காஞ்சீபுரம் - 0462. அற்றைக்கு அற்றைக்கு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அற்றைக்கு அற்றைக்கு (காஞ்சீபுரம்)

முருகா!
பொதுமாதர் மயல் நீங், பிறவித் துயர் தீர,
உனது திருவடியைத் தந்து அருள்.


தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத் தத்தத் ...... தனதான


அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
     தத்தத் தத்தத் ...... தருவோர்தாள்

அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்
     தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச்

செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்
     செத்துச் செத்துப் ...... பிறவாதே

செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
     செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய்

துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்
     துட்கத் திட்கப் ...... பொரும்வேலா

சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
     சொர்க்கத் தத்தைக் ...... கினியோனே

கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
     கத்தக் கத்தக் ...... களைவோனே

கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அற்றைக்கு அற்றைக்கு ஒப்பித்து ஒப்பித்து,
     அத்தத்து அத்தம் ...... தருவோர் தாள்

அர்ச்சித்து, இச்சித்து, க்கத்து அக்கத்
     தொக்குத் திக்குக் ...... குடில்பேணி,

செற்றைப் புன்சொல் கற்றுக் கற்று,
     செத்துச் செத்துப் ...... பிறவாதே,

செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
     செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய்.

துற்றுப் பின் புக்கு உற்றக் கொக்கைத்
     துட்கத் திட்கப் ...... பொரும்வேலா!

சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
     சொர்க்கத் தத்தைக்கு ...... இனியோனே!

கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
     கத்தக் கத்தக் ...... களைவோனே!

கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.


பதவுரை

      துற்றுப் பின் புக்கு உற்ற --- நெருங்கிப் பின் தொடர்ந்து,

     கொக்கை துட்கத் திட்கப் பொரும் வேலா --- கடலில் இருந்த மாமரத்தை அஞ்சவும், திடுக்கிடவும் போர் புரிந்த வேலாயுதரே!

      சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்க சொர்க்கத் தத்தைக்கு இனியோனே --- தூய்மையும், பேரன்பும், அழகிய கொங்கையும் உடைய விண்ணுலகத்துக் கிளி போன்ற தேவயானை அம்மைக்கு இனிமையானவரே!

      கற்றைப் பொற்றைப் பற்றிக் குத்தி கத்தக் கத்த களைவோனே --- திரண்ட கிரவுஞ்ச மலையைத் தாக்கிக் குத்தி, அம் மலை வடிவாய் இருந்த அரக்கன் பெரும் கூச்சலிட்டு அழுமாறு அழித்துத் தொலைத்தவரே!

      கற்புச் சத்தி பொற்புச் சத்தி கச்சிச் சொக்கப் பெருமாளே --- கற்புக்கு அணிகலமாகிய காமாட்சி அம்மை தேவி அளித்த அழகிய சக்திவேலை ஏந்திய, காஞ்சி மாநகரத்தின்கண் எழுந்தருளி உள்ள அழகிய பெருமையில் சிறந்தவரே!

      அற்றைக்கு அற்றைக்கு ஒப்பித்து ஒப்பித்து --- அன்றைக்கு அன்றைக்கு அலங்கரித்து, அலங்கரித்து,

      அத்தத்து அத்தம் தருவோர் தாள் அர்ச்சித்து இச்சித்து --- ஆடவர் கொடுத்த பொருளுக்குத் தக்க கை தருகின்ற விலைமகளிருடைய பாதங்களைப் போற்றியும், விரும்பியும்,

      அக்கத்து அக்கம் திக்குத் தொக்குக் குடில் பேணி --- கண்ணுக்குக் கண்ணாய் அவர்களை மதித்து, திசைகள் தோறும் கூடி, இந்த உடலைப் பேணி வளர்த்து,

      செற்றைப் புன் சொல் கற்றுக் கற்று --- நிரம்ப இழிவான சொற்களை மேலும் மேலும் கற்று,

      செத்துச் செத்துப் பிறவாதே --- இறந்து இறந்து மீண்டும் பிறவிகளை அடையா வண்ணம்

      செப்பச் செப்ப பச்சைப் பச்சை செச்சைச் செச்சைக் கழல் தாராய் --- மேலும் மேலும் துதி செய்ய, மிகவும் குளிர்ச்சி பொருந்திய சிவந்த வெட்சி மலர் அணிந்த உமது திருவடியைத் தந்து அருளுவீராக.


