ஆறுதிருப்பதி - 0457. ஈனமிகுத்து உளபிறவி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஈனமிகுத்து உளபிறவி (ஆறு திருப்பதி)

முருகா!
பிறவி அற அருள்

தானதனத் தனதனன ...... தனதான
     தானதனத் தனதனன ...... தனதான


ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே
     யானுமுனக் கடிமையென ...... வகையாக

ஞானஅருட் டனையருளி ...... வினைதீர
     நாணமகற் றியகருணை ...... புரிவாயே

தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே
     சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே

ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே
     ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஈனம் மிகுத்து உள பிறவி ...... அணுகாதே,
     யானும் உனக்கு அடிமை என ...... வகையாக,

ஞானஅருள் தனைஅருளி ...... வினைதீர,
     நாணம் அகற்றிய கருணை ...... புரிவாயே

தான தவத்தினில் மிகுதி ...... பெறுவோனே!
     சாரதி உத்தமி துணைவ! ...... முருகோனே!

ஆன திருப்பதிகம் அருள் ...... இளையோனே!
     ஆறு திருப்பதியில் வளர் ...... பெருமாளே!

பதவுரை

         தான தவத்தினில் மிகுதி பெறுவோனே --- அடியார்கள் புரியும் தானத்தின் தகைமையையும் தவத்தின் தியானத்தையும் மிகுதியாகப் பெறுகின்றவரே!

         சாரதி உத்தமி துணைவ --- சரஸ்வதி தேவியாகிய உத்தமியின் சகோதரரே!

         முருகோனே --- முருகக் கடவுளே!

         ஆன திருப்பதிகம் அருள் இளையோனே --- திருஞானசம்பந்தரை அதிஷ்டித்து தமிழ்மறையாகிய தேவாரப் பதிகங்களைப் பாடிய இளம்பூரணரே!

       ஆறு திருப்பதியில் வளர் பெருமாளே --- ஆறுபடை வீட்டுத் திருத்தலங்களில் வளர்கின்ற பெருமையின் மிக்கவரே!

        ஈன மிகுத்து உள பிறவி அணுகாதே --- ஈனமே மிகுந்துள்ள பிறவிக்கடலில் ஆழ்ந்து அழியாமல்,

       யானும் உனக்கு அடிமை என வகையாக --- அடியேனும் தேவரீருக்கு அடிமை என்று வகைப்பட்டுள்ள,

     ஞான அருள்தனை அருளி --- மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து,

     வினை தீர --- அடியேனது வினைகள் நீங்க,

      நாணம் அகற்றிய கருணை தருவாயே --- கருணை எளி வந்த திருவருளை அடியேனுக்குத் தந்தருளிவீர்.

பொழிப்புரை

         தானம் தவம் இவற்றிக்குத் தலைவராக விளங்கி அவற்றின் பயனை மிகவும் பெறுபவரே!

     வாணிதேவிக்குச் சகோதரரே!   

     முருகக் கடவுளே!

     திருஞானசம்பந்தரை அதிஷ்டித்து தமிழ் மறையாகிய தேவாரப்பதிகங்களைப் பாடியருளிய இளமையானவரே!

     ஆறுபடைவீட்டுத் தலங்களிலும் எழுந்தருளியுள்ளவரே!

         ஈனமிகுந்த இப்பிறவியை அடியேன் அடையாமல், உமது அடிமையாகி உய்ய சிவஞான அருளைத் தந்து என் வினைதீர, தேவரீரது எளிமையான வான் கருணையை வழங்கியருள்வீர்.


விரிவுரை

ஈனமிகுத்து உளபிறவி ---

சின்னாள் வாழ்க்கை, பல்வகை நோய், பசி மூப்பு முதலியவை பொருந்தி யிடர் விளைவிப்பதால் ஈனமிகுத்துள பிறவியென்றார்.

அடிமையென ---

ஆண்டான் அடிமைத்திறத்தை உணர்த்துகின்றனர்.

அருளது அருளி எனையும் மனதொடு
அடிமை கொளவும் வரவேணும்          --- (திமிரவுததி) திருப்புகழ்

நாணம் அகற்றிய கருணை ---

தான் சிவகுருநாதனாக இருந்தும் மூவர் தேவாதிகள் தலைவனாக இருந்தும் குறமாதினிடம் நாணமின்றிச் சென்றவர். அவ்வம்மையை யாட்கொள்ளும் கருணையின் எளிமையே அதற்குக் காரணம்.

நாணம் அழிந்துஉரு மாறியெ வஞ்சக
   நாடிய பங்கய பதநோவ
   மாமுனிவன் புணர்மான் உவுந்தனி
   மானை மணஞ் செய்த பெருமாளே” --- (பாரநறுங்) திருப்புகழ்


சாரதி உத்தமி துணைவ ---

திருமாலின் புதல்வராகிய பிரமதேவர் முருகப் பெருமானுக்கு மைத்துனராவார். மைத்துனன் மனைவி சகோதரி முறையாதலின் “சாரதி உத்தமி துணைவ” என்றனர்; உத்தமியென்று வாணிதேவியை வியந்து பாராட்டுவது சிந்தித்தற்குரியது.

ஆன திருப்பதிகம் அருள் இளையோனே ---

திருஞான சம்பந்தராக முருக சொரூபம் பெற்ற அபர சுப்பிரமணியர் அவதரித்தனர். அவரை அதிட்டித்து முருகன் தமிழ் மறையைப் பாடியருளினார்

ஆறுதிருப்பதி

ஆறு திருப்பதிகளாவன; (1) திருப்பரங்குன்றம் (2) திருச்சீலலைவாய் (திருச்செந்தூர்) (3) திருவாவினன்குடி (பழநி) (4) திருவேரகம் (சுவாமிமலை) (5) குன்றுதோறாடல் (பல மலைகளும்) (6) பழமுதிர்சோலை

இந்த படைவீட்டுத் தலங்கள் ஆறும் நமக்குள் ஆதாரங்கள் ஆறனையுங் குறிக்கின்றன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, என்ற ஆறு ஆதாரங்களிலும் எழுந்தருளியிருப்பவர் ஆறுமுகப் பெருமான்.

ஆறுதிருப்பதி கண்டு ஆறெழுத்தை அன்பினுடன்
   கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே”             --- கந்தர் கலிவெண்பா.

கருத்துரை

தானத்திற்குந் தவத்திற்குந் தலைவரே! சாரதி துணைவ! முருகா! தேவாரப் பாடல் பாடியருளியவரே! ஆறு திருத்தலம் உடையவரே! பிறவியை ஒழித்து உமது அடிமையாக ஞானத்தைத் தந்து அருள்புரிவீர்.

No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...