அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அறிவிலாப் பித்தர்
(காஞ்சீபுரம்)
முருகா!
அறிவு இல்லாத அசடரைப்
பாடும் புன்மையை ஒழித்து,
உன்னைப் பாடும் நன்மையை
அருள்.
தனதனாத்
தந்த தந்த தனதனாத் தந்த தந்த
தனதனாத் தந்த தந்த ...... தனதான
அறிவிலாப்
பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து
அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச்
சிறிதுகூட்
டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
தெரிவைமார்க் குச்சொ ரிந்து ......
அவமேயான்
திரியுமார்க்
கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோட் சத்தை யென்று ...... அருள்வாயே
இறைவர்மாற்
றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன்
இருளைநீக்
கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
இறைவர்கேட் கத்த குஞ்சொ ...... லுடையோனே
குறவர்கூட்
டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட் டித்தி ரிந்த ...... தவமானைக்
குணமதாக்
கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அறிவுஇலாப்
பித்தர், உன்தன் அடிதொழாக்
கெட்ட வஞ்சர்
அசடர், பேய்க் கத்தர், நன்றி ...... அறியாத
அவலர்மேல் சொற்கள் கொண்டு, கவிகள் ஆக்கிப் புகழ்ந்து,
அவரை வாழ்த்தித் திரிந்து, ...... பொருள்தேடி,
சிறிது
கூட்டிக் கொணர்ந்து, தெருவு உலாத்தித் திரிந்து,
தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே, யான்
திரியும்
மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி,
பரிந்து,
தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே.
இறைவர்
மாற்று அற்ற செம்பொன் வடிவம் வேற்றுப் பிரிந்து
இடபமேல் கச்சி வந்த ...... உமையாள்,தன்
இருளை
நீக்கத் தவஞ்செய்து அருள நோக்கிக்,
குழைந்த
இறைவர் கேட்கத்தகும் சொல் ...... உடையோனே
குறவர்
கூட்டத்தில் வந்து, கிழவனாய்ப் புக்கு
நின்று,
குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,
குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த
குமர கோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம்
வேற்றுப் பிரிந்து --- எல்லாப் பொருளிலும் தங்கி இருப்பவராகிய சிவபெருமானுடைய
மாற்றில்லாத சிவந்த பொன்னைப் போல் ஒளி செய்கின்ற திருமேனியிலிருந்து வேறாகும்படி
பிரிந்து
இடபமேல் கச்சி வந்த உமையாள் ---
விடையின் மீது திருக்கச்சியம்பதிக்கு வந்தருளிய உமாதேவியார்,
தன் இருளை நீக்க --- தன்னால் இறைவன்
கண்மலரை மூடிய காரணமாக உண்டாகிய இருள் தொலையும் பொருட்டு,
தவஞ்செய்து அருள --- மாதவம் செய்து, உலகிற்கு ஒளியைத் தருகின்ற பொருள் சிவமே
என்று காட்டியருள,
நோக்கிக் குழைந்த --- அத் தவத்தின்
திட்பத்தைப் பார்த்தருளி, கம்பா நதியை ஏவி
காமாட்சி தேவி தழுவக் குழைந்தருளிய
இறைவர் கேட்கத் தகும் சொல் உடையோனே ---
சிவபெருமான் கேட்பதற்கு ஏற்ற சிறந்த பிரணவார்த்தத்தை உடையவரே!
குறவர் கூட்டத்தில் வந்து --- நம்பிராஜன்
முதலிய குறவர்களின் கூட்டத்துக்கு இடையில் வந்து,
கிழவனாய்ப் புக்கு நின்று --- ஒரு கிழவன்
வேடத்தைக் காட்டிப் புகுந்து நின்று,
குருவி ஓட்டித் திரிந்த தவமானை ---
தினைப்புனத்தில் குருவிகளை ஓட்டித் திரிந்தவராகிய தவம் நிறைந்த மான் மகளாகிய
வள்ளியை
குணமதாக்கி --- அருட்குணங்களை
உடையவராகச் செய்து,
சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த --- சிறந்த அருட்கோலத்தைக் காட்டிக் கலந்துகொண்ட,
குமரகோட்டத்து அமர்ந்த பெருமாளே ---
குமரக்கோட்டம் என்ற காஞ்சீபுரத் திருக்கோயிலுள் எழுந்தருளிய பெருமையின் மிக்கவரே!
