அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சீசி முப்புர
(காஞ்சீபுரம்)
முருகா! நல்ல குருநாதா!
உனது திருவடியை அடியேன்
மீது சூட்டி அருள்.
தான
தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத் ...... தனதான
சீசி
முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முத்தியிற் கூட வேகளித் ......
தநுபூதி
சேர
அற்புதக் கோல மாமெனச்
சூரி யப்புவிக் கேறி யாடுகச்
சீலம் வைத்தருட் டேறி யேயிருக் ......
கறியாமற்
பாசம்
விட்டுவிட் டோடி போனதுப்
போது மிப்படிக் காகி லேனினிப்
பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் ...... தடியேனைப்
பார
டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித் ......
தருள்வாயே
தேசில்
துட்டநிட் டூர கோதுடைச்
சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் ......
தருள்வோனே
சீர்ப
டைத்தழற் சூல மான்மழுப்
பாணி வித்துருப் பாத னோர்புறச்
சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற்
...... குருநாதா
காசி
முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
கோவ லத்தியிற் கான நான்மறைக்
காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்
...... புலிவேளூர்
காள
அத்தியப் பால்சி ராமலைத்
தேச முற்றுமுப் பூசை மேவிநற்
காம கச்சியிற் சால மேவுபொற் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
சீசி
முப்புரக் காடு நீறு எழச்
சாடி, நித்திரை, கோசம் வேர்அற,
சீவன் முத்தியிற் கூடவே களித்து, ...... அநுபூதி
சேர, அற்புதக் கோலமாம் எனச்
சூரியப் புவிக்கு ஏறி ஆடுக,
சீலம் வைத்து அருள் தேறியே இருக்க
......அறியாமல்,
பாசம்
விட்டு விட்டு ஓடி போனது
போதும், இப்படிக்கு ஆகிலேன், இனிப்
பாழ் வழிக்கு அடைக்காமலே பிடித்து, ......அடியேனைப்
பார்
அடைக்கலக் கோலம் ஆம் எனத்
தாபரித்து, நித்த ஆரம் ஈது என,
பாத பத்ம நல் போதையே தரித்து ...... அருள்வாயே.
தேசுஇல்
துட்ட நிட்டூர கோது உடைச்
சூரை வெட்டி, எட்டு ஆசை, ஏழ்புவித்
தேவர் முத்தர்கட்கு ஏதமே தவிர்த்து
......அருள்வோனே
சீர்
படைத்த அழல், சூலம், மான், மழுப்
பாணி, வித்துருப் பாதன், ஓர்புறச்
சீர் திகழ்ப் புகழ்ப் பாவை ஈன பொன்
...... குருநாதா!
காசி, முத்தமிழ்க் கூடல், ஏழ்மலை,
கோவல், அத்தியின் கானம், நான்மறைக்
காடு, பொன்கிரி, காழி, ஆருர்,பொன் ...... புலி,வேளூர்
காள
அத்தி, அப்பால் சிராமலை,
தேச முற்று, முப்பூசை மேவி, நல்
காம கச்சியில் சால மேவு பொன் ......
பெருமாளே.
பதவுரை
தேசு இல் துட்ட --- ஞானம் இல்லாத
துஷ்டனும்,
நிட்டூர --- கொடுமை வாய்ந்தவனும்,
கோது உடைச் சூரை வெட்டி --- குற்றங்கள்
நிறைந்தவனுமான சூரபன்மனை வெட்டி,
எட்டு ஆசை --- எட்டுத் திசைகளிலும்
ஏழ்புவி --- ஏழு உலகங்களிலும் வாழுகின்ற
தேவர் --- தேவர்களுக்கும்,
முத்தர்கட்கு --- ஜீவன்முத்தர்களாகிய
பெரியோர்களுக்கும்
ஏதமே தவிர்த்து அருள்வோனே --- துன்பத்தை
நீக்கி அருள் புரிந்தவரே!
