காஞ்சீபுரம் - 0458. அதிமதம் கக்க




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
 
அதிமதம் கக்க (காஞ்சீபுரம்)

முருகா!
உன்னையே வழிபட்டு, மேலான பதம் பெற அருள்


தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான


அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்
     சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங்
          கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் ......குறவாணார்

அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்
     றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண்
          டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் ...... குமரேசன்

துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்
     களைபவன் பச்சைப் பட்சிந டத்துந்
          துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் ......புகழ்பாடிச்

சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந்
     துரியமுந் தப்பித் தத்வம னைத்துந்
          தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும் ...... படிபாராய்

கதிபொருந் தக்கற் பித்துந டத்துங்
     கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங்
          கடவுளும் பத்மத் தச்சனு முட்கும் ...... படிமோதிக்

கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண்
     சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங்
          கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன் ...... றபிராமி

பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண்
     பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன்
          பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன் ...... செவிபோயப்

பணவிபங் கப்பட் டப்படி வெட்கும்
     படிமுனிந் தற்றைக் கொற்றம்வி ளைக்கும்
          பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அதிமதம் கக்கப் பக்கம் உகக் குஞ்-
     சரி தனம் தைக்கச் சிக்கென நெக்கு, ங்கு
          அணைதரும் செச்சைப் பொற்புயன், அத்தன், ......குறவாணார்

அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகிச் சென்று,
     அடிபணிந்து, ட்டப் பட்டு, மயல் கொண்டு,
          அயர்பவன், சத்திக் கைத்தலன், நித்தன், ...... குமரேசன்,

துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கம்
     களைபவன், பச்சைப் பட்சி நடத்தும்
          துணைவன் என்று அர்ச்சித்து, ச்சை தணித்து,உன் ......புகழ்பாடிச்

சுருதியின் கொத்துப் பத்தியும், முற்றுந்
     துரியமும் தப்பித் தத்வம் அனைத்தும்
          தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும் ...... படிபாராய்.

கதி பொருந்தக் கற்பித்து நடத்தும்
     கனல்தலம் புக்குச் சக்ரம் எடுக்குமு
          கடவுளும், பத்மத் தச்சனுமு உட்கும் ...... படிமோதி,

கதிரவன் பற்குற்றி, குயிலைத் திண்
     சிறகு அரிந்து, ட்டுத் திக்கர் வகுக்கும்
          கடகமும் தட்டுப் பட்டு ஒழியக்கொன்ற ...... அபிராமி,

பதிவ்ரதம் பற்றப் பெற்ற மகப்பெண்,
     பரிவு ஒழிந்து, க்கிக்கு உட்படு தக்கன்
          பரிபவம் பட்டுக் கெட்டு ஒழிய, தன் ...... செவிபோய், அப்

பனவி பங்கப் பட்டு, ப்படி வெட்கும்
     படி முனிந்து, ற்றைக் கொற்றம் விளைக்கும்
          பரமர் வந்திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


பதவுரை

      கதி பொருந்தக் கற்பித்து --- வேள்வி இயற்ற வேண்டிய நியதிக்குத் தக்க ஏற்பாடு செய்து

     நடத்தும் கனல் தலம் புக்கு --- தக்கன் நடத்திய அக்கினி குண்டங்கள் இருந்த வேள்விச் சாலையுள் நுழைந்து,

      சக்ரம் எடுக்கும் கடவுளும் --- சக்கராயுதத்தை ஏந்தும் கடவுளாகிய திருமாலும்,

     பத்ம தச்சனும் --- தாமரையில் வீற்றிருக்கும் படைத்தல் தொழில் புரியும் பிரமனும்

     உட்கும் படி மோதி --- அச்சம் உறும்படி தாக்கியும்,

     கதிரவன் பல் குற்றி --- சூரியனின் பற்களை உடைத்தும்,

      குயிலைத் திண் சிறகு அரிந்து --- இந்திரனாகிய குயிலின் திண்ணிய சிறகை வெட்டியும்,

     எட்டுத் திக்கர் வகுக்கும் கடகமும் --- எண்திசைப் பாலகர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் அணி வகுத்த சேனைகளும்

