அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சுத்தச் சித்த
(காஞ்சீபுரம்)
முருகா!
அடியாரோடு உறவு பூண்டு
மேல் நிலை பெற அருள்
தத்தத்
தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் ...... தனதான
சுத்தச்
சித்தத் தொற்பத் தர்க்குச்
சுத்தப் பட்டிட் ...... டமுறாதே
தொக்கப்
பொக்கச் சிற்கட் சிக்குட்
சொற்குற் றத்துத் ...... துறைநாடி
பித்தத்
தைப்பற் றித்தைத் தற்றுற்
றொத்துக் கித்திப் ...... பிணிமாதர்
பெட்டிற்
கட்டுத் தட்டுப் பட்டுப்
பிற்பட் டிட்டுத் ...... தளர்வேனோ
அத்தத்
தத்திக் கத்தற் கெய்த்தத்
தத்திக் கத்துப் ...... பலமீவாய்
அர்ச்சித்
துப்பொற் செக்கொச் சைத்தத்
தைக்குச் செச்சைத் ...... தொடைசூழ்வாய்
கத்தத்
தித்தத் தத்திற் கொக்கைக்
கைத்தச் சத்திப் ...... படையேவுங்
கற்புச்
சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சுத்தச்
சித்த, தொல் பத்தர்க்குச்
சுத்தப் பட்டு, இட் ...... டம் உறாதே,
தொக்கப் பொக்கச் சில் கட்சிக்கு உள்
சொல் குற்றத்துத் ...... துறை நாடி,
பித்தத்தைப்
பற்றி, தைத் தற்றுஉற்று
ஒத்து, கித்திப் ...... பிணிமாதர்,
பெட்டில்
கட்டு, தட்டுப் பட்டு,
பிற்பட்டு இட்டுத் ...... தளர்வேனோ?
அத்
தத்து அத்திக்கு அத்தற்கு, எய்த்த அத்
தத்திக்கு அத்துப் ...... பலம் ஈவாய்,
அர்ச்சித்துப் பொன் செக் கொச்சைத் தத்-
தைக்குச் செச்சைத் ...... தொடை சூழ்வாய்,
கத்து
அத்தித் தத்து அத்தில் கொக்கைக்
கைத்தச் சத்திப் ...... படை ஏவும்
கற்புச்
சத்தி பொற்புச் சத்தி,
கச்சிச் சொக்க! ...... பெருமாளே.
பதவுரை
அத் தத்து அத்திக்கு அத்தற்கு --- அந்த
மனக் கவலை கொண்டிருந்த யானைக்குத் தலைவனாகிய இந்திரனுக்கும்,
எய்த்த அ தத்திக்கும் அத்துப் பலம் ஈவாய் ---
இளைத்துப் போயிருந்த அந்த யானைக்கும்
சாரும்படி பயனை அளித்தவரே!
அர்ச்சித்து --- பூசனை புரிந்து,
பொன் செக்கக் கொச்சை --- அழகிய செம்மையுடைய
திருந்தாத சொற்களைப் பேசும்
தத்தைக்கு --- கிளிபோன்ற அந்த
வள்ளிபிராட்டிக்கு
செச்சைத் தொடை சூழ்வாய் --- வெட்சி மலர்
மாலையைச் சூட்டியவரே!
கத்து அத்தி --- ஒலிக்கின்ற கடலில்
தத்து அத்தில் --- ஆபத்தான நிலையில் இருந்த
கொக்கை --- மாமரத்தை
கைத்தச் சத்திப் படை ஏவும் --- கையில் இருந்த
வேற்படையை ஏவி அழித்தவரே!
கற்பச் சத்தி --- கற்புக்கு அணிகலமாகிய
பார்வதிதேவி அளித்த
பொற்புச் சத்தி --- அழகிய சக்தி வேற்படையை
ஏந்தியவரே!
கச்சிச் சொக்க --- காஞ்சிபுரத்தில் வாழும்
அழகியவரே!
பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!
சுத்தச் சித்த --- தூய்மையான உள்ளம்
படைத்த
தொல் பத்தர்க்கு --- பழைய அடியார்களிடம்
சுத்தப் பட்டு இட்டம் உறாதே --- சுத்த
மனத்துடன் நட்பு வைக்காமல்,
தொக்கப் பொக்க --- நெருங்கிய பொய்யுடன் கலந்த
சில் கட்சிக்கு உள் --- சில கட்சிகளைச்
சேர்ந்து
சொல் குற்றத்துத் துறை நாடி --- சொற்
குற்றங்களுக்கு இடம் தரும் வழிகளை நாடியும்,
பித்தத்தைப் பற்றி --- மயக்கத்தைப்
பூண்டு,
தைத் தற்று உற்று ஒத்து --- தை தை என்ற
தாளக்கட்டுக்கு ஒத்ததான
கித்திப் பிணி மாதர் --- நடனத்தால்
வசப்படுத்துகின்ற பொது மாதர்களுடைய
பெட்டில் கட்டு --- பசப்பு வார்த்தையில்
கட்டுண்டு
தட்டுப்பட்டு --- தடுமாற்றம் அடைந்து,
பிற்பட்டு இட்டுத் தளர்வேனோ --- வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் கீழ் நிலைக்கு
ஆளாகி, தளர்ச்சி உறுவேனோ?
பொழிப்புரை
அந்த மனக் கவலை கொண்டிருந்த யானைக்குத்
தலைவனாகிய இந்திரனுக்கும், இளைத்துப் போயிருந்த
அந்த யானைக்கும் சாரும்படி பயனை
அளித்தவரே!
பூசனை புரிந்து, அழகிய செம்மையுடைய திருந்தாத சொற்களைப்
பேசும் கிளிபோன்ற அந்த வள்ளி பிராட்டிக்கு வெட்சி மலர் மாலையைச் சூட்டியவரே!
ஒலிக்கின்ற கடலில் ஆபத்தான நிலையில்
இருந்த மாமரத்தை கையில் இருந்த வேற்படையை ஏவி அழித்தவரே!
கற்புக்கு அணிகலமாகிய பார்வதி தேவி
அளித்த அழகிய சக்தி வேற்படையை ஏந்தி, காஞ்சீபுரத்தில்
வாழும் அழகியவரே! பெருமையில் சிறந்தவரே!
தூய்மையான உள்ளம் படைத்த பழைய
அடியார்களிடம் சுத்த மனத்துடன் நட்பு வைக்காமல், நெருங்கிய பொய்யுடன் கலந்த சில
கட்சிகளைச் சேர்ந்து சொற் குற்றங்களுக்கு இடம் தரும் வழிகளை நாடியும், மயக்கத்தைப் பூண்டு, தை தை என்ற தாளக்கட்டுக்கு ஒத்ததான
நடனத்தால் வசப்படுத்துகின்ற பொது மாதர்களுடைய பசப்பு வார்த்தையில் கட்டுண்டு
தடுமாற்றம் அடைந்து, வாழ்வில் முன்னேற்றம்
இல்லாமல் கீழ் நிலைக்கு ஆளாகி, தளர்ச்சி உறுவேனோ?
விரிவுரை
சுத்தச்
சித்தத் தொல் பத்தர் ---
தொல்
- பழமை. அடியார்கள் தூய சிந்தை உடையவர்களாய் விளங்குவார்கள். நிலையாமையை உணர்ந்து, நித்த அநித்த வேறுபாடுகளை உணர்ந்து, அறம் செய்தால் சித்த சுத்தி உண்டாகும். தெளிந்த
உள்ளத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும்.
சுத்தப்பட்டு
இட்டம் உறாமல்
---
அடியார்களுடன்
இணங்கி உள்ளம் தூய்மை அடைந்து, அந்த அடியார்களுடன்
நட்பு கொள்ளாமல்.
