காஞ்சீபுரம் - 0484. செடிஉடம்பு அத்தி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

செடியுடம்பு அத்தி (காஞ்சீபுரம்)

முருகா!
சமய வாதிகள் கூட்டத்தை விட்டு,
உத்தம குணம் பொருந்தி இருக்க அருள்


தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

  
செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்
     செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ்
          சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் .....தவிகாரம்

திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்
     செனனபங் கத்துத் துக்கக டற்கண்
          திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் ...... கரணாதி

குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்
     குடிலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின்
          குசைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் ...... தடுமாறுங்

குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ்
     சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங்
          குணமடைந் துட்பட் டொக்கஇ ருக்கும் ...... படிபாராய்

படிதருங் கற்புக் கற்பக முக்கண்
     கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம்
          பணிநிதம் பத்துச் சத்தியு கக்குங் ...... குமரேசா

பரவசங் கெட்டெட் டக்கர நித்தம்
     பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும்
          பரமர்வந் திக்கத் தக்கப தத்தன் ...... குருநாதா

தொடியிடும் பத்மக் கைக்குமி டைக்குஞ்
     சுருள்படும் பத்திப் பட்டகு ழற்குந்
          துகிர்கடைந் தொப்பித் திட்டஇ தழ்க்குங் ......குறமானின்

சுடர்படுங் கச்சுக் கட்டுமு லைக்குந்
     துவளுநெஞ் சத்தச் சுத்தஇ ருக்கும்
          சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


செடிஉடம்பு அத்தித் தெற்றி, இரத்தம்,
     செறிநரம்பு இட்டுக் கட்டிய சட்டம்,
          சிறைதிரண்டு ஒக்கத் தொக்க வினைப் பந்த ....விகாரம்

திமிர துங்கத் தத்துத் திரை எற்றும்
     செனன பங்கத்துத் துக்க கடல்கண்.
          திரு குரும்பைப் பட்டுச்சுழல் தெப்பம் ...... கரணஆதி

குடி புகும் பொக்கப் புக்கில், இறப்பின்
     குடிலம் வெந்து ஒக்குக் கொட்டில், மலத்தின்
          குசை சுமந்து, ட்டுத் திக்கிலும் முற்றும் ...... தடுமாறும்,

குவலயம் கற்றுக் கத்தி இளைக்கும்
     சமய சங்கத்தைத் தப்பி இருக்கும்
          குணம் அடைந்து, ட்பட்டு ஒக்க இருக்கும் ...... படி பாராய்.

படிதரும் கற்புக் கற்பகம், முக்கண்
     கொடி, பசும் சித்ரக்கு தரம் முத்தம்
          பணி, நிதம்பத்துச் சத்தி உகக்கும் ...... குமரேசா!

பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம்
     பரவும் அன்பர்க்குச் சித்தி அளிக்கும்
          பரமர் வந்திக்கத் தக்க பதத்தன் ...... குருநாதா!

தொடிஇடும் பத்மக் கைக்கும், இடைக்கும்,
     சுருள்படும் பத்திப் பட்ட குழற்கும்,
          துகிர் கடைந்து ஒப்பித்து இட்ட இதழ்க்கும், ...... குறமானின்

சுடர் படும் கச்சுக் கட்டு முலைக்கும்
     துவளு நெஞ்சத்த! சுத்த இருக்கும்,
          சுரரும் வந்திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


பதவுரை

      படிதரும் கற்புக் கற்பகம் --- முறைமையான கற்பு வாய்ந்த கற்பகம் போன்றவரும்,

     முக்கண் கொடி --- மூன்று கண்களை உடைய கொடி போன்றவரும்,

     பசும் சித்ரக்குத் தரம் --- அழகிய அலங்காரத்துக்குத் தகுதியான

     முத்தம் பணி --- முத்தாபரணம் பூண்ட

     நிதம்பத்து --- அல்குலை உடையவரும் ஆகிய

     சத்தி உகக்கும் --- பராசத்தி மகிழ்கின்ற

     குமர ஈசா --- குமாரக் கடவுளே!

     பரவசம் கெட்டு --- வேறுவசம் ஆவதை ஒழித்து, மனத்தை நிலை நிறுத்தி,

     எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு --- எட்டு எழுத்தை, நாள் தோறும் துதித்துச் செபிக்கும் அன்பர்களுக்கு

     சித்தி அளிக்கும் பரமர் --- வீட்டின்பத்தைத் தரும் சிவபெருமான்

     வந்திக்க தக்க பதத்தன் குருநாதா --- வணங்கத் தக்க திருவடிகளை உடைய குருநாதரே!

