காஞ்சீபுரம் - 0460. அரிஅயன் புட்பிக்க




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அரிஅயன் புட்பிக்க  (காஞ்சீபுரம்)

முருகா!
உனது திருவடிக்குத் தொண்டு புரிய அருள்


தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான


அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்
     டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்
          றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் ......கொருகோடி

அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்
     பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்
          தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படிபாடிப்

பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும்
     பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்
          படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் ...... படிமோதிப்

படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ்
     சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின்
          பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண் ...... டடைவேனோ

பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்
     சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும்
          ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் ......குரலாதி

பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும்
     கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும்
          பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் ...... தியும்நீலக்

கரியகொண் டற்கொப் பித்தக துப்புந்
     திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்
          கனவடங் கட்டப் பட்டக ழுத்துந் ...... திருவான

கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங்
     கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங்
          கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அரியயன் புட்பிக்க, குழுமிக் கொண்டு,
     அமரர் வந்திக்கத் தட்டு உருவச்சென்று,
          அவுணர் அங்கத்தைக் குத்தி முறித்து, ங்கு ...... ஒருகோடி

அலகை நின்று ஒத்தித் தித்தி அறுத்தும்,
     பல இயம் கொட்டச் சக்கடி கற்று,ந்
          தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படி பாடி,

பரிமுகம் கக்கச் செக்கண் விழித்தும்,
     பவுரி கொண்டு எட்டுத் திக்கை உடைத்தும்,
          படுகளம் புக்குத் தொக்கு நடிக்கும் ...... படி மோதி,

படைபொரும் சத்திப் பத்ம நினைத்தும்,
     சரவணன் கச்சிப் பொற்பன் எனப் பின்
          பரவியும், சித்தத்துக்கு வர தொண்டு ...... அடைவேனோ?

பெரிய தண் செச்சைக் கச்சு அணி வெற்பும்,
     சிறிய வஞ்சிக்கு ஒத்து எய்த்த நுசுப்பும்,
          ப்ரிதி ஒழிந்து ஒக்கக் கைக்கிளை துத்தம் ......குரல்ஆதி

பிரிவில் கண்டு இக்கப் பட்ட உருட்டும்,
     கமுகமும், சிற்பச் சித்ரம் உருக்கும்
          பிரதி அண்டத்தைப் பெற்றுஅருள் சிற்றுஉந் ...... தியும்,நீலக்
  
கரியகொண்டற்கு ஒப்பித்த கதுப்பும்,
     திலதமுமு, செப்பொன் பட்டமும், முத்தின்
          கனவடம் கட்டப்பட்ட கழுத்தும் ...... திரு ஆன

கருணையும், சுத்தப் பச்சை வனப்பும்,
     கருதும் அன்பர்க்குச் சித்தி அளிக்கும்
          கவுரி, அம்பைக்குப் புத்ர, எவர்க்கும் ...... பெருமாளே.


பதவுரை

         பெரிய தண் செச்சைக் கச்சு அணி வெற்பும் --- பெரிய, குளிர்ந்த குங்குமக் குழம்பு கொண்ட கச்சை அணிந்த மலை போன்ற தனமும்,

         சிறிய வஞ்சிக்கு ஒத்து எய்த்த நுசுப்பும் --- நுண்ணிய வஞ்சிக் கொடி போன்று இளைத்த இடையும்,

         ப்ரிதி ஒழிந்து --- விருப்பம் முழுதும் ஒழிந்து,

     ஒக்கக் கைக்கிளை துத்தம் குரல் ஆதி பிரிவில் கண்டு இக்கப்பட்ட --- ஓர் இசையில் தான் அதிக விருப்பம் என்று இல்லாமல் எல்லா இசை வகைகளையும், கைக்கிளை, துத்தம், குரல் முதலான இசைப் பிரிவுகளில் பகிர்க்கப்பட்ட,

     உருட்டும் கமுகமும் --- புரளும் குரலிசையும், கமகம் என்ற சுர பேதமும்,

      சிற்பச் சித்ரம் உருக்கும் --- சிற்ப நூல்களில் சொல்லப்பட்ட அழகையும் உருகச் செய்யும் அழகும்,

