காஞ்சீபுரம் - 0481. சலமலம் விட்ட





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சலமலம் விட்ட (காஞ்சீபுரம்)

முருகா!
உன்னைப் பாடி உய்யத் திருவருள் புரிவாய்


தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான


சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்
     சகலவி னைக்கொத் திருந்தி டும்படி
          சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு ...... தந்தைதாயும்

தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி
     லுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொரு
          தனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் ...... வந்திடாமுன்

பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்
     படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கண
          படமயில் புக்குத் துரந்து கொண்டிகல் ......வென்றிவேலா

பரிமள மிக்கச் சிவந்த நின்கழல்
     பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு
          பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட ...... வந்திடாயோ

சிலையுமெ னப்பொற் சிலம்பை முன்கொடு
     சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர்
          திரிபுர மத்தைச் சுடுந்தி னந்திரி ...... திண்கையாளி

திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன
     தெரிவையி ரக்கத் துடன்பி றந்தவள்
          திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு .....கின்றஞானக்

கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர்
     நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்
          கருகஇ டத்திற் கலந்தி ருந்தவள் ...... கஞ்சபாதங்

கருணைமி குத்துக் கசிந்து ளங்கொடு
     கருதும வர்க்குப் பதங்கள் தந்தருள்
          கவுரிதி ருக்கொட் டமர்ந்த இநதிரர் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


சலமலம் விட்ட, தடம் பெரும் குடில்,
     சகல வினைக் கொத்து இருந்திடும்படி,
          சதிர உறுப்புச் சமைந்து வந்து, ரு ...... தந்தைதாயும்

தரவரு, பொய்க்குள் கிடந்த கந்தலில்
     உறையும் உயிர்ப்பைச் சமன் துரந்து, ரு
          தனியில் இழுக்கப் படும் தரங்கமும் ...... வந்திடாமுன்,

பல உருவத்தைப் பொருந்தி, அன்று உயர்
     படியும் நெளிக்கப் படர்ந்த வன்கண
          படம் மயில் புக்குத் துரந்து கொண்டு இகல் ......வென்றிவேலா!

பரிமளம் மிக்கச் சிவந்த நின்கழல்,
     பழுது அற நல்சொல் தெரிந்து, அன்பொடு
          பகர்வது, இனிச் சற்று உகந்து தந்திட ...... வந்திடாயோ?

சிலையும் எனப் பொன் சிலம்பை முன் கொடு,
     சிவமயமு அற்று, திடம் குலைந்தவர்
          திரிபுரம் அத்தைச் சுடும் தினம் தரி, ...... திண்கை ஆளி,

திருமகள், கச்சுப் பொருந்திடும் தன
     தெரிவை, இரக்கத்துடன் பிறந்தவள்,
          திசைகளில் ஒக்கப் படர்ந்து, இடம் பொரு .....கின்ற,ஞானக்

கலைகள் அணை, கொத்து அடர்ந்து, வம்பு அலர்
     நதிகொள அகத்தில் பயந்து, கம்பர் மெய்
          கருக, இடத்தில் கலந்து இருந்தவள், ...... கஞ்சபாதம்

கருணை மிகுத்து, கசிந்து, உளங்கொடு
     கருதும் அவர்க்குப் பதங்கள் தந்துஅருள்
          கவுரி, திருக்கொட்டு அமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே.


பதவுரை

      முன் --- முன் ஒரு காலத்தில்,

     சிவ மயம் அற்று --- சிவபெருமான் மீது அன்பு நீங்கி,

     திடம் குலைந்தவர் --- உறுதியினின்றும் வழுவியவர்களும்,

     திரிபுரம் அத்தை --- அசுரர்களையும் திரி புரவாசிகளுமாகிய அவுணர்களையும் அவர்கள் வாழும் மூன்று புரங்களையும்

     சிலையும் எனப் பொன் சிலம்பை கொடு --- பொன் மேரு மலையை வில்லாகக் கொண்டு,

     சுடும் --- சிரித்து எரித்தவரும்,

     தினம் தரி --- என்றும் உள்ளவரும்,

      திண் கை ஆளி --- திண்ணிய திருக் கரத்தைக் உடையவளும்,

     திரு மகள் --- மகாலட்சுமியும்,

     கச்சுப் பொருந்திடும் தன தெரிவை --- கச்சு அணிந்த தனபாரங்ககளைக் கொண்ட பெண்மணியாரும்,