     குறமானின் --- குறப் பெண்ணாகிய வள்ளியம்மையின்

      தொடி இடும் பத்ம கைக்கும், இடைக்கும் --- வளையல் அணிந்துள்ள தாமரை போன்ற கைக்கும், இடைக்கும்,

     சுருள்படும் பத்திபட்ட குழற்கும் --- சுருள் கொண்ட வரிசை அமைந்த கூந்தலுக்கும்,

     துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் --- பவளத்தைக் கடைந்து எடுத்து அலங்கரித்து வைத்த வாயிதழுக்கும்,

     சுடர்படும் கச்சு கட்டு முலைக்கும் --- ஒளி வீசும் கச்சு அணிந்த மார்பகத்துக்கும்

     துவளும் நெஞ்சத்த --- நெகிழ்கின்ற நெஞ்சத்தை உடையவரே!

      சுத்த இருக்கும் --- தூய இருக்கு வேதமும்

     சுரரும் வந்திக்க --- தேவர்களும் வணங்க

     கச்சியில் நிற்கும் பெருமாளே --- கச்சியம்பதியில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      செடி உடம்பு --- பாவத்துக்கு இடமாகிய உடம்பு,

     அத்தித் தெற்றி --- எலும்பால் ஆகிய வீடு.

     இரத்தம் செறி நரம்பு இட்டுக் கட்டிய சட்டம் --- ரத்தம், நெருங்கிய நரம்புகள் இவைகள் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டடம்.

      சிறை திரண்டு ஒக்கத் தொக்க --- சிறையிட்டது போலச் சூழ்ந்து திரண்டு ஒன்று கூடிச் சேர்ந்த

     வினைப் பந்த விகாரம் --- வினை என்னும் பந்த பாசக் கலக்கம்.

      திமிரம் --- இருண்டதும்,

     துங்க --- உயர்ந்து எழுந்துள்ளதும்,

     தத்துத் திரை எற்றும் --- தாவி எழுவதுமான அலைகள் மோதும்

     செனன பங்கத்துத் துக்க கடல் கண் --- பிறப்பு என்னும் குற்றம் வாய்ந், துன்பமயமான கடலுக்குள்

     திரு குரும்பைப் பட்டுச் சுழல் தெப்பம் ---  பறிபட்டு விழுந்த தென்னங் குரும்பை போல அலைபட்டுச் சுழன்று அந்தப் பிறவிக் கடலில் மிதக்கின்ற தெப்பம் போன்ற

     கரண ஆதி குடி புகும் பொக்கப் புக்கில் --- மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய கரணங்கள் முதலியன குடிபுகுந்துள்ள பொய்யான இருப்பிடம்.

         இறப்பின் குடிலம் வெந்து ஒக்கும் கொட்டில் --- இறந்து போனால் இந்த வஞ்சகக் குடிசை வெந்து போகும் கொட்டகை.

     மலத்தின் குகை --- ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் இருப்பிடம் ஆகிய இந்த உடலை,

      சுமந்து எட்டுத் திக்கிலும் முற்றும் தடுமாறும் --- சுமந்து எட்டுத் திசைகளிலும், மற்ற எல்லா இடங்களிலும் தடுமாறுகின்ற,

     குவலயம் கற்று --- இவ்வுலக நூல்களைக் கற்றும்,

     கத்தி இளைக்கும் சமய சங்கத்தைத் தப்பி இருக்கும் --- கற்ற கலைகளைச் சத்தம் போட்டுப் பேசி இளைக்கின்ற  சமயச் சார்பான கூட்டங்களை விட்டு விலகி இருக்கும்

     குணம் அடைந்து --- உத்தம குணத்தினை அடைந்து,

     உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய் --- உட்பட்டு எப்போதும் அடியேன் பொருந்தி இருக்கும்படி திருக்கண் பார்த்து அருளுக.


பொழிப்புரை

         முறைமையான கற்பு வாய்ந்த கற்பகம் போன்றவரும்,  மூன்று கண்களை உடைய கொடி போன்றவரும், அழகிய அலங்காரத்துக்குத் தகுதியான முத்தாபரணம் அணிந்த அல்குலை உடையவரும் ஆகிய தேவியாகிய உமை மகிழ்கின்ற குமாரக் கடவுளே!