அடியார்களின்
உறவு எளிதில் முத்தி நலம் தரும்.
கண்ணில்லாத பசுவானது மந்தைப் பசுக்களுடன் சேர்ந்தால் எளிதில் தொழுவத்தை
அடையும். அதுபோல், ஞானக் கண் இல்லாத
ஒருவன் அடியார் குழாத்தில் கூடி நிற்பனேல் எளிதில் சிவகதி சேருவான்.
இதனால், பட்டினத்து சுவாமிகள் அரனார்
வழிபாட்டைப் பின்னே வைத்து, அடியார் உறவை முன்னே
வைத்தார்.
அடியார்
உறவும், அரன்பூசை நேசமும், அன்பும் அன்றி,
படிமீதில்
வேறு பயன் உளதோ? பங்கயன் வகுத்த
குடியான
சுற்றமும், தாரமும், வாழ்வும், குயக்கலங்கள்
தடியால்
அடியுண்டவாறு ஒக்கும் என்றுஇனம் சார்ந்திலரே.
தொக்கப்
பொக்கச் சிற்கட்சிக்குள் ---
தொக்க
– நெருக்கம். பொக்கம் - பொய். சில் கட்சிக்குள் - சில கட்சிகளுக்குள்.
நெருங்கிய
பொய்யுடன் கலந்த சில கட்சிகளைச் சேர்ந்து மனிதர் கெடுகின்றனர். அடியார் நட்புக்கு
நேர்மாறாகக் கொடியவர் உறவு கொண்டு நலம் குன்றுவர்.
சொல்
குற்றத்துத் துறைநாடி ---
அறிவிலிகள்
பிறர் பேசும்போது, சொற்களில் என்ன
குற்றும் வருமோ என்று பிறர் குற்றத்தையே நாடி நிற்பர். பிறர் பேச்சில் குணங்களை எல்லாம் விடுத்து, குற்றங்களை மட்டும் எடுத்துக் கொள்வர். அவர்கள்
பன்னாடைக்கு ஒப்பாவார்கள். பன்னாடை
சத்தைக் கீழே விடுத்து அசத்தை எடுத்துக் கொள்ளும்.
பித்தத்தைப்
பற்றி ---
பித்தம்
- மயக்கம். உலக இன்பம் அழியும்
தன்மையது. இன்பம் போல் தோன்றித் துன்பம்
தருவது. அறிவின் மயக்கத்தால் மாந்தர்கள்
இந்த உலக இன்பத்தை விழைந்து, அவநெறி நுழைந்து, உள்ளம் குழைந்து மாள்கின்றார்கள்.
தைத்
தற்று உற்று ஒத்துக் கித்தி ---
கித்தி
- நடனம். "கித்தி நின்றாடும் அரிவையர்" என்பது திருவிசைப்பா. தை ஒரு தாள
ஒலி. தற்று உற்று ஒத்து - தாளக் கட்டு
அமைந்ததாய், தாளத்துக்கு ஒத்த
நடனம்.
பிணிமாதர் ---
இளைஞர்களை
வசப்படுத்தும் பொதுமாதர்கள். பிணித்தல் -
வசப்படுத்துதல்.
பெட்டில்
கட்டுத் தட்டுப்பட்டு ---
பெட்டு
- மயக்கு வார்த்தை.
அத்தத்
தத்திக் கத்தற் கெய்த்தத் தத்திக்
கத்துப்
பலம் ஈவாய்
---
அத்தத்து
அத்திக்கு அத்தற்கு. அ – அந்த. தத்து - இடர்ப்பட்டு. அத்தி - ஐராவதம். அத்தன் - தலைவன்.
அத்திக்கு
அத்தற்கு என்ற சொல், அத்தி கத்தன் என்று
பிரிந்து யானைக்குத் தலைவன் என்றும் பொருள்படும்.
