அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
செறிதரும் செப்பத்து
(காஞ்சீபுரம்)
முருகா!
பக்குவ நிலையை அருள்
தனதனந்
தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ......
தனதான
செறிதரும்
செப்பத் துற்பல வெற்பும்
பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்
சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ்
...... சுடர்வேலும்
திரள்புயங்
கொத்துப் பட்டவ னைத்துந்
தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்
திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும்
...... படிநாடும்
அறிவறிந்
தத்தற் கற்றது செப்புங்
கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்
பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும்
......பெருமானென்
றவிழுமன்
புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென்
......றருள்வாயே
குறியவன்
செப்பப் பட்டஎ வர்க்கும்
பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்
குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ்
...... சிறுபாலன்
குதலையின்
சொற்குத் தர்க்கமு ரைக்குங்
கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்
குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங்
...... கமுராரி
பொறிவிடுந்
துத்திக் கட்செவி யிற்கண்
துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன்
...... ஜகதாதை
புனிதசங்
கத்துக் கைத்தல நிர்த்தன்
பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்
புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
செறிதரும்
செப்பத்து உற்பல வெற்பும்,
பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும்,
சிகரி துண்டிக்கக் கற்ற தனிச்செஞ்
...... சுடர்வேலும்,
திரள்புயம் கோத்துப் பட்ட அனைத்தும்
தெளிய, நெஞ்சத் துப்பு உற்று, மயக்கம்
திகழ் ப்ரபஞ்சத்தை, புற்புதம் ஒக்கும் ...... படி, நாடும்
அறிவு
அறிந்து, அத்தற்கு அற்றது
செப்பும்
கடவுளன், பத்தர்க்கு அச்சம் அறுத்து,அன்பு
அருள்பவன், பொற்புக் கச்சியுள் நிற்கும் ..... பெருமான் என்று,
அவிழும்
அன்பு உற்றுக் கற்று, மனத்தின்
செயல் ஒழிந்து, எட்டப் பட்ட அதனைச் சென்று
அடைதரும் பக்வத்தை, தமியெற்கு, என்று ...... அருள்வாயே.
குறியவன், செப்பப்பட்ட எவர்க்கும்
பெரியவன், கற்பிக் கப்படும் சுக்ரன்,
குலைகுலைந்து உட்க, சத்யம் மிழற்றும் ......சிறுபாலன்
குதலையின் சொற்கு, தர்க்கம் உரைக்கும்
கனகன் அங்கத்தில் குத்தி, நிணச்செங்
குடர் பிடுங்கி, திக்கு உற்ற முகச் சிங்க, ...... முராரி,
பொறிவிடும்
துத்திக் கண்செவியின் கண்
துயில்கொளும், சக்ரக் கைக்கிரி, சுத்தம்
புயல் எனும் பொற்புப் பெற்ற நிறத்தன், ...... ஜகதாதை,
புனித
சங்கத்துக் கைத்தல நிர்த்தன்,
பழைய சந்தத்தைப் பெற்ற மடப்பெண்
புகலு கொண்டற்குச் சித்தி அளிக்கும்
...... பெருமாளே.
பதவுரை
குறியவன் --- வாமனனாக வந்தவரும்,
செப்பப்பட்ட எவர்க்கும் பெரியவன் --- சொல்லப்படும் எல்லோர்க்கும் பெரியவரும்,
கற்பிக்கப்படும் சுக்ரன் --- கல்வி
கற்றுக் கொடுக்கவந்த சுக்கிராச்சாரியார்
குலைகுலைந்து உட்க --- உள்ளம் நடுநடுங்கி
அஞ்சும்படி,
சத்யம் மிழற்றும் சிறுபாலன் --- உண்மையை உரைத்த சிறு குழந்தையாகிய பிரகலாதனுடைய
குதலையின் சொற்கு --- சிறு குழந்தை
ஆகிய பிரகலாதனுடைய மழலைச் சொல்லிற்கு
தர்க்கம் உரைக்கும் கனகன் அங்கத்தில் குத்தி ---
எதிர்வாதம் பேசிய இரணியனுடைய உடலைக் குத்தி,
நிணச்செங் குடர் பிடுங்கி --- மாமிசம் நிறைந்த
சிவந்த குடலைப் பிடுங்கி,
திக்கு உற்ற முக சிங்க --- திசைகளை
எட்டிய முகத்தை உடைய
நரசிம்மரும்,
முராரி --- முரன் என்ற அரக்கனைக் கொன்றவரும்,
பொறி விடும் துத்திக் கட்செவியின் கண்
துயில்கொளும் --- ஒளிவீசும் படப் பொறிகளை உடைய பாம்பின் மீது துயில்
கொள்ளுகின்றவரும்,
சக்ரக் கைக் கிரி --- சக்ராயுதத்தைக்
கையிலே ஏந்திய மலை போன்றவரும்,
சுத்தம் புயல் எனும் பொற்புப் பெற்ற
நிறத்தன் --- தூய மேகம் போன்ற அழகு வாய்ந்த நிறத்தை உடையவரும்,
ஜக தாதை --- உலகத்துக்குத் தந்தையும்,
புனித சங்கத்துக் கைத்தல --- பாஞ்ச
ஜன்யம் என்ற பரிசுத்தமான சங்கைக் கரத்திலே கொண்டவரும்,
நிர்த்தன் --- காளிங்கன் என்ற பாம்பின்
தலையில் நடனமாடியவரும்,
பழைய சந்தத்தைப் பெற்ற மடப்பெண் ---
பழமையான மோகினி வடிவத்தைப் பெற்று இளம்பெண்ணாக வந்தவரும்,
புகலு கொண்டற்குச் சித்தி அளிக்கும்
பெருமாளே --- புகழப் பெறும் நீலமேகம் போன்ற நிறத்தினருமாகிய திருமாலுக்கு வீடு
பேற்றினைத் தந்தருளிய பெருமையில் சிறந்தவரே!