          வேறுவசம் ஆவதை ஒழித்து, மனத்தை நிலை நிறுத்தி,  எட்டு எழுத்தை, நாள் தோறும் துதித்துச் செபிக்கும் அன்பர்களுக்கு வீட்டின்பத்தைத் தரும் சிவபெருமான் வணங்கத் தக்க திருவடிகளை உடைய குருநாதரே!

         வளையல் அணிந்துள்ள தாமரை போன்ற கைக்கும், இடைக்கும், சுருள் கொண்ட வரிசை அமைந்த கூந்தலுக்கும், பவளத்தைக் கடைந்து எடுத்து அலங்கரித்து வைத்த வாயிதழுக்கும், குறப் பெண்ணாகிய வள்ளியம்மையின் ஒளி வீசும் கச்சு அணிந்த மார்பகத்துக்கும் நெகிழ்கின்ற நெஞ்சத்தை உடையவரே!

         தூய இருக்கு வேதமும் தேவர்களும் வணங்க கச்சியம்பதியில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         பாவத்துக்கு இடமாகிய உடம்பு எலும்பால் ஆகிய வீடு. ரத்தம், நெருங்கிய நரம்புகள் இவைகள் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டடம். சிறையிட்டது போலச் சூழ்ந்து திரண்டு ஒன்று கூடிச் சேர்ந்த வினை என்னும் பந்த பாசக் கலக்கம். இருண்டதும், உயர்ந்து எழுந்துள்ளதும், ததும்பி எழுவதுமான அலைகள் மோதும் பிறப்பு என்னும் துன்பமயமான கடலுக்குள் பறிபட்டு விழுந்த தென்னங் குரும்பை போல அலைபட்டுச் சுழன்று அந்தப் பிறவிக் கடலில் மிதக்கின்ற தெப்பம் போன்ற மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய கரணங்கள் முதலியன குடிபுகுந்துள்ள பொய்யான இருப்பிடம். இறந்து போனால் இந்த வஞ்சகக் குடிசை வெந்து போகும் கொட்டகை. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் இருப்பிடம் ஆகிய இந்த உடலைச் சுமந்து எட்டுத் திசைகளிலும், மற்ற எல்லா இடங்களிலும் தடுமாறுகின்ற, இவ்வுலக நூல்களைக் கற்றும், கற்ற கலைகளைச் சத்தம் போட்டுப் பேசி இளைக்கின்ற சமய சார்பான கூட்டங்களை விட்டு விலகி இருக்கும் உத்தம குணத்திலேயே உட்பட்டு எப்போதும் அடியேன் பொருந்தி இருக்கும்படி திருக்கண் பார்த்து அருளுக.


விரிவுரை

செடி உடம்பு ---

செடி - பாவம். குணம் இன்மை.

செடி ஆய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்துஇயங்கும்
படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே.             ---  குலசேகர ஆழ்வார்.
 
செடி ஆய உடல்தீர்ப்பான், தீவினைக்கு ஓர் மருந்து ஆவான்,
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடிஆர்ந்த பொழிற்காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே.   ---  திருஞானசம்பந்தர்.

செடிநேர் உடல்கு டம்பை தனின்மேவி உற்றிடு இந்த
     படிதான் அலக்கண்இங்கண் ...... உறலாமோ
திறமாத வர்க் கனிந்துஉன் இருபாத பத்மம் உய்ந்த
     திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே                ---  (கடிமாமலர்) திருப்புகழ்.

அத்தித் தெற்றி ---

அத்தி - எலும்பு.  தெற்றி - மாடம்.

தெற்றியிலே நான்பசித்துப் படுத்துஇளைத்த தருணம்
     திருஅமுதுஓர் திருக்கரத்தே திகழ்வள்ளத்து எடுத்தே
ஒற்றியில்போய்ப் பசித்தனையோ என்று,எனைஅங்கு எழுப்பி
     உவந்துகொடுத்து அருளியஎன் உயிர்க்குஇனிதாம் தாயே
பற்றியஎன் பற்றுஅனைத்தும் தன்அடிப்பற் றாகப்
     பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே,
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
     பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந்துஅருளே.     ---  திருவருட்பா.

செறி நரம்பு இட்டுக் கட்டிய சட்டம் ---

செறிதல் - நெருங்குதல். எழுபத்தீராயிரம் நாடி நரம்புகளால் நெருக்கமாகக் கட்டிய கட்டடம் இந்த உடம்பு.

தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு
காலால் எழுப்பி வளைமுதுகு ஓட்டி கைநாற்றி நரம்-
பால் ஆர்க்கை இட்டு தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலால் கிரி தொளைத்தோன் இருதாளன்றி வேறில்லையே.
                                                                  ---  கந்தர் அலங்காரம்.

கதிதனை ஒன்றையும் காண்கின்றிலேன் கந்தவேல்முருகா!
நதிதனை அன்ன பொய்வாழ்வில் அன்பாய் நரம்பால் பொதிந்த
பொதிதனையும் கொண்டு திண்டாடுமாறு எனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந்து இங்கே என்றன் மனம் வேகின்றதே.
                                                              ---  கந்தர் அலங்காரம்.

சிறை திரண்டு ஒக்க தொக்க வினைப்பந்த விகாரம் திமிரம் ---

சிறைப்பட்ட கைதிகளைப் போல் வேறு போக்கிடம் இன்றி இந்த உடம்பிலேயே திரண்டு வினைகள் குடியிருக்கின்றன.  இருள் சூழ்ந்த உடம்பு.

திருகுரும்பை ---

"திருகு குரம்பை" என்ற சொல் "திருகுரம்பை" என வந்தது.  குரும்பை - தென்னையின் பிஞ்சு.

கடலில் வீழ்ந்த குரம்பை இப்படியும் அப்படியும் அலைவதுபோல், ஆன்மா பிறவிக்கடலில் சுழன்று திரிகின்றது.

கரணாதி குடிபுகும் பொக்கப் புக்கில் ---

அந்தக் கரணங்களாகிய மனம் புத்தி சித்தம் அகங்காரம் முதலியவைகள் குடியிருக்கும் பொய்க்கு இருப்பிடம் இந்த உடம்பு.

பொக்கக் குடிலிற் புகுதாவகை புண்டரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்துஅருள், சிந்துவெந்து
கொக்குத் தறிபட்டு எறிபட்டு உதிரம் குமுகுமுஎனக்
கக்க, கிரிஉருவக் கதிர்வேல் தொட்ட காவலனே.     ---  கந்தர் அலங்காரம்.

மலத்தின் குகை ---

அணவம் மாயை கன்மம் என்ற மும்மலங்கள் அடைபட்ட குகை.

சுமந்து எட்டுத் திக்கிலும் முற்றும் தடுமாறும் ---

உடம்பு கனமானது.  இதை நாம் சுமக்கவில்லை என்றால் நான்கு பேர் சுமக்க வேண்டும்.  பணம் கொடுத்தால் தான் சிறிது நேரம் சுமப்பார்கள்.

திசைகள் எட்டும் எங்கும் சுமந்து திரிந்து அலைந்து உழல்வார்கள்.

கத்தி இளைக்கும் சமய சங்கத்தைத் தப்பி ---

சமய நூல்களைப் படித்து, அதன் உட்பொருளை உணர்ந்து, உள்ளம் ஒருமைப்பாடு அடையாமல், கலைகளைக் கதறிப் பதறி இளைக்கின்றார்கள்.  இத்தகைய சமயக் கூட்டத்தை விட்டு விலக வேண்டும்.

குணமடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய் ---

நற்குணம் பெற்றுக் குணசீலனாய் இருக்குமாறு அடியேனைத் திருக்கண் சாத்தி அருளும்.

பரவசம் கெட்டு --- 

மந்திர செபம் புரியும்போது மனம் பரவசம் அடையாமல் தன் வசப்பட்டு நிற்கவேண்டும்.

எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பரக்குச் சித்தி அளிக்கும் பரமன் ---

எட்டு அக்கரம். ஓம் ஹாம் ஹௌம் சிவாயநம. மூன்று பீஜங்களுடன் கூடிய பஞ்சாட்சரம்.

ஐம்பத்தொன்றில் எட்டு ஆறில் மூன்றினில்
ஐந்தில் தங்கும் அப்பாலை வான்பொருள்...     ---  பூதவேதாள வகுப்பு.

இந்த எட்டு அட்சரத்தை விதிப்படி ஓதும் அன்பர்களுக்குச் சிவபெருமான் எல்லாச் சித்திகளையும், முடிவில் முத்தியையும் அருள் புரிகின்றார்.

கருத்துரை

கச்சியில் இருக்கும் கந்தவேளே, நற்குணம் பெற்று உய்யத் திருக்கண் பார்த்து அருள்.


No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...