சீர் படைத்த அழல் சூலம் --- சிறப்பு
வாய்ந்த நெருப்பு, சூலாயுதம்,
மான், மழுப் பாணி --- மான், மழு ஆகியவற்றைத் திருக்கரத்தில்
ஏந்தியவரும்,
வித்துருப் பாதன் --- பவளம் போன்ற
சிவந்த நிறமுடைய திருவடிகளை உடையவருமான சிவபெருமானுடைய
ஓர் புற --- ஒரு பாகத்தில் உள்ள
சீர் திகழ் --- சிறப்புப் பொருந்திய
புகழ்ப் பாவை ஈன --- புகழ் நிறைந்த
பார்வதிதேவி பெற்றருளிய
பொன் குருநாதா --- அழகிய குருநாதரே!
காசி --- காசி,
முத்தமிழ்க் கூடல் --- முத்தமிழ் விளங்கும்
மதுரை,
ஏழ்மலை --- ஏழுமலைகளுடைய திருவேங்கடம்,
கோவல் --- திருக்கோவலூர்,
அத்தியில் கானம் --- திரு ஆனைக்கா,
நான் மறைக்காடு --- நான்கு வேதங்களும்
தங்கும் வேதாரணியம் என்னும்
திருமறைக்காடு,
பொன் கிரி --- கனக கிரி,
காழி --- சீகாழி,
ஆருர் ---
திருவாரூர்,
பொன் புலி --- சிதம்பரம்,
வேளூர் --- புள்ளிருக்குவேளூர்
என்னும் வைத்தீசுரன்கோயில்,
காளத்தி --- திருக்காளத்தி
அப்பால் சிராமலை --- அதன் பின் திரிசிராப்பள்ளி
தேச முற்று --- ஆகிய நாடு முழுவதும்
முப் பூசை மேவி --- மூன்று காலங்களிலும்
வழிபாடு நடாத்தப் பெற்று,
நல் காம கச்சியில் --- நல்ல காமக்
கோட்டமாகிய காஞ்சீபுரத்தில்
சால மேவு பொன் பெருமாளே --- மிகவும்
விரும்பி வீற்றிருக்கும் அழகிய பெருமையில் சிறந்தவரே!
சீசி --- சீச்சீ என்று இகழ்ந்து
தள்ளத்தக்க,
முப்புரக் காடு நீறு எழச் சாடி --- முப்புரம்
போல் துன்பம் செய்கின்ற ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களாகிய காடு வெந்து
சாம்பலாகும்படி அவைகளை அழித்து,
நித்திரைக் கோசம் வேர் அற ---
தூக்கமும், ஆன்மாவை
முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும் வேரோடு ஒழிய,
சீவன் முத்தியில் கூடவே --- ஆன்மா முத்தி
நிலை அடைய,
களித்து அநுபூதி சேர --- அடியேன்
மகிழ்ந்து ஒன்றுபட்ட அநுபவ நிலையைச் சேருமாறு,
அற்புதக் கோலம் ஆம் என ---- அற்புதத் தோற்றம் இது என்று கூறும்படியாக
சூரியப் புவிக்கு ஏறி ஆடுக --- சூரிய
மண்டலத்தில் சென்று அங்கு நடனம் புரிய,
சீலம் வைத்து --- ஒழுக்க நிலையை அடைந்து,
அருள் தேறியே இருக்க அறியாமல் --- திருவருளை உணர்ந்து
சிவாநுபவத்தில் நிலைபெற்றிருக்க அறியாமல்,
பாசம் விட்டு விட்டு ஓடி போனது போதும்
--- பாசங்கள் அடியோடு ஒழியாமல் விட்டு விட்டு ஓடிப் போனது, போதும் போதும்.
இப்படிக்கு ஆகிலேன் --- இப்படிப் பாசம்
இடை இடையே விலகும் நிலை வேண்டாம்.