செறிதரும் செப்பத்து உற்பல வெற்பும் ---
நெருக்கமாக வளர்கிற செம்மையான செங்கழுநீர் மலர் தினமும் மலரும் சுனையுடன்
இருக்கும் திருத்தணிகை மலையும்,
பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற
இருப்பும் --- மற்றும் அத்தணிகை மலைக்குச் சமமான மற்றத் தலங்களும்,
சிகரி துண்டிக்கக் கற்ற தனிச்செஞ்
சுடர்வேலும் --- கிரவுஞ்ச மலையைப் பிளக்கக் வல்லதான ஒப்பற்ற செவ்வொளியுடன் கூடிய
வேலாயுதமும்,
திரள்புயம் கொத்துப் பட்ட அனைத்தும் ---
திரண்ட பன்னிரு தோள்கள் கொத்தாக உள்ள எல்லாமும்,
தெளிய நெஞ்சத் துப்பு உற்று --- தெளிவாக
நெஞ்சத்திலே அறிவு பெற்று,
மயக்கம் திகழ் ப்ரபஞ்சத்தை --- மயக்கமே
நிறைந்துள்ள இந்த உலகை
புற்புதம் ஒக்கும்படி நாடும் அறிவு அறிந்து ---
நீர்க்குமிழியின் நிலை ஒத்தது என்று ஆராய்ந்து உணரும் அறிவை அறிந்து,
அத்தற்கு அற்றது செப்பும் கடவுளன் ---
சிவபெருமானுக்கு பற்றற்ற பிரணவப் பொருளை உபதேசித்த கடவுள் என்றும்,
பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு
அருள்பவன் --- அடியார்களுடைய அச்சத்தை அகற்றி அன்பை அருள்பவன் என்றும்,
பொற்புக் கச்சியுள் நிற்கும் பெருமான்
என்று --- அழகிய காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமான் என்றும் கூறி,
அவிழும் அன்பு உற்றுக் கற்று ---
நெகிழ்ந்து உருகும் அன்பு பூண்டு,
திருவருள்
நெறியைப் பயின்று,
மனத்தின் செயல் ஒழிந்து --- மனத்தின்
வியாபாரங்கள் ஒழிந்து,
எட்டப் பட்டதனைச் சென்று அடைதரும் ---
அந்த நிலையில் எட்டப் படுவதான பொருளைப் போய் அடையும்
பக்வத்தைத் தமியெற்கு என்று அருள்வாயே ---
ஆன்ம பக்குவத்தை அடியேனுக்கு எப்போது அருள்வீரோ?
பொழிப்புரை
வாமனனாக வந்தவரும், சொல்லப்படும் எல்லோர்க்கும் பெரியவரும், கல்வி கற்றுக் கொடுக்கவந்த
சுக்கிராச்சாரியார் உள்ளம் நடுநடுங்கி அஞ்சும்படி, உண்மையை உரைத்த சிறு குழந்தையாகிய
பிரகலாதனுடைய மழலைச் சொல்லிற்கு எதிர்வாதம் பேசிய இரணியனுடைய உடலைக் குத்தி, மாமிசம் நிறைந்த சிவந்த குடலைப்
பிடுங்கி, திசைகளை எட்டிய
முகத்தை உடைய நரசிம்மரும், முரன் என்ற அரக்கனைக் கொன்றவரும், ஒளிவீசும்
படப் பொறிகளை உடைய பாம்பின் மீது துயில் கொள்ளுகின்றவரும், சக்ராயுதத்தைக் கையிலே ஏந்திய மலை போன்றவரும், தூய மேகம் போன்ற
அழகு வாய்ந்த நிறத்தை உடையவரும்,
உலகத்துக்குத்
தந்தையும், பாஞ்ச ஜன்யம் என்ற
பரிசுத்தமான சங்கைக் கரத்திலே கொண்டவரும், காளிங்கன் என்ற பாம்பின் தலையில்
நடனமாடியவரும், பழமையான மோகினி
வடிவத்தைப் பெற்று இளம்பெண்ணாக வந்தவரும் என்று புகழப் பெறும் நீலமேகம் போன்ற
நிறத்தினருமாகிய திருமாலுக்கு வீடு பேற்றினைத் தந்தருளிய பெருமாளே!
நெருக்கமாக வளர்கிற செம்மையான
செங்கழுநீர் மலர் தினமும் மலரும் சுனையுடன் இருக்கும் திருத்தணிகை மலையும், மற்றும் அத்தணிகை மலைக்குச் சமமான
மற்றத் தலங்களும், கிரெளஞ்ச மலையைப்
பிளக்கக் வல்லதான ஒப்பற்ற செவ்வொளியுடன் கூடிய வேலாயுதமும், திரண்ட பன்னிரு தோள்கள் கொத்தாக உள்ள
எல்லாமும், தெளிவாக நெஞ்சத்திலே தரிசனம் செய்து
அறிவு பெற்று, மயக்கமே நிறைந்துள்ள
இந்த உலகை நீர்க்குமிழியின் நிலை ஒத்தது என்று ஆராய்ந்து உணரும் அறிவை அறிந்து, சிவபெருமானுக்கு பற்றற்ற பிரணவப் பொருளை உபதேசித்த கடவுள் என்றும்,
அடியார்களுடைய
அச்சத்தை அகற்றி அன்பை அருள்பவன் என்றும், அழகிய காஞ்சீபுரத்தில் நின்றருளும்
பெருமான் என்றும் கூறி, நெகிழ்ந்து உருகும்
அன்பு பூண்டு, திருவருள் நெறியைப்
பயின்று, மனத்தின்
வியாபாரங்கள் ஒழிந்து, அந்த நிலையில் எட்டப் படுவதான பொருளைப்
போய் அடையும் ஆன்ம பக்குவத்தை அடியேனுக்கு எப்போது அருள்வீரோ?
விரிவுரை
செறிதரும்
செப்பத்து உற்பல வெற்பும் ---
உற்பலம்
- செங்கழுநீர். செங்கழுநீர் மலர்
தினந்தோறும் மலர்கின்ற சுனையுடன் கூடியதால் திருத்தணி செங்கழுநீர் மலை எனப்படும்.
வடமொழியில்
கல்லார கிரி என்று சொல்லப்படும்.
பிறிது
மங்கத்தைக் குற்ற விருப்பும் ---
பிரிதும்
அங்கு அத்தைக்கு உற்ற இருப்பு. இருப்பு -
தலங்கள். பின்னும் அங்கு அதற்குச் சமமான
தலங்கள்.
சிகரி
துண்டிக்கக் கற்ற தனிச் செஞ்சுடர் வேலும் ---
மலையை
உடைக்கக் கற்றுக்கொண்ட வேல். தாரகனுக்குத்
துணை செய்த – மாயைக்கு உறைவிடமான கிரவுஞ்ச மலையைப் பிளந்தது.
நற்கீரன்
முதலிய புலவர்களைக் கற்கிமுகி என்ற பூதம் அடைத்து வைத்த மலையையும் உடைத்தது வேல்.
தெளிய
நெஞ்சத்துப் புற்று ---
நெஞ்சத்
துப்பு உற்று என்று பதச்சேதம் செய்க.
உள்ளத் தெளிவும், மனதில் அறிவு மலர்ச்சியும்
அடைந்து.
மயக்கம்
திகழ் ப்ரபஞ்சத்தைப் புற்புதம் ஒக்கும்படி நாடி ---
உலகில்
மயக்க உணர்வு எங்கும் தங்கி உள்ளது. இந்த
உலகம் நீர்க்குமிழி போல் நிலையில்லாதது.
நில்லாத
வற்றை நிலையின் என்றுஉணரும்
புல்லறி
வாண்மை கடை... --- திருக்குறள்.
அத்தற்கு
அற்றது செப்பும் கடவுளன் ---
அத்தன்
- சிவபெருமான். சிவபெருமானுக்கு ஒரு
பற்றும் அற்றுத் தத்துவம் கடந்த பரம்பொருளை உபதேசித்த கடவுள் - கந்தவேள்.