     பிரதி அண்டத்தைப் பெற்று அருள் சிற்று உந்தியும் --- ஒவ்வொரு அண்டத்தையும் பெற்றருளிய சிறிய வயிறும்,

      நீலக் கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் --- இருண்ட கரிய மேகத்துக்கு நிகரான கூந்தலும்,

      திலகமும் --- நெற்றிப் பொட்டும்,

     செம் பொன் பட்டமும் --- செம் பொன்னால் ஆகிய பட்டமும்,

     முத்தின் கன வடம் கட்டப்பட்ட கழுத்தும் --- சிறந்த முத்துமாலை கட்டப்பட்ட கழுத்தும்,

      திரு ஆன கருணையும் --- தெய்வத் தன்மை வாய்ந்த கருணையும்,

     சுத்தப் பச்சை வனப்பும் --- தூய பச்சை நிற அழகும்,

      கருதும் அன்பர்க்குச் சித்தி அளிக்கும் கவுரி அம்பைக்கு புத்ர --- திருவடியைத் தியானிக்கின்ற அன்பர்கட்கு வீடு பேற்றை அளிக்கும் தன்மையும் கொண்ட பார்வதி தேவிக்குப் பாலகரே!

      எவர்க்கும் பெருமாளே --- எல்லோருக்கும் மேலான பெருமையின் மிகுந்தவரே!

      அரி அயன் புட்பிக்க --- திருமாலும் பிரமனும் தங்கள் வாய் திறந்து தமது குறைகளை  கூறவும்,

     குழுமிக் கொண்டு அமரர் வந்திக்க --- ஒன்று கூடித் தேவர்கள் வணங்கி நிற்கவும்,

      தட்டு உருவச் சென்று அவுணர் அங்கத்தைக் குத்தி முறித்து --- ஊடுருவிச் சென்று அசுரர்களுடைய உடல்களைக் குத்தியும், முறித்தும்,

      அங்கு ஒரு கோடி அலகை நின்று --- அவ்விடத்தில் ஒரு கோடி பேய்கள் நின்று

     ஒத்தித் தித்தி அறுத்தும் --- தாளம் போட்டும், தித்தி என்ற தாள ஜதியை அறுத்தும்,

         பல இயம் கொட்டச் சக்கடி கற்று --- பல வாத்தியங்களை முழக்கியும், பிரகாசப் பேச்சுக்களைப் பேசியும்,

         அந்தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும்படி பாடி --- துர்க்கையுடன் சேர்ந்து, குச்சரி என்ற ராகத்தை மெச்சி வியக்கும்படி பாடியும்,

         பரி முகம் கக்கச் செக்கண் விழித்தும் --- வடவா முகாக்கினியைப் போல் தீயை வெளிப்படுத்தும் சிவந்த கண்களை விழித்தும்,

         பவுரி கொண்டு எட்டுத் திக்கை உடைத்தும் --- வட்டமாக  ஆடி, எட்டு திசைகளையும் அதிர்ச்சியுறச் செய்தும்,

         படு களம் புக்குத் தொக்கு நடிக்கும்படி மோதி --- போர்க்களத்தில் நுழைந்து ஒன்று சேர்ந்து நடனம் செய்யவும், பகைவர்களைத் தாக்கி,

         படை பொரும் சத்திப் பத்ம நினைத்தும் --- எவ்விதமான படைகளையும் பொருது வெற்றி பெற வல்ல சக்தி வேலை ஏந்தும் தாமரை போன்ற திருக்கரங்களைத் தியானித்தும்,

         சரவணன் கச்சி பொற்பன் எனப் பின் பரவியும் --- சரவணன் என்றும் காஞ்சி நகரில் வாழும் அழகன் என்றும் பின்பு பலவாறு துதி செய்தும்

         சித்தத்துக்கு வரத் தொண்டு அடைவேனோ --- இத்தகைய அன்பு என் சித்தத்தில் உதிக்கும்படி, தொண்டு செய்யும் பேற்றினை நான் அடைவேனோ?