அறிவிலாப் பித்தர் --- மெய் அறிவு
இல்லாத பித்துப் பிடித்தவரும்,
உன்தன் அடி தொழாக் கெட்ட வஞ்சர் --- தேவரீருடைய
திருவடியை வணங்காத கொடிய வஞ்சகரும்,
அசடர் --- கீழ்மக்களும்,
பேய்க் கத்தர் --- பேய்த்தன்மை கொண்டு
அலைபவரும்,
நன்றி அறியாத அவலர் மேல் --- நன்றியறிவும்
இல்லாத பயனற்றவர்களும், ஆகியோர் மீது
சொற்கள் கொண்டு --- நல்ல சொற்களைத்
தொடுத்து
கவிகள் ஆக்கிப் புகழ்ந்து --- பாடல்களைப்
புனைந்து பாடி அவர்களைப் புகழ்ந்து,
அவரை வாழ்த்தித் திரிந்து --- அவர்களை
வாழ்த்தியும், அவர்கள் இருக்கும்
இடம்தொறும் திரிந்து,
பொருள் தேடி --- பொருளைத் தேடி,
சிறிது கூட்டிக் கொணர்ந்து --- சிறிது
சிறிதாகச் சேர்த்துக் கொண்டு வந்து,
தெருவு உலாத்தித் திரிந்து --- பொது மகளிர்
வாழும் தெருக்களில் உலாவித் திரிந்து,
தெரிவைமார்க்குச் சொரிந்து --- அப்
பொது மகளிருக்கே அந்தப் பொருளை மழைபோல் சொரிந்து,
அவமே யான் திரியும் மார்க்கத்து நிந்தை அதனை
மாற்றி --- அடியேன் பயனில்லாமல் திரிகின்ற புல்லிய வழியின் இகழ்ச்சியை மாற்றி,
பரிந்து --- அடியேன் மீது அன்பு வைத்து,
தெளிய மோட்சத்தை என்று அருள்வாயே --- என்
அறிவு தெளிவு பெறுமாறு முத்தி இன்பத்தை எனக்கு என்றைய தினம்தான் தருவிரோ?
பொழிப்புரை
எல்லாப் பொருளிலும் தங்கி இருப்பவராகிய
சிவபெருமானுடைய மாற்றில்லாத சிவந்த பொன்னைப் போல் ஒளி செய்கின்ற
திருமேனியிலிருந்து வேறாகும்படி பிரிந்து விடையின்
மீது திருக்கச்சியம்பதிக்கு வந்தருளிய உமாதேவியார், தன்னால் இறைவன் கண்மலரை மூடிய காரணமாக
உண்டாகிய இருள் தொலையும் பொருட்டு,
மாதவம்
செய்து, உலகிற்கு ஒளியைத்
தருகின்ற பொருள் சிவமே என்று காட்டியருள, அத்
தவத்தின் திட்பத்தைப் பார்த்தருளி,
கம்பா
நதியை ஏவி காமாட்சி தேவி தழுவக் குழைந்தருளிய சிவபெருமான் கேட்பதற்கு ஏற்ற சிறந்த
பிரணவார்த்தத்தை உடையவரே!
