காஞ்சீபுரம் - 0459. அயில் அப்பு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அயில் அப்பு (காஞ்சீபுரம்)

முருகா!
பொதுமாதர் மயலை விட்டு,
உன் பாதமலரைப் பணிந்து உய்ய அருள்.


தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத்
     தனனத்தத் தனனத்தத் ...... தனதான


அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்
     கணுரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம்

அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித்
     திளகிக்கற் புளநெக்குத் ...... தடுமாறித்

துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்
     தொடியர்க்கிப் படியெய்த்துச் ...... சுழலாதே

சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித்
     தொழுசெச்சைக் கழல்பற்றிப் ...... பணிவேனோ

புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்
     புனமுத்தைப் புணர்சித்ரப் ...... புயவீரா

புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்
     புகல்பொற்குக் குடவெற்றிக் ...... கொடியோனே

கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்
     கரணிச்சித் தருள்கச்சிப் ...... பதியோனே

கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்
     பொருசத்திக் கரசொக்கப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அயில்அப்புக் கயல்அப்புத் தலை மெச்சு உற்பல நச்சுக்
     கண்,ரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம்

அளகக் கொத்து எனஒப்பிப் புளுகி, சொல் பலகற்பித்து
     இளகிக் கற்பு உளம்நெக்குத் ...... தடுமாறி,

துயில்விட்டு, செயல்விட்டு, துயர்வுற்று, உக்கு அயர்வுற்று,
     தொடியர்க்கு இப்படி எய்த்துச் ...... சுழலாதே,

சுருதிப்பொற் பொருள் செக்கர்க்கு குரவுஇட்டு, தமர்பற்றித்
     தொழு செச்சைக் கழல்பற்றிப் ...... பணிவேனோ?

புயல்அத்தைக் குயில் தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்
     புனமுத்தைப் புணர் சித்ரப் ...... புயவீரா!

புரவிக்கொட்பு இரத அற்றத்து இருள் திக்கிப் படிமட்கப்
     புகல் பொன் குக்குட வெற்றிக் ...... கொடியோனே!

கயில் அச்சுத்த ரதத்துச் சயிலத்து உத்தரம் நிற்கக்
     கரணிச் சித்தர்உள் கச்சிப் ...... பதியோனே!

கடலில் கொக்கு அடல்கெட்டு, கரம்உட்க, தரம்உட்கப்
     பொரு, சத்திக் கர, சொக்கப் ...... பெருமாளே.


பதவுரை

      புயல் அத்தை --- மேகத்தை வாகனமாகக் கொண்ட தேவயானையையும்,

     குயில் --- குயில் போன்றவளும்,

     தத்தை ---  கிளி போன்றவளும்,

     கிளை புக்குத் தொளை --- கிளிகள் புகுந்து மூக்கினால் தொளைத்து உண்ணுகின்ற

     பச்சைப் புன முத்தைப் புணர் --- தினைப்பயிரைக் காவல் புரிந்தவரும் ஆகிய,  முத்துப் போன்ற வள்ளி பிராட்டியையும் தழுவுகின்ற

     சித்ரப் புய வீரா --- அழகிய புயத்தை உடைய வீரமூர்த்தியே!

      புரவிக் கொட்பு --- குதிரைகள் சுழன்று வரும்

     இரத அற்றத்து --- சூரியனுடைய தேர் வரும் சமயத்தில்,

     இருள் திக்கிப் படி மட்கப் புகல் --- இருள் திக்கு முக்காடி உலகினின்றும் வலி குன்றி ஒழியக் கூவுகின்ற

     பொன் குக்குட வெற்றிக் கொடியோனே ---  அழகிய சேவலின் வெற்றிக் கொடியை உடையவரே!

      கயில் அச் சுத்த ரதத்து --- பூட்டுவாயை உடைய தூய ரதமாக சிவபெருமானுக்கு விளங்கிய பூமியானது,

     சயிலத்து உத்தரம் நிற்க --- இமயமலையில் வடதிசை சாய்ந்து நின்றபோது, சமமா நிற்குமாறு செய்த

     கரணிச் சித்தர் உள் கச்சிப் பதியோனே --- சிற்பியாகிய சித்தராம் அகத்திய முனிவர் தியானிக்கின்ற கச்சிப் பதியை உடையவரே!

      கடலில் கொக்கு --- கடலில் மாமரமாய் நின்ற சூரபன்மன்

     அடல் கெட்டு --- வலிமை இழந்து,

     கரம் உட்கத் தரம் உட்க --- தன்னுடைய தீமை போய் நடுங்குதல் உண்டாக, செயல் அழிந்து போகும்படியாக

     பொரு சத்திக் கர --- போர் புரிந்த சக்திவேலை ஏந்திய திருக்கரத்தரே!