பொழிப்புரை

         பெரிய, குளிர்ந்த குங்குமக் குழம்பு கொண்ட கச்சை அணிந்த மலை போன்ற தனமும், நுண்ணிய வஞ்சிக் கொடி போன்று இளைத்த இடையும், விருப்பம் முழுதும் ஒழிந்து, ஓர் இசையில் தான் அதிக விருப்பம் என்று இல்லாமல் எல்லா இசை வகைகளையும், கைக்கிளை, துத்தம், குரல் முதலான இசைப் பிரிவுகளில் பகிர்க்கப்பட்ட, புரளும் குரலிசையும், கமகம் என்ற சுர பேதமும், சிற்ப நூல்களில் சொல்லப்பட்ட அழகையும் உருகச் செய்யும் அழகும், ஒவ்வொரு அண்டத்தையும் பெற்றருளிய சிறிய வயிறும், இருண்ட கரிய மேகத்துக்கு நிகரான கூந்தலும், நெற்றிப் பொட்டும், செம் பொன்னால் ஆகிய பட்டமும், சிறந்த முத்துமாலை கட்டப்பட்ட கழுத்தும், தெய்வத் தன்மை வாய்ந்த கருணையும், தூய பச்சை நிற அழகும், திருவடியைத் தியானிக்கின்ற அன்பர்கட்கு வீடு பேற்றை அளிக்கும் தன்மையும் கொண்ட பார்வதி தேவிக்குப் பாலகரே!

         எல்லோருக்கும் மேலான பெருமையின் மிகுந்தவரே!

          திருமாலும் பிரமனும் தங்கள் வாய் திறந்து தமது குறைகளை  கூறவும், ஒன்று கூடித் தேவர்கள் வணங்கி நிற்கவும், ஊடுருவிச் சென்று அசுரர்களுடைய உடல்களைக் குத்தியும், முறித்தும், அவ்விடத்தில் ஒரு கோடி பேய்கள் நின்று தாளம் போட்டும், தித்தி என்ற தாள ஜதியை அறுத்தும்,  பல வாத்தியங்களை முழக்கியும், பிரகாசப் பேச்சுக்களைப் பேசியும், துர்க்கையுடன் சேர்ந்து, குச்சரி என்ற ராகத்தை மெச்சி வியக்கும்படி பாடியும், வடவா முகாக்கினியைப் போல் தீயை வெளிப்படுத்தும் சிவந்த கண்களை விழித்தும், வட்டமாக  ஆடி, எட்டு திசைகளையும் அதிர்ச்சியுறச் செய்தும், போர்க்களத்தில் நுழைந்து ஒன்று சேர்ந்து நடனம் செய்யவும், பகைவர்களைத் தாக்கி, எவ்விதமான படைகளையும் பொருது வெற்றி பெற வல்ல சக்தி வேலை ஏந்தும் தாமரை போன்ற திருக்கரங்களைத் தியானித்தும், சரவணன் என்றும் காஞ்சி நகரில் வாழும் அழகன் என்றும் பின்பு பலவாறு துதி செய்தும், இத்தகைய அன்பு என் சித்தத்தில் உதிக்கும்படி, தொண்டு செய்யும் பேற்றினை நான் அடைவேனோ?


விரிவுரை

அரி அயன் புட்பிக்க ---

புட்பிக்க – வாய் மலர்ந்து தங்கள் குறை கூறுதல்.

மலர் - மலர்வதுபோல். பிரமாதி தேவர்கள் முருகவேளிடம் சென்று, தங்கட்குச் சூராதி அவுணர்களால் நேர்ந்த துன்பங்களைக் கூறி முறையிட்டார்கள்.

ஏற்றெழு வன்னிமேல் இனிது துஞ்சலாம்
தோற்றிய வெவ்விடம் எனினும் துய்க்கலாம்
மாற்றலர் அலைத்திட வந்த வெந்துயர்
ஆற்றரிது ஆற்றரிது அலம்இப் புன்மையே...   ---  கந்தபுராணம்.