     தட்கொடுப் பட்டு ஒழியக் கொன்ற --- நிலை குலைந்து அழிந்து போகும்படிக் கொன்றும்,

      அபிராமி --- பேரழகியும்,

     பதிவ்ரதம் பற்றப் பெற்ற மகப் பெண் --- பதிவிரதத் தன்மையைக் கைப்பிடிக்கப் பெற்ற இன்பப் பெண்ணாகிய அம்பிகை,

     பரிவு ஒழிந்து --- தன்னையும் சிவமூர்த்தியையும் தக்கன் புறக்கணித்தான் என்ற வருத்தம் தீரவும்,

      அக்கிக்கு உட்படு தக்கன் --- நெருப்பில் விழப் பெற்ற தக்கன்

     பரிபவம் பட்டுக் கெட்டு ஒழிய --- அவமானப்பட்டு கெட்டு ஒழியவும்,

      தன் செவ்வி போய் --- தனது அழகு போய்

     அப் பனவி பங்கப்பட்டு --- அந்தப் பார்ப்பனியாகிய கலைமகள் தனது மூக்கை இழந்து பங்கம் அடைந்து

     அப்படி வெட்கும்படி முனிந்து --- வெட்கும்படியாகவும் கோபித்து

      அற்றைக் கொற்றம் விளைக்கும் --- அன்றைய நாளில் வெற்றியை விளைவித்த

     பரமர் வந்திக்க --- சிவபெருமான் வணங்க,

     கச்சியில் நிற்கும் பெருமாளே --- காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         அதி மதம் கக்க பக்கம்  --- நிரம்ப மகிழ்ச்சியைத் தரும் அன்பும்,

     உகக் குஞ்சரி தனம் தைக்க --- விரும்பிக் களிகூறும் தேவயானையின் மார்பகம் அழுத்தமாக நெஞ்சிற் பதிய,

     சிக்கென நெக்கு --- இறுகப் பிணைத்ததால் நெகிழ்ந்து

     அங்கு அணை தரும் செச்சைப் பொற்புயன், அத்தன் ---  உடனே அணைப்பில் கசங்கிய வெட்சி மாலை அணிந்த அழகிய திருத்தோள்களை உடையவன், பெரியோன்,

      குறவாணர் அடவி --- குறவர் வாழும் காட்டில் இருந்த

     அம் தத்தைக்கு எய்த்து உருகிச் சென்று --- அழகிய கிளி போன்ற வள்ளியை நினைந்து, இளைத்து, உருகிச் சென்று,

     அடி பணிந்து --- அவளுடைய பாதத்தில் பணிந்து,

     இட்டப் பட்டு --- விருப்பம் கொண்டு,

     மயல் கொண்டு அயர்பவன் ---  மோக மயக்கம் கொண்டு தளர்பவன்,

      சத்திக் கைத்தலம் --- வேலாயுதத்தைத் திருக் கரத்தில் கொண்டவன்,

      நித்தன் --- என்றும் உள்ளவன்,

     குமரேசன் --- குமாரக் கடவுள்,

     துதி செயும் சுத்தப் பத்தியர் துக்கம் களைபவன் --- துதி செய்கின்ற பரிசுத்தமான பக்தி பூண்ட அன்பர்களுடைய துயரத்தை நீக்குபவன்,

         பச்சைப் பக்ஷி நடத்தும் துணைவன் --- பச்சை நிறமான மயிலை வாகனமாகக் கொண்ட துணைவன்

     என்று அர்ச்சித்து --- என்றெல்லாம் கூறி மலர்களால் அருச்சனை செய்து,

     இச்சை தணித்து --- என் ஆசையை நிறைவேற்றி,

     உன் புகழ் பாடி --- உன்னுடைய திருப்புகழைப் பாடி,

      சுருதியின் கொத்துப் பத்தியும் --- வேதங்களின் கூட்ட வரிசையையும்,

     முற்றும் துரியமும் தப்பி --- பிற எல்லாவற்றையும், துரிய நிலையையும் கடந்து,

     தத்வம் அனைத்தும் தொலையும் அந்தத்துக்கு --- தத்துவங்கள் யாவும் அழிந்து போகும் முடிவு நிலைக்கு அப்புறத்தே

     அப்புறம் நிற்கும் படி பாராய் ---  அடியேன் இருக்க திருக்கண் சாத்தி அருளுவீராக.

