பழமுதிர்சோலை - 0445. காரணமதாக வந்து




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

காரணமதாக (பழமுதிர்சோலை)

சோலைமலை முருகா!
அடியேன் காலன் வசம் ஆகாமல்,
ஞானநடனம் புரிந்து வருவாய்.

தானதன தான தந்த ...... தனதான


காரணம தாக வந்து ......         புவிமீதே

காலனணு காதி சைந்து ......     கதிகாண

நாரணனும் வேதன் முன்பு ......   தெரியாத

ஞானநட மேபு ரிந்து ......         வருவாயே

ஆரமுத மான தந்தி ......         மணவாளா

ஆறுமுக மாறி ரண்டு ......       விழியோனே

சூரர்கிளை மாள வென்ற ......     கதிர்வேலா

சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


காரணம் அதாக வந்து ......       புவிமீதே

காலன் அணுகாது இசைந்து ...... கதிகாண,

நாரணனும் வேதன் முன்பு ......   தெரியாத

ஞான நடமே புரிந்து ......         வருவாயே.

ஆர் அமுதம் ஆன தந்தி ......     மணவாளா!

ஆறுமுகம் ஆறு இரண்டு ......    விழியோனே!

சூரர்கிளை மாள வென்ற ......     கதிர்வேலா!

சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.


பதவுரை


     ஆர் அமுதம் ஆன --- நிறைந்த அமுதம் ஆகிய,

     தந்தி --- தெய்வயானையம்மையின்,

      மணவாளா --- கணவரே!

     ஆறுமுகம் --- ஆறுமுகங்களும்,

     ஆறிரண்டு விழியோனே --- பன்னிருகண்களையும் உடையவரே!

     சூரர் கிளை மாள வென்ற - சூராதியவுணர்களும் அவர்களின் சுற்றங்களும் அழியும்படி வெற்றி பெற்ற,

     கதிர்வேலா --- ஒளிமிகுந்த வேலாயுதரே!

     சோலைமலை மேவி நின்ற --- பழமுதிர் சோலை மலையின்மீது எழுந்தருளியுள்ள,

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

     காரணம் அது ஆக புவி மீது வந்து --- ஊழ்வினையின் காரணத்தினால் இப்பூதலத்தில் வந்து பிறந்து,

     காலன் அணுகாது --- இயமனுடைய அமைச்சன் என்னை நெருங்காதபடி,

     இசைந்து --- தேவரீர் மனம் பொருந்தி,

     கதி காண --- அடியேன் நற்கதியை அடையுமாறு,

     நாரணனும் வேதன் முன்பு தெரியாத --- திருமாலும் பிரமதேவனும் முன்பு கண்டறியாத,

     ஞான நடனமே புரிந்து வருவாயே --- ஞானநடனஞ் செய்து வந்தருளுவீராக.

பொழிப்புரை


     நிறைந்த அமுதம் போன்ற இனிய தெய்வயானை அம்மையின் கணவரே!

     ஆறு திருமுகங்களையும் பன்னிரு கண்களையும் உடையவரே!

     சூராதி அவுணரும் அவர்களின் சுற்றமும் மாளும்படி வென்ற ஒளி நிறைந்த வேலாயுதரே!

     சோலை மலையில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

     வினையின் காரணமாக அடியேன் இப்பூமியில் பிறந்து, வினைப் போகம் முடிந்த பின் என்னைப் பற்றவருகின்ற காலன் வசம் நான் அடையாவண்ணம் தேவரீர் திருவுள்ளம் இரங்கி, மாலும் அயனும் முன் கண்டறியாத ஞானத் திருநடனஞ் செய்து வந்தருளுவீராக.

விரிவுரை
 

காரணமதாக வந்து புவி மீதே ---

ஒவ்வொரு உயிரும், தாம் செய்த வினையின் காரணத்தினால் வந்து மண்ணுலகில் பிறக்கின்றது.

நமது சைவ சித்தாந்தக் கொள்கையில் அடிப்படையான தத்துவங்கள் நான்கு.

செய்வான், செய்வினை, வினைப்பயன், பயன்அறிந்து ஊட்டுபவன்.

செய்வன் - ஆன்மா.

செய்வினை - ஆன்மா செய்த வினை.

வினைப்பயன் - அவ்வினையின் பயன்.

அறிந்து ஊட்டுபவன் - இறைவன்

வினை சடம். ஆதலின் தானே வந்து பொருந்தாது. சிற்றிவுடைய ஆன்மாவுக்கும் முற்பிறப்பில் செய்தவினை இது என உணர்ந்து நுகரும் ஆற்றலும் அறிவும் இல்லை. ஆதலின் பேரறிவும் பெருங்கருணையும் பேராற்றலும் படைத்த இறைவன் காலமறிந்து இடமறிந்து அளவறிந்து வினைப்பயனை ஆன்மாவுக்கு ஊட்டுகின்றான்.

செய்வினையும், செய்வானும், அதன்பயனும், சேர்ப்பானும்,
மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக்கொண்டே,
இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக்கு இல்லையென
உய்வகையால் பொருள் சிவன் என்றருளாலே உணர்ந்தறிந்தார்.
                                                                                                 --- பெரியபுராணம்

இன்ன இன்ன வினை செய்தான் இன்ன இன்ன வகையாக, இன்ன இன்ன இடத்திலே பிறக்க வேண்டும் என்பது இறைவனது அருட்கட்டளை.

எனவே, பிறப்புக்குக் காரணமான வினையை ஒழித்தால் பிறப்பு எய்தாது.

நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞானநடம் ---

மாலும் அயனுங்காணாத அதியற்புதமான ஞான நடனம் புரிந்து எளியேனுக்கு அருள் புரிவீர்.

ஆரமுதமான தந்தி ---

ஆர் - நிறைவு. அமுதவல்லி-தெய்வயானை.

கருத்துரை

சோலைமலை மேவிய முருகா! ஞானநடனம் புரிந்து வந்தருள்வீர்.


No comments:

057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...