      சொக்கப் பெருமாளே --- அழகிய பெருமையில் சிறந்தவரே!

      அயில் அப்புக் கயல் அப்புத் தலைமெச்சு உற்பல நச்சுக் கண் --- வேல், அம்பு, மீன், நீர்க்கு இடமான கடல், மெச்சத் தக்க நீலோற்பல மலர், நஞ்சு என்ற இவைகள் போன்ற கண்கள் என்றும்,

         உரத்த ஐக் கன வெற்புத் தனமேகம் --- மார்பில் அழகிய பருத்த மலைபோன்ற கொங்கை என்றும்,

     அளகக் கொத்து என --- மேகம் போன்ற கூந்தல் என்றும்,

     ஒப்பி --- மனம் ஒத்து

     புளுகி --- பொய்யாகப் பேசி,

     சொற் பல கற்பித்து ---  பல சொற்களைக் கற்பனையாக அமைத்து,

      இளகிக் கற்பு உள்ளம் நெக்கு --- கல் போன்ற மனம் உருகி, நெகிழ்ந்து,

     தடுமாறி --- நிலை தடுமாற்றத்தை அடைந்து,

     துயில்விட்டு --- தூக்கத்தை ஒழிந்தும்,

     செயல்விட்டு ---  செயல்கள் ஒழிந்தும்,

     துயர் உற்று ---  துக்கத்தை அடைந்து,

     உக்கு அயர்வு உற்று ---  மெலிந்து தளர்ச்சி அடைந்தும்,

       தொடியர்க்கு இப்படி எய்த்துச் சுழலாதே --- கைவளையல்கள் அணிந்த மாதர்களுக்காக இவ்வாறு இளைத்துப் போய் அடியேன் அலையாமல்,

      சுருதிப்பொற் பொருள் --- வேதத்தின் அழகிய பொருள்களைக் கூறி,

     செக்கர்க்கு குரவு இட்டு --- சிவந்த குரா மலரால் அர்ச்சித்து

     தமர் பற்றித் தொழு --- அன்பு வைத்த அடியார் பற்றித் தொழுகின்ற

     செச்சைக் கழல் பற்றிப் பணிவேனோ ---  வெட்சி மலருடன் கூடிய உமது திருவடியை சிக்கெனப் பிடித்துப் பணிய மாட்டேனோ?


பொழிப்புரை

         மேகத்தை வாகனமாகக் கொண்ட தேவயானையையும், குயில் போன்றவளும், கிளி போன்றவளும், கிளிகள் புகுந்து மூக்கினால் தொளைத்து உண்ணுகின்ற பசும் தினைப்பயிரைக் காவல் புரிந்தவரும் ஆகிய,  முத்துப் போன்ற வள்ளி பிராட்டியையும் தழுவுகின்ற அழகிய புயத்தை உடைய வீரமூர்த்தியே!

         குதிரைகள் சுழன்று வரும் சூரியனுடைய தேர் வரும் சமயத்தில், இருள் திக்கு முக்காடி உலகினின்றும் வலி குன்றி ஒழியக் கூவுகின்ற அழகிய சேவலின் வெற்றிக் கொடியை உடையவரே!

         பூட்டுவாயை உடைய தூய ரதமாக சிவபெருமானுக்கு விளங்கிய பூமியானது, இமயமலையில் வடதிசை சாய்ந்து நின்றபோது, சமமா நிற்குமாறு செய்த சிற்பியாகிய சித்தராம் அகத்திய முனிவர் தியானிக்கின்ற கச்சிப் பதியை உடையவரே!

         கடலில் மாமரமாய் நின்ற சூரபன்மன் வலிமை இழந்து, தன்னுடைய தீமை போய் நடுங்குதல் உண்டாக, செயல் அழிந்து போகும்படியாக போர் புரிந்த சக்திவேலை ஏந்திய திருக்கரத்தரே!

         அழகிய பெருமையில் சிறந்தவரே!

         வேல், அம்பு, மீன், நீர்க்கு இடமான கடல், மெச்சத் தக்க நீலோற்பல மலர், நஞ்சு என்ற இவைகள் போன்ற கண்கள் என்றும், மார்பில் அழகிய பருத்த மலைபோன்ற கொங்கை என்றும்,  மேகம் போன்ற கூந்தல் என்றும், மனம் ஒத்துப் பொய்யாகப் பேசி, சொற்கள் பல கற்பனையாக அமைத்து, உருகி, கல் போன்ற மனம் நெகிழ்ந்து, நிலை தடுமாற்றத்தை அடைந்து, தூக்கத்தை ஒழிந்தும்,  செயல்கள் ஒழிந்தும், துக்கத்தை அடைந்து, மெலிந்து தளர்ச்சி அடைந்தும், கைவளையல்கள் அணிந்த மாதர்களுக்காக இவ்வாறு இளைத்துப் போய் அடியேன் அலையாமல், வேதத்தின் அழகிய பொருள்களைக் கூறி, சிவந்த குரா மலரால் அர்ச்சித்து அன்பு வைத்த அடியார் பற்றித் தொழுகின்ற வெட்சி மலருடன் கூடிய உமது திருவடியை சிக்கெனப் பிடித்துப் பணிய மாட்டேனோ?