நம்பிராஜன் முதலிய குறவர்களின்
கூட்டத்துக்கு இடையில் வந்து, ஒரு கிழவன் வேடத்தைக்
காட்டிப் புகுந்து நின்று, தினைப்புனத்தில் குருவிகளை ஓட்டித்
திரிந்தவராகிய தவம் நிறைந்த மானாம் வள்ளியை அருட்குணங்களை உடையவராகச் செய்து, சிறந்த அருட்கோலத்தைக் காட்டிக்
கலந்துகொண்ட, குமரக்கோட்டம் என்ற
காஞ்சிபுரத் திருக்கோயிலுள் எழுந்தருளிய பெருமையின் மிக்கவரே!
மெய் அறிவு இல்லாத பித்துப்
பிடித்தவரும், தேவரீருடைய திருவடியை
வணங்காத கொடிய வஞ்சகரும், கீழ்மக்களும், பேய்த்தன்மை கொண்டு அலைபவரும், நன்றியறிவும் இல்லாத பயனற்றவர்களும், ஆகியோர் மீது நல்ல சொற்களைத் தொடுத்து
பாடல்களைப் புனைந்து பாடி அவர்களைப் புகழ்ந்து, அவர்களை வாழ்த்தியும், அவர்கள் இருக்கும் இடம்தொறும் திரிந்து, பொருளைத் தேடி, சிறிது சிறிதாகச் சேர்த்துக் கொண்டு
வந்து, பொதுமகளிர் வாழும் தெருக்களில்
உலாவித் திரிந்து, அப் பொதுமகளிருக்கே அந்தப் பொருளை
மழைபோல் சொரிந்து, அடியேன்
பயனில்லாமல் திரிகின்ற புல்லிய வழியின் இகழ்ச்சியை மாற்றி, அடியேன் மீது அன்பு வைத்து, என் அறிவு தெளிவு பெறுமாறு முத்தி
இன்பத்தை எனக்கு என்றைய தினம்தான் தருவிரோ?
விரிவுரை
அறிவிலாப்
பித்தர் ---
மிகவும்
சிறந்த மொழி தமிழ். தெய்வீகமுடைய
செம்மொழி. அதனால்தான்
"தண்தமிழ்", "செந்தமிழ்", "தீந்தமிழ்"
என்றெல்லாம் பேசப்படுகின்றது.
இத்தகைய
தெய்வத் தமிழைப் பயின்று பாட்டு இசைக்கும் ஆற்றல் வாய்ந்து, எவன் பிறப்பு இறப்பை நீக்கி
பேரானந்தத்தைத் தருவானோ - எவன் பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெருமானோ - எவன்
மறையாகமங்களால் துதிக்கப் பெறும் மாதேவனோ, அந்த எம்பெருமானைப் பாடி உய்வு பெறாமல், கேவலம் உண்டு உடுத்து உழலும்
சிறுதொழிலும், சிறுமையும் உடைய
மனிதர்களைப் பாடுவது எத்துணை மதியீனம்? காமதேனுவின்
பாலை கமரில் உகுப்பதை ஒக்கும். தமது
அறிவையும் தமிழையும் அறிவுக்கு அறிவாகிய இறைவன் மாட்டுப் பயன்படுத்தாமல், கேவலம் பொருள்
விருப்பால் மனிதர்மாட்டுப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது.
யாம்ஓதிய
கல்வியும், எம்அறிவும்
தாமேபெற
வேலவர் தந்ததனால்
பூமேல்
மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல்
நடவீர் நடவீர் இனியே.
என்ற
கந்தரநுபூதித் திருவாக்கை உய்த்து உணர்மின்கள்.
அங்ஙனம் பாடப் பெறுகின்றவர் எத்தன்மையானவர் என்பதை சுவாமிகள் கூறுமாறு
காண்க.
அறிவிலாப்
பித்தர். நல்லறிவு என்பது ஒரு சிறிதும் இல்லாத பைத்தியம் பிடித்து உலகில் பயனற்று
அலைபவர். பித்தன் எப்படித் திரிந்து
உழல்வானோ, அதுபோல பணப்பித்தும், பெண்பித்தும் பிடித்துத் திரிபவர்.