குழுமிக் கொண்டு அமரர் வந்திக்க ---

இந்திரன் முதலிய தேவர்கள் ஒன்றுபட்டு வந்து நூற்றெட்டு யுகங்களாகத் தாங்கள் அநுபவித்த துயர்களைக் கூறித் தொழுதார்கள்.

அலகை நின்று ஒத்தி ---

அலகை - பேய்.  ஒத்தி - தாளம் இடுதல்.

தித்தி அறுத்தும் ---

தாளச் சதியை அறுத்தல்.  தாளம் எழு வகைப்படும்.  துருவம், மட்டியம், திரிபுடை, அடதாளம், ஜம்பை, ரூபகம், ஏகதாளம் என்பன.

பல இயம் கொட்ட ---

இயம் - வாத்தியம்.  போரில், போர் வீரர்கட்கு வீர உணர்ச்சி உண்டாகும்படி பலப்பல வாத்தியங்களை வாசிப்பார்கள்.

சக்கடி கற்று ---

சக்கடி - பரிகாசம்.  போரில் எதிரிகளைப் பழித்துப் பேசுதல்.

குச்சரி ---

குச்சரி என்பது ஒருவகைப் பண்.

பரிமுகம் கக்கச் செக்கண் விழித்தும் ---

போர்க்களத்தில் பேய்கள் கோபத்துடன் விழித்துப் பார்க்கும்போது, கண்களில் வடவைக்கனல் சிந்துகின்றது.

பவுரி கொண்டு ---

பேய்கள் கைகோர்த்து வட்டமாக நின்று ஆடும் கூத்து.

திரிகிட தொங்கிட திரிகட திங்கிட தித்தீ செக்கண
செககண மொழிந்து கூத்துஅனைத்து நவில்வன....  ---  பொருகளத்து அலகை வகுப்பு.

சத்தி பத்ம நினைத்தும் ---

சத்தி - வேல்.  ஞானவேலைத் தாங்கிய முருகவேளுடைய திருக்கரத்தை நினைத்துத் தியானம் புரிதல்.

சரவணன் கச்சிப் பொற்பன் எனப் பின் பரவியும் ---

சரவணபவா, கச்சி அழகா என்று துதி செய்தல்.

தொண்டு அடைவேனோ ---

முருகனுடைய திருத்தொண்டு எனக்குக் கிடைக்குமோ என்று அடிகளார் வேண்டுகின்றார்.

பெரிய தண் செச்சை ---

செச்சை - குங்குமக் குழம்பு.

இத் திருப்புகழின் பின்னுள்ள நான்கு அடிகளிலும் காமாட்சியம்மையின் பெருமையைக் கூறுகின்றார்.

கைக்கிளை துத்தம் குரலாதி ---

ஏழிசைகள்.  குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன.

குரல் - ஸ...
துத்தம்... ரி... 
கைக்கிளை - க... 
உழை - ம... 
இளி - ப...
விளரி - த... 
தாரம் - நி...

உருட்டும் ---

குரலில் நடுக்கம் போல் பாடுவது.

கமுகமும் ---

தசவித கமகங்கள்.  இவைகளை இசை நூல்களில் காண்க.

சிற்பச் சித்ரம் உருக்கும் ---

அம்பிகையின் திருவடிவின் எழிலைக் கண்டு சிற்பிகள் தீட்டிய சித்திரங்களும் உருகுகின்றன.

முத்தின் கனவடம் கட்டப்பட்ட கழுத்தும் ---

அம்பிகை அழகான வெண்முத்து மாலை தரித்திருப்பாள்.

மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை..--- அபிராமி அந்தாதி.

பச்சை வனப்பும் ---

அம்பிகை மரகத நிறம்.

மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி.... ---  அபிராமி அந்தாதி

கருதும் அன்பர்க்குச் சித்தி அளிக்கும் கவுரி ---

தன்னைத் தியானிக்கின்ற அடியார்க்கு அம்பிகை முத்தி நலம் தந்து அருள் புரிவாள்.

கருத்துரை

காஞ்சி நகர்க் கந்தக் கடவுளே, உனது திருத்தொண்டு பெற அருள்.






No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...