     இரக்கத்துடன் பிறந்தவள் --- கருணையுடன் தோன்றியவரும்,

      திசைகளில் ஒக்கப் படர்ந்து --- திசைகள் எல்லாவற்றிலும்  பொருந்த வியாபித்து

     இடம் பொருகின்ற  --- கரைகளில் உள்ள இடத்துடன் போர் புரிந்து,

     ஞானக் கலைகள் அணை --- ஞான சாத்திரங்களுடன் கலந்து,

      வம்பு அலர்  கொத்து அடர்ந்து --- நறுமணம் கமழ்கின்ற  பூங்கொத்துக்கள் நெருங்கி உள்ள,

     நதி கொள அகத்தில் பயந்து --- கம்பா நதி பெருகி வ, சிவலிங்கத் திருமேனி வெள்ளத்தில் சலனம் உறுமே என்று உள்ளத்தில் அச்சம் உற்று,

     கம்பர் மெய் கருக --- சிவலிங்கத் திருமேனி பச்சென்ற நிறத்தை அடை,

     இடத்தில் கலந்து இருந்தவள் --- இடப் பாகத்தில் கலந்து விளங்கியவரும்,

      கஞ்ச பாதம் --- தனது திருவடித் தாமரைகளை,

     கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்கு --- மனம் கசிந்து உள்ளத்தில் கொண்டு, நினைக்கின்ற மெய்யடியார்களுக்கு

     கருணை மிகுத்து --- நிறைந்த கருணையுடன்,

     பதங்கள் தந்து அருள் --- இந்திர பதம், பிரம பதம், திருமால் பதம், உருத்திர பதம், முதலிய சிறந்த பதங்களைத் தந்து அருள் புரிகின்றவரும் ஆகி,

     கவுரி திருக் கொட்டு அமர்ந்த --- பொன் நிறம் உடைய காமாட்சி அம்மையினது திருக்கோட்டமாகிய காஞ்சிபுரத்தில் குமரக்கோட்டம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும்,

      இந்திரர் தம்பிரானே --- தேவேந்திராதி இமையவர்கட்கெல்லாம் தலைவராகிய பெருமையில் மிக்கவரே

      சல மலம் விட்ட --- மூத்திரமும், மலமும் நிறைந்த

     தடம் பெரும் குடில் --- விசாலமான பெரிய குடிசையும்,

      சகல வினைக் கொத்து இருந்திடும்படி --- நல்வினை தீவினை ஆகிய எல்லாம் ஒன்று சேர்ந்து அமையும்படி,

      சதிர உறுப்புச் சமைந்து வந்து --- சோற்றுக்கு இடமாக அங்கங்களுடன் உண்டு பண்ணப்பட்டு வந்து,

     ஒரு தந்தை தாயும் தர வரு --- ஒப்பற்ற தந்தையும் தாயும் கலந்து அளிக்க வருகின்றதும்,

     பொய்க்குள் கிடந்த கந்தலில் உறையும் உயிர்ப்பை --- பொய்யினுக்குள் கிடப்பதும் ஆகிய இந்த உடம்பினுக்குள் வாழுகின்ற பிராண வாயுவை

      சமன் துரந்து --- கூற்றுவன் துரத்தி வந்து,

     ஒரு தனியில் இழுக்கப்படும் தரங்கமும் வந்திடா முன் --- தன்னந்தனியாக ஈர்த்துக் கொண்டு போகும் கலக்கமானது அடியேனுக்கு வருவதற்கு முன்னர்,

      பல உருவத்தைப் பொருந்தி --- மஞ்சள் பச்சை நீலம் முதலிய பல நிறத்துடன் கூடியதும்,

     அன்று உயர் படியும் நெளிக்கப் படர்ந்த --- போர் புரிந்த அந்த நாளில் விண்ணுலகம் நெளிந்ததோடு அல்லாமல் மண்ணுலகமும் நெளியுமாறு நடந்ததும்,

         வன் கண படம் --- வலிமை பொருந்திய பாம்பின் படத்தின் மீது காலை ஊன்றி இருப்பதும் ஆகி,

     மயில் புக்கு --- மயில் மீது ஊர்ந்து,

     துரந்து கொண்டு இகல் ---அவுணர்களைத் துரத்திப் போர் புரிந்த,

     வென்றி வேலா --- வெற்றி பொருந்திய வேலாயுதத்தை உடையவரே!

