21. மூதேவி இருப்பிடம்
மிதம்இன்றி
அன்னம் புசிப்போர் இடத்திலும்,
மிகுபாடை யோர் இடத்தும்,
மெய் ஒன்று இலாமலே பொய் பேசியே திரியும்
மிக்க பாதகர் இடத்தும்,
கதிஒன்றும்
இலர்போல மலினம் கொளும் பழைய
கந்தை அணிவோர் இடத்தும்
கடிநாய் எனச் சீறி எவரையும் சேர்க்காத
கன்னி வாழ் மனையகத்தும்,
ததிசேர்
கடத்திலும், கர்த்தபத்து இடையிலும்,
சார்ந்த ஆட்டின் திரளிலும்
சாம்பிண முகத்திலும், இவையெலாம் கவலைபுரி
தவ்வைவாழ் இடமென்பர் காண்!
அதிரூப
மலைமங்கை நேசனே! மோழைதரும்
அழகன்எமது அருமைமதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அதிரூப மலைமங்கை நேசனே --- பேரழகுடைய மலைமகளின்
கணவரே!
மோழை தரும் அழகன் --- மோழை என்பான் பெற்ற
அழகனான,
எமது அருமை மதவேள் --- எமது அரிய மதவேள் என்பான், அனுதினமும்
மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர
கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
அன்னம் மிதம் இன்றிப் புசிப்போர் இடத்திலும் ---
உணவை அளவு இல்லாமல் உண்பவர் இடத்திலும்,
மிகு பாடையோர் இடத்தும் --- அளவோடு பேசாமல், மிகைபடப் பேசுகின்றவர் இடத்திலும்,
மெய் ஒன்று இலாமலே பொய் பேசியே திரியும்
மிக்க பாதகர் இடத்தும் --- உண்மை என்பது ஒரு சிறிதும் இல்லாமல், எப்போதும்
பொய்யையே பேசி அலைகின்ற மிகவும்
கொடியவர்
இடத்திலும்,
கதி வன்றும் இலர் போல மலினம் கொளும் பழைய
கந்தை அணிவோர் இடத்தும் ---- ஏதும் வழியற்றவரைப் போலக் கிழிந்த பழைய கந்தையை
உடுப்பவர் இடத்திலும்,
கடி நாய் எனச் சீறி எவரையும் சேர்க்காத கன்னிவாழ் மனையிடத்தும் ---
கடிக்கின்ற வெறி நாய்போலச் சினந்து பேசி,
யாரையும்
அணுகவிடாமல் வாழுகின்ற பெண் உடைய இல்லத்திலும்,
ததிசேர் கடத்திலும் --- தயிர்ப் பானையிலும்,
கர்த்தபத்து இடையிலும் --- கழுதைகளின் கூட்டத்திலும்,
சார்ந்த ஆட்டின் திரளிலும் --- கூடிய ஆட்டு
மந்தையிலும்,
சாம்பிணம் முகத்திலும் --- இறந்த பிணத்தின் முகத்திலும்,
இவை எலாம் --- ஆகிய இந்த இடங்களில் எல்லாம்,
கவலை புரி தவ்வை வாழ் இடம் என்பர் --- மனிதர்க்கு
மிக்க கவலையைத் தருகின்ற மூதேவி என்பாள் வாழும் இடம் என்று அறிஞர் கூறுவர்.
கருத்து --- பாஷை என்னும் வடசொல் பாடை
என வந்தது.
சீதேவி
- திருமகள். மூதேவி - சீதேவிக்கு மூத்தவள்.
No comments:
Post a Comment