அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அலைகடல் நிகராகிய
(ஆறு திருப்பதி)
முருகா!
பொதுமாதர் மயல் நீங்கி,
உன் திருவடியை அடைய அருள்.
தனதன
தனதானன தனதன தனதானன
தனதன தனதானன ...... தனதான
அலைகடல்
நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
அபகட மகபாவிகள் ...... விரகாலே
அதிவித
மதராயத நிதமொழி பலகூறிகள்
அசடரொ டுறவாடிகள் ...... அநியாயக்
கலைபகர்
விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
கருதிடு கொடியாருட ...... னினிதாகக்
கனதன
முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி ...... யருள்வாயே
அலைபுனல்
தலைசூடிய பசுபதி மகனாகிய
அறுமுக வடிவேஅருள் ...... குருநாதா
அசுரர்கள்
குடியேகெட அமரர்கள் பதியேபெற
அதிரிடும் வடிவேல்விடு ...... மதிசூரா
தலையய
னறியாவொரு சிவகுரு பரனேயென
தரணியி லடியார்கண ...... நினைவாகா
சகலமு
முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அலைகடல்
நிகர்ஆகிய விழிகொடு வலைவீசிகள்,
அபகட மகபாவிகள், ...... விரகாலே,
அதிவித
மதர்ஆய், அதம அநிதமொழி
பலகூறிகள்,
அசடரொடு உறவாடிகள், ...... அநியாயக்
கலைபகர்
விலைமாதர்கள், இளைஞர்கள்
குடிகேடிகள்,
கருதிடு கொடியார் உடன் ...... இனிது ஆக,
கனதன
முலைமேல் விழு கபடனை, நிருமூடனை,
கழல்இணை பெறவே, இனி ...... அருள்வாயே,
அலைபுனல்
தலைசூடிய பசுபதி மகன்ஆகிய
அறுமுக வடிவே!அருள் ...... குருநாதா!
அசுரர்கள்
குடியேகெட, அமரர்கள் பதியேபெற,
அதிர் இடும் வடிவேல் விடும் ...... அதிசூரா!
தலைஅயன்
அறியாஒரு சிவகுரு பரனே! என
தரணியில் அடியார் கணம் ...... நினை வாகா!
சகலமும்
முதல்ஆகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனில்ஏறிய ...... பெருமாளே!
பதவுரை
அலைபுனல் தலை சூடிய --- அலை வீசும்
கங்காநதியைத் தலையில் சூடிய,
பசுபதி மகன் ஆகிய --- பசுக்களக்குப்
பதியாகிய சிவபெருமானுடைய குமாரராகிய,
அறுமுக வடிவே --- ஆறுமுக வடிவுடையவரே!
அருள்குரு நாதா --- ஆன்மாக்களுக்கு
அருள் புரியும் குருநாதரே!
அசுரர்கள் குடியே கெட --- அசுரர்களின்
குடி அழியும்படியும்,
அமரர்கள் பதியே பெற ---
தேவர்கள் தமது அமராவதி நகரைப் பெறுமாறும்,
அதிர் இடும் வடிவேல் விடும் --- ஒலியுடன்
செல்லும் கூரிய வேலாயுதத்தை விடுத்தருளிய,
அதிசூரா --- அதிசூரரே!
அயன் --- பிரமதேவன்,
தலை அறியா --- சிரத்தை அறியமாட்டத,
ஒரு சிவகுருபரனே என --- ஒப்பற்ற
சிவபெருமானுக்குக் குருமூர்த்தியே என்ற,
தரணியில் அடியார் கணம் நினை வாகா ---
பூமியில் உள்ள அடியார்களின் திருக்கூட்டம் நினைக்கின்ற
அழகரே!