பொழிப்புரை

         நெருங்கிப் பின் தொடர்ந்து, கடலில் இருந்த மாமரத்தை அஞ்சவும், திடுக்கிடவும் போர் புரிந்த வேலாயுதரே!

         தூய்மையும், பேரன்பும், அழகிய கொங்கையும் உடைய விண்ணுலகத்துக் கிளி போன்ற தேவயானை அம்மைக்கு இனிமையானவரே!

         திரண்ட கிரவுஞ்ச மலையைத் தாக்கிக் குத்தி, அம் மலை வடிவாய் இருந்த அரக்கன் பெரும் கூச்சலிட்டு அழுமாறு அழித்துத் தொலைத்தவரே!

         கற்புக்கு அணிகலமாகிய காமாட்சி அம்மை தேவி அளித்த அழகிய சக்திவேலை ஏந்திய, காஞ்சி மாநகரத்தின்கண் எழுந்தருளி உள்ள அழகிய பெருமையில் சிறந்தவரே!

         அன்றைக்கு அன்றைக்கு அலங்கரித்து, அலங்கரித்து, ஆடவர் கொடுத்த பொருளுக்குத் தக்க, கை தருகின்ற விலைமகளிருடைய பாதங்களைப் போற்றியும், விரும்பியும், கண்ணுக்குக் கண்ணாய் அவர்களை மதித்து, திசைகள் தோறும் கூடி, இந்த உடலைப் பேணி வளர்த்து, நிரம்ப இழிவான சொற்களை மேலும் மேலும் கற்று, இறந்து இறந்து மீண்டும் பிறவிகளை அடையா வண்ணம், மேலும் மேலும் துதி செய்ய, மிகவும் குளிர்ச்சி பொருந்திய சிவந்த வெட்சி மலர் அணிந்த உமது திருவடியைத் தந்து அருளுவீராக.

விரிவுரை

அற்றைக்கு அற்றைக்கு ஒப்பித்து ஒப்பித்து ---

ஒப்பித்து - அலங்கரித்து.  ஒப்பனை - அலங்காரம்.

அற்றைக்கு அற்றைக்கு - அன்றாடம் வெவ்வேறு விதமாகப் பொதுமாதர்கள் தங்களைக் கூந்தலின் கோலங்களாலும் ஆடை அணிகலன்களாலும் அங்கரித்துக் கொள்வார்கள்.

விலைமகட்கு அழகு தன்மேனி மினுக்குதல் --- நறுந்தொகை.

ஒப்பனைக் கலையிலே அவர்கள் வல்லவர்கள்.  புதிய புதிய வண்ணமாக அலங்கரித்துக் கொண்டு ஆடவரது உள்ளத்தைக் கவர்வார்கள்.


அத்தத்து அத்தம் தருவோர் ---

அத்தம் - பொருள்.  அத்தம் - கை.

தம்மை விரும்பி வந்தவர்களிடம் பொருள் பெற்று, அதற்குப் பிரதியாகத் தங்கள் கை கொடுத்து மருவுவார்கள்.

தாள் அர்ச்சித்து இச்சித்து ---

அந்த விலைமாதருடைய பாதங்களை மலர் இட்டு அருச்சனை செய்து போற்றுவர்.  ஆசை மயக்கத்தால் நிகழும் நிகழ்ச்சி. அம் மகளிரை விரும்பி ஆசை வயப்பட்டோர் அவர் வசமாகி அவலமுறுவர்.

அக்கத்து அக்கம் ---

அக்கம் - கண்.  "அக்ஷம்" என்ற வடசொல் தமிழில் "அக்கம்" என வந்தது.

விலைமாதரைக் கண்ணுக்குக் கண்ணாகக் கருதுவர்.

தொக்கு திக்கு ---

தொக்கு - கூடி.  திக்கு - திசை.  திசைகள் தோறும் சென்று பொருள் தேடுவர்.