இனிப் பாழ் வழிக்கு அடைக்காமலே --- இனி
இந்தப் பாழ் படும் நெறியில் அடியேனைப் புகுத்தாமல்,
அடியேனை பிடித்து --- அடியேனைப் பற்றிக்
கொண்டு,
பார் அடைக்கலக் கோலம் ஆம் எனத்
தாபரித்து --- உலகில் எனக்குப் புகலிடமாக வைக்கப்பட்ட ஒரு உருவம் என்று கொண்டு
ஆதரித்து,
நித்த ஆரம் ஈது என --- நித்தியமான ஓர்
ஆபரணம் இது என்று,
பாத பத்ம நல் போதையே தரித்து அருள்வாயே --- பாத தாமரை ஆகிய நல்ல
மலரை என் மீது தரிக்கச் செய்து திருவருள் புரிவீராக.
பொழிப்புரை
ஞானம் இல்லாத துஷ்டனும், கொடுமை வாய்ந்தவனும், குற்றங்கள் நிறைந்தவனுமான சூரனை வெட்டி, எட்டுத் திசைகளிலும் ஏழு உலகங்களிலும்
வாழுகின்ற தேவர்களுக்கும், ஜீவன்முத்தர்களாகிய
பெரியோர்களுக்கும் துன்பத்தை நீக்கி அருள் புரிந்தவரே!
சிறப்பு வாய்ந்த நெருப்பு, சூலாயுதம், மான், மழு ஆகியவற்றைத் திருக்கரத்தில் ஏந்தியவரும், பவளம் போன்ற சிவந்த நிறமுடைய
திருவடிகளை உடையவருமான சிவபெருமானுடைய ஒரு பாகத்தில் உள்ள சிறப்புப் பொருந்திய
புகழ் நிறைந்த பார்வதிதேவி பெற்றருளிய அழகிய குருநாதரே!
காசி, முத்தமிழ் விளங்கும் மதுரை, ஏழுமலைகளுடைய திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா, நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம்
என்னும் திருமறைக்காடு, கனககிரி, சீர்காழி, திருவாரூர், அழகிய சிதம்பரம், புள்ளிருக்குவேளூர் என்னும்
வைத்தீசுரன்கோயில், திருக்காளத்தி, அதன்பின் திரிசிராப்பள்ளி ஆகிய நாடு முழுவதும் மூன்று
காலங்களிலும் வழிபாடு நடாத்தப் பெற்று, நல்ல
காமகோட்டம் என்ற காஞ்சிபுரத்தில் மிகவும் விரும்பி வீற்றிருக்கும் அழகிய
பெருமையில் சிறந்தவரே!
சீச்சீ என்று இகழ்ந்து தள்ளத்தக்க, முப்புரம் போல் துன்பம் செய்கின்ற ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களாகிய காடு வெந்து
சாம்பலாகும்படி அவைகளை அழித்து,
தூக்கமும், ஆன்மாவை முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும் வேரோடு ஒழிய, ஆன்மா முக்திநிலை
அடைய, அடியேன் மகிழ்ந்து
ஒன்றுபட்ட அநுபவ நிலையைச் சேருமாறு,
அற்புதத் தோற்றம் இது என்று கூறும்படியாக சூரிய மண்டலத்தில் சென்று அங்கு நடனம் புரிய, ஒழுக்க நிலையை அடைந்து, திருவருளை உணர்ந்து
சிவாநுபவத்தில் நிலைபெற்றிருக்க அறியாமல், பாசங்கள் அடியோடு ஒழியாமல் விட்டு
விட்டு ஓடிப் போனது, போதும் போதும். இப்படிப் பாசத்தில் அகப்படும் நிலை எனக்கு வேண்டாம். இனியாகிலும் இந்தப்
பாழும் நெறியில் என்னை அடைத்து வைக்காமல் அடியேனைப் பற்றிக்கொண்டு, உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஓர் ஆபரணம் இது என்று, உமது பாத தாமரை ஆகிய நல்ல
மலரை என் மீது தரிக்கச் செய்து திருவருள் புரிவீராக.
விரிவுரை
சீசி
முப்புரக் காடு நீறு எழச் சாடி ---
ஆன்மாவுக்கு
அநாதியே உள்ள மூலமலம் ஆகிய ஆணவமும்,
ஆகந்துகமாக
இடையில் வந்த கன்ம மலம், மாயா மலம் என்ற
மலங்களும், ஆக மும்மலங்கள்
உண்டு. இந்த மும்மலங்களும் நீங்கினால்
பிறவி நீங்கும்.