பத்தர்க்கு
அச்சம் அறுத்து அன்பு அருள்பவன் ---
முருகவேள்
தமது அடியார்க்கு மரண பயம், வறுமைப் பயம், நோய்ப் பயம் முதலிய பயங்களைப் போக்கி, அன்பு நிலையை அருள் புரிபவர்.
அவிழும்
அன்பு உற்று
---
முருகனுடைய
அருள் திறங்களைக் கூறி உள்ளம் உருகி அன்பு பூண்டு ஒழுகுதல் வேண்டும்.
உருஎனவும்
அருஎனவும் உளதுஎனவும் இலதுஎனவும்
உழலுவன பரசமய ......
கலைஆர வாரம்அற
உரைஅவிழ
உணர்வுஅவிழ உளம்அவிழ உயிர்அவிழ
உளபடியை உணரும்அவர் ......
அநுபூதி ஆனதுவும் …. --- சீர்பாத வகுப்பு.
சுற்று
மனத்தில் செயல் ஒழிந்து ---
அருள்
திறத்தைப் பயின்று, மனத்தின் செயல்
நீங்கப் பெறுதல் வேண்டும். மனம் இடையறாது
ஒன்று விட்டு ஒன்றினைப் பற்றி ஏதேதோ வியாபாரம் செய்து கொண்டு இருக்கும்.
எட்டப்பட்டதனைச்
சென்று அடைதரும் பக்வத்தை ---
மனோலயம்
பெற்ற அந்நிலையில் அடையப்படுவதான பக்குவம்.
ஆன்ம பரிபாகம். அதனை அடியேன்
எப்போது பெறுமாறு, முருகா, நீ அருளுவாய் என்று அடிகளார் இப்
பாடலில் குறையிரக்கின்றார்.
குறியவன் ---
வாமன
அவதாரம். திருமாலின் ஐந்தாவது அவதாரம்.
பிரகலாதருடைய
பேரனான மாவலியின் செருக்கை அடக்கும் பொருட்டு, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில்
வாமனராக அவதரித்தார்.
திருமால்
வாமனாவதாரம் செய்து, மாவலிபால் மூவடி மண்
கேட்டு வாங்கி, ஓரடியாக இம் மண்ணுலகத்தையும், மற்றோர் அடியாக விண்ணுலகத்தையும் அளந்து, மூன்றாவது அடியாக மாவலியின்
சென்னியிலும் வைத்து அளந்தனர்.
திருமாலுக்கு
நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய
திருமால், மாவலிபால்
குறியவனாகச் சென்றனர். அதற்குக் காரணம்
யாது? ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிக்கின்ற போது, எண் சாண் உடம்பு ஒரு சாணாகக் குறுகி
விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது.
ஒருவனுக்கு
இரவினும் இழிவும், ஈதலினும் உயர்வும்
இல்லை.
மாவலிபால்
மூவடு கேட்டு திருமால் சேவடி நீட்டி உலகளந்த திறத்தினை அடிகள் கந்தரலங்காரத்தில்
கூறும் அழகினையும் ஈண்டு சிந்தித்தற்குரியது.
தாவடி
ஓட்டு மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாவடி
ஏட்டிலும் பட்டதுஅன்றோ, படி மாவலிபால்
மூவடி
கேட்டு அன்று மூதண்டகூட முகடு முட்டச்
சேவடி
நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே.
வாமனாவதார வரலாறு
பிரகலாதருடைய
புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன்
மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன். மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும்
தன்வசப் படுத்தி ஆண்டனன். அதனால் சிறிது
செருக்குற்று, இந்திராதி
இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து,
அவர்களது
குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான்.
தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு
பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம்
சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர்.
தேவர் குறை தீர்க்கவும்,
காசிபருக்கு
அருளவும் வேண்டி, திருமால் அதிதி
தேவியின் திருவயிற்றில் கருவாகி,
சிறிய
வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.
காலம்
நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு
அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல
நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர்
வித்தின் அரும்குறள் ஆனான்.
மாவலி
ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ்
வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக்
கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல
இரவலர் வந்து, பொன்னையும்
பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி
வழங்கினான்.
அத்
தருணத்தில், வாமனர் முச்சிப்புல்
முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும்
ஆக, சிறிய வடிவுடன்
சென்றனர். வந்தவரை மாவலி எதிர்கொண்டு
அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்"
என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத்
திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும்
சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க
மகிழ்ச்சி உறுகின்றேன். நின்னைப் போல்
வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை.
என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.
அருகிலிருந்த
வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன்
மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான்.
அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று"
என்று தடுத்தனன்.
மாவலி, "சுக்கிரபகவானே!
உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது
ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று.
இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார்.
ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர்
ஆகும்”.
மாய்ந்தவர்
மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய
கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர்
என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர்
அல்லது இருந்தவர் யாரே.
எடுத்துஒருவருக்கு
ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது
நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,
கொடுப்பது
விலக்கு கொடியோய், உனது சுற்றம்
உடுப்பதுவும்
உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.
"கொடுப்பதைத்
தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். (கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் --- திருக்குறள்). ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி
வாமனரது கரத்தில் நீர் வார்த்து,
"மூவடி
மண் தந்தேன்" என்றான்.
உடனே
வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம
வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம்
ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம்
ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது
அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி
மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது. அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும பதமும்
மாவலி பெற்றனன்.
வடிவு
குறளாகி மாபலியை வலிய சிறை
இட
வெளியின் முகடு கிழிபட முடிய
வளரும்
முகில்.... --- சீர்பாத வகுப்பு.
சுக்ரன்
குலைகுலைந்து உட்க சத்யம் மிழற்றும் சிறுபாலன் ---
பிரகலாதன்.
ஹ்லாதம் - மகிழ்ச்சி. ப்ர – சிறப்பு.
சிறந்த
மகிழ்ச்சி உடையவன் பிரகலாதன். இவருக்குக்
கல்வி கற்பிக்க வந்தவர் சுக்ராச்சாரியார்.
பிரகலாதர் நாராயண நாமம் கூறியதால் சுக்கிரர் அஞ்சி நடுநடுங்கினார்.
குதலையின் சொற்கு, தர்க்கம் உரைக்கும் கனகன் அங்கத்தில் குத்தி, நிணச் செங் குடர் பிடுங்கி, திக்கு உற்ற முகச் சிங்க
முராரி ---
பிரமதேவருடைய
புதல்வர் மரீசி. மரீசியின் மைந்தர் காசிபர்.
காசிப முனிவர் தக்கனுடைய புதல்வியர் பதின்மூவரை மணந்து தவமே தனமாகக் கொண்டு
புகையில்லாத அக்கினியைப் போல் ஒளி செய்தனர். அந்தக் காசிப முனிவருக்குத் திதி
வயிற்றில் பொன்மயமான உடம்புடன் இரணியனும், பொன்மயமான கண்ணுடன் இரணியாக்கனும்
பிறந்தனர். இருவரும் சிறந்த வலிமை பெற்று
ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்தனர்.
இளையவனாகிய இரணியாக்கன் பூமியை எடுத்துக் கடலில் எறிய முயன்ற போது, திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை
மாய்த்தனர்.
