நல்லது செய்தால் நல்லது - அல்லது செய்தால் அல்லது.





4. நன்மை செய்தால் நலம் பெறுவர்

தன்மம் அது செயல்வேண்டும்; தண்டலைநீள்
     நெறியாரே தயவு செய்வார்!
வன்மவினை செயல்வேண்டாம்; பொய்வேண்டாம்
     பிறரை ஒன்றும் வருத்தல் வேண்டாம்;
கன்மநெறி வரல்வேண்டாம் : வேண்டுவது
     பலர்க்கும் உபகாரம் ஆகும் :
நன்மை செய்தார் நலம் பெறுவர்! தீமை செய்தார்
     தீமை பெற்று நலிவர் தாமே.


இதன் பொருள் ---

     நன்மை செய்தார் நலம் பெறுவர் --- பிறருக்கு நலம் நன்மையைச் செய்தால், தாமும் நன்மை அடைவர்,

     தீமை செய்தார் தீமை பெற்று நலிவர் --- பிறருக்குத் தீமை  செய்தால், தீமையே ஒருவருக்கு வந்து சேரும்,

     இதைக் கருத்தில் கொண்டு,

     வன்மவினை செயல்  வேண்டாம் --- உள்ளத்திலே வன்மத்தை வைத்துக் கொண்டு, பிறருக்குத் தீங்கு செய்தல் கூடாது,

     பொய்  வேண்டாம் --- பொய் சொல்லுதல் கூடாது,

     பிறரை ஒன்றும் வருத்தல் வேண்டாம் --- மற்றவரைத் துன்புறுத்தவும் கூடாது,

     கன்ம நெறி வரல் வேண்டாம் --- துன்பத்துக்கு இடமான பாவச்செயல்களைச் செய்தல் கூடாது,

     பலர்க்கும் வேண்டுவது உபகாரம் ஆகும் ---- யாவருக்கும் உபகாரமாக வாழ்தல் வேண்டும்,

     தன்மமது செயல் வேண்டும் --- அறச் செயல்களையே செய்தல் வேண்டும்,

     அவ்வாறு ஒருவர் செய்வாரானால்,

     தண்டலை நீள் நெறியாரே தயவு செய்வார் --- தண்டலை நீள் நெறியில் எழுந்தருளிய இறைவரே அருள் புரிவார்.

      ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பது பழமொழி. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும். ‘தண்டலை நீள்நெறி' என்பது, தண்டலை என்னும் திருத்தலத்தையும், நீள்நெறி என்னும் திருக்கோயிலையும் குறிக்கும்.

பந்தித்த பாவங்கள் அம்மையில் செய்தன, இம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே, வந்து அமரர் முன்னாள்
முந்திச் செழுமலர் இட்டு முடிதாழ்த்து அடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கி லாவிட்ட நன்னெஞ்சமே.   ---  அப்பர்.

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
    மூர்க்கன் ஆகிக் கழிந்தன காலம்,
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்,
    சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்,
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே!
    ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா!
எந்தை நீஎனக்கு உய்வகை அருளாய்,
    இடைமருது உறை எந்தை பிரானே.         ---  சுந்தரர்

No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...