முப்புரம்
என்பது மும்மலங்கள்.
அப்புஅணி
செஞ்சடை ஆதிபுராதனன்
முப்புரம்
செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம்
ஆவது மும்மல காரியம்
அப்புரம்
எய்தமை ஆர்அறிவாரே. --- திருமந்திரம்.
ஞானாக்கினியால்
சுட்டு நீறாக்க வேண்டும்.
சுட்டு
வெம்புரம் நீறாக விஞ்சைகொடு
தத்துவங்கள்
விழச் சாடி... --- (கட்டிமுண்ட)
திருப்புகழ்.
கோசம்
வேர் அற ---
கோசம்
- உறை. ஆன்மாவுக்குப் பஞ்ச கோசங்கள். அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன.
1. அன்னமய கோசம் --- இது பருமனானது. உணவினால்
ஆன உடல் என்பதால், இதற்கு அன்னமய
கோசம் என்று பெயர். இதற்கு மண், நீர் முதலிய ஐம்பூதங்களால் ஆன உணவைப் போட்டுக்
கொண்டே இருக்க வேண்டும்.
2. பிராணமய கோசம் --- இது நுட்பமானது.
கண்ணுக்குத் தெரியாதது. இது பிராண சத்தியால் ஆக்கம் பெறுகின்றது. நம் உடம்பில் இருந்து உயிர்
பிரிந்து போகும்போது இந்த உடம்பு மேல் எழுந்து போகும். இந்த உடம்பு மனிதக்
கண்ணுக்குப் புலப்படா விட்டாலும்,
நாய்கள்
மற்றும் கோட்டான்களுக்குப் புலப்படுகிறது. நாய் அழும்போதும், கோட்டான்
கத்தும்போதும், இந்த உடம்பின்
நடமாட்டம் இருக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். நாம் மூச்சு இழுக்கும்போது
அதில் பிராண சத்தி கலந்து செல்கின்றது. அந்தச் சத்தியால் இந்த உடம்பு ஆக்கம்
பெறுகின்றது. வாக்கு, பாணி, பாதம், பாயு, உபத்தம் என்ற கன்மேந்திரியங்களுடன்
பிராணனும் கூடியது.
3. மனோமய கோசம் --- மன உடல். இது
காற்று உடலை விட நுட்பமானது. கண்ணுக்குத் தெரியாதது. நம் எண்ணத்துக்கு ஏற்ப
உருப்பெறுகின்றது. வலுப்பெறுகின்றது. மனம் என்பது கண்ணாடி போன்ற, ஆனால் மிக நுட்பமான ஒரு பொருள் ஆகும்.
உயர்ந்த சிந்தனைகளால் மனம் மென்மையும் ஆற்றலும் பெறும். தாழ்ந்த மற்றும் வீணான
சிந்தனைகள் இல்லாமல் இருக்கவேண்டும்.
4. விஞ்ஞானமய கோசம் --- இது மன உடலை விட
நுட்பமானது. "அறிவு உடல்" எனப்படும். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஞானேந்திரியங்களும்
புத்தியும் கூடியது. இது பகுத்தறிவின் விளக்கத்தால் ஆக்கம் பெறுகின்றது.