பொழிப்புரை

         வேள்வி இயற்ற வேண்டிய நியதிக்குத் தக்க ஏற்பாடு செய்து தக்கன் நடத்திய அக்கினி குண்டங்கள் இருந்த வேள்விச் சாலையுள் நுழைந்து, சக்கராயுதத்தை ஏந்தும் கடவுளாகிய திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் படைத்தல் தொழில் புரியும் பிரமனும் அச்சம் உறும்படி தாக்கியும், சூரியனின் பற்களை உடைத்தும், இந்திரனாகிய குயிலின் திண்ணிய சிறகை வெட்டியும், எண்திசைப் பாலகர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் அணி வகுத்த சேனைகளும் நிலை குலைந்து அழிந்து போகும்படிக் கொன்றும், பேரழகியும், பதிவிரதத் தன்மையைக் கைப்பிடிக்கப் பெற்ற இன்பப் பெண்ணாகிய அம்பிகை, தன்னையும் சிவமூர்த்தியையும் தக்கன் புறக்கணித்தான் என்ற வருத்தம் தீரவும், நெருப்பில் விழப் பெற்ற தக்கன் அவமானப்பட்டு கெட்டு ஒழியவும், தனது அழகு போய் அந்தப் பார்ப்பனியாகிய கலைமகள் தனது மூக்கை இழந்து பங்கம் அடைந்து வெட்கும்படியாகவும், கோபித்து, அன்றைய நாளில் வெற்றியை விளைவித்த சிவபெருமான் வணங்க, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         நிரம்ப மகிழ்ச்சியைத் தரும் அன்பும்,  விரும்பிக் களிகூறும் தேவயானையின் மார்பகம் அழுத்தமாக நெஞ்சில் பதிய, இறுகப் பிணைத்ததால் நெகிழ்ந்து, உடனே அணைப்பில் கசங்கிய வெட்சி மாலை அணிந்த அழகிய திருத்தோள்களை உடையவன், பெரியோன், குறவர் வாழும் காட்டில் இருந்த அழகிய கிளி போன்ற வள்ளியை நினைந்து, இளைத்து, உருகிச் சென்று, அவளுடைய பாதத்தில் பணிந்து,  விருப்பம் கொண்டு, மோக மயக்கம் கொண்டு தளர்பவன், வேலாயுதத்தைத் திருக் கரத்தில் கொண்டவன், என்றும் உள்ளவன், குமாரக் கடவுள், துதி செய்கின்ற பரிசுத்தமான பக்தி பூண்ட அன்பர்களுடைய துயரத்தை நீக்குபவன், பச்சை நிறமான மயிலை வாகனமாகக் கொண்ட துணைவன் என்றெல்லாம் கூறி மலர்களால் அருச்சனை செய்து, என் ஆசையை நிறைவேற்றி, உன்னுடைய திருப்புகழைப் பாடி, வேதங்களின் கூட்ட வரிசையையும், பிற எல்லாவற்றையும், துரிய நிலையையும் கடந்து,  தத்துவங்கள் யாவும் அழிந்து போகும் முடிவு நிலைக்கு அப்புறத்தே அடியேன் இருக்க திருக்கண் சாத்தி அருளுவீராக.

விரிவுரை

அதி மதம் கக்கப் பக்கம் ---

மதம் - மகிழ்ச்சி.  கக்க – வெளிப்படுதல்.

மிகுந்த மகிழ்ச்சியை வெளிவிடும்.  இது தோன்றா எழுவாயாக தெய்வயானை அம்மையாரைக் குறிக்கும்.

பக்கம் ---

பக்கம் - அன்பு. "பக்ஷம்" என்ற சொல் "பக்கம்" என வந்தது.

உகக்கும் சரிதனம் தைக்கச் சிக்கென ---

உகத்தல் - மகிழ்ச்சி அடைதல்.

