மூடரை மூடரே கொண்டாடுவர்





கழுதை கா எனக் கண்டு, நின்று ஆடிய அலகை
தொழுது, மீண்டும் அக் கழுதையைத் துதித்திட, அதுதான்
பழுதிலா நமக்கு ஆர் நிகர் இங்கு எனப் பகர்தல்,
முழுது மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்.

இதன் பொருள் ---

     பழுது இலா நமக்கு  இங்கு ஆர் நிகர் எனப் பகர்தல் --- நம்மிடத்தில் தான் ஒரு குற்றமும் இல்லையே, நமக்கு ஒப்பு ஆனவர் இந்த உலகத்தில் யார் உள்ளனர் என்று, தம்மைப் போன்ற மூடரிடத்தில் சொல்லி, ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல்,

     முழுது மூடரை --- அறிவு மழுங்கிய முழு மூடரை,

     மூடர் --- அவரைப் போன்ற மூடர்,

     கொண்டாடிய முறைமை போல் --- புகழ்ந்து கொள்ளும் முறைமை போன்றது.

     (எப்படி என்னில்,)

     கழுதை கா எனக் கண்டு --- (இனிமை தராத விகார ஒலியினை எழுப்பும்) கழுதையானது கா என்று பெருங்குரல் எடுத்துக் கதற, அவ்வாறு கதறியதைப் பார்த்து,

     நின்று ஆடிய அலகை தொழுது --- (கழுதையின் குரலை இனிய இசை என்று கருதி ஆனந்தமடைந்து) அதன் எதிரே நின்று, ஆனந்தக் கூத்தாடிய பேயானது, அந்தக் கழுதையை வணங்கி,

     மீண்டும் அக் கழுதையைத் துதிசெயல் போலும் --- (உன்னுடைய குரலைப் போல் இனிமை தருவதை நான் எங்கும் கேட்டது இல்லை என்று) திரும்பவும் அந்தக் கழுதையை துதித்துக் கூறுவதை ஒக்கும்.

     குறிப்பு --- "கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர், முதுகாட்டில் காக்கை உக்ககும் பிணம்" என்னும் ஔவைப் பிராட்டியின் வாக்கை இங்கு வைத்து எண்ணுக.

 

No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...