பகுத்தறிவைக் கொண்டு உள்ளே ஆராயும்பொழுது இந்த உடல் செயல்படுகின்றது. ஆன்மாவுக்கே
சொந்தமான அறிவு ஒன்று இருக்கின்றது. அதற்குச் சிற்றறிவு என்று பெயர். இந்த அறிவைக்
கொண்டு தான் முற்றறிவினனான இறைவனை உணர முடிகின்றது. இது, கண்ணானது தனக்கே உள்ள சிறு ஒளியைக் கொண்டு, பெரிய ஒளியாகிய
ஞாயிற்று ஒளியைக் காண்பதைப் போன்றது ஆகும். ஆன்ம அறிவு முதிர்ச்சி பெறும் போது
அன்பாக மாறுகின்றது. அது மேலும் முதிர்ச்சி பெறும்போது அருள் ஆகின்றது. அறிவு
முதிர்ச்சி பெறாத நிலையில் வன்மை உடையதாகவும், முறுக்கு உடையதாகவும் இருக்கும். அது கத்தியைப்
போன்று கூர்மை உடையதாக இருப்பதால், அறிவு வாள் அல்லது ஞானவாள் என்று
சொல்லப்படும். அறிவு விளங்குவதற்குப்
பெரியோர்கள் சீலம், விரதம் என்று பல வழிகளை வகுத்து உள்ளனர். அவற்றைக் கடைப்பிடித்தால்,நாம் ஒன்று தெரிந்து
கொள்ளும் போது,
பத்து
மடங்கு விளக்கம் வரும்.
5. ஆனந்தமய கோசம் --- இது அறிவு உடலை விட
நுட்பமானது. கண்ணுக்குத் தெரியாதது. இதை "அதிசூக்கும உடல்" என்றும் கூறுவர்.
ஆன்ம அறிவு இந்த உடலுக்கு வந்த பிறகே அதனால் தனித்து விளங்க முடிகின்றது. அதாவது, மற்ற கருவிகளின் துணை இல்லாமல் விளங்கும்.
இந்த உடல் கைவந்த பின், ஆன்மாவால் கருவி
இன்றிச் செயல்பட முடியும். அன்பு உடைய ஒருவரைக் காண்பதற்கு கடிதம் எழுதவேண்டும் என்பது
இல்லை. நினைத்தாலே அவர் வந்துவிடுவார். இந்த
மூல உடலோடு வாழ்வதுதான் நாகரிக வாழ்வு ஆகும் இந்த உடம்பில் இருந்து எண்ணுகின்ற எண்ணங்கள் யாவும்
மேலும் மேலும் இன்பம் பயப்பனவாக இருக்கின்றன. ஐவகை உடம்புகளுள் இதுதான் மிக நுட்பமானதும், இறுதியானதும் ஆகும்.
இறைவனும் நுட்பமானவன். ஆதலால், அவன் இந்த உடம்பிலேயே தோன்றுவான்.
இந்த
ஐந்து கோசங்களும் ஆன்மாவை மூடிக் கொண்டு இருக்கின்றன.
சீவன்
முத்தியில் கூட ---
இந்த
உடம்பில் உயிர் உறையும் போது பந்தத்தினின்றும் ஆன்மா விடுபட்டு முத்திநிலை
எய்துவது.
அநுபூதி
சேர
---
அநு
- தொடர்தல். பூதி - ஆதல். இறைவனுடன் தொடர்ந்து ஒன்றுபடுதல்.
அநுபூதி
என்ற சொல்லை அருணகிரிநாதர் பல இடங்களில் ஆளுகின்றார்.
பகல்
இரவினில் ...... தடுமாறா
பதிகுரு எனத் ...... தெளிபோத
ரகசியம்
உரைத்து ...... அநுபூதி
ரத நிலைதனைத்
...... தருவாயே.. --- திருப்புகழ்.
அற்புதக்
கோலமாம் என
---
நிஷ்டாநுபூதியில்
இவ்வுடம்பே ஒளியுடம்பாக மாரி, பார்த்தோர் அற்புதம்
அடையுமாறு விளங்கும்.
சூரியப்
புவிக்கு ஏறி ---
இடை
பிங்கலை என்று இரு நாடிகளின் வழியை அடைத்து, சுழுமுனை வழியாகச் சென்று, மதிமண்டலம் கடந்து, சூரிய மண்டலத்தை அடைந்து, ஆன்மா அங்கு கோடி சூரிய ஒளியைத்
தெரிசித்துப் பேரானந்தம் அடையும்.
