பழமுதிர்சோலை - 0443. இலவிதழ் கோதி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இலவிதழ் கோதி (பழமுதிர்சோலை)

சோலைமலை முருகா!
பொதுமாதர் மயலை விட்டு,
சிவஞானபோதத்தைப் பெற அருள்


தனதன தான தான தனதன தான தான
     தனதன தான தான ...... தனதான


இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார
     இளநகை யாட ஆடி ...... மிகவாதுற்

றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால
     இணைமுலை மார்பி லேற ...... மதராஜன்

கலவியி லோடி நீடு வெகுவித தாக போக
     கரணப்ர தாப லீலை ...... மடமாதர்

கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது
     கருதிய ஞான போத ...... மடைவேனோ

கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி
     குலிசகு டாரி யாயி ...... மகமாயி

குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி
     குணவதி யால வூணி ...... யபிராமி

பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக
     பதிவ்ரதை வேத ஞானி ...... புதல்வோனே

படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர
     பழமுதிர் சோலை மேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இலவ இதழ் கோதி நேதி, மத கலை ஆரவார
     இளநகை ஆட ஆடி, ...... மிகவாது உற்று,

எதிர் பொரு கோர பார, ம்ருகமத கோல கால
     இணைமுலை மார்பில் ஏற, ...... மதராஜன்

கலவியில் ஓடி நீடு, வெகுவித தாக போக
     கரண ப்ரதாப லீலை ...... மடமாதர்,

கலவியின் மூழ்கி ஆழும், இழி தொழிலேனும் மீது
     கருதிய ஞான போதம் ...... அடைவேனோ?

கொலை புரி காளி, சூலி, வயிரவி, நீலி, மோடி,
     குலிச குடாரி, ஆயி, ...... மகமாயி,

குமரி, வராகி, மோகி, பகவதி, ஆதி, சோதி,
     குணவதி, ஆல ஊணி, ...... அபிராமி,

பலிகொள் கபாலி, யோகி, பரம கல்யாணி, லோக
     பதிவ்ரதை, வேத ஞானி ...... புதல்வோனே!

படையொடு சூரன் மாள, முடுகிய சூர! தீர!
     பழமுதிர் சோலை மேவு ...... பெருமாளே.


பதவுரை


     கொலை புரி காளி --- பகைவரைக் கொலை செய்கின்ற காளி,

     சூலி --- சூலத்தை யேந்தியவள்,

     வயிரவி --- வயிரவி

     நீலி --- நீல நிறத்தினள்,

     மோடி --- துர்க்கை,

     குலிச குடாரி ஆயி --- குலிசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியுள்ள அன்னை,

     மகமாயி --- மகாமாயி,

     குமரி --- குமரி,

     வராகி --- வராகி,

     மோகி --- மோகத்தைச் செய்பவள்,

     பகவதி ---- ஆறு குணங்களை உடையவள்,

     ஆதி --- முதன்மையானவள்,

     சோதி --- சோதிமயமானவள்,

     குணவதி --- அருங்குணங்களை உடையவள்,

     ஆல ஊணி --- நஞ்சு உண்டவள்,

     அபிராமி --- அழகி,

     பலிகொள் கபாலி --- பலி ஏற்கும் பிரம காபலத்தை உடையவள்;

     யோகி --- யோகஞ் செய்பவள்;

     பரம கல்யாணி --- சிறந்த கல்யாணி;

     லோக பதிவ்ரதை --- உலகம் போற்றும் பதிவிரதை,

     வேத ஞானி --- வேதங்கள் அறிந்தவள் ஆகிய பார்வதி தேவியின்,     புதல்வோனே --- திருக்குமாரரே!

     படையொடு சூரன் மாள --- படைகளுடன் சூரபன்மன் இறக்க,

     முடுகிய சூர  --- எதிர்த்து ஓட்டிய சூரரே!

     தீர --- தீரமூர்த்தியே!