மத்துஏறி
அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை
மயல்ஏறி
விருப்புஏறி மதத்தினோடு
பித்துஏறி
உழல்கின்ற மனத்தால் அந்தோ
பேய்ஏறி
நலிகின்ற பேதையானேன்... --- திருவருட்பா.
அடிதொழாக்
கெட்ட வஞ்சர்
---
இறைவன்
திருவடித் தாமரைகளைத் தொழுவதற்கென்றே படைக்கப்பட்ட கரங்களால் அவ் இறைவனைத் தொழாது, கொலை புலையாதி குற்றங்களையே புரிந்து, வஞ்ச நெஞ்சமுடன் வாழ்பவர். முதல் கொடுத்த முதலாளியை ஏமாற்றி சில பொருளை
மறைத்து வைப்பதனை வஞ்சனை என்பர். இறைவன் தந்தருளிய இக் கரங்களாலும் தலையாலும் அப்
பரமபதியை வணங்குதலின்றி உண்பதும் உறங்குவதுமாக இருந்ததால், வஞ்சர் என்றனர். மனிதனை ஏமாற்றுபவர் வஞ்சர் எனப்படுவர். இறைவனையே ஏமாற்றுபவர் கெட்ட வஞ்சர் எனப்படுவர்.
நன்றி
அறியாத அவலர்
---
ஒரு
மனிதனிடத்தில் இருக்கவேண்டிய குணங்களுள் முதன்மையானது நன்றியறிவு. மனிதனை
உயர்த்துவது நன்றி மறவாமையே. ஆன்முலை அறுத்த பாவம். கள் குடித்த பாவம். கொலை புலை புரிந்த பாவம் ஆகிய எல்லாப்
பாவங்களுக்கும் கழுவாய் உண்டு. கழுவாய்
இல்லாத – உய்தி இல்லாத பாவம் நன்றி கோறலாம்.
எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வுஉண்டாம், உய்வுஇல்லை
செய்ந்நன்றி
கொன்ற மகற்கு.
என்பர்
திருவள்ளுவர்.
மேலும், நன்றி செய்தவன் பின்னொரு காலத்தில்
கொன்றால் ஒத்த கொடுமை புரியினும்,
அவன்
முன் புரிந்த நன்றியை நினைத்து,
அவனுக்குத்
தீங்கு புரியாமல் நல்லவர்கள் ஒதுங்கி அவன் முன் செய்த நன்றியைப் பாராட்டி அவனுக்கு
நன்மையே செய்வர்.
கொன்றன்ன
இன்னா செயினும், அவர்செய்த
ஒன்றுநன்று
உள்ளக் கெடும்.
நன்றி
மறந்த பாவிகள் ஒருபோதும் ஈடேறமாட்டார்கள்.
அவர்கள் விரைவில் அழிவர். அவரைக்
கொல்வதற்கு வேறு கூற்றுவன் வரவேண்டா. அவர்
மறந்த நன்றியே அவரைக் கொன்றுபோடும்.
ஒன்றுஒரு
பயன்தனை உதவினோர் மனம்
கன்றிட
ஒருவினை கருதிச் செய்வரேல்
புன்தொழில்
அவர்க்குமுன் புரிந்த நன்றியே
கொன்றிடும்
அல்லது கூற்றும் வேண்டுமோ. --- கந்தபுராணம்.
நன்றி
பலசெய்து, ஒரு தீங்கு புரியினும், புல்லர் அந்த தீங்கையே பெரிதாக எண்ணி, எல்லா நன்றிகளையும் உடனே மறந்து
விடுவர்.
நன்றி
பலவாக ஒரு நவை புரிவாரேனும்
கன்றிடுவது
அன்றி முதுகயவர் நினையாரே.. --- மகாபாரதம்.
ஒருநன்றி
செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ்
சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு
நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும்
தீதாய் விடும். --- நாலடியார்.
அங்ஙனம்
நன்றியின் உயர்வையே அறியாத வீணர்களை என்னென்று உரைப்பது.