இரணியன்
தன் தம்பியை நாராயணர் கொன்றதைக் கேட்டு உள்ளம் வருந்தினான். தவ வலிமை இல்லாமையால்
தன் தம்பி மாண்டான் எனவும் உணர்ந்தனன். தன்னையும் ஒருகால் அந்த மாயவன் மாய்ப்பான்
என்று மருண்டனன். மனம் வெருண்டனன். பெரும் தவம் புரிந்து பேராற்றல் படைக்கவேண்டும்
என்று உள்ளம் தெருண்டனன். அப்போது அவன்
மனைவி லீலாவதி பால் ஹிலாதன், சம்ஹிலாதன், அநுஹிலாதன் என்று மூன்று புதல்வர் பிறந்தனர்.
நான்காவதாக, லீலாவதி உலகம் உய்ய, பிரகலாதரை, சிப்பி முத்தைக் கருவுற்றது போல், கருக் கொண்டு இருந்தனள்.
தானவ
இந்திரனாகிய இரணியன் கானகம் புக்கு,
கனல்
நடுவே நின்று, ஊசியின் மேல் ஒரு
காலை ஊன்றி, புலன்களை அடக்கி, மூலக்கனலை மூட்டி, நீரையும் வாயுவையும் புசித்துக் கொண்டு
நெடிது காலம் கடும் தவம் புரிந்தனன். இரணியன் தவத்தால், தங்களுக்குக் கேடு வரும் என்று அஞ்சிய
இந்திரன் சேனையுடன் வந்து அவனுடைய மனைவி லீலாவதியைச் சிறைப்படுத்திக் கொண்டு
சென்றனன்.
இடையில்
நாரதர் தடுத்து, லீலாவதியை சிறை
மீட்டு, தனது தவச் சாலைக்குக்
கொண்டுபோய் கருப்பவதியும் கற்புநெறி கடவாதவளும் ஆகிய லீலாவதிக்கு, நாராயணமூர்த்தியின் பெருமைகளை எடுத்து
உபதேசித்து வந்தனர். கணவன் வரும் வரை கரு வளராமல் இருக்குமாறு லீலாவதி தன் கற்பின்
திறத்தால் செய்து கொண்டாள். கருவில் உருப்பெற்று உணர்வு பெற்று இருந்த, பிரகலாதர் நாரதமுனிவர் நாள்தோறும்
கூறிவரும் அரியின் மகிமையை அன்புடன் கேட்டு உறுதியும் அன்பும் ஞானமும் ஒருங்கே
அடைந்தனர்.
இரணியனுடைய
சலியாத கடும் தவத்திற்கு இரக்கமுற்று அன்னவாகனத்தில் நான்முகக் கடவுள்
தோன்றினர். அவர்பால் இரணியன் மண்ணிலும், விண்ணிலும், அல்லிலும், பகலிலும், வீட்டிலும், வெளியிலும், இருளிலும், ஒளியிலும், அத்திரத்தாலும், சத்திரத்தாலும், நரராலும், சுரராலும், நாகங்களினாலும், விலங்குகளினாலும் மரணம் அடையாத
தன்மையையும், மூன்று உலகங்களையும்
வெல்லும் வன்மையையும், முவுலக ஆட்சியையும், எவரினும் சிறந்த மாட்சியும் வரமாகப்
பெற்று, இரணியபுரம்
சேர்ந்தனன்.
நாரதர்
லீலாவதியைக் கொணர்ந்து, உற்றதை உரைத்து, ஆறுதல் கூறி, அவன்பால் சேர்த்தனர். பின்னர் லீலாவதி, அன்பு மயமான பிரகலாதரைப் பெற்றனள். மைந்தனது
எழில் நலத்தைக் கண்டு இரணியன் இன்புற்றனன்.
பின்னர்
ஒருநாள், தானவன் தன் தம்பியைக்
கொன்ற திருமாலைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று எண்ணினன். தன் பரிசனங்களை திருமாலைக் கட்டி ஈர்த்து
வருமாறு பணித்து அனுப்பினான். காலனிலும்
கொடிய அக் கொடியர் வைகுந்தத்திலும்,
திருப்பாற்கடலிலும்
தேடி திருமாலைக் காணாது திகைத்து மீண்டனர்.
"அசுரேந்திரா, அரியைக்
காண்கிலேம்" என்றனர். இரணியன்
சினந்து, மூவுலகிலும் தேடுமாறு
பல்லாயிரம் பதகரை அனுப்பினான்.
எங்குமுள்ள
இறைவனை அவர்கள் எங்கும் காணாது அயர்ந்து மீண்டு தமது மன்னனிடம் வந்து
"மாயனைக் காண்கிலோம்" என்றனர்.
இரணியன் சிரித்து,
"அரியானவன்
நமக்கு அஞ்சி எங்ஙனமோ ஒளிந்து கொண்டான் போலும். பயங்கொள்ளி. அத் திருமால்
சாதுக்கள் உள்ளத்திலும், ஞானிகள் சிந்தையிலும், அடியார்கள் இதயத்திலும் இருப்பன்.
கட்டையைக்
கடைந்தால் அக் கட்டைக்குள் இருக்கும் கனல் வெளிப்படுவது போலும், பாலைக் கடைந்தால், பாலுக்குள் உள்ள நெய் வெளிப்படுவது
போலும், அடியார்களையும், ஞானிகளையும், முனிவர்களையும் பிடித்துத்
துன்புறுத்தினால், அவர்களுக்குள்
மறைந்திருக்கும் அம் மாயவன் வெளிப்படுவன்.
ஆதலினால், ஆயிரம் கோடி
அவுணர்கள் மூன்று உலகங்களிலும் சென்று தேவர்களையும், முனிவர்களையும், அடியார்களையும் துன்புறுத்துங்கள்"
என்று கட்டளை இட்டனன்.
காலதூதரினும்
கொடிய அப் பாதகர்கள், பூமரங்களை ஒடித்தும், முனிவர்களை அடித்தும், கோயில்களை இடித்தும், வேதாகமங்களைப் பொடித்தும், ஞானிகளைத் துன்புறுத்தியும், "இரணியாய நம"
என்று எல்லோரையும் சொல்லச் சொல்லியும், அதனை
எங்கும் எழுதியும், வேறு தெய்வத்தைத்
தொழாவண்ணம் தடுத்தும், எங்கும் பெரும்
தீமையைப் புரிந்தனர்.
தேவர்களும், முனிவர்களும், ஞானிகளும், அடியார்களும் பெரிதும் வருந்து
திருமாலைத் தியானித்துத் துதித்தனர்.
திருமால் அவர்களுக்கு அசரீரியாக நின்று, "காலம் வரும் வரை காகம் கூகைக்கு
அஞ்சியிருக்கும். ஆதலினால் நீவிர் சிறிது காலம் தாழ்த்திருமின். யாம் உரிய
காலத்தில் வெளிப்பட்டு இரணியணை மாய்க்குதும்" என்று அருளிச் செய்தனர்.