தெய்வயானையின் சரியான தனங்கள் அழுத்தமாகப் பதியுமாறு தழுவிக் கொள்பவர்.

அடவிஅம் தத்தைக்கு எய்த்து உருகிச் சென்று அடி பணிந்து இட்டப்பட்டு மயல் கொண்டு அயர்பவன் ---

காட்டில் வாழ்ந்த கிளி போன்ற வள்ள பிராட்டியை நினைந்து, ஏக்கத்தால் இளைத்தும், உள்ளம் உருகியும், தினைவனம் சென்று, அவருடைய பாதத்தில் பணிந்தும், மயக்கம் கொண்டும் தளர்பவர் போல் முருகப் பெருமான் திருவிளையாடல் புரிந்தார்.

அலை நிறைந்த தண்ணீரில் சந்திரனுடைய பிரதி பிம்பம் அலையும். அதனால், விண்ணில் உள்ள சந்திரன் அலைவதில்லை. அதுபோல், எம்பிரானுடைய ஆடல் என்று கச்சியப்பர் கழறுகின்றார்.

உலைப்படு மெழுகுஅது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படு கின்றான்போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள் கலங்கல் அம் புனலில் தோன்றி
அலைப்படு தன்மைத்து அன்றே அறுமுகன் ஆடல் எல்லாம்.

துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கம் களைபவன் ---

சதா இனிய பாடல்களால் துதிக்கின்ற தூய அன்பர்களின் துயரங்களை முருகப் பெருமான் களைகின்றார்..

கூறும்அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே..   --- ஏறுமயில் திருப்புகழ்.

நினைவார் கின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே..     ---  கந்தர் அநுபூதி.

துணைவன் ---

இறைவன் உயிர்த் துணையாக நின்று உதவுகின்றான்.

தோழா போற்றி துணைவா போற்றி...          ---  திருவாசகம்.

தீநெறியில் சென்று தியங்குகின்ற நம் தமக்குத்
தூநெறியைக் காட்டும் துணைவன்காண்..         ---  திருவருட்பா.

பற்று அயர்ந்து அஞ்சிய பரிவு கண்டு அணைந்து, னைச்
 சற்றும் அஞ்சேல் எனத் தாங்கிய துணையே!

 தளர்ந்த அத் தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து, ள்
 கிளர்ந்திட எனக்குக் கிடைத்த மெய்த் துணையே!

 துறைஇது, வழிஇது, துணிவு இது, நீசெயும்
 முறைஇது, எனவே மொழிந்த மெய்த் துணையே!
   
எங்கு உறு தீமையும் எனைத் தொடரா வகை
 கங்குலும் பகலும் மெய்க் காவல்செய் துணையே!

வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே
ஈண்டு இருந்து அருள்புரி என் உயிர்த் துணையே!

  இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது
  அகத்தினும் புறத்தினும் அமர்ந்தமெய்த் துணையே!       --- திருவருட்பா


சுருதியின் கொத்துப் பத்தியும்...... நிற்கும்படி பாராய் ---

இந்த அடியில் ஆன்மா அடையும் முத்தி நிலையைக் கூறுகின்ரார்.

வேதங்களின் தொகுதிக்கும் அப்பாற்பட்டது.  மற்ற எல்லாவற்றையும் கடந்தது.  துரியம் - தன்மயமாய் நிற்கும் சுத்த உயர் நிலையையும் கடந்தது. 36 தத்துவங்கள் ஓய்ந்த முடிவு நிலைக்கும் அப்பாற்பட்டது.

அத்தகைய அதீத நிலையை அடியேன் பெற அருட்கண்ணால் பார்த்து அருள்க என்று வேண்டுகின்றார்.

ஆறுஆறையும் நீத்து அதன் மேல்நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ... ---   கந்தர் அநுபூதி.
  
கதிபொருந்தக் கற்பித்து ---

இந்தத் திருப்புகழின் பிற்பகுதி நான்கு அடிகளில் தட்ச யாகத்தைச் சிவபெருமான் அழித்த வீரச் செயல்களைக் கூறுகின்றார்.