சொற்கள்
கொண்டு கவிகள் ஆக்கிப் புகழ்ந்து ---
இத்தகைய
பயனில்லாத பதடிகள் இருக்கைதொறும் போய், தூய
செந்தமிழை - இறைவனைப் பாடுதற்கு உரிய தீந்தமிழை - வறிதாக அப் பதர்களைப்
புனைந்துரையும் பொய்யுரையுமாகப் புகழ்ந்து பாடி, அவர்கள் தரும் பொருளைப் பெற்று
மகிழ்வர். சிறிது காலமே நின்று
மின்னலைப்போல் விரைவில் அழியும் பொருளையே பெற்று வீணுற்றனர். என்றும் அழியாத
திருவருட் செல்வத்தை வாரி வாரி வழங்கும் எம்பெருமானைப் பாடி உய்யும் திறன் அறியாது
கெடுவர். அந்தோ! பரிதாபம். அவர்களின் மதியின்மைதான் என்னே!
குன்றும்
வனமும் குறுகி வழிநடந்து
சென்று
திரிவது என்றும் தீராதோ - என்றும்
கொடாதவரைச்
சங்குஎன்றும், கோஎன்றும் சொன்னால்
இடாதோ
அதுவே இது. --- இரட்டையர்.
வஞ்சக
லோபமூடர் தம்பொருள் ஊர்கள்தேடி
மஞ்சரி
கோவை தூது பலபாவின்
வண்புகழ்
பாரிகாரி என்றுஇசை வாதுகூறி
வந்தியர்
போல வீணில் அழியாதே.... --- திருப்புகழ்.
கல்லாத
ஒருவனை நான் கற்றாய் என்றேன்,
காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்,
பொல்லாத
ஒருவனை நான் நல்லாய் என்றேன்,
போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்,
மல்ஆரும்
புயம்என்றேன் சூம்பல் தோளை,
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,
இல்லாது
சொன்னேனுக்கு இல்லை என்றான்
யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே. --- இராமச்சந்திர கவிராயர்.
சிறிது
கூட்டிக் கொணர்ந்து - தெரிவைமார்க்குச் சொரிந்து ---
இங்ஙனம்
வரிய புலவன் தன் வீடு தேடி வந்து உயர்ந்த பொருள்களோடு கூடிய பாடல்களைப் பாடினாலும்
அவ் உலோப சிகாமணிகளாகிய செல்வந்தர்,
தாராளமாகப்
பொருளைத் தராமல், இன்று வா, நாளை வா என்று அலைய வைத்து, மிகச் சிறிய அளவில் பொருள் தருவர். அங்ஙனம்
கிடைக்கின்ற பொருளைச் சிறிது சிறிதாகச் சேர்த்துத் திரட்டிக் கொணர்ந்து, அதனை அறவழியில் செலவிடாமலும், தானும் அநுபவிக்காமலும், பொதுமகளிர்க்கு வழங்கிப் புன்கண்
உறுவர்.
தெளிய
மோட்சத்தை என்று அருள்வாயே ---
இவ்வாறு
அலைந்து அவமே திரியும் கலங்கிய அறிவானது தெளிவு பெற்று, "முருகா! மூவர் முதல்வா!” என்று உன்னைப்
பாடி உய்வு பெற என்று நீர் அருள்வீர் என்று சுவாமிகள் வினாவுகின்றனர்.
மாற்றற்ற
செம்பொன் வடிவம் ---
சிவபெருமானுடைய
திருமேனி உருகிய செம்பொன்போல் ஒளிமயமாக விளங்கும். "பொன்னார் மேனியனே"
என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். ஆனால், நாம் காணுகின்ற இந்தப் பொன் அன்று.
இந்தப் பொன்னுக்கு மாற்று உண்டு. இன்னும்
மாற்று உயர்ந்த சாம்பூநதம் என்னும் பொன்னும் அன்று. மாற்று இல்லாத ஒரு பொன் இருக்குமானால், அப் பொன் வண்ணம் ஆகும் அப் பரமபதியின்
வடிவின் வண்ணம்.