பிரகலாதர், இடையறாது மனத்தில் திருமாலையே
சிந்தித்து, தியான பரராக
இருந்தனர். ஆடும்போதும், ஓடும்போதும், பாடும்போதும், வாடும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும், எழும்போதும், அழும்போதும், விழும்போதும், தொழும்போதும், இவ்வாறு எப்போதும் தைலதாரை போல் இறாவாத
இன்ப அன்புடன் மறவாது, கருமால் அறத்
திருமாலை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பு நிறைந்து, நிறைந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து பக்தி புரிந்து வந்தனர்.
பிரகலாதருக்கு
வயது ஐந்து எய்தியபோது, இவருடைய தன்மையைக்
கண்ட சுக்கிரர் தீர்த்த யாத்திரை சென்றனர். அதனால் அவருடைய புதல்வர் சண்டா மார்க்கரிடம்
தன் மகனை இரணியன் ஓதுமாறு வைத்தனன்.
சண்டாமார்க்கர் பிரகலாதரை நோக்கி, "இரண்யாய
நம" என்று கூறுமாறு கற்பிக்கலானார்.
பிரகலாதர் செங்கரத்தால் செவியை மூடி, "முதியவரே, பிழைபடக் கூறலுற்றனை. இன்றிருந்து நாளை
அழியும் ஒரு உயிரினை இறை எனக் கூறுதல் நலமன்று" என மொழிந்து, "ஓம் நமோ
நாராயணாய" என்று கூறினர்.
ஓதப்
புக்கவன் "உந்தைபேர் உரை"என லோடும்,
போதத்தன்
செவித் தொளைஇரு கைகளால் பொத்தி,
"மூதக்கோய், இது நல்தவம் அன்று" என மொழியா
வேதத்து
உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்.
பிரகலாதர்
கரமலர்களைச் சிரமலர் மேல் கூப்பி,
ஆனந்தக்
கண்ணீர் சொரிந்து, உரோமங்கள் சிலிர்த்து, திருமந்திரத்தைக் கூறிய வண்ணமாக
இருப்பதைக் கண்ட வேதியர் நடுங்கி,
"அடா, பாலகனே, அந்தோ! இந்த மந்திரத்தைக் கூறாதே. உன்
தந்தை கேட்டால் எம்மையும் உன்னையும் தண்டிப்பன். இதனை இமையவரும் சொல்ல
அஞ்சுவர். சிறுபிள்ளைத் தனமாக இதனை நீ
கூறினை. இனி இதனைக் கூறாதே. கூறி எம்மைக் கெடுக்காதே.
உன்னையும் கெடுத்துக் கொள்ளாதே" என்றனர்.
"கெடுத்து
ஒழிந்தனை என்னையும், உன்னையும் கெடுவாய்
படுத்து
ஒழிந்தனை, பாவி அத்தேவரும்
பகர்தற்கு
அடுத்தது
அன்றியே அயல்ஒன்று பகர, நின் அறிவின்
எடுத்தது
என்இது, என்செய்த வண்ணம் நீ"
என்றான்.
பிரகலாதர்
குறுமுறுவல் செய்து, "ஐய, இத் திருமந்திரத்தைக் கூறுவதனால், என்னையும் உய்வித்தேன். எனது பிதாவையும்
உய்வித்தேன். உம்மையும் உய்வித்தேன். இந்த உலகையும் உய்வித்தேன். வேதத்தின்
முதலில் மொழியும் மந்திரத்தை அடியேன் மொழிந்தேன். அப்படிக்கு இருக்க, நான் சொன்னதில் என்ன குற்றம்?” என்றார்.
"என்னை
உய்வித்தேன், எந்தையை உய்வித்தேன், இனைய
உன்னை
உய்வித்தேன், உலகையும் உய்விப்பான்
அமைந்து,
முன்னை
வேதத்தின் முதல்பெயர் வொழிவது மொழிந்தேன்,
என்னை
குற்றம்நான் இயம்பியது? இயம்புதி"
என்றான்.
ஆசிரியர், "அப்பா! குழந்தாய்!
நாங்கள் கூறுவதைக் கேள். இது உனது சிற்றப்பனைக்
கொன்ற மாயவனது மந்திரம். இதை ஒருவரும் கூறலாகாதென உன் தந்தையின் கட்டளை. நீ
கூறுவதனால் என்னை உன் பிதா தண்டிப்பன்" என்றனர். பிரகலாதர், "ஐயா! இம் மந்திரமே வேதத்தின்
விழுமியது. எனது இதயத்தில் எழுந்தருளி
இருக்கும் எம்பிரானுடைய திருநாமத்தைக் கூறுவதிலும் சிறந்த பேறு எனக்கு இல்லை"
என்றார்.
ஆசிரியர்
மனம் மறுகி, இரணியன்பால் ஓடி, "எந்தையே, உமது சிறுவன், நாங்கள் கூறிய வேத மந்திரத்தை மறுத்து, சொல்லத் தகாத சொல்லைச்
சொல்லுகின்றனன்" என்றார்.
இரணியன், "என்ன கூறினான்
கூறும்" என்று வினவினான். ஆசிரியர், "வேந்தே, அவன் கூறிய சொல்லை நாங்கள் கூறினால், எமக்கு நரகம் எய்தும். நாவும் வெந்து
அழியும்" என்று நடுங்கி நவின்றனர்.
இரணியன்
தன் மகனை அழைப்பித்தான். பிரகலாதர்
பிதாவைத் தொழுது நின்றனர். மகனை எடுத்து
உச்சி மோந்து முத்தமிட்டு, மடித்தலத்தில் வைத்து, "மகனே, நீ என்ன கூறினாய்" என்று வினவினான்
தந்தை. அறிவின் மிக்க அப் புதல்வர், "தந்தையே, எதைச் சொன்னால் உயிர்க்கு உறுதி
பயக்குமோ, ஞானிகள் எதை
இடைவிடாது சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்களோ, எதனை வேதம் வியந்து ஓதுகின்றதோ, எது நம்மை வாழ்விக்கின்றதோ, அதனையே அடியேன் கூறினேன்"
என்றார். இரணியன் உள்ளம் உவந்து, "பேஷ்! புலிக்குப்
பூனையா பிறக்கும். என் கண்ணே! அது என்ன? எனக்கு
எடுத்துச் சொல்" என்று கேட்டான்.
காமம்
யாவையும் தருவதும், அப்பதம் கடந்தால்
சேம
வீடுஉறச் செய்வதும், செந்தழல் முகந்த
ஓம
வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம்
அன்னது கேள் நமோ நாராயணாய.
"அப்பா! ஓம் நமோ
நாராயணாய என்ற இந்த எட்டெழுத்தே பரகதியை எட்டு எழுத்தாம்" என்றார். தானவன் விழியில் தழல் எழுந்தது. கோபத்தால் கொதிப்புற்றான். "மகனே!