     பழமுதிர் சோலை மேவு --- பழமுதிர் சோலையில் விரும்பியிருக்கும்,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     இலவு இதழ் கோதி --- இலவம் பூவைப் போன்ற சிவந்த இதழை திருத்தி,

     நேதி --- முறையாக,

     மத கலை ஆரவார ---- மன்மதனுடைய கலைகளை கர்வமும்,

     இளநகை ஆட ஆடி --- புன்சிரிப்பும் தோன்ற விளையாடி,

     திருமுக வாது உற்று --- அதிக தர்க்கங்களைப் பேசி,

     எதிர் பொரு --- எதிரில் தாக்கும்,

     கோர பார --- அச்சந்தரும் பாரமான,

     ம்ருகமத கோல கால --- கஸ்தூரிஅணிந்து ஆடம்பர மாகவுள்ள,

     இணை முலைமார்பில் ஏற --- இரு முலைகளும் மார்பில் பொருந்த,

     மதராசன் - மன்மதராஜனுடைய,

     கலவியில் ஓடி --- புணர்ச்சியில் வேகமாக ஓடி,

      நீடு வெகு விதமாக --- நெடுநாள் பலவிதமான அன்புடன்,

     போக கரண ப்ரதாப லீலை --- போக சுகத்துடன் கூடிய பேர் பெற்ற கலவி விளையாட்டுக்களை உடைய,

     மடமாதர் --- பொதுமாதர்களுடைய,

     கலவியில் மூழ்கி --- புணர்ச்சியில் முழுகி,

     ஆழும் இழி தொழிலேனும் --- ஆழ்கின்ற இழிந்த தொழிலையுடைய அடியேனும்,

     மீது கருதிய ஞான போதம் அடைவேனோ? --- மேலாகக் கருதப்பட்ட ஞான அறிவை அடைவேனோ?


பொழிப்புரை


     பகைவரைக் கொலை செய்கின்ற காளி, திரிசூலத்தை யேந்தியவள், பயிரவி, நீல நிறத்தையுடையவள், துர்க்கை, குலிசத்தையும், அங்குசத்தையும், ஏந்தியுள்ள அன்னை மகமாயி, குமரி, வாகி, மோகி, பகவதி, ஆதி, சோதி, குணவதி, நஞ்சு உண்டவள், அழகி, பிட்சை வாங்கும் கபாலி, யோகி, பரமகல்யாணி, உலகம் போற்றும் பதிவிரதை, வேதங்களை அறிந்தவள் ஆகிய பார்வதி தேவியின் குமாரரே!

     படைகளுடன் சூரபன்மன் இறக்கும்படி அவனை ஓட்டிய சூரரே!

     தீரமூர்த்தியே!

     பழமுதிர் சோலையில் எழுந்தருளிய பெருமித முடையவரே!

     இலவம் பூவைப் போன்ற சிவந்த வாயிதழ்களை வகைப்படுத்தி முறையாக, மன்மத கலைகளை ஆரவாரமும் புன்சிரிப்பும் தோன்ற விளையாடி, அதிக தர்க்கங்களைப் பேசி, எதிரில் தாக்கும் அச்சந்தரும் பாரமான கஸ்தூரி பூசிய ஆடம்பரமான இரு தளங்கள் மார்பில் பொருந்த, மன்மதராஜனுடைய காமலீலைச் சேர்க்கையில் வேகமாக ஓடி நெடு நாள் பலவிதமான போகசுகத்தை விளைவிக்கும் புணர்ச்சியில் பேர் பெற்ற லீலைகளுடன் கூடிய பொது மாதர்களுடைய, கலவியில் மூழ்கி ஆழ்கின்ற இழிந்த தொழிலையுடைய அடியேன், மேலாகக் கருதுகின்ற ஞான அறிவை அடைவேனோ?

    
விரிவுரை

இலவிதழ் கோதி---

இலவ மலர் சிவப்பாக இருக்கும்; அது மிகவும் அழகாக இருக்கும். அது பெண்களின் இதழுக்கு உவமையாக இலக்கியங்களில் வரும்.

ஞான போதம் அடைவேனோ ---

ஆன்மா சிவஞான போதத்தை அடைதல் வேண்டும். அங்ஙனம் அடைந்த ஆன்மா மலபரிபாகம் உற்று, சத்தினிபாதம் பெற்று சிவாத்துவிதம் எய்திப் பேரின்பத்தைத் துய்க்கின்றது.

இப்பாடலின் பிற்பகுதி அம்பிகையின் திருநாமங்களை அழகாகக் கூறுகின்றது.

கருத்துரை

பழமுதிர் சோலைப் பரமனே! சிவஞான போதத்தைத் தந்தருள்வீர்.


No comments:

057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...