விரிவுரை

அயில் அப்புக் கயல் அப்புத் தலைமெச்சு உற்பல நச்சுக் கண் ---

தமிழ் படித்த புலவர்கள் அரிய தமிழால் பெரிய பொருளாகிய இறைவனைத் துதி செய்து பாடாமல், நீர்க்குமிழி போல தோன்றி மறைகின்ற, நிலையில்லாத பெண்களின் அவயவங்களைப் புகழ்ந்து, பலப்பல கற்பனை நயங்கள் அமைந்த பாடல்களைப் பாடி அலைவர்.  இதனைப் பல பாடல்களில் அருணகிரியார் கூறிக் கண்டிக்கின்றார்.

இங்கே மாதர்களின் கண்களைப் புகழ்கின்றதைக் கூறுகின்றார்.  அயில், அப்பு, கயல், அப்புத்தலை, மெச்சு உற்பலம், நச்சு கண்.

அயில் - வேல்.  அம்பு என்ற சொல் அப்பு என வந்தது, சந்தத்தை நோக்கி.  கயல் - மீன்.  அப்புத்தலை - கடல்.  மெச்சு உற்பலம் - வியக்கத்தக்க நீலோற்பல மலர்.  நச்சு - நஞ்சு.   இவைகளைப் போன்ற கண் என்று கூறுவர்.

பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்
சேல்என்பது ஆகத் திரிகின்ற நீ,செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை, கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்
கால் என்கிலை, மனமே, எங்ஙனே முத்தி காண்பதுவே.     ---  கந்தர் அலங்காரம்.

உரத்தை கனவெற்புத் தனம் ---

உரத்து ஐ கன வெற்பு தனம் என்று பதப்பிரிவு செய்து கொள்க.
உரம் - மார்பு.  ஐ – அழகு.

அம் மாதர்களின் அழகிய மார்பில் உள்ள தனம் பருத்த மலை போன்றது என்பர்.

மேகம் அளகக் கொத்து ---

சிறிது நாட்களில் நரைத்து உதிர்கின்ற கூந்தலைக் கரியமேகம் என்பர்.

ஒப்பிப் புளுகிச் சொல்பல கற்பித்து ---

இவ்வாறு மனம் ஒப்பிக் கற்பனை பல செய்து புளுகுவார்கள்.  இனிய கனியமுதம் போன்ற தமிழ்ச் சொற்களைக் கொண்டு கவி புனைவார்கள்.

இளகிக் கற்புள நெக்குத் தடுமாறி ---

உள்ளம் உருகியும், கல் போன்ற மனம் நெகிழ்ந்து தடுமாறுவர்.  பரிதாபம்.  கானல் நீரை நீர் எனக் கருதும் மடமை போல் தடுமாற்றம் அடைவார்கள்.

துயில் விட்டு, செயல் விட்டு ---

இரவு முழுவதும் மாதர் மயலால் உறங்காதும், பகல் முழுவதும் வேறு நல்ல கருமங்களைச் செய்யாமலும், இரவு பகலாய்க் காமுகர் திரிவார்கள்.

துயர்வுற்றுக் கயர்வுற்று ---

துயர் உற்று, உக்கு அயர்வு உற்று.

துன்பமும் சோர்வும் வாட்டமும் அடைவார்கள்.  இவ்வாரு மாதர் மயலால் இராவணன், கீசகன், சுந்தோபசுந்தர், நகுஷன் முதலியோர் அழிந்தார்கள்.

தொடியர்க்கு இப்படி எய்த்துச் சுழலாதே ---

தொடி - வளையல்.  வளையல் அணிந்த மாதர்களை நாடித் தேடித் திரிந்து இவ்வாரு சுழல்வது கூடாது என்று அடிகளார் உலகத்தார்க்கு உபதேசிக்கின்றார்.

சுருதிப் பொற் பொருள் ---

காது வழி கேட்டு ஓதுவதனால், வேதம் சுருதி எனப்பட்டது.  வேதப் பொருள்களைக் கூறி முருகன் திருவடியை மலர் தூவி அரச்சிக்க வேண்டும்.

செக்கர்க் குரவு இட்டு ---

செக்கர் - சிவப்பு.  சிவந்த குரா மலரால் முருகவேளை அர்ச்சித்தல் சிறந்தது.  முருகவேளுக்கு உகந்த மலர் குரா.