      பரிமள மிக்கச் சிவந்த நின் கழல் --- ஞான வாசனை மிகுதியாக வீசுவதும், சிவந்து இருப்பதும் ஆகிய தேவரீருடைய திருவடியை

     பழுது அற நல் சொல் தெரிந்து --- எவ்வகைக் குற்றமும் இல்லாத நல்ல சொற்கள் கொண்டு அறிந்து,

     அன்பொடு பகர்வது இனி சற்று உகந்து தந்திட வந்திடாயோ --- அன்புடன் சொல்லித் துதிக்கின்ற தன்மையை இனியாவது சிறிது விரும்பித் தந்து அருளுமாறு வந்து திருக் காட்சி தர மாட்டீரா?

பொழிப்புரை


         முன் ஒரு காலத்தில், சிவபெருமான் மீது அன்பு நீங்கி, உறுதியினின்றும் வழுவியவர்களும், அசுரர்களையும் திரிபுர வாசிகளுமாகிய அவுணர்களையும் அவர்கள் வாழும் மூன்று புரங்களையும், பொன் மேரு மலையை வில்லாகக் கொண்டு, சிரித்து எரித்தவரும், என்றும் உள்ளவரும், திண்ணிய திருக் கரத்தைக் உடையவளும், மகாலட்சுமியும், கச்சு அணிந்த தனபாரங்ககளைக் கொண்ட பெண்மணியாரும், கருணையுடன் தோன்றியவரும், திசைகள் எல்லாவற்றிலும்  பொருந்த வியாபித்து கரைகளில் உள்ள இடத்துடன் போர் புரிந்து, ஞான சாத்திரங்களுடன் கலந்து, நறுமணம் கமழ்கின்ற  பூங்கொத்துக்கள் நெருங்கி உள்ள, கம்பா நதி பெருகி வ, சிவலிங்கத் திருமேனி வெள்ளத்தில் சலனம் உறுமே என்று உள்ளத்தில் அச்சம் உற்று, சிவலிங்கத் திருமேனி பச்சென்ற நிறத்தை அடை, இடப் பாகத்தில் கலந்து விளங்கியவரும், தனது திருவடித் தாமரைகளை, மனம் கசிந்து உள்ளத்தில் கொண்டு, நினைக்கின்ற மெய்யடியார்களுக்கு நிறைந்த கருணையுடன், இந்திர பதம், பிரம பதம், திருமால் பதம், உருத்திர பதம், முதலிய சிறந்த பதங்களைத் தந்து அருள் புரிகின்றவரும் ஆகி, பொன் நிறம் உடைய காமாட்சி அம்மையினது திருக்கோட்டமாகிய காஞ்சிபுரத்தில் குமரக்கோட்டம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும், தேவேந்திராதி இமையவர்கட்கெல்லாம் தலைவராகிய பெருமையில் மிக்கவரே

         மூத்திரமும், மலமும் நிறைந்த விசாலமான பெரிய குடிசையும், நல்வினை தீவினை ஆகிய எல்லாம் ஒன்று சேர்ந்து அமையும்படி, சோற்றுக்கு இடமாக அங்கங்களுடன் உண்டு பண்ணப்பட்டு வந்து, ஒப்பற்ற தந்தையும் தாயும் கலந்து அளிக்க வருகின்றதும், பொய்யினுக்குள் கிடப்பதும் ஆகிய இந்த உடம்பினுக்குள் வாழுகின்ற பிராண வாயுவை கூற்றுவன் துரத்தி வந்து,  தன்னந்தனியாக ஈர்த்துக் கொண்டு போகும் கலக்கமானது அடியேனுக்கு வருவதற்கு முன்னர்,

     மஞ்சள் பச்சை நீலம் முதலிய பல நிறத்துடன் கூடியதும், போர் புரிந்த அந்த நாளில் விண்ணுலகம் நெளிந்ததோடு அல்லாமல் மண்ணுலகமும் நெளியுமாறு நடந்ததும்,வலிமை பொருந்திய பாம்பின் படத்தின் மீது காலை ஊன்றி இருப்பதும் ஆகி,மயில் மீது ஊர்ந்து,  அவுணர்களைத் துரத்திப் போர் புரிந்த, வெற்றி பொருந்திய வேலாயுதத்தை உடையவரே!

     ஞான வாசனை மிகுதியாக வீசுவதும், சிவந்து இருப்பதும் ஆகிய தேவரீருடைய திருவடியை, எவ்வகைக் குற்றமும் இல்லாத நல்ல சொற்கள் கொண்டு அறிந்து, அன்புடன் சொல்லித் துதிக்கின்ற தன்மையை இனியாவது சிறிது விரும்பித் தந்து அருளுமாறு வந்து திருக் காட்சி தர மாட்டீரா?