முனிவரும் தேவரும் நரர்களும் அனைவரும் எங்கும் எக்காலத்தும் என்னுடைய நாமமாகிய 'இரணியாய நம' என்றே கூறுகின்றனர். யாரடா உநக்கு இந்த கொடிய நாமத்தைச்
சொல்லிக் கொடுத்தவன்? அந்த நாராயணன் நமது குல வைரி. எலி தன்
உயிர்க்குத் தீங்கு செய்த அரவத்தின் நாமத்தைக் கூறுதல் நன்மையோ? அந்தப் பாவி உன் சிறிய பிதாவைக்
கொன்றவன். அவனை நெடுங்காலமாகத் தேடுகின்றேன். எனக்குப் பயந்து எங்கோ ஒளிந்துக்
கொண்டு இருக்கின்றான். கண்ணே! நீ சிறு குழந்தை. யாரோ உன்னை இப்படி மயக்கி மாறுபடக்
கூறி உள்ளனர். இனி அதைக் கூறாதே. மூவுலகமும் போற்றும் என் பெயரைக் கூறு"
என்று பலவும் கூறினான்.
தவசீலராகிய
பிரகலாதர் தந்தையைப் பணிந்து,
"ஐயனே!
சிறிது அமைதியாக இருந்து கேளும். உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்தவர் அத்
திருமால். எள்ளுக்குள் எண்ணெய் போல்
எங்குமாய் நிறைந்தவர். மாதவர்களுடைய
மாதவப் பயனாய் விளங்குபவர். அவருடைய
பெருமையை அளக்க வல்லவர் யாரும் இல்லை. கடும் சுரம் உடையானுக்குக் கற்கண்டு கசப்பது
போல், விரைவில் அழியும்
விநாசகாலம் உற்றாரே அந்த விமலனை வெறுப்பர். நமது குலமும் நீயும் பிறரும் ஈடேற
வேண்டும் என்றால், அவரை வணங்கு. வாயார வாழ்த்து. நெஞ்சார நினை" என்றார்.
அதனைக்
கேட்ட அரக்கர் வேந்தன் ஆலகால விடம் போல் சீறினான். அண்டங்கள் வெடிபட ஆர்த்தான். "இவன் என்னையும் என் குலத்தையும்
கெடுக்கப் பிறந்தவன். இனி இவனைத்
தாமதியாமல் ஆயுதங்களால் கொல்லுமின்" என்று கருணை இன்றிக் கட்டளை இட்டனன். கூற்றினும் கொடிய அரக்கர்கள், துணையிலானைத் துணையாக உடைய சிறுவரைப்
பற்றிக் கொண்டு போய், வாள், வேல், மழு, தண்டு, கோடாலி, ஈட்டி முதலிய பலவேறு விஷத்தில் நனைத்த
ஆயுதங்களினால் எறிந்தனர். பலகாலும்
எறிந்து பிரகலாதருடைய உடம்பில் ஒரு சிறிதும் ஊனம் ஏற்படவில்லை. அவர் கண்களை மூடி, "நமோ நாராயணாய" என்று
சிந்தித்தவண்ணாகவே இருந்தார். ஆயுதங்கள்
பொடிபட்டன. அது கண்ட தீயவர்கள் ஓடி,
இரணியன்பால்
உற்றது உரைத்தனர்.
நிருதன்
வியந்து நெருப்பில் இடுமாறு பணித்தனன்.
விண்ணளவாக எண்ணினாலும் சுடுகின்ற பெரும் தீயை வளர்த்து, விண்ணவர் புகழும் புண்ணியரை எடுத்து
தீயில் இட்டனர். தியானபரர் ஆகிய அவருக்கு
அத் தீ, தண்ணிலா எனக்
குளிர்ந்தது. தாமரைத் தடாகத்தில்
விளையாடும் என்னம் போல், கனலுக்கு இடையே அவர்
மகிழ்ந்து இருந்தார். காவலர் ஓடி காவலன்பால் கழறினர்.
அவுணன்
வெகுண்டு, அவனைச் சிறையிட்டு, "அட்ட நாகங்களை
விட்டுக் கடிக்கச் செய்யுங்கள்" என்றான்.
அனந்தன் கார்க்கோடகன் முதலிய எட்டுப் பாம்புகளும் இரணியன் ஏவலைச் சிரமேல்
கொண்டு, பிரகலாதரைக் கொடிய
நச்சுப் பற்களால் பலகாலும் கடித்தன.
திருமந்திரத்தை மறவாத அவர் அசைவற்று இருந்தனர். பாம்புகளின் பற்கள் ஒடிந்து. மணாமகுடம் உடைந்து, உள்ளம் மடிந்து மீண்டு சென்றன.
இதனைப்
பணியாளர் கூறக் கேட்ட இரணியன் சீறி திக்குயானைகளை அழைத்துக் கொல்லுமாறு
ஏவினான். வேழங்கள் வெகுண்டு வருவதைக் கண்ட
வித்தகர், முதலை வாய்ப்பட்ட
கஜேந்திரனைக் காத்த கருணைத் திறத்தைச் சிந்தித்து, கஜேந்திர வரதா என்று கூறினார். யானைகள் பிரகலாதரை வணங்கி நின்றன. தூதர் ஓடி, இதனை மன்னன்பால் புகன்றனர். அவன் யானைகளைக் கொல்லுமாறு பணித்தனன். அதைக் கண்ட யானைகள் அஞ்சி, தங்கள் வெண்கோட்டார் பிரகலாதரைக்
குத்தின். வாழைத்தண்டு பட்டது போல், அவருக்கு மென்மையாக இருந்தது. தந்தங்கள் ஒடிந்தன. யானைகள் அயர்வுற்று அகன்றன.
ஏவலர்
ஓடி, இதனைக் காவலன்பால்
இயம்பினர். கனகன் சிரித்து, அவனைக் கட்டி மலையின் உச்சியில் வைத்து
உருட்டுங்கள் என்றான். பிரகலாதரைக்
கட்டமுது போல் கட்டி, ஒரு பெருமலையின்
உச்சியில் இருந்து உருட்டினர். அவர் ஓம்
நமோ நாராயணாய என்று உருண்டார். பூமிதேவி
பெண்வடிவம் தாங்கி, அக் குழந்தையைத் தன்
கரமலரால் தாங்கி, உச்சி மோந்து, முத்தமிட்டு ஆதரித்தனள். பிரகலாதர் பூமி
தேவியைப் போற்றி நின்றார். பூதேவி, கண்ணே குழந்தாய் உனக்கு என்ன வரம்
வேண்டும் கேள் என்று அருள் புரிந்தனள்.
ஞானக்குருந்தர், "அம்மா இளம்
பருவத்தில் தவழும்போதும் நடக்கும்போதும் தவறி விழுந்தால், உலகில் உள்ள குழந்தைகள் அனைவரையும்
இன்று என்னைத் தாங்கிக் காத்தது போல் காத்து அருளல் வேண்டும்" என்று வரம்
கேட்டனர். அவ் வரத்தைப் பெற்ற தன்னலம்
கருதாத தயாசீலர் தனித்து இருந்தனர்.
இரணியன்
பிரகலாதரை சூரிய வெப்பத்தில் வெதுப்பினான்.
மழையையும் இடியையும் ஏவினான்.
