள்.

பாடப் பத்திச் சித்தம் எனக்குத் தரவேணும் ---

இந்தப் பாவ நெறியில் செல்லாமல், முருகனைப் பாடிப் பரவித் திரிய வேணும். பாடும் அன்பு உள்ளத்தை, முருகா, நீ எனக்குக் கொடுத்து அருள் என்று அடிகளார் வேண்டுகின்றார்.

மாவைக் குத்திக் கைத்து அற எற்றி ---

சூரபன்மன் போரின் முடிவில் கடலில் மாமரமாக முளைத்து நின்றான். அந்த எஃகு மயமான மாமரத்தை முருகவேள் வேலாயுதத்தை ஏவி அடியுடன் விழுந்து அழியுமாறு அழித்து அருளினார். கைத்து - வெறுத்து.

மாணிக்கச் சொர்க்கத்து ஒரு தத்தை ---

சொர்க்கம் - தேவலோகம்.  அது மாணிக்க மயமாகத் திகழ்வது.

விண்ணுலகத்தில் கற்பகச் சோலையில் வளர்ந்து வாழ்ந்த ஒப்பற்ற கிளி போன்றவர் தெய்வயானை அம்மையார்.

சேவல் பொன் கைக் கொற்றவ ---

முருகப் பெருமான் வீரமூர்த்தி.  வீரம் நிறைந்த சேவல் கொடியை அவர் தமது திருக்கரத்தில் ஏந்தி வந்து அடியார்க்கு அருள் புரிவார்.

சென்றே இடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்... ---  (அன்பாக) திருப்புகழ்.

ஜயந்தன் கனவில் கந்தவேள் சென்று அருள் புரிந்தபோது சேவல் கொடியுடன் சென்றார் என்று கந்தபுராணம் கூறும்.

வீறுகேதனம் வச்சிரம் அங்குசம் விசிகம்
மாறிலாதவேல் அபயமேவலம் இடம்வரதம்
ஏறுபங்கயம் மணிமழு தண்டுவில் இசைந்த
ஆறிரண்டுகை அறுமுகம் கொண்டுவேள் அடைந்தான்.

சேவல் - நாத தத்துவம்.  கேவல சுழுத்தியில் உறங்குகின்ற ஆன்மாக்களுக்கு விழிப்பு உண்டாகச் சேவலுடன் செல்லுகின்றார் என்று உணர்க.

தேவ சொர்க்க சக்கிரவர்த்தி ---

முருகன் மூவர்க்கும் தேவர்க்கும் தலைவன்.  படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே என்பார் பிறிதொரு திருப்புகழில். ஆதலின், அப் பரமன் சொர்க்கச் சக்கிரவர்த்தி ஆகின்றான்.

கருத்துரை

கச்சி மேவிய கந்தவேளே, உன்னையே பாடும் அன்புள்ளத்தை அளித்து அருள்.



No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...