மாற்று
அறியாத செழும்பசும் பொன்னே
மாணிக்க
மேசுடர் வண்ணக் கொழுந்தே... --- திருவருட்பா.
பொன்வண்ணம்
எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்து இலங்கும்,
மின்வண்ணம்
எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக் குன்றம்
தன்வண்ணம்
எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக் கண்ட
என்வண்ணம்
எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆயின ஈசனுக்கே..
--- சேரமான் பெருமாள் நாயனார்.
வேற்றுப்
பிரிந்து …........ குழைந்த இறைவர் ---
உமாதேவியார்
உலகம் உய்யும் பொருட்டு ஒளிகட்கு எல்லாம் மூலகாரணமாய் உள்ள சிவபெருமானுடைய
திருக்கண்களை மூடியருளினார். அதன் காரணமாக
உலகமெல்லாம் இருண்டுவிட்டது. அதன் காரணமாக, இறைவனை விட்டுப் பிரிந்து, மண்ணுலகு உற்று, காஞ்சியம்பதியில் கம்பா நதிக்கரையில்
மணலால் சிவலிங்கத்தை எழுந்தருளப் புரிந்து வழிபாடு ஆற்றினர். அம்மையின் அன்பை உலகு உணரப் புரிவான் வேண்டி, பெருமான் நதியில் வெள்ளம் வரச்
செய்தனர். அதுகண்ட அம்மை, தனக்கு ஆபத்து வந்தது என்று எண்ணாது, சிவலிங்கத் திருமேனிக்குப் பழுது
வருகின்றதே என்று பயந்து, இலிங்கத்தைத் தழுவிக்
கொண்டனர். அம்மையின் அன்பைக் கண்ட ஆலமுண்ட
நீலகண்டர் குழைந்து அநுக்ரகம் புரிந்தருளினர்.
கேட்கத்
தகும்சொல் உடையோனே ---
சனகாதிகட்கு
உபதேசித்த சிவபெருமானும் கேட்பதற்கு உரிய பிரணவார்த்தமாகிய செஞ்சொல்லை உடையவர்
முருகப் பெருமான்.
தவமானைக்
குணமதாக்கி ---
வள்ளிநாயகியார்
தினைப்புனத்தில் ஏனல் காத்திருந்தனர்.
பாசபந்தம் நீங்கப் பெறாது இருந்தமையால் குமரப் பெருமான் வேட வடிவுடனும், கிழ வடிவுடனும் போய் ஆடல்
புரிந்தனர். உண்மை வடிவு காட்டாது ஒழிந்தனர். பின்னர் யானையைக் கண்டவுடன் உயிர்க்கு இறுதி
நேரும்போது சுற்றமும் நண்பரும் உதவுதல் இல்லை, எம்பெருமானே அப்போது பற்றுக்கோடு என்று
பாசபந்தம் நீங்கப் பெற்றனர். அங்ஙனம்
குணமதாக்கிய பின் செவ்வேள் சிறந்த வடிவு காட்டி ஆட்கொண்டனர்.
குமரகோட்டத்து
அமர்ந்த ---
குமரகோட்டம்
என்பது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சிறந்த முருகர் கோயில் ஆகும். அங்கு ஆண்டவன் காண்பார் கண்ணும் கருத்தும்
ஒருங்கே கவரும் கவினுடன் விளங்கி அடியார் அலக்கண் அகற்றி அருள்புரிகின்றனர்.
கருத்துரை
சிவகுருநாதரே, வள்ளியம்மையாரது கணவரே, குமரகோட்டத்து அமர்ந்த குரிசிலே, அறிவில்லாத அசடரைப் பாடி அலையும்
புன்மையை ஒழித்து, தேவரீரைப் பாடும்
நன்மையை நல்கி அடியேனை ஆட்கொள்வீர்.
No comments:
Post a Comment