நிலவறைக்குள் அடைப்பித்தான்.
விஷத்தை உண்பித்தான்.
பெருங்கல்லிலே கட்டி கடலில் வீழ்த்தினான்.
சாந்த சீலராகிய அவர், சாகர சயனா என்று
துதித்தனர். கல் தெப்பமாகிக் கடலில் மிதந்து கரை சேர்ந்தனர். இரணியன் இவ்வாறு பலப்பல தண்டனைகளை
விதித்தான். ஒன்றாலும் பிரகலாதருக்கு, ஒரு சிறிதும் தீங்கு உண்டாகவில்லை.
இவற்றால் அவருடைய உள்ளமும் சிறிதும் மாறுபடவில்லை. மேலும் மேலும் உறுதியாகப் பக்தி புரிந்தனர்.
ஒன்றாலும்
ஊறுபடாமலும் மாறுபடாமலும் உள்ள அவருடைய பெருமையை இரணியன்பால் தூதர் கூறினர். இரணியன் அவரை அழைத்து, சிறிதும் இரக்கமின்றி வாளை ஒங்கி தானே
கொல்ல ஓடினான். அவர் சிறிதும் அச்சமின்றி
ஓம் நமோ நாராயணாய என்று சிந்தித்த வண்ணமாக நின்றார். இரணியன் அவருடைய உறுதியைக் கண்டு, இறும்பூதுற்றான். மதிநலம் படைத்த அமைச்சர்களே, என் மகனுடைய மனக்கருத்து அறியாமல் நான்
இதுகாறும் கெட்டேன். இப்போதுதான் உள்ளக்
குறிப்பை உணர்ந்து உவையுறுகின்றேன். என்
தம்பியைக் கொன்ற நாராயணணை நாடி நாடி அயர்த்துப் போனேன். நமது சிறிய பிதாவைக் கொன்ற நாராயணனை எப்படியும்
நாம் கண்டுபிடித்து அப்பாவிடம் காட்டிக் கொல்விக்க வேண்டும் என்று மகன் கருதினான்
போலும். பகையாளியின் குடியை உறவாடிக்
கெடுக்க வேண்டும். அந்த உபாயத்தை என் மகன்
மேற்கொண்டு இதுகாறும் அந்த அரியை பத்தி பண்ணுவது போல் பாசாங்கு செய்து அவனை
வசப்படுத்தினான். என்னிடம் கொட்டிக்
கொல்விக்கவே அவன் இவ்வாறு செய்தான் என்று சொல்லி, "கண்ணே பிரகலாதா, உனது அறிவின் திட்பத்தை மெச்சினேன். இப்படி வா, மகனே, அந்த மாயவன் எங்குளன் கூறு" என்று
வினவினான்.
அன்பு
வடிவாய அருந்தவச் செல்வர், "ஐயனே மலரில்
மணம்போல், எள்ளுக்குள்
எண்ணெய்போல் என் ஐயன் இங்கும் அங்கும் எங்கும் உள்ளான். உன்னிலும் உள்ளான்.
என்னிலும் உள்ளான். அவன் இல்லாத இடமில்லை" என்றார். இரணியன், "மைந்தா, என்னிலும் உளன் என்றால் என்னைப் பிளந்து
பார்ப்பது எப்படி? உன்னிலும் உளன் என்றால் உன்னைப் பிளக்க முடியவில்லை. இதோ, இந்தத் தூணில் உளனோ? உரை" என்று
கேட்டான்.
சாணிலும்
உளன், ஓர்தன்மை அணுவினைச்
சதகூறு இட்ட
கோணிலும்
உளன், மாமேருக் குன்றிலும்
உளன், இந்நின்ற
தூணிலும்
உளன், முன்சொன்ன சொல்லிலும்
உளன், இத்தன்மை
காணுதி
விரைவின் என்றார், நன்றுஎனக் கனகன்
சொன்னான்.
பிரகலாதர், "தாதாய், அப் பரமன் சாணிலும் உளன். அணுவை நூறு கூறு இட்ட பரமாணுவிலும் உளன். மேருவிலும் உளன். இத் தூணிலும் உளன். உளன் என்னும் சொல்லிலும் உளன். காணுதி" என்று அருளிச் செய்தார்.
இரணியன்
சீற்றமிக்கு, "பேதாய், நீ கூறியபடி இத் தூணில் அந்த அரி
இல்லையானால், சிங்கம் யானையைக்
கொன்று தின்பதுபோல் உன்னை யான் கொன்று தின்பேன்" என்றான்.
உம்பர்க்கும்
உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின்
வழியே காண, காட்டுதி; காட்டாய் ஆகில்,
கும்பத்
திண் கரியைக் கோள்மாக் கொன்று என, நின்னைக் கொன்று உன்
செம்பு
ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென் என்றான்.
பிரகலாதர், "அப்பா என்னை உம்மால் கொல்ல
முடியாது. என் ஐயன் யான் கூறிய இடங்களில் தோன்றானாயின், என் உயிரை யானே விடுவன். நான் அவன்
அடியனும் அல்லன்" என்றார்.
என்உயிர்
நின்னால் கோறற்கு எளியதுஒன்று அன்று, யான்முன்
சொன்னவன்
தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றானாயின்.
என்உயிர்
யானே மாய்ப்பன், பின்னும்
வாழ்வுஉகப்பல் என்னின்,
அன்னவற்கு
அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான்.
கனகன்
உடனே தனது கரத்தினால் அத் தூணை அறைந்தான்.
அது தூணுக்குள் நரசிங்கமாக நாதன் சிரித்தனன். பிரகலாதர் சிரமேல் கரம் கூப்பி சிந்தித்து
வந்தித்து நின்றார். இரணியன், "ஆரடா சிரித்தாய், சொன்ன அரிகொலோ அஞ்சிப் புக்க நீரடா
போதாதென்று நெடுந்தறி நேடினாயோ போரடா பொருதியாயில் புறப்படு புறப்படு"
என்றான். பிளந்ததது தூண். நரசிங்கத்தின் திருமேனி வளர்ந்தது
அண்டமட்டும். ஆயிரம் ஆயிரம் சிரங்களும், அதற்கு இரட்டியான கரங்களும் கொண்டு, ஆயிரம் கோடி வெள்ளம் அவுணர்களையும்
கரங்களால் அடித்தும், பிடித்தும், கொன்றும், தின்றும், மென்றும், எற்றியும், உதைத்தும், வதைத்து அழித்தனர்.
அதுகண்ட
கனகன் அஞ்சாது வாலினை எடுத்து எதிர்த்து நின்றான். பிரகலாதர், பிதாவை வணங்கி, "தந்தையே, இப்போதாவது மாதவனை வணங்கு. உன் பிழையைப்
பொறுப்பன்" என்றார். இரணியன், "பேதாய், உன் கண் காண இந்த நரசிங்கத்தையும்
உன்னையும் கொன்று என் வீரவாளை வணங்குவன்" என்றான்.