விரிவுரை

சலமலம் விட்ட …..     …..   குடில் ---

உடம்பைப் பேணுவதையே பெருநோக்கமாகக் கொண்டு, அவல வயிற்றை வளர்ப்பதற்கு அல்லும் பகலும் பாடுபட்டு மக்கள் ஓயாது உழல்கின்றனர். உடம்புக்குள் உயிர்க்கு உயிராய் உறையும் உத்தமனைக் காண்பதற்கு முயல்கின்றார்களில்லை.  என்னே, பேதைமை! இவ்வுடம்பைப் பார்த்துப் பார்த்து மகிழ்கின்றனரே! இது என்ன வாசனைப் பட்டங்கள் நிறைந்த வீடா?  இல்லை. மலசலம் நிறைந்த குடிசை.

உடம்பின் அசுத்தத்தை நினைந்தாலொழிய உடம்பின் மீதுள்ள பற்று தொலையாது. "பன்புலால் யாக்கை" என்றார் மணிவாசகர்.

காக மொடுகழுகு அலகை நாய்நரிகள்
         சுற்று சோறுஇடு துருத்தியை,
     கால் இரண்டுநவ வாசல் பெற்றுவளர்
              காமவேள் நடன சாலையை,
போகஆசைமுறி இட்ட பெட்டியை,மும்
              மலம் மிகுந்து ஒழுகு கேணியை,
     மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை,
              முடங்க லார்கிடை சரக்கினை,
 மாக இந்த்ரதனு மின்னை ஒத்து இலக
              வேதம் ஓதியகு லாலனார்
     வனைய, வெய்யதடி கார னானயமன்
              வந்து அடிக்கும்ஒரு மட்கலத்
 தேக மானபொய்யை, மெய்யெ னக்கருதி
              ஐய வையமிசை வாடவோ,
     தெரிவ தற்கரிய பிரம மேஅமல
              சிற்சு கோதய விலாசமே.

என்று தாயுமானார் இவ்வுடம்பைப் பற்றி அருளிச்செய்யும் அழகையும் நோக்குக.

புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதனில்
     புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்,
என்பொலா மணியே! எண்ணிநான் எண்ணி
    ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்,
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
     மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன், அந்த
     இளைப்பையும் ஐயநீ அறிவாய்.                        ---  திருவருட்பா.

சகலவினைக் கொத்திருந்திடும்படி ---

வினை, நல்வினை தீவினை என இரு வகைப்படும். அது முற்பிறப்புக்களில் செய்து பக்குவத்திற்கு வராமல் இருப்பாக நிற்பதாகிய சஞ்சிதம். பக்குவப்பட்டு இப் பிறப்பில் அனுபவிப்பதாகிய பிராரப்தம். இப்போது மனமொழி மெய்களால் புரிவதாகிய ஆகாமியம் என மூன்று பிரிவாக நிற்கின்றது.  "வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப் போதளவும் நில்லாது" என்றார் பட்டினத்தடிகள்.  இத்தகைய வினைத் தொகுதிகள் உவ்வுடம்பில் தங்கி இருக்கின்றன. அதனால் உடல் இருக்கின்றது.


பொய்க்குள் கிடந்த கந்தல் ---

பொய் வாழ்க்கையுள் கட்டுண்டு கிடப்பது இவ்வுடம்பு.  பிதாமாதாக்களின் குணானுகுணங்களிருந்து வந்தது. அவர்களது தன்மைகள் எஞ்சி மக்களாக இருப்பதனால், பிள்ளைகளுக்கு எச்சம் என்று பேருண்டாயிற்று.  ஒரு பெரிய துணியில் இருந்து கிழித்து ஒரு துண்டை எடுப்பது போல, தாய்தந்தைகளிடமிருந்து கிழித்த கந்தல் இந்த உடம்பு.  "மாலினால் எடுத்த கந்தல்" என்றார் பிறிதோரிடத்திலும். கந்தல் என்றால் ஓட்டைகளுடன் கூடியது.  இவ்வுடம்பிலும் ஒன்பது ஓட்டைகள்.