வேள்வி செய்ய வேண்டிய வழிவகைகள் பொருந்தும்படி தக்கன் ஏற்பாடு செய்தான்.

சிவநிந்தை புரிந்த தக்கனுடைய யாகத்தில் கலந்துகொண்ட பாவத்தினால் மால் அயன், இந்திரன் முதலிய தேவர்கள் நூற்றெட்டு யுகங்கள் சூராதி அவுணர்களால் துன்புற்றார்கள்.

சக்ரம் எடுக்கும் கடவுளும், பத்மத் தச்சனும்
உட்கும்படி மோதி ---

சக்கராயுதத்தை ஏந்தியுள்ள திருமால் வீரபத்திரருடைய ஆற்றலைத் தடுக்க முடியாது அலக்கணுற்றார்.

பிரமனைத் தச்சன் என்கின்றார். தச்சன் வீடு கட்டுவது போல், இந்த உடம்பைப் பிரமன் செய்கின்றான்.

கதிரவன் பல் குற்றி ---

வீரபத்திரர் சூரியனுடைய பல்லை உடைத்தார். படித்தவனுக்குப் பல் முக்கியம். பல் போனால் சொல் போயிற்று என்பது பழமொழி. ஆதித்தன் கல்வி அதிகாரி. அதனால் பல்லை உடைத்தார்.

குயிலைத் திண் சிறகு அரிந்து ---

தக்க யாகத்தில் இந்திரன் அஞ்சிக் குயில் உருவாய் கரந்து பறந்து ஓட முயன்றான். அவனுடைய வலிமை மிகுந்த சிறகை வீரபத்திரர் அரிந்து தள்ளினார்.

எட்டுத் திக்கர் வகுக்கும் கடகமும் தட்டுப்பட்டு ஒழியக் கொன்று ---

கடகம் - சேனை.  இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்ற எண்மர் திசை பாலகர்கள்.  இவர்கள் தக்க யாகத்தில் சேனைகளுடன் அணி வகுத்தார்கள்.  அவற்றை வீரபத்திரர் அழித்தார்.

பதிவ்ரதம் பெற்ற மகப்பெண் ---

பதிவிரதா தருமத்தைக் கைப்பற்றி உள்ள இன்ப மகள் பார்வதி.  மகம் - இன்பம்.

பரிவு ஒழிந்து ---

பரிவு - வருத்தம். தன்னையும் தன் கணவராகிய சிவமூர்த்தியையும் தக்கண் புறக்கணித்தான் என்று அம்பிகை வருந்தினாள். அவ் வருத்தம் தீர, தக்கனைத் தண்டித்தும், அவன் புரிந்த மகத்தை அழித்தும் இறைவர் அம்பிகையின் வருத்தத்தை அகற்றினார்.

அக்கிக்கு உட்படு தக்கன் பரிபவப்பட்டுக் கெட்டொழிய ---

அக்கி - அங்கி என்ற சொல் அக்கி என வந்தது.  தக்கன் நெருப்பில் வீழ்த்தப் பெற்று மாண்டான்.  பரிபவம் - அவமானம்.

தன் செவி போய்ப் பனவி ---

செவ்வி என்ற சொல் செவி என வந்தது.  செவ்வி - அழகு.

தன் செவ்வி போய் அந்தப் பனவி - சரச்சுவதி மூக்கு அரியப்பட்டுத் துன்புற்றாள்.

பனவன் - பிராம்மணன்.  பனவி - பிராம்மணப் பெண்.

பிரமனாகிய பனவனுடைய மனைவி பனவி.  கலைமகள்.

தக்க யாகத்தில் அமரர்களை வீரபத்திரர் தண்டித்த செய்தியை அருணகிரிநாதர் பிறிதொரு பாடலிலும் கூறுகின்றார்.