அத்த
தத்திக்கு அத்தன் எனக் கொண்டால்,
அந்த
தந்து என்பதன் மரூஉ எனக் கொள்க.
வெள்ளை
யானைக்கு இறைவனாகிய இந்திரனை முருகவேள் ஆட்கொண்ட திறத்தைக் குமரகுருபரர் கூறுமாறு
காண்க.
"வெள்ளைக்
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்து"... --- கந்தர் கலிவெண்பா.
எய்த்த
அத் தத்திக்கு அத்து ---
பானுகோபனால்
தோல்வி அடைந்த ஐராவத யானை தவம் செய்து இளைத்து இருந்தது. தந்தி - யானை. இச் சொல், தத்தி எனச் சந்தத்தை நோக்கி வந்தது. திருத்தணியில் தவம் புரிந்த யானைக்கு முருகன்
அருள் புரிந்தார்.
இதில்
மற்றொரு வரலாறும் அமைந்துளது.
திருமால்
முருகவேளை யானையாகித் தாங்கக் கருதினார்.
மாவிரபுரம் என்னும் தலத்தில் அருந்தவம் புரிந்தார். திருமுருகன் அவருடைய தவத்துக்கு இரங்கி, அவர்முன் தோன்றி அருளினார். திருமால்
அவரை வணங்கி, "முருகவேளே, எனக்கு முன் அவமானம் புரிந்த தாரகன்
யானை உருவம் பெற்றுச் சாத்தனாருக்கு வாகனமாக விளங்குகின்றான். அவன் அஞ்சுமாறு அடியேனை யானை வாகனமாகக் கொண்டு
அருள் புரிதல் வேண்டும்" என்று வரம் இரந்தனர். ஆறுமுகப் பெருமான் அவ்வண்ணமே
அரிமுகுந்தனை யானையாக்கி ஊர்ந்தருளினார். அதனால், கயாரூட மூர்த்தி என்று பேர் பெற்றார்.
ஓடாப்
பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி...---
திருமுருகாற்றுப்படை.
அர்ச்சித்துப்
பொற் செக்கொச்சைத் தத்தைக்குச் செச்சைத் தொடை சூழ்வாய் ---
பொன்
செ கொச்சை தத்தை. பொன் - அழகு. செ - செம்மை.
கொச்சை - திருந்தாத மழலைமொழி.
தத்தை - கிளி போன்றவர்.
வள்ளி
பிராட்டியார் முருகனை மலரால் அரிச்சித்து வழிபட்டனர். அழகியதும், செம்மையானதும், திருந்தாததும், மழலையும் ஆகிய இன்சொற்களைக் கூறும் கிளி
போன்றவர் வள்ளிபிராட்டியார். அவரை வெட்சி
மலர் மாலை சூட்டி முருகன் ஆட்கொண்டு அருளினார்.
கத்தத்
தித்தத் தத்திற் கொக்கை ---
கத்து
அத்தி தத்து அத்தில். கத்து - ஒலிக்கின்ற. அத்தி - கடலில். தத்து - இடர்ப்பாடான நிலையில் இருந்த. கொக்கு - மாமரமாய் நின்ற சூரன். வேலின் வெப்பத்தைக் கண்டு பொறுக்காத சூரபன்மன்
கடலில் ஒளிந்து எஃகு வடிவான மாமரமாய் நின்றான்.
இறைவன் அம் மாமரத்தின் மீது வேலெறிந்து மாமரத்தைத் தடிந்து அருளினார்.
கைத்த
சத்தி ---
கைத்த
– கையகத்ததான வேல். சத்தி, ஞானம், வேல் என்ற எல்லாச் சொற்களும் ஒரு பொருள்
குறித்தவை.
கருத்துரை
காஞ்சி
மாநகர் மேவும் கந்தவேளே, அடியேன் முன்னேற்றம்
இன்றித் தளர்வது முறை அன்று. நலம் பெற்று உய்ய நல்லருள் செய்.
No comments:
Post a Comment