சமன் துரந்து ---

சமன் - இயமன். எல்லோரையும் சமமாகப் பார்க்கின்றவனாதலின் இப் பேர் பெற்றனன். பழையவரென்று பாரான், புதியவரென்றும் பாரான், தனவந்தர், ஏழை, மணமகன், பெரிய அதிகாரி, புலவன், வீராதி வீரன், அரசன், இளையவன், இனியாராக இருப்பினும் ஆயுள் முடிந்ததும் உயிரைப் பற்றுவான். நடுநிலை தவறாதவன். ஆதலினால், நடுவன் என்ற பெயரையும் பெற்றனன். ஆயுள் முடிந்தவுடன் துரத்திக்கொண்டு வருவான்.  உயிருக்குப் பயந்து வயித்தியன் வீட்டிலேயே குடியிருந்தாலும் வருவான்.

தனியில் இழுக்கப்படும் தரங்கம் ---

பணியாளர்களும், தாய்தந்தையரும், மக்களும், உயிர்க்கினிய மனைவியும், சுற்றத்தாரும், நண்பரும் சூழ்ந்திருப்பினும், அத்தனைப் பேரினின்றும், இன்னும் மிக உறவாக இருந்த இவ்வுடம்பினின்றும் பிரித்துத் தனித்துக்கொண்டு போவான்.

மைவரும் கண்டத்தர் மைந்த 'கந்தா' என்று வாழ்த்தும் இந்தக்  
கைவரும் தொண்டு அன்றி மற்று அறியேன் கற்ற கல்வியும் போய்ப்
பை வரும் கேளும் பதியும் கதறப் பழகி நிற்கும்
ஐவரும் கைவிட்டு மெய்விடும்போது உன் அடைக்கலமே.   ---  கந்தரலங்காரம்.

அத் தனிவழிக்குத் துணையாய் நின்று முருகன் கைவேல் உதவும்.

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.    ---  கந்தரலங்காரம்.

தனித்துவழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையது ஆகும்.    --- வேல் வகுப்பு.

பல உருவத்தை.......... தந்திடாயோ ---

உயுத்த களத்தில் எம்பெருமான் மயில் மீது ஊர்ந்து அசுரரைத் துரத்தி அழித்தனர்.  அதனால், அடியேனை யமன் துரத்தும்போது காப்பாற்ற வேணும் என்றும் குறிப்பிடுகின்றனர்.  இனிய சொற்களை அமைத்து இறைவன் திருவடித் தாமரைகளைத் துதித்து கவிபாடி வழிபடவேண்டும்.

சிவமயமற்றுத் திடம் குலைந்தவர் ---

கமலாட்சன், தாரகாட்சன், வித்யுன்மாலி என்று மூன்று அசுரர்களும், சிவபெருமானிடத்து அளவிலா வரங்களைப் பெற்று, பொன் வெள்ளி இரும்பு ஆகிய கோட்டைகளுடன் வாழ்ந்து, மாலயனாதி வானவரை வருத்தலுற்றனர்.  தேவர்கள் சிவபெருமானிடம் வந்து திரிபுர அசுரரால் நேரும் துன்பத்தைக் கூறி முறையிட்டனர்.  "நமக்கு அன்பர் ஆதலின் நாம் அவரை அழிக்கமாட்டோம்" என்று ஆலமுண்ட நீலகண்டப் பெருமான் கூறியருளினார். திருமால் புத்தாவதாரங்கொண்டு திரிபுரர்கள் வாழும் ஊரில் புத்தக் கொள்கையை உபதேசித்து, அந்நகரில் உள்ள எல்லோருடைய உள்ளத்திலும் இருந்த சிவபத்தியை நீக்கி விட்டனர். அவர்கள் திடம் குலைந்து, மடம் கொண்டனர்.  ஆனால், மூன்று அவுணவேந்தர் மட்டும் அசையாத சிவபத்தியுடன் விளங்கினார்கள். பிறகு, தேவர் வேண்ட, சிவபெருமான் மேருமலையை வில்லாகத் தாங்கி தேவர்கள் யாவரும் துணை செய்ய வந்தனர். தேவர்கள் நமது துணையினால் தானே பெருமான் திரிபுர சங்காரம் செய்கின்றார் என்று எண்ணி இறுமாந்தனர். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு ஒரு துணையும் வேண்டும்கொலோ என்று எண்ணி சிறிது சிரித்தனர். அம் முறுவலினின்றும் வெளிப்பட்ட ஒரு சிறு நெருப்புப் பொறியால் முப்புரமும் அதனுள் சிவமயமற்றுத் திடம் குலைந்த அவுணர்களும் சாம்பராயினர்.  அதற்குள்ளிருந்த மூவேந்தரும் அழியாது நின்றனர். என்னே இறைவன் பெருமை

மாநாக நாண் வலுப்புறத் துவக்கி ஓர்
மாமேரு பூதரத் தனுப் பிடித்துஒரு
மாலாய வாளியைத் தொடுத்து அரக்கரில் ஒருமூவர்
மாளாது பாதகப் புரத் ரயத்தவர்
தூளாகவே முதல் சிரித்த வித்தகர்....
                                ---  (ஆனாதஞான) திருப்புகழ்.

ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
ஓர் அம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற.        ---  திருவாசகம்.

சிவபெருமானும் உமாதேவியாரும் பொன்னும் மணியும்போல தாதான்மியமாதலால் திரிபுரதகனம் அம்பிகை புரிந்ததாகக் கூறுகின்றனர்.


நதிகொள அகத்தில் பயந்து.......... இடத்தில் கலந்திருந்தவள் ---

உமாதேவியார் இடப்பாகம் பெறும் பொருட்டு, கச்சியம்பதியில் மாமரத்தின் கீழ் மணலை இலிங்கமாகப் பிடித்து அன்புடன் வழிபாடு செய்தனர்.  அவரைச் சோதிக்கும் பொருட்டு பெருமான் கம்பை நதியைப் பெருக வைத்தனர். பெருவெள்ளம் வர இலிங்கமூர்த்திக்குச் சேதம் வருமே என்று அம்பிகை அஞ்சி, இலிங்கத்தைத் தழுவிக் கொண்டனர். அதனால், இலிங்கத்தில் முலைச் சுவடும், வளைத் தழும்பும் உண்டாயிற்று. பெருமான் காட்சி தந்து இடப்பாகம் கொடுத்து அருளினர்.


நாத ரும்பெரு விருப்பொடு நயந்து
         நங்கை அர்ச்சனை செய்யும்அப் பொழுதில்
காதல் மிக்கதுஓர் திருவிளை யாட்டில்
         கனங்கு ழைக்குஅருள் புரிந்திட வேண்டி
ஓத மார்கடல் ஏழும்ஒன் றாகி
         ஓங்கி வானமும் உட்படப் பரந்து
மீது செல்வது போல்வரக் கம்பை
         வெள்ளம் ஆம்திரு உள்ளமும் செய்தார்.

அண்ண லார்அருள் வெள்ளத்தை நோக்கி
         அங்க யல்கண்ணி தம்பெரு மான்மேல்
விண்எ லாம்கொள வரும்பெரு வெள்ளம்
         மீது வந்து உறும் எனவெருக் கொண்டே
உள்நி லாவிய பதைப்பு உறு காதல்
         உடன் திருக்கையால் தடுக்க நில் லாமை
தண் நிலாமலர் வேணி யினாரைத்
         தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்.
  
மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தால்
         மாவின் மேவிய தேவநா யகரை
முலைக்கு வட்டொடு வளைக்கையால் நெருக்கி
         முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத்த னித்திரு நுதல்திரு முலைக்கும்
         செந்தளிர்க் கரங்க ளுக்கும்மெத்து எனவே
கொலைக்க ளிற்றுஉரி புனைந்ததம் மேனி
         குழைந்து காட்டினார் விழைந்தகொள் கையினார்.

கம்பர் காதலி தழுவமெய் குழையக்
         கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன
உம்ப ரேமுதல் யோனிகள் எல்லாம்
         உயிரும் யாக்கையும் உருகிஒன்று ஆகி
எம்பி ராட்டிக்கு மெல்லியர் ஆனார்
         என்றும் ஏகம்பர் என்றுஎடுத்து ஏத்த
வம்பு உலாமலர் நிறையவிண் பொழியக்
         கம்பை ஆறுமுன் வணங்கியது அன்றே.

பூதி ஆகிய புனிதநீறு ஆடிப்
         பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து
காதில் வெண்குழை கண்டிகை தாழக்
         கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனார் ஆயும் மா தவஞ்செய்
         அவ்வ ரம்கொலோ அகிலம்ஈன்று அளித்த
மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு
         வளைத் தழும்புடன் முலைச்சுவடு அணிந்தார்.       ---  பெரியபுராணம்.


கருத்துரை

சத்தி வீடாகிய காஞ்சிபுரத்தில் வாழும் கந்தவேளே, இயமன் வந்து உயிரைப் பற்றுமுன் உமது திருவடியைப் பாடி உய்யும் வரத்தைத் தந்தருள வந்தருளுவீர்.



No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...