குடில் பேணி ---

இந்த உடம்பைக் குடில் என்றார்.  "பொக்கக் குடில்" என்கின்றார் கந்தரலங்காரத்தில்.  பேணுதல் - விரும்புதல்.   "அடி பேணி" என்று விநாயகர் திருப்புகழில் வருவதையும் காண்க.  இன்று இருந்து நாளை அழிந்து சாம்பராகும் இந்தப் பொய்யுடம்பை மெய் என்று எண்ணி, இந்த உடம்புக்கே வேளை தவறாமல் உணவு தந்து அவலப்படுவர்.


செற்றைப் புன்சொல் கற்றுக் கற்று ---

செற்றை - கூட்டம்.  நிரம்பு இழிந்த சொற்களை மிகுதியாகக் கற்று பெண்களையும் உலோபிகளையும் பாடித் திரிவர்.

செத்துச் செத்துப் பிறவாமல் ---

மனிதனாகப் பிறந்து, பிறவியின் பயனைப் பெறாமல், வாணாக வாழ்ந்து மாய்வர்.  மாண்டு மாண்டு மீண்டும் மீண்டும் பிறப்பர்.  இப்படி இறப்பதும் பிறப்பதுமாகவே உயிர்கள் அலைகின்றன.

செப்பச் செப்ப ---

செப்புதல் - துதித்தல்.  முருகப் பெருமானையே மேலும் மேலும் துதிக்க வேண்டும்.  அப் பெருமான் தந்த வாக்கினால், அப் பரமனையே வழுத்துதல் வேண்டும். "வணங்கத் தலை வைத்து, வார்கழல் வாய் வாழ்த்த வைத்து" என்று மணிவாசகரும்,

வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே..     

என்று அப்பர் பெருமான் கூறுமாற்றால் அறிக.

பச்சைப் பச்சைச் செச்சை ---

செச்சை - வெட்சி மலர்.  இது சிவந்த நிறம் உடையது.

பச்சை என்ற சொல் குளிர்ச்சியைக் குறிக்கின்றது.  இருமுறை பச்சை என்றதனால், மிகுந்த குளிர்ச்சி என உணர்த்துகின்றார்.  பச்சிளம் குழவி - பச்சைக் குழந்தை என்ரு கூறும் சொல் வழக்கையும் ஊன்னுக.
  
துற்றுப் பிற்புக்கு உற்று அக் கொக்கை ---

துற்று - நெருங்கி.  பின் புக்கு - அவன் பிறகு தொடர்ந்து பின்னே சென்று.

உற்று அக் கொக்கை - அடைந்து அந்த மாமரத்தை.

கடலில் சூரபன்மன் மாமரமாய் முளைத்தான்.

துட்கத் திட்கப் பொரும் வேலா ---

துட்க – பயப்பட.  திட்க – திடுக்கிட.  சூரபன்மன் அஞ்சித் திடுக்கிட்டை நடுங்க, அவனுடன் வேலாயுதத்தால் முருகவேள் போர் புரிந்தார்.

சுத்தப் பத்திச் சித்ரக் சொர்க்க ---

சுத்தம் - தூய்மை.  பத்தி - அன்பு. சித்ரம் - அழகு. சொர்க்கம் - கொங்கை.

தூய்மையும், அன்பும், அழகும், கொங்கையையும் உடைய தெய்வயானை அம்மை.

சொர்க்கத் தத்தை --- 

தத்தை - கிளி.  சொர்க்கம் - விண்ணுலகம்.

தெய்வலோகக் கிளி போன்ற தெய்வயானை அம்மை.
    
கற்றைப் பொற்றை ---

கற்றை - திரட்சி.  பொற்றை - மலை.  திரண்ட கிரவுஞ்ச கிரி.

கற்புச் சத்திப் பொற்புச் சத்தி ---

கற்பு மிகுந்த தேவி காமாட்சியம்மை அழகிய வேலை முருகவேளுக்கு ஈந்தாள்.  முருகன் அதனைத் திருக்கரத்தில் ஏந்தி ஆன்மாக்களுக்கு அருள் புரிகின்றான்.

கருத்துரை

கச்சிப் பெருமாளே, பிறவித் துயர் தீர, உன் கழல் தந்து அருள் செய்.


No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...