குன்றுதோறாடல் - 0435. அதிரும் கழல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அதிரும் கழல் (குன்றுதோறாடல்)

முருகா!
அடியேன் உள்ளத்தில் இருந்து,
துன்பங்களையும் ஐயங்களையும் அகற்றி அருள்.


தனனந் தனன தந்த ...... தனதான
     தனனந் தனன தந்த ...... தனதான


அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்
     அபயம் புகுவ தென்று ...... நிலைகாண

இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி
     இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்
     இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா

பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்
     பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அதிரும் கழல் பணிந்து, ...... உன்அடியேன்,உன்
     அபயம் புகுவது என்றும், ...... நிலைகாண

இதயம் தனில் இருந்து ...... க்ருபை ஆகி,
     இடர் சங்கைகள் கலங்க ...... அருள்வாயே.

எதிர்அங்கு ஒருவர் இன்றி ...... நடம்ஆடும்,
     இறைவன் தனது பங்கில் ...... உமைபாலா

பதி எங்கிலும் இருந்து ...... விளையாடி,
     பல குன்றிலும் அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை

         எதிர் அங்கு ஒருவர் இன்றி நடம் ஆடும் --- அந்தத் தேவ சபையில் தனக்கு சமானம் ஒருவரும் இன்றி, ஆனந்தத்தாண்டவம் செய்து அருளும்,

     இறைவன் தனது பங்கில் உமை பாலா --- சிவபெருமானுடைய இடப்பாகத்தில் விளங்கும் உமாதேவியாருடைய திருக்குமாரரே!

         பதி எங்கிலும் இருந்து விளையாடி --- திருத்தலங்கள் எங்கணும் நின்று திருவிளையாடல் புரிந்து,

     பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே --- பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமையின் மிக்கவரே!

         அதிரும் கழல் பணிந்து --- இனிது ஒலிக்கும் வீரக்கழலை யணிந்துள்ள தேவரீரது திருவடிகளைத் தொழுது,

     அடியேன் உன் அபயம் புகுவது என்றும் --- தேவரீருடைய தொண்டனாகிய நாயேன், உமது திருவடியே புகலிடமென்று நாள்தோறும் தஞ்சம் புகுகின்றேன்; (ஆதலால்)

     நிலைகாண இதயம் தனில் இருந்து க்ருபை ஆகி --- மெய்ந் நிலையைக் காணுதற்கு தேவரீர் அடியேனுடைய உள்ளத்தில் வீற்றிருந்து,கருணை செய்து,

     இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே --- அடியேனுடைய துன்பமும் சந்தேகங்களும் கலங்கி ஒழியத் திருவருள் புரிவீர்.

பொழிப்புரை

         தனக்கு உவமையின்றி தனிப்பெருந் தலைவராய்த் தேவசபையில் நின்று அநவரத ஆனந்தத் தாண்டவம் புரியும் எப்பொருட்கும் இறைவராகிய சிவபெருமானுடைய இடப்பக்கத்தில் விளங்கும் உமையம்மையாரது திருப்புதல்வரே!

         திருத்தலங்கள் எங்கணும் எழுந்தருளிப் பல திருவிளையாடல்களைப் புரிந்து, மலைகள் தோறும் நின்று நிலவும் பெருமிதம் உடையவரே!

         இனிது ஒலிக்கும் வீரக்கழலை அணிந்த தேவரீரது திருவடிகளைப் பணிந்து, உமக்கே மீளா அடிமைப்பட்ட நாயேன், உம்மையே நாடோறும் சரணம் புகுகின்றேன்; ஆதலால், அடியேனுடைய உள்ளத்தில் தேவரீர் எழுந்தருளிக் கருணை செய்து, எனது துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி யழியுமாறு அருள் புரிவீர்.

விரிவுரை

கழல் என்பது வீரர்கள் தாளில் அணிந்துகொள்ளும் ஓர் ஆபரணம். வீர வீரவீராதிவீர விறலோன் வெற்றிவேற்கடவுள் ஒருவரே. ஆதலின் அருவருடை திருவடியில் அரதன வீரக்கழல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அது ஆகுபெயராய் கழலையுடைய திருவடியை உணர்த்தியது.
  
எதிர் அங்கு ஒருவர் இன்றி ---

சிவபெருமான் “சமான ரகிதர்” தனக்குவமை இல்லாத் தனிப்பெருந் தலைவன்.

இறைவன் ---

எல்லாப் பொருள்களிலும் தங்கி இருப்பவன்; எல்லாப் பொருள்களும் தன்னகத்தே தங்க இருப்பவன்.

கருத்துரை

         பார்வதிபால! குன்றுதோறாடுங் குமர! தேவரீர் அடியேன் உள்ளத்தில் உறைந்து இடர் சங்கைகளைக் களைந்து அருள்புரிவீர்.



No comments:

பாடல் 3

“குந்தி, நடந்து, குனிந்து,ஒருகை கோலூன்றி, நொந்துஇருமி, ஏங்கி, நுரைத்துஏறி வந்து,உந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை.” இதன் ...