கேள்இது
நீயும்காணக் கிளர்ந்த கோள்அரியின் கேழல்
தோளொடு
தாளும் நீக்கி, நின்னையும்
துணித்துப் பின்என்
வாளினைத்
தொழுவது அல்லால் வணங்குதல் மகளீரூடல்
நாளினும்
உளதோ என்னா அண்டங்கள் நடுங்க ஆர்த்தான்.
அஞ்சாது
எதிர்த்துப் போராடிய இரணியனை நரசிங்க மூர்த்தி பற்றிச் சுற்றி, பகலிலும் இல்லாமல், இரவிலும் இல்லாமல், அந்தி வேளையிலே, வீட்டிலும் ல்லாமல் வெளியிலும் அல்லாமல், அவன் அரண்மனை வாசற்படியிலே, விண்ணிலும் அல்லாமல், மண்ணிலும் அல்லாமல், மடித்தலத்தில் வைத்து, எந்த ஆயுதத்திலும் அல்லாமல், தமது திருவிரல் நகத்தால் மார்பினைக்
கீறி, அவனுடைய குடலை
மாலையாகத் தரித்து, அண்டங்கள் நடுங்க
ஆர்த்தனர். திருமகளை வேண்ட, அத் தாயார்
நரசிங்கத்தை அணுகினர். நரசிங்கப் பெருமான் கருணை பூத்தனர். பிரகலாதர் சென்று தொழுது துதித்தனர். நரசிங்கர் பிரகலாதரை எடுத்து, உச்சிமோந்து, சிரமேல் கரமலரை வைத்து, "குழந்தாய் உனது உறுதியான
பத்தியைக் கண்டு மகிழ்கின்றேன். என்ன வரம்
வேண்டும்" என்று கேட்டருளினர்.
உந்தையை
உன்முன் கொன்று, உடலைப் பிளந்து அளைய,
சிந்தை
தளராது, அறம் பிழையாச் செய்கையாய்!
அந்தம்
இலா அன்பு என்மேல் வைத்தாய்! அளியத்தாய்!
எந்தை!
இனி இதற்குக் கைம்மாறு யாது? ‘‘ என்றான்
பிரகலாதர், "பெருமானே, என் தந்தை உயிருக்கு நன்மையும், உன் திருவடியில் மறவாத அன்பும் வேண்டும்"
என்றார்.
"முன்பு
பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு
பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல்
என்பு
பெறாத இழிபிறவி எய்திடினும்
அன்பு
பெறும் பேறு அடியேற்கு அருள் “ என்றான்.
நரசிங்கமூர்த்தி
மகிழ்ந்து, வானவர்க்கும்
தானவர்க்கும் அரசாகி, சிரஞ்சீவியாக என்றும் என்போல் நின்று ஆரசாளுதி என்று
வரமளித்து முடிசூட்டினார்.
‘அன்னானை நோக்கி அருள்
சுரந்த நெஞ்சினன் ஆய்
“என் ஆனை வல்லன் ” என மகிழ்ந்த பேர் ஈசன்
“முன் ஆன பூதங்கள் யாவையும்
முற்றிடினும்
உன்
நாள் உலவாய் நீ என்போல் உளை “ என்றான்.
|
என்று வரம் அருளி எவ் உலகும் கை கூப்ப
|
|
முன்றில் முரசம் முழங்க முடி சூட்ட
|
|
“நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு
|
|
ஒன்று பெருமை உரிமை புரிக “ என்றான்.
|
இரணியன்
பிரகலாதருடன் கடவுள் இல்லை என்று தருக்கம் பேசி, நரசிங்கப் பெருமானால் அழிந்தனன்.
தரணியில்
அரணிய முரண்இரணியன் உடல்
தனைநக
நுதிகொடு சாடோங்கு நெடுங்கிரி
யோடு ஏந்து பயங்கரி... --- தேவேந்திர சங்க வகுப்பு.
புனித
சங்கத்துக் கைத்தல நிர்த்தன் ---
புனித
சங்கம் - பாஞ்ச ஜன்யம் என்ற புனிதமான சங்கம்.
அது ஒங்கார நாதத்தைத் தருவது.
இப்பிகள்
ஆயிரம் சூழ இருப்பது இடம்புரி.
இடம்புரிகள்
ஆயிரம் சூழ இருப்பது வலம்புரி
வலம்புரிகள்
ஆயிரம் சூழ இருப்பது சலஞ்சலம்.
சலஞ்சலங்கள்
ஆயிரம் சூழ இருப்பது பாஞ்சஜன்யம்.
காளிங்கன்
என்ற அரவத்தின் படத்தின் மீது கண்ணபிரான் நடனம் ஆடினார்.
பழைய
சந்தத்தைப் பெற்ற மடப்பெண் ---
சிவசத்திகள்
நான்கு. அருட்சத்தி - பார்வதி. கோபசத்தி - துர்கை. போர் சத்தி - காளி. புருஷ சத்தி - திருமால்.
பையரவு
அசைத்த அல்குல் பனிநிலா எறிக்குஞ் சென்னி
மைஅரிக்
கண்ணி யாளும் மாலுமோர் பாக மாகிச்
செய்அரி
தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கைஎரி
வீசி நின்று கனல்எரி ஆடு மாறே. --- அப்பர்.
எரிஅலால்
உருவம் இல்லை ஏறுஅலால் ஏறல் இல்லை
கரிஅலால்
போர்வை இல்லை காண்தகு சோதி யார்க்குப்
பிரிவுஇலா
அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்
அரிஅலால்
தேவி இல்லை ஐயன் ஐயாற னார்க்கே. ---
அப்பர்.
ஆவிஆய்
அவியும் ஆகி அருக்கமாய்ப் பெருக்கம் ஆகிப்
பாவியர்
பாவம் தீர்க்கும் பரமனாய்ப் பிரமன் ஆகிக்
காவிஅம்
கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற
தேவியைப்
பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே. --- அப்பர்.
அக்கினியோடு
சூடு போல, சிவத்தோடு
அபின்னமாய்ச் சகல கரும சாட்சிணியாய் இருக்கும் சிவசத்தி. அபரை, பராபரை, பரை என
முத்திறப்படும்.
அபரை
--- பிராமி, வைஷ்ணவி, ரௌத்திரி என்று மூன்று வகைப்படும்.
பிராமி
- சிருட்டி காரணமாக இருப்பவள்.
வைஷ்ணவி
- காத்தல் காரணமாக இருப்பவள்.
ரௌத்திரி
- சங்கரித்தல் காரணமாக இருப்பவள்.
கொண்டற்குச்
சித்தியளிக்கும் பெருமாளே ---
காஞ்சியில்
திருமேற்றளி என்ற இடத்தில் சிவசாரூபம் பெறவேண்டித் திருமால் நெடுங்காலம் தவம்
புரிந்து கொண்டு இருந்தார். திருஞானசம்பந்தர் அங்கு எழுந்தருளியபோது, திருமாலுக்குச் சிவசாரூபம் வழங்கி
அருளினார்.
கருத்துரை
கந்தவேளே, திருமாலுக்கு அருளியவரே, பக்குவநிலை தந்து என்னைக் காத்து
அருள்வீர்.
No comments:
Post a Comment