சீலம்
வைத்து அருள் தேறி ---
சீலம்
- ஞானவொழுக்கம். அநுபூதி அடைந்த ஞானி, ஒழுக்கத்தில்
நிலைபெற்று இருந்த திருவருள் நிலையை உணர்ந்து அதில் நிலைத்து நிற்பர்.
பாசம்
விட்டுவிட்டு ஓடிப் போனது போதும் ---
குளத்தில்
உள்ள பாசம் கல் எறிந்தால் சிறிது விலகும்.
மறுபடியும் மூடிக் கொள்ளும். அதுபோல் பாசம் விலகும். மறுபடியும் ஆன்மாவைச் சூழ்ந்து கொள்ளும். ஆதலால், இப்படியான தன்மை போதும். அடியுடன் பாசம் விலக அருள் செய் என்று வேண்டுகின்றார்.
பாசி
படு குட்டத்தில் கல்லினை விட்டு எறியப்
படும் பொழுது நீங்கி, அது விடும் பொழுதில் பரக்கும்
ஆசுபடும்
மலம்மாயை அருங்கன்மம் அனைத்தும்,
அரன்அடியை உணரும்போது அகலும், பின் அணுகும்,
நேசமொடும்
திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நினைவுடையோர் நின்றிடுவர், நிலையதுவே ஆகி
ஆசையொடும்
அங்கும்இங்கும் ஆகிஅல மருவோர்
அரும்பாசம் அறுக்கும்வகை அருளின்வழி
உரைப்பாம். ---
சிவஞானசித்தியார்.
பார்
அடைக்கலக் கோலமாம் எனத் தாபரித்து ---
இந்த
உலகில் அடியேனை உமது அடைக்கலப் பொருளாகக் கொண்டு ஆதரிக்க வேண்டும்.
தாபரித்தல்
- ஆதரித்தல்.
நித்தாரம் ---
நித்த
ஆரம். நித்தியமாகத் தரித்துக் கொள்ளும் அணிகலம்.
பாத
நல் போதையே தரித்து அருள்வாயே ---
முருகா, அடியேனுக்கு உனது பாதாரவிந்தமே நித்திய
அணிகலமாக என் முடியில் சூட்டி அருள் புரிவாயாக.
சீர்
படைத்த அழல் சூல மான் மழுப் பாணி ---
தாருக
வனத்து மகரிஷிகள் சிவபெருமான் மீது சினந்து, அபிசார ஓமம் செய்து, அவரைக் கொல்லும்பொருட்டு, மான், மழு, நெருப்பு, புலி, முயலகன், பாம்பு முதலியவைகளை
அனுப்பினார்கள். இறைவன் அவைகளை ஆபரணமாகத்
தரித்து அருளினார்.
காசி ---
காசி
- ஞானவொளி வீசும் தலம். இது ஆக்ஞை தலம்.
முத்தமிழ்க்
கூடல்
---
மதுரையில்
தமிழ்ச் சங்கம் இருந்தது. அதனால் தமிழ்க்
கூடல் என்றார்.
ஏழ்மலை
---
எழுமலை
- திருவேங்கடம். இது ஏழு பிறவிகளையும்
மாற்ற வல்ல திருத்தலம்.
கோவல் ---
கோவல்
- திருக்கோவலூர். இது அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.
அத்தியில்
கானம்
---
அத்தி
- யானை. அத்தம் - கை. கையை உடையது
அத்தி. சினையாகு பெயர். யானை வழிபட்ட
திருத்தலம் திருவானைக்கா.
நான்மறைக்
காடு
---
வேதங்கள்
பூசித்த திருத்தலம் திருமறைக்காடு.
பலகாலங்கள்
வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால்
வழிபாடு செய் மறைக்காடா... --- திருஞானசம்பந்தர்.
தேசமுற்று
முப்பூசை மேவி
---
உலக
முழுவதும் உள்ள ஆலயங்களில் மூன்று காலங்களிலும் நடைபெறும் வழிபாடுகளை முருகவேள்
பெறுகின்றார்.
கருத்துரை
காஞ்சி
மேவும் முருகவேளே, உன் திருவடியைச்
சூட்டி அருள்.
No comments:
Post a Comment