சகலமும் முதல் ஆகிய --- சகல
தலங்களுக்கும் முதலாக விளங்கும்,
அறுபதி நிலை மேவிய --- ஆறு திருப்பதிகளில் வீற்றிருக்கின்ற,
தட மயில் தனில் ஏறிய --- பெரிய மயிலின் மீது
ஏறிய,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
அலைகடல் நிகர் ஆகிய --- அலை வீசும்
கடலுக்கு ஒப்பாகிய,
விழி கொடு வலை வீசிகள் --- கண்களைக் கொண்டு
காம வலை வீசுபவர்கள்;
அபகட மக பாவிகள் --- வஞ்சனை எண்ணமுடைய பெரிய
பாவிகள்,
விரகாலே --- உபாயத்தாலே,
அதி வித மதர் ஆய் --- பலவிதமான செருக்குடன்,
அதம் அநித மொழி பல கூறிகள் --- தாழ்வான
அநீதமான வார்த்தைகள் பல பேசுபவர்கள்,
அசடரொடு உறவு ஆடிகள் --- கீழ்மக்களுடன் உறவு
செய்பவர்கள்,
அநியாய கலை பகர் விலை மாதர்கள் --- அநியாய
வழியிலே உடலை விலை கூறி விற்கும் விலைமகளிர்கள்,
இளைஞர்கள் குடிகேடிகள் --- இளைஞர்களின்
குடியைக் கெடுப்பவர்கள்,
கருதிடு கொடியார் உடன் --- வஞ்சனையையே நினைக்கின்ற
கொடி போன்றவர்களாகிய பொதுமாதருடன்,
இனிது ஆக --- இன்பமாகக் கூடி,
கன தன முலைமேல் விழு கபடனை --- பாரமான முலை
மேல் விழுகின்ற வஞ்சகன்,
நிருமுடனை --- முழுமூடன்,
கழல் இணை
பெறவே இனி அருள்வாயே --- உமது திருவடிகளைப் பெறுமாறு இனி அருள்புரிவீராக.
பொழிப்புரை
அலைவீசும் கங்கா நதியைத் தலையில் சூடிய
பசுபதியாகிய சிவபெருமானுடைய புதல்வராகிய ஆறுமுக திருஉருவத்தை உடையவரே!
எல்லாவுயிர்கட்கும் அருள்புரியும்
குருமூர்த்தியே!
அசுரர்களின் குடிகள் கெடுமாறும், தேவர்கள் தமது அமராவதி நகரில்
குடியேறவும், ஒலியுடன் செல்லும்
வடிவேலை விடுத்த அதிசூரரே!
திருமுடியைப் பிரமன் அறிய வொண்ணாத
சிவமூர்த்திக்குக் குருவாகின்றவரே! என்று பூதலத்தில் அடியார் திருக்கூட்டம்
தியானிக்கின்ற அழகரே!
எல்லாத் தலங்கட்கும் முதலாகிய ஆறுபடை
வீடுகளில் எழுந்தருளியவரே!
பெரிய மயிலின் மீது ஏறிய பெருமிதம் உடையவரே!
அலைவீசும் கடலுக்கு நிகராகிய கண்களைக்
கொண்டு காமவலை வீசுபவர்கள்; வஞ்சக எண்ணமுடைய
மகாபாவிகள்; உபாயத்தால் பலவிதமான
செருக்குடன் தாழ்வான அநீதியான பல பேச்சுக்களைப் பேசுபவர்கள்; கீழ்மக்களுடன் உறவு செய்பவர்கள்; அநியாய வழியில் உடலை விற்பவர்கள்; இளைஞர்களின் குடியைக் கெடுப்பவர்கள்` தீமையை நினைக்கின்ற கொடிபோன்றவர்கள்
ஆகிய விலைமாதர்களுடன் கூடிய, பாரமான கொங்கையின்
மேலே விழுகின்ற கபடனும் முழுமூடனுமாகிய அடியேன், உமது இரு திருவடிகளைப் பெற்று உய்யுமாறு
இனி அருள்புரிவீராக.
விரிவுரை
அலைகடல்
நிகராகிய விழிகொடுவலை வீசிகள் ---
கண்கள்
கடல்போல் விசாலமாகத் திகழ்கின்றன. அக்கண்வலை வீசி இளைஞர்களாகிய மீன்களைப்
பிடித்துவிடுவார்கள் விலைமகளிர்.
அபகட
மதராய் ---
பகடம்
- வஞ்சகம். மதர் - செருக்கு.
அதம்
அநித மொழி ---
அத
அநித மொழி. அதம் - தாழ்வு; தாழ்ந்த அநியாய
சொற்களைப் பேசுவார்கள்.
கலை
பகர் விலைமாதர்கள் ---
கலை
- உடம்பு., உடம்பை விலைகூறி
விற்பவர்கள். பகர்தல் - விற்றல்.
நினை
வாகா ---
நினைத்தல்
- தியானித்தல். வாகு - அழகு, அழகன்.
சகலமு
முதலாகிய அறுபதி ---
எல்லாத்
தலங்கட்கும் முதன்மை பெற்று விளங்கும் ஆறு திருப்பதிகள்.
கருத்துரை
ஆறு
திருப்பதியில் அமர்கின்ற அழகனே! உனது திருவடி பெற அருள்செய்.
No comments:
Post a Comment