குராப் புனை தண்டையந் தாள் தொழல் வேண்டும்...   ---  கந்தர் அலங்காரம்.

தமர் பற்றி ---

தமர் - முருகவேளின் அடியார்கள்.

                          திருமுகம் ஆறும் கண்ட
தமராகி வைகும் தனியான ஞானத் தபோதனர்...        ---  கந்தர் அலங்காரம்.

முருகனுடைய அடியார்களைத் துணை பற்றினால் முத்தி நலம் எளிதாகச் சித்திக்கும்.

அடியார்கள் பற்றுக்கள் அனைத்தும் விடுத்துப் பற்றற்ற பரமனைப் பற்றிப் பணிவார்கள்.  பற்று அற்றான் பற்று, ஏனைய பற்றுக்களை அகற்றும்.

பற்றுக பற்றுஅற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.                        ---  திருக்குறள்.

தொழு செச்சைக் கழல் பற்றிப் பணிவேனோ ---

அடியார்கள் தொழுதேதத்தும் திருவடி முருகனுடைய பாதமலர்.  அப் பாதமலரை, சீதமலராகிய வெட்சி மலர் கொண்டு பணிதல் வேண்டும்.

புயல் அத்தை ---

புயல் - மேகம்.  இந்திரனுக்கு வாகனம் மேகம்.  அதனால், இந்திரனுடைய புதல்வியாகிய தேவசேனைக்கும் மேக வாகனம் உண்டு எனக் கூறினார்.

அத்தன் என்ற ஆண்பால் சொல், பெண்பாலில் அத்தை என்று வந்தது.

குயில் தத்தை ---

வள்ளியம்மை குயில் போன்ற இனிய குரலும், கிளி போன்ற பச்சை நிற அழகும் உடையவர்.
   
கிளைபுக்குத் தொளைபச்சைப் புனமுத்து ---

"கிள்ளை" என்ற சொல் "கிளை" என வந்தது.  கிள்ளை - கிளி.

கிளிகள் வந்து தம் மூக்கினால் தொளைத்துத் தினைக்கதிர்களை உண்டு பசியாறுகின்ற பசுமை வாய்ந்த புனம்.  அப் புனத்தில் காவல் புரிந்த ஆணிமுத்து போன்றவர் வள்ளி பிராட்டியார்.

புரவிக் கொட்பு இரத அற்றம் ---

புரவி - குதிரை.  சூரியனுடைய தேரில் பூட்டிய பச்சைப் புரவிகள் வேகத்தினால் சுழல்கின்றன.

கொட்பு - சுழற்சி.  அற்றம் - நேரம்.

சூரியனுடைய தேர் வரும் நேரம் தெரிந்து, உலக மக்கள் தூக்கத்தை விட்டு எழுமாறு சேவல் ஆவலுடன் கூவுகின்றது.

ஆன்மாக்கல் கேவல இருளை விட்டு எழுமாறு, நாத தத்துவம் துணை புரிகின்றது என்ற உட்பொருளை உணர்க.

இருள் திக்கிப்படி மட்கப் புகல் பொன் குக்குடம் ---

குக்குடம் - கோழி. கு - பூமி.  குடம் - பேதிப்பது.  பூமியைக் கீறுவதனால் குக்குடம் எனப் பெற்றது.  சேவல் கூவியவுடன் உலகில் உள்ள இருள் திக்கு முக்காடிக் கொண்டு நீங்குகின்றது.

கயிலச் சுத்தரதத்துச் சயிலத்துத் தரநிற்க ---

கயில் அ சுத்த ரதத்து.

கயில் - தேர்க் கொடுங்கையின் மேல் பாகம்.

திரிபுர சம்மாரத்தின் போது, பூதலம் சிவபெருமானுக்குத் தேராக இருந்தது.

பார்வதி அம்மையின் திருமணத்தின் போது அமரர் முனிவர் அனைவர்களும் இமயத்தில் குழுமியதனால், வடபால் சாய்ந்து, தென்பால் உயர்ந்தது. அதனால், சிவபெருமான் அகத்திய முனிவரைப் பொதிய மலைக்கு அனுப்பி அருளினார்.  அகத்தியர் பொதிய மலையை அடைந்தவுடன் பூமி சமனாகியது.

கரணிச் சித்தருள் கச்சி ---

கரணி - சிற்ப வேலை செய்யும் தபதி. உலகைச் சமன் செய்த தபதி போன்றவர் அகத்தியர்.

சித்தர் உள் - சித்தராகிய அகத்திய முனிவர் தியானிக்கின்ற காஞ்சி.

உள் - தியானித்தல்.

கருத்துரை

கச்சியம்பதிக் குமரா, உனது பாதமலரைப் பணிந்து உய்ய, அருள் செய்.
                                                                       




No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...