வேகம்உண் டாகிஉமை சாற்றுமு அளவினில்
     மாமகம் கூரும்அது தீர்க்க, வடிவுடை
     வீரன்என் பான்ஒரு பராக்ரன் எனவர, ...... அன்றுசோமன்

மேனியுந் தேய,கதிர் தோற்ற எயிறுஉக,
     ஆனுகுந் தீகையற, சேட்ட விதி தலை
     வீழ,நன் பாரதியு மூக்கு நழுவிட, ...... வந்தமாயன்

ஏகநின் றாகிஅமர் தோற்று வதறிட
     வேகவுங் காரமொடு ஆர்க்க, அலகைகள்
     ஏறிவென் றாடுகள நீக்கி, முநிவரர் ...... வந்துசேயென்று

ஈசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை
     தாஎனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய
     ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் ...... தம்பிரானே.  --- (மாகசஞ்சார) திருப்புகழ்.

சந்திரனைத் தேய்த்து அருளி, தக்கன்தன் வேள்வியினில்,
இந்திரனைத் தோள்நெரித்திட்டு, எச்சன் தலைஅரிந்து,
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து,
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். --- திருவாசகம்.

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருந்திர நாதனுக்கு உந்தீபற.

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டு, அன்று
சாவாது இருந்தான் என்று உந்தீபற
சதுர்முகன் தாதை என்று உந்தீபற.

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று உந்தீபற
கலங்கிற்று வேள்வி என்று உந்தீபற.

பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே, ஏடி, உந்தீபற
பணைமுலை பாகனுக்கு உந்தீபற.

புரந்தரனார் ஒரு பூங்குயில் ஆகி
மரந்தனில் ஏறினார் உந்தீபற
வானவர் கோன் என்றே உந்தீபற.

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பு அற உந்தீபற.

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்க நின்று உந்தீபற.

உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே
கண்ணைப் பறித்தவாறு உந்தீபற
கருக்கெட நாம் எல்லாம் உந்தீபற.

நாமகள் நாசி சிரம் பிரமன்படச்
சோமன் முகம் நெரித்து உந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.

நான்மறை யோனும் மகத்து இயமான் படப்
போம்வழி தேடுமாறு உந்தீபற
புரந்தரன் வேள்வியில் உந்தீபற.

சூரிய னார்தொண்டை வாயினில் பற்களை
வாரி நெரித்தவாறு உந்தீபற
மயங்கிற்று வேள்வி என்று உந்தீபற.

தக்கனார் அன்றே தலை இழந்தார், தக்கன்
மக்களைச் சூழ நின்று உந்தீபற
மடிந்தது வேள்வி என்று உந்தீபற.          --- திருவாசகம்.

பண்டுஓர் நாள்இகழ் வான்பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை அதுகெடத்
தண்ட மாவிதா தாவின் தலைகொண்ட
செண்டர் போல்திரு நாகேச் சரவரே.       ---  அப்பர்.

தக்கனது பெருவேள்விச் சந்திரன்இந்
         திரன்எச்சன் அருக்கன் அங்கி
மிக்க விதா தாவினொடும் விதிவழியே
         தண்டித்த விமலர்கோயில்
கொக்குஇனிய கொழும்வருக்கை கதலிகமுகு
         உயர்தெங்கின் குலைகொள்சோலை
முக்கனியின் சாறுஒழுகிச் சேறுஉலரா
         நீள்வயல்சூழ் முதுகுன்றமே.          ---  திருஞானசம்பந்தர்.

மலைமகள் தனைஇகழ்வு அதுசெய்த
         மதிஅறு சிறுமன வனதுயர்
தலையினொடு அழல்உரு வனகரம்
         அறமுனி வுசெய்தவன் உறைபதி
கலைநில வியபுல வர்கள்இடர்
         களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய
         திகழ்பொழில் வளர்திரு மிழலையே. ---  திருஞானசம்பந்தர்.

கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்வி
செண்டுஆடுதல் புரிந்தான்திருச் சுழியல்பெரு மானைக்
குண்டுஆடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா
மிண்டுஆடிய அதுசெய்தது ஆனால்வரு விதியே. ---  சுந்தரர்.

கருத்துரை

கச்சியில் நிற்கும் கதிரேசா, உன் திருப்புகழ் பாடி எல்லாவற்றுக்கும் அப்புறத்தில் நிற்கும